அபாரமான யோசனை இருந்தால் முதலீடு தேடி வரும்!-’கவின்கேர்’ சி.கே. ரங்கநாதன்

கடலூர் மாவட்டத்தில் ஒரு சிறிய நடுத்தர குடும்பத்தில் பிறந்து கடும் உழைப்பு, நேர்மை  இவற்றால் முன்னேறி இன்று ரூ. 1000 கோடி நிறுவனமாக தனது கவின்கேர்  நிறுவனத்தை வளர்த்தெடுத்திருப்பவர், சி.கே.ரங்கநாதன்.

 

இந்திய தொழில்வர்த்தகக் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தமிழகத் தலைவராகச் சில ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றியவர். நிறுவனத்தின் லாபத்தில் கணிசமான பகுதியை சமூகப் பொறுப்பு சார்ந்த விஷயங்களுக்காகச் செலவிடுபவர்.

 

பறவைகளிடம் பாசம் கொண்டவர். தொழில் தொடங்கும் இளைஞர்களின் முன்மாதிரி என்று பல பரிமாணங்களைக் கொண்டவர்.

 

அத்தகைய சி.கே.ரங்கநாதன் அவர்களுடன் முனைவு மேற்கொண்ட நேர்காணல் இது…

 

உங்களின் குடும்பப் பின்னணி பற்றிச் செல்லுங்கள்!

எனது தந்தையார் கணித ஆசிரியர். தாயார் ஒரு சிறிய பள்ளியை நடத்தி வந்தார். இண்டு சகோதரிகள்.நான்கு சகோதரர்கள் என்று பெரிய குடும்பம் எங்களுடையது. எங்களுக்கு விவசாய நிலமும் சிறிதளவு இருந்தது.

 

தொழில் வாசனை இல்லாத குடும்பம் எப்படி தொழில் முனைவோரை உற்பத்தி செய்தது?

எனது தந்தையார் ஒரு கட்டத்தில் தனது ஆசிரியர் வேலையை விட்டுவிட்டார். எங்களையெல்லாம் அழைத்து, “நாம் சுய தொழிலில் இறங்க  வேண்டும்” என்றார். சொன்னதோடு நில்லாமல் மருந்துகளை ரீபேக் செய்யும் நிறுவனத்தைத் தொடங்கிவைத்தார்.

ஷாம்பூ பாட்டில்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருந்த காலம் அது. ஆனால் எல்லா ஷாம்பூக்களுமே பெரிய பெரிய பாட்டில்களில் வந்து கொண்டிருந்தன. இதைப்பார்த்த என் தந்தையார், ”ஷாம்பூவைப் பணக்காரர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? ஏழைகள் பயன்படுத்தக்கூடாதா?” என்ற கேள்வியை எழுப்பினார்.

அத்துடன் நில்லாமல் வெல்வெட் ஷாம்பூவை தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கினார். எனது அண்ணன்களான டாக்டர்.ராஜ்குமார், அசோக்குமார், ஆகியோர் எனது தந்தைக்குப் பக்க பலமாக  நின்றார்கள். ’ஷாம்பூவைச் சிறிய சாஷேக்களாக அடைத்து விற்றால் என்ன!’ என்ற யோசனை  தோன்ற,சிறிய சாஷேக்களில் அடைத்து அறிமுகப்படுத்தினார். இது அந்தக்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

உங்களது முதல் வேலைவாய்ப்பு எது?

நான் மட்டுமல்ல, எனது சகோதர சகோதரிகள் யாருமே வேலைக்குச் சென்றது கிடையாது. எல்லோரையுமே எனது தந்தையார் தொழில் முனைவோராகத்தான் உருவாக்கினார்.

 

நீங்கள் எதுவரை படித்தீர்கள்?

எனது சகோதரர்கள் எல்லோரும் ஆங்கில வழிக்கல்வி படித்தவர்கள். நான் தமிழ்வழிக் கல்வியைப் படித்தேன். அதனால் எனக்குத் தாழ்வுமனப்பான்மைகூட ஏற்பட்டிருந்தது. படிப்பில் நான் ரொம்பவும் சுமார்தான்.

 

தேர்வுக்கு  இரண்டு முன்று நாட்களுக்கு முன் படிக்கின்ற பழக்கம்தான் என்னிடம் இருந்தது. குறைந்த மதிப்பெண்களோடுதான் நான் எனது தேர்வுகளில் வென்றிருக்கிறேன்.

 

இந்நிலையில் எனது தந்தை என்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் படிப்பில் சேர்த்துவிட்டார். படிப்பே சரியாக வராதவனுக்கு வேதியியல் படிப்பு எப்படி இருக்கும்? தட்டுத்தடுமாறி படிப்பை முடித்து குடும்பத் தொழிலில் நுழைந்தேன்.

 

எப்போது தனியாகத் தொழில் தொடங்கினீர்கள்?

வெல்வெட் நிறுவனத்தில் எனது சகோதரர்களுக்கு துணையாக நானும் இணைந்து கொண்டேன். வேதியியல் படித்திருந்ததால், ஷாம்பு தொடர்பான சில விஷயங்களில் என்னாலும் ஆலோசனை சொல்ல முடிந்தது. மேலும் தொழில் ரீதியிலான சில ஆலோனைகளை நான் சொல்லத் தொடங்கினேன். என்னிடம் இருந்த தாழ்வுமனப்பான்மை அகன்ற நேரமது.

kunXl1q-

ஆனால் எனது ஆலோசனைகளை என் சகோதரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்குச் சரியென்று படாத விஷயத்தைத் தொடர்வது தவறு என்ற எண்ணம் ஏற்படவே குடும்பத்திலிருந்து பிரிந்து தனியே வந்துவிடுவதென்று முடிவெடுத்தேன்.

 

அதற்குக் குடும்பம் ஒப்புக் கொண்டதா?

ஒப்புக் கொள்ளவில்லைதான். என்றாலும் குடும்பச் சொத்திலோ, வணிகத்திலோ எனக்கு எந்தப் பங்கும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டேன். எனது வீட்டுக்கு அருகிலேயே 200 மீட்டர் தொலைவில் ஒரு சிறிய கடையை வாடகைக்குப் பிடித்தேன்.

 

அப்போது என்ன தொழில் செய்வது என்ற கேள்வி மனதில் எழுந்தது. தெரியாத தொழிலைச் செய்வதைக் காட்டிலும், தெரிந்தத் தொழிலைச் செய்வது சரியாக இருக்கும் என்பதால் எனது தந்தையார் சின்னி கிருஷ்ணன் நினைவாக சிக் ஷாம்பு நிறுவனத்தைத் தொடங்கினேன்.

 

200 மீட்டர் தொலைவில் கார், சொந்த வீடு சகல வசதிகளும் இருக்க, நான் சைக்கிளில் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். அப்போது எனது நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் ”வீட்டில் உள்ளோர் பேச்சைக் கேட்டிருந்தால் சொகுசாக வாழலாமே.. எதற்காக இப்படி கஷ்டப்படுகிறாய்?” என்று கேட்டனர். ஆனால் அவற்றை நான் பொருட்படுத்தவில்லை. சொந்தத்  தொழிலைத் தொடர்வது என்ற முடிவில் தெளிவாக இருந்தேன்.

 

தொழில் தொடங்க உங்களிடம் முதலீடு இருந்ததா?

குடும்பத் தொழிலாக இருந்தாலும் வெல்வெட் நிறுவனத்தில் நான் மாதம் ரூ.2000 ஊதியம் வாங்கும் ஊழியராக இருந்தேன். அதில் ரூ.15000 சேமித்து வைத்திருந்தேன். அதுதான் எனது புதிய தொழிலுக்கான முதலீடாக இருந்தது. எந்த நிலையிலும் உறவினர்களிடமோ, சகோதரர்களிடமோ கடன் கேட்டு நிற்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

 

இதற்கிடையில் உங்கள் தந்தையார் காலமாகிவிட்டார் அல்லவா?

ஆமாம். 1975ல் எனது தந்தை காலமாகிவிட்டார். எனது அண்ணனும் எனது தாயாரும் வெல்வெட் நிறுவனத்தை மூடிவிடலாமென முடிவெடுத்தனர். இது குறித்து எங்களது வங்கி மேலாளரிடம் சொன்னோம்.

அவரோ, “தாராளமாக அந்த நிறுவனத்தை மூடுங்கள். ஆனால் அதற்கு முன்பு உங்கள் நிறுவனம் எங்களிடம் வாங்கியிருக்கும் ரூ.2 லட்சம் கடனை அடைத்துவிடுங்கள்” என்று கூறினார். கடனை அடைக்கவோ பணமில்லை. நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவது என்று எனது குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதற்குப்பின்தான் நான் சொன்ன சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்தன.

 

தொழிலுக்காக வங்கிக் கடன் பெற்றீர்களா?

சிறுதொழில் கடன் வேண்டுமென நான் வங்கிகளை அணுகினேன். ஆனால் பிணையம் இல்லாததால் எனக்குக் கடன் கொடுக்க வங்கிகள் தயங்கின. அந்நிலையில் கடலூர் விஜயா வங்கியின் கிளை மேலாளர் சுப்பிரமணியம் என்பவர் என்னை நம்பிக் கடன் தர முன்வந்தார்.

 

அவருக்கு மட்டும் எப்படி நம்பிக்கை வந்தது?

எங்களது தணிக்கையாளர் ராமசாமி அவர்கள் நிறுவனம் தொடங்கும்போதே ”வருமான வரியைக் கட்டிவிடுங்கள்” என்று கூறினார். நானும் அதுபோல் வரி செலுத்தினேன். அதற்கான ஆவணங்களைக் கண்ட வங்கி மேலாளர், ‘தொழில் தொடங்கியவுடனே வருமான வரி கட்டுகிறார்கள் என்றால் இவர்கள் கட்டாயம் நமது வங்கியில் வாங்கும் கடனையும் கட்டிவிடுவார்கள். எனவே தாராளமாகக் கடன் கொடுக்கலாம்’ என்று பரிந்துரைத்து ரூ.25000 கடன் வழங்கினார்.

 

அது ரொக்கக் கடனா?

அப்போது கே.எல்.சி.சி என்று ஒரு திட்டம் இருந்தது. அதன்படி கடன் கொடுக்கும் வங்கி உங்கள் மூலப்பொருட்களை அதன் பொறுப்பில் வைத்திருக்கும். உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் வங்கியை அணுகினால் , அவர்கள்  மூலப்பொருட்களைத் தேவையான அளவுக்கு விடுவிப்பார்கள். அந்தத் திட்டத்தில் தான் எனக்கு வங்கிக் கடன் கிடைத்தது.

 

cavinproducts

உங்களுக்கு சந்தை அனுபவம் அன்றைக்கு இருந்திருக்க முடியாதே, எப்படி சமாளித்தீர்கள்?

உண்மைதான். சந்தை ஆய்வு என்று நான் எதையும் மேற்கொள்ளவில்லை. அதனால் நானே நுகர்வோர், கடைக்காரர்களிடம் நேரடியாகச் சென்று கொடுத்து ஷாம்பூவைப் பயன்படுத்திப் பார்க்கச் சொன்னேன். அதில் கவரப்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாகவும், எங்களது முகவர்களாகவும் மாறினார்கள்.

 

அதேபோல் எந்த சூழ்நிலையிலும் கடனுக்குச் சரக்கு விற்கக் கூடாது என்ற கொள்கையை நான் தொடக்கத்திலிருந்தே கடைபிடித்து வந்திருக்கிறேன். ஆனால் பெரிய நிறுவனங்களிடம், டீலர்களிடம் எங்களது ஊழியர்கள் அதனைச் சொன்னபோது அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

 

30 முதல் 40 நாட்கள் வரை கடன் அளித்தால் மட்டுமே  எங்களது தயாரிப்புகளை விற்றுத் தரமுடியும் என்றன. அந்நிலையில் எங்களுக்கு ஒரு சிந்தனை! ஏற்கனவே வளர்ந்துவிட்ட நிறுவனங்களை அணுகுவதைக் காட்டிலும், புதிய நுகர்வோரைத் தக்கவைத்து சந்தைப்படுத்தினால் என்னவென்று நினைத்தோம்.

 

அதையடுத்து, அனுபவமே இல்லாத நபர்களுக்கு (எ.கா: சைக்கிள் கடைகள்) தன்னம்பிக்கையூட்டி அவர்களை வைத்து எங்களது ஷாம்புக்களை விற்கச் செய்தோம். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படு எங்களுக்குப் புதிய டீலர்கள் கிடைத்தார்கள்.

 

எப்போது லாபம் பார்க்கத் தொடங்கினீர்கள்?

தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே ரூ.50,000 வரை லாபம் கிடைத்தது, அப்போது நான் ஒரு தவறைச் செய்துவிட்டேன். வருமானம் ஏறுமுகத்தில் இருக்கிறதே என்று கூடுதலாக ஊழியர்களை நியமித்துவிட்டேன். ரூ. 50 ஆயிரமாக இருந்த வருமானம்  40,000, 30,000 என்று குறையத் தொடங்கியது. இதன்பின்தான் செலவுகளைக் குறைத்து அதற்கு ஏற்றாற்போல் விரிவாக்கப் பணியை வைத்துக் கொண்டேன்.

 

நீங்கள் எம்.பி.ஏ போன்ற படிப்புகளைப் படிக்கவில்லை. இந்நிலையில் நிறுவனத்தில் தொழில்நேர்த்தியை (Professionalism)எப்போது எப்படிக் கொண்டுவந்தீர்கள்?

1983 வாக்கில் நான் கடலூரில் காலூன்றி இருந்தாலும் சென்னை போன்ற பெரு நகரத்தில் இருந்தால்தான் வளர்ச்சி சாத்தியமாகும் என்று நம்பினேன். அதனை அடுத்து 1991ல் எனது நிறுவனம் சென்னைக்கு இடம்மாறியது.

இடைப்பட்ட காலத்தில் நான் தன்னம்பிக்கை, நிர்வாகம் முதலியன தொடர்பான நூல்களை தினசரி படிக்கத் தொடங்கினேன். அவை தொடர்பான ஒலிநாடாக்களை, உடற்பயிற்சியின்போது கேட்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

 

எனக்கு தமிழ்வழியில் படித்தவன் என்ற தாழ்வு மனப்பான்மை இருந்ததால் ஆங்கிலத்தை முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற உந்துதலும், தேவையும் இருந்துகொண்டே இருந்தன.

எனவே நான் தினமும் அகராதியை எடுத்து 5 சொற்களை அவற்றின் பொருளோடு மனப்பாடம் செய்யத் தொடங்கினேன். நாளொன்றுக்கு 5 வார்த்தைகளை எடுத்து 5 வாக்கியங்களாக உருவாக்குவதைப் பயிற்சியாகக் கொண்டேன். இது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது.

 

ஆங்கிலம் கற்றுக் கொண்டது, வாய்ப்புகளை இன்னும் விசாலமாக்கியது. இதுதவிர வல்லுநர்களைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பதாலும் நிர்வாகத்திறன் மிக்கோரைப் பணியில் அமர்த்திக் கொள்வதாலும் தொழில்நேர்த்தி என்பது சாத்தியமாயிற்று.

 

பொருளாதார ரீதியிலான சவால்களைச் சந்தித்தீர்களா?

இல்லை. நான் திட்டமிட்டு, அதற்கேற்றாற்போல் செயல்படுவதால் பொருளாதார சவால்களை சந்திக்கவில்லை. ஆனால், எங்களது தயாரிப்புகளைப் போலவே, பல சிறிய நிறுவனங்கள் கலப்படப் பொருட்களைத் தயாரித்துத் தொந்தரவு கொடுத்தன. ஆனால் அவை குறித்து நாங்கள் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஒரு கட்டத்தில் கலப்படங்கள் காணாமல் போய்விட்டன. எனவே கலப்படம், போலித் தயாரிப்புகள் ஆகியவைகூட எங்களுக்குச் சவாலாக இருந்ததில்லை.

 

நிதிநிர்வாகத் திட்டமிடல் என்பது உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது?

அது மிகவும் முக்கியமான விஷயம். இன்றைக்குப் பல தொழில்முனைவோர், தொழிலுக்குள் வரும் எல்லாத் தொகையும் தங்களது சொந்த வருவாய் என்று நினைத்துச் செலவு செய்துவிடுகிறார்கள். பொருளாதார ஒழுங்கின்மை உங்கள் தொழிலை நசுக்கிவிடும்.

 

லாபம் வேறு, நிறுவனத்துக்குள் புழங்கும் பணம் வேறு, என்ற தெளிவு தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டும். நான் கோடிகளைச் சம்பாதித்த போதும்கூட சொந்த வீடு வாங்கவில்லை. சென்னைக்கு நிறுவனத்தை இடம்மாற்றிச் சொந்தக்கட்டடத்தில் அமர்ந்த பிறகுதான் சொந்த வீடு வாங்கினேன். அதுவரை கவின்கேர் நிறுவனம், வாடகைக் கட்டடத்தில்தான் இயங்கியது, நானும் வாடகை வீட்டில்தால் குடியிருந்தேன்.

 

தொழில் முனைவோரின் வெற்றியில் குடும்பத்தின் பங்கு என்ன?

ஒவ்வொரு தொழில் முனைவோரின் வெற்றியிலும் குடும்பத்தின் பங்கு கணிசமானது. மிகக்குறிப்பாகத் தொழில்செய்யும் கணவனை மனைவி நன்கு புரிந்து கொண்டு ஆதரவளித்தால், அவரால் தொழிலில் வலுவாக வேரூன்ற முடியும்.

எனது மனைவி தேன்மொழி அப்படிப்பட்டவர். நான் தொழிலில் மும்முரமாக இருந்தாலும் குடும்பத்தைத் திறம்பட பராமரிப்பது, எனக்கும் தொழிலில் ஆதரவாக இருப்பது என்று பலம் சேர்க்கிறார்.

 

தமிழகத்தில் இன்று தொழில்முனைவோருக்குப் புதிய தொழில் தொடங்க உகந்த சூழல் இருக்கிறதா?

எங்களைப் பொறுத்தவரை தொழில் தொடங்க உகந்த மாநிலமாக இருந்தது புதுச்சேரிதான். அன்றைய நிலையில் தமிழகத்தில் ஒரு உரிமம் வாங்க 4 மாதங்கள் ஆகும். ஆனால் புதுவையிலோ 10 நாட்களுக்குள் பெற்றுவிடமுடியும் என்ற நிலை இருந்தது. இன்றோ எல்லா மாநிலங்களிலுமே ஏகப்பட்ட நிர்வாக நடைமுறைகளை வைத்திருப்பதால் தொழில் தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

 

ஆங்கில இதழ்களில் ’முதலீடு இல்லாமல் தொழில் முனைவோர் ஆனவர்’ ; ‘ நூறு அடி அறையில் இருந்துகொண்டு கோடி சம்பாதித்தவர்’ என்றெல்லாம் எழுதுகிறார்களே, இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? அதுபோல வெற்றியெல்லாம் சாத்தியம்தானா?

 

தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் இதழ்களில் இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் இடம்பெறுகின்றன. இவற்றுள் கொஞ்சம் கற்பனை கலந்திருந்தாலும்கூட பெரும்பாலானவை உண்மைதான். அபாரமான யோசனை உங்களிடம் இருந்தால் முதலீட்டுக்குக்கூட கஷ்டப்பட வேண்டியதில்லை. சரியான இடத்திலிருந்து தேவையான முதலீடு உங்களை  வந்து சேர்ந்துவிடும். வெற்றியும் சாத்தியம்தான்.

 

கவின்கேர் நிறுவனம் கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்கிறது. நிறுவனத்தின் தலைவரான நீங்கள் அதற்கேற்ப வாழ்க்கைப்பாணியை மாற்றிக் கொண்டுவிட்டீர்களா?

நீங்கள் பகட்டாகத் தோற்றமளிப்பது, விருந்துகளில் கலந்து கொள்வது குறித்துக் கேட்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு இல்லப்பறவை. எந்த சூழலிலும் இரவு 10.30 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன். நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்வது என்ற வழக்கம் என்னிடம் இல்லை.

 

அவ்வாறு கலந்து கொண்டால்,  நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த நேரிடலாம். மது அருந்தினால் உங்களை அறியாமல் நீங்கள் உளறுவீர்கள். ஒரு பொறுப்பான தொழிலதிபர் உளறிக் கொண்டிருந்தால் அவர் வணிகம் என்னாவது? எனவே நான் அந்தப் பக்கம் போனதில்லை. ஒரு பொறுப்பான தந்தையாகவும், பொறுப்பான கணவனாகவும் இருக்கும் வாழ்க்கைப் பாணியே எனக்குப் போதுமானதாக இருக்கிறது.

 

DSC_4465

சமூகப்பணி சார்ந்த விஷயங்களுக்கு எவ்வளவு  செலவிடுகிறீர்கள்?

ஒவ்வொரு ஆண்டும் கவின்கேர் நிறுவனம் சுமார்  ரூ.7 கோடியை சமூகப் பொறுப்பு சார்ந்த விஷயங்களுக்குச் செலவிடுகிறது.

 

இன்றைய வளர்ந்த நிலையில் துணிகர முதலீடுகளை நோக்கிச் செல்வீர்களா?

ஆம், அண்மையில் ஒரு துணிகர முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ.250 கோடி முதலீட்டைப் பெற்றிருக்கிறேன்.

 

புதிதாகத் தொழில்தொடங்க விரும்புவோருக்கு நீங்கள் கூறும் ஆலோசனை  என்னென்ன?

உங்களை நம்புங்கள் என்பதுதான் புதிய தொழில் முனைவோருக்கு நான் கூறும் முதல் ஆலோசனை. அதேபோல வழக்கமாக எல்லாரும் சொல்கின்ற விஷயத்தையே நீங்களும் செய்யாமல் வித்தியாசமாகச் செய்வதுதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். நீங்கள் நல்லவராக இருந்தால் மட்டும்போதாது. வல்லவராகவும் இருக்க வேண்டும். அதேபோல மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் தன்மை தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டும்.

 

எல்லாவற்றையும் விட நேர்மையான முறையில் தொழில் செய்வது முக்கியம். ’அந்த நிறுவனமா? அவர்கள் அப்படி தவறு ஏதும் செய்ய மாட்டார்களே!’ என்று பொதுமக்கள் உங்களைப் பற்றிய கருத்தோடு இருக்க வேண்டும்.

-ம.விஜயலட்சுமி துரையரசு

(புகைப்படங்கள்: ஓமர் ஷரீஃப்)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.