அவசர சிகிச்சைப்பிரிவில் என்ன நடக்குது தெரியுமா?

முன்பெல்லாம் யாருக்காவது விபத்து,காயம், பாம்புக்கடி என்றால் நாம்  என்ன செய்தோம்? பாதிக்கப்பட்டவரை அழைத்துக்கொண்டு ( சில சமயங்களில் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு) அருகில்  உள்ள மருத்துவமனைக்கு  ஓடுவோம். அங்கு அவசர  சிகிச்சைப்  பிரிவு என்று ஒன்று  இருக்கும். பெரும்பாலும் எலும்பு  மருத்துவர்கள்தாம்  அங்கு இருப்பார்கள்.

 

என்ன சிகிச்சை நடக்கிறது   என்ற விபரம்கூட நமக்கு தெரிந்திருக்காது. ஆனால்  இப்போது காலமும்   மாறியிருக்கிறது. அவசர சிகிச்சை என்கிற விசயமும் தொழில்நுட்ப ரீதியில் ரொம்பவே  முன்னேறியிருக்கிறது. அவசர சிகிச்சைக்கென தனியாகவே  படிப்புகள் ( Accident& Emergency Medicine) வந்திருக்கின்றன. சிறப்பு மருந்துகள் கூட கிடைக்கின்றன.

 

இத்துறை  குறித்து சென்னை போர்டிஸ்  மலர் மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவு துறையின்  தலைவர்  ரவி பிரதாப் அவர்களுடன்  உரையாடியதிலிருந்து….

 

அவசர சிகிச்சைப்பிரிவு ஒரு தனிமுக்கியத்துவம் வாய்ந்த துறையாக இருக்கிறதா?

 

ரவி பிரதாப்: முன்பைப் போலல்லாமல் இப்போது அவசர சிகிச்சை பிரிவு (casuality ) என்பது தனி முக்கியத்துவம் பெற்ற துறையாகியிருக்கிறது . இங்கு இருக்கும் மருத்துவர் அவசர சிகிச்சை மருத்துவ அதிகாரி  எனப்படுகிறார்.

 

ஒரு அவசர சிகிச்சை மருத்துவ அதிகாரியிடம் ஒரு  நோயாளி வந்தால்  அவர் உடனடியாக என்ன செய்வார்?

 

ரவி பிரதாப்: அவசர சிகிச்சையில் மொத்தம் நான்கு படிநிலைகள்  உண்டு. முதலாவது படி அடையாளம் காணுதல் (identification ). வந்திருக்கும் நோயாளிக்கு என்ன பிரச்னை  என்பதை இனம் காணும் படி நிலைதான்   அது. அதன் பின் நோயாளியை சிகிச்சைக்கு  தயார்படுத்துவோம்.இதனை stabilization என்போம்.

Untitled

அடுத்ததாக அவர்களுக்கு தேவையான சிகிச்சை எதுவோ, அது தொடர்பான பிரிவுக்கு அவரை அனுப்புவோம். இதனை segregation  என்கிறோம். அதன்பின் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதனை dispatch  என்கிறோம்.

 

நோயாளிகளை அவர்களின் பிரச்சனை   அடிப்படையில் எப்படி   பிரிப்பீர்கள் ?

 

ரவி பிரதாப்: சாதாரண  பிரச்னை , அவசர கவனம் தேவைப்படும் பிரச்னை என்று  பிரிக்க வேண்டும். ஒருவர் சாதாரண தலைவலி என்றால்கூட தனக்கு ஏதோ பெரிய பிரச்னை  இருப்பதாக  கருதிக்கொண்டு அவசர சிகிச்சைக்கு வரக்கூடும். அவருக்கு தலைவலிக்கான மருந்து கொடுத்தாலே போதும்.

ஆனால் விபத்தில் காயமடைந்ததால் ஒருவருக்கு தலை வலிக்கிறது என்றால் அது உடனடியாக   கவனிக்கப்பட வேண்டிய  விஷயம்.அவரது   காயத்தின்  தன்மையை  அறிந்து, உடனே அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை உரிய துறைமூலம் தொடங்கிவிடுவோம்.

 

ஒரு நோயாளியை பார்த்த  மாத்திரத்தில் அவர் கடும் பிரச்னையில்  இருக்கிறாரா இல்லையா   என்பதை கண்டுபிடிக்க முடியுமா?

 

ரவி பிரதாப்: முடியும். பொதுவாக நோயாளிகளுள்  பலரும் என்னிடம் வரும்போது “டாக்டர்….நான் ரொம்ப  சீரியசாக  இருக்கிறேன். உடனே  மருத்துவம் பாருங்கள்..” என்று பயத்தில்  அலறுவார்கள். பொதுவாக இவர்கள் சீரியஸ்  நிலையில் இருக்க மாட்டார்கள்.

 

உண்மையிலேயே கடும் பாதிப்பில் இருந்தால் அவரால் கத்தக்கூட   முடியாது.  கடும் பாதிப்பை அடைந்தவர்களால் இவ்வாறு பேசவோ, அலறவோ முடியாது. அதைக் கண்டறிந்து உடனடியாக பரிசோதனைகளைத் தொடங்கி   விடுவோம். குடித்துவிட்டு வாந்தி எடுப்பவருக்கும்  கீழே விழுந்ததால் வாந்தி எடுப்பவருக்கும் வேறுபாடு   உண்டு. பார்த்த  மாத்திரத்தில் இவர்களைக்  கண்டறிந்து விடுவோம்.

 

பொதுவாக அவசர சிகிச்சை பிரிவுக்கு வருபவர்கள் யாராக  இருப்பார்கள்?

 

ரவி பிரதாப்: விபத்துக்களில் சிக்கியவர்கள், தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோர் ,வலிப்பு நோயாளிகள், மாரடைப்பு நோயாளிகள் முதல் “காலையிலிருந்து  கை அரிக்கிறது ” என்று  சொல்பவர்கள்வரை  எல்லா  தரப்பினரும் வருவார்கள் .

 

DSC_0938

அவசர மருத்துவம்  தனிப் படிப்பாக  இருக்கிறதா ?

 

ரவி பிரதாப்: ஆம். மேலைநாடுகளில்  இது புகழ்பெற்ற படிப்பாக இருக்கிறது. இந்தியாவில் இத்துறையே இப்போதுதான் பிரபலமாகத்  தொடங்கியிருக்கிறது . தமிழகத்தில் வேலூரில்  உள்ள  சி.எம்.சி. மருத்துவமனையில் மட்டும்தான் இது தொடர்பான படிப்பு இருக்கிறது.

 

(மருத்துவர் ரவி பிரதாப் சென்னை  அடையாறில்  உள்ள போர்டிஸ் மலர் மருத்துவமனையில்  அவசர மருத்துவ துறையின் பொறுப்பாளராகப்  பணியாற்றி  வருகிறார். புனேவில்  உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில் அவசர மருத்துவத்தில்  பட்டயப் படிப்பை முடித்தவர்.

இத்துறை ஆய்வுக்காக வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையின்  ஆதரவைப் (fellowship ) பெற்றவர். 7  ஆண்டுகளுக்கும்  மேலான  அனுபவம் பெற்றவர். அவசர  மருத்துவம்  குறித்து பல்வேறு பயிற்சிகளையும்  அளித்து வருகிறார்)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *