அறநெறிகளை மீறாமல் தொழிலை நடத்துவதால் என்ன கிடைக்கும்?

அறநெறிகளை மீறாமல் தொழிலை நடத்துவதால் என்ன கிடைக்கும்?

எப்படி வேண்டுமானாலும் தொழில் நடத்தலாம். தொழிலில் லாபம் மட்டுமே நமது நோக்கமாக இருக்கவேண்டும் என்கிற சிந்தனையைப் புறந்தள்ளி நியாயங்களுக்கு உட்பட்டு நாணயத்துடன் தொழில் நடத்துவதை BUSINESS  ETHICS  அதாவது தொழில் அறம் என்று சொல்கிறோம். இப்படி அறத்துடன் தொழிலை நடத்துவதால் தொழில்முனைவோருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?பார்க்கலாமா?

 

நியாயமான மதிப்பீடுகளையும் கொள்கைகளையும் கொண்டிருக்கும் தலைமையை ஊழியர்கள் மிகவும் விரும்புவார்கள். டக்கென்று இடம்மாற மாட்டார்கள். நம்முடைய உழைப்புக்கு ஏற்ற பலன் இங்கே கிடைக்கிறது என்று திருப்தி அடைவார்கள். அறத்துடன் நடந்துகொள்ளும்பொழுது  திறமையான ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

அறத்துடனும் நியாயங்களுடனும் நடந்துகொள்ளும் நிறுவனத்தை முதலீட்டாளர்கள் மிகவும் விரும்புவார்கள். நம்முடைய பணம் பாதுகாப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கை அவர்களுக்குள் அதிகமாகும். இதன் காரணமாக குறிப்பிட்ட அந்த நிறுவனத்தில் முதலீடு  செய்ய மிகவும் விரும்புவார்கள்.

 

சரியான முறையில் தொழிலை நடத்தும்போது அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அடிக்கடி இடம்மாற மாட்டார்கள். இதனால் புது ஊழியர்களை அடிக்கடி தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்காது. இதனால் புது ஆட்களை எடுப்பதற்காக செலவிடப்படும் பணமும் மிச்சமாகும்.

அதுமட்டுமல்ல ஊழியர்களின் திறனுக்கு ஏற்ப சரியான ஊதியத்தை,மரியாதையை அளிக்கும் தலைமையை அதன் ஊழியர்கள் மிகவும் மதிப்பார்கள். தங்களுடைய உச்சபட்சத் திறனை வேலையில் காண்பிப்பார்கள். இதனால் உற்பத்தி அதிகமாகும். தொழில் சிறக்கும்.

தரமான பொருள்,நியாயமான அணுகுமுறை என்கிற இந்த ரெண்டும்தான் வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட நிறுவனம் பக்கம் இழுக்க வைக்க உதவும் மிக முக்கியக் காரணிகள். எனவே அறநெறிகளை மீறாமல் தொழில் செய்பவர்களை விட்டு அவ்வளவு சீக்கிரத்தில் வாடிக்கையாளர்கள் சென்றுவிட மாட்டார்கள்.

குறிப்பாக உங்களது தரமான  தயாரிப்புக்கு சந்தையில் நன்மதிப்பு இருக்கிறதா? காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் உயர உயரப் பறக்கப் போகிறீர்கள். ஏனென்றால் சந்தையில் உங்கள் பொருளுக்கு நன்மதிப்புக் கிடைத்தால் இதன் காரணமாக உங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

அவர்கள் உங்களை நம்பத் தொடங்குவார்கள். கூடவே அவர்கள் தங்களது உறவுகள்,நண்பர்களுக்கு உங்களது தயாரிப்புகளைப் பரிந்துரைப்பார்கள். இந்த வாய்வழி விளம்பரம் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுபோக உதவும்.

தரமான பொருட்களைத் தயாரிப்பது,வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்குவது,சட்டத்தை மதித்து நடப்பது,வருமானவரியை முறைப்படி கட்டுவது என்று தொழில்முனைவோர் சரியாக நடந்துகொள்ளும் போது தேவையற்ற அபராதங்களை கட்டத் தேவையிருக்காது. அதுமட்டுமல்ல உங்கள் நிறுவனத்தின் மீது ஒரு நன்மதிப்பும் உண்டாகும்.

 

ஒரு நல்ல தலைவர் தன்னுடைய ஊழியர்களை சிறப்பாக நடத்துவார். இப்படி தலைமைக்கும் ஊழியர்களுக்கும் இடையே சிறப்பான புரிதல் இருந்தால் வேலை கூட்டுவேலையாக மாறும். அதனுடைய பலனும் அபரிமிதமாக இருக்கும்.

நீங்கள் தொழிலை அறத்துடன் நடத்துகிறவராக இருந்தால் உங்களோடு கூட்டு சேர பிற தொழில்முனைவோர் விரும்புவார்கள். இதனால் உங்கள் தொழில் அடுத்த கட்டத்தை நோக்கி பீடுநடை போடும்.

தொழில் தர்மத்தை மீறாமல் தொழில் நடத்தும்பொழுது ஊழியர்களும் அறத்துடன் வேலை செய்வார்கள். குறிப்பாக நிறுவனத்தின் உடைமைகளை தேவையில்லாமல் வீணாக்க மாட்டார்கள். பித்தலாட்டம் செய்து குறுகிய காலத்தில் பணம் சேர்ப்பதுபோல எந்தவொரு மாயாஜாலமும் அறத்துடன் தொழில் நடத்தும்பொழுது நடக்காது. ஆனால்  நியாயமான முறையில் தொழில் செய்தால் அதன் பலன் நீண்டகாலத்திற்குக் கிடைக்கும். இருக்கும்.

அதுமட்டுமல்ல அறம் மீறாமல்,தரம் குறையாமல்  தொழில் நடத்தும்பொழுது இந்த சமூகத்திற்கு நல்லனவற்றை தொழில்முனைவோர் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். இதுவும் கூட ஒருவகையான சமூக சேவைதானே?

 

-பாலா.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.