உணவுத் தொழிலில் பிரிட்டனைக் கலக்கும் இந்தியப் பெண்

தன்னுடைய திருமணத்துக்குப் பிறகு  வாழ்க்கையை விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு வாழ்ந்தவர்தான்   பிங்கி லிலானி என்கிற இந்தியப்பெண்.  ஆனால் இன்றோ, அவர் பிரிட்டனின் பெண் தொழிலதிபர்களில் ஒருவர்.

 

அதுமட்டுமல்ல பிரிட்டனில் வாழும் சக்தி வாய்ந்த இஸ்லாமியப் பிரபலங்களில் ஓருவராகவும் இவர் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.

 

’ஸ்பைஸ் மேஜிக்’ என்ற இவரது உணவு நிறுவனம், இவருக்கு  கோடி கோடியாக லாபத்தைத் தந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, இவர் தலைசிறந்த பேச்சாளரும் கூட! பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துவதற்காக  இவர்  நிறைய உத்வேகமூட்டும் உரைகளையும் (motivational speech) நிகழ்த்தி வருகிறார்.

 

இவரது உரை ஒவ்வொன்றும் அசத்தல் ரகம். இதன் காரணமாக உலகின் தலைசிறந்த உத்வேகப் பேச்சாளர்களில் பிங்கியும் ஒருவர் என்று பெரிய பெரிய நிறுவனங்கள் பிங்கியை கொண்டாடுகின்றன. இவரின் தேதிக்காகக் காத்திருக்கின்றன.

 

இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? அதற்கு முன் பிங்கி தனது இளமைப்பருவம் பற்றிச் சொல்கிறார் கேளுங்கள்.

 

“கொல்கத்தாவின் பாரம்பரியமான இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவள் நான். என்னுடைய அப்பா ஆங்கிலேய  நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பதவியில் இருந்தார். எங்கள் வீட்டில் எல்லாருமே சாப்பாட்டுப் பிரியர்கள். அதிலும் அப்பா விதவிதமான உணவு வகைகளை எதிர்பார்ப்பார்.

 

பொதுவாகவே மசாலாக்கள் நிறைந்த கம கம உணவு வகைகளைத் தயாரிப்பதில் இஸ்லாமியப் பெண்கள் மிகவும் திறமைசாலிகள் ஆயிற்றே! அதனால் என்னுடைய அம்மாவின் கைமணத்தில்  வீடே மணக்கும்.

 

நானும் மூக்கு பிடிக்க சாப்பிடுவேன். மற்றபடி சமையல் கட்டுக்குள் நான் நுழைந்ததே கிடையாது.  இப்படி படிப்பு, விளையாட்டு  என்று பொறுப்புகள் எதுவும் இல்லாமல்  மகிழ்ச்சியாக என் வாழ்க்கை நகர்ந்தது. படிப்பை முடித்தபிறகு என்னுடைய திருமணமும் விமரிசையாக நடந்தேறியது.

“திருமணத்துக்குப் பிறகு நானும் என்னுடைய கணவரும் அவருடைய வேலை நிமித்தமாக இங்கிலாந்தில் குடியேற வேண்டிய சூழ்நிலை வந்தது. தனிக்குடித்தனத்தில் நான்

விதவிதமாக சமையல் செய்து அசத்துவேன் என்று என்னுடைய கணவர் ரொம்பவே ஆசைப்பட்டிருப்பார்போல.

 

எனக்கு முட்டையைக்கூட வேக வைக்கத்தெரியாது என்கிற மாபெரும் உண்மையைத் தெரிந்து கொண்டதும் அதிர்ச்சியாகிவிட்டார். சமையல் தெரிந்த மனைவி வாய்க்காதது  அவருக்கு மிகப் பெரிய குறையாகவே போய் விட்டது. வேறுவழியில்லாமல் சமையல்காரர் ஒருவரை நியமித்தோம். எங்கள் வாழ்க்கையும் ஓட ஆரம்பித்தது” என்று சிரிக்கிறார்.

 

பிங்கிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஒரு நாள், அவரது மூத்த மகன் இவரைப் பார்த்துக் கேட்ட ஒரு  கேள்விதான் அதுவரை இவர் வாழ்ந்த சாதாரண வாழ்க்கையை சாதனை வாழ்க்கையாக் மாற்றி இருக்கிறது.

 

“என்னுடைய மூத்த மகனுக்கு அப்போது பத்து வயது. பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய அவன் திடீரென்று ’அம்மா என்னுடைய நண்பர்கள் எல்லாருக்கும் இந்திய உணவு வகைகள் ரொம்பவே பிடிக்குமாம். உன்னுடைய அம்மா என்ன உணவு நல்லா செய்வாங்க?ன்னு கேக்குறாங்க. அதுமட்டுமில்லை. நம்ம தெருவில் இருக்கிற பெரியவங்களுக்கான பள்ளியில இந்திய சமையல் பத்தி சொல்லித்தர ஆசிரியர் வேணும்னு விளம்பரம் செய்திருக்காங்க. உனக்கு ஏம்மா சமைக்கத் தெரியல? தெரிஞ்சிருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!’ சற்றே ஏக்கத்துடன் என்னைக் கட்டிக் கொண்டு என் மகன் அப்படிப் பேசியதும்  மிகப் பெரிய குற்ற உணர்வு என்னை ஆட்கொண்டது.

 

ஒரு அம்மாவாய் என் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு வகைகளைக் கூட  செய்து கொடுக்காமல் என்னுடைய இத்தனை வருடங்களை வீணடித்துவிட்டேனே…….”என்று தோண ஆரம்பித்தது. அதன்பிறகே ஆரம்பமானது என் சமையல் பயணம்.

 

இந்தியாவில் இருந்த அம்மாவின் உதவியோடு அடிப்படை சமையலை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். என்னை அறியாமலேயே ஒரு வித ஆர்வம் என்னைத் தொற்றிக் கொண்டது. அடுத்து சமையல் புத்தகங்களின் உதவியோடு நிறைய புது வித உணவுகளை செய்து பார்க்க ஆரம்பித்தேன்.

 

கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த வார்த்தையும் எத்தனை நாட்களுக்கு வரும்? அதனால் என் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு நானே நிறைய உணவுவகைகளை புதிது புதிதாக செய்ய ஆரம்பித்தேன்.

 

”என் இரண்டு குழந்தைகள்தான் என்னுடைய விமர்சகர்கள். என்னுடைய உணவுகளை ருசித்துப் பார்த்து குறை நிறைகளை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக என் சமையலை மெருகேற்ற ஆரம்பித்தேன்.

 

இந்திய உணவு வகைகள் பற்றி சொல்லித்தர, பெரியவர்களுக்கான பள்ளி ஒன்றுக்கு  குக்கரி டீச்சர் தேவைப்படுகிறது என்று என் மகன் முன்பு என்னிடம் சொல்லி இருந்தான் என்று சொன்னேன் அல்லவா! அங்கேயே எனக்கு வேலையும் கிடைத்தது.

 

கடனுக்கே என்று சமையல் வகுப்புகளை எடுக்காமல் மிகவும் ரசித்து ரசித்து வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். நான் சொல்லிக் கொடுக்கும் விதம் மாணவர்களுக்கும் மிகவும் பிடித்துப் போனது.

 

இந்த சூழ்நிலையில் தான் என்னிடம் கற்றுக் கொள்ள வந்த ஒரு பெண் பிரிட்டனைச் சேர்ந்த பிரபல உணவுத் தயாரிப்பு நிறுவனமான “ஷேர்வுட்”-க்கு இந்திய சமையல் ஆலோசகர் ஒருவர் தேவைப்படுவதாக என்னிடம் சொன்னாள். உடனே அந்தக் கம்பெனியைத் தொடர்பு கொண்டேன். சாஸ் தயாரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அந்தக் கம்பெனிக்கு இந்தியர்களுக்குப் பிடித்த மாதிரி எப்படி சாஸ் தயாரிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதுதான் என் வேலை.

 

என்னுடைய ஆலோசனை அவர்களின் இந்திய வர்த்தகத்துக்கு ரொம்பவே கை கொடுக்க ஆரம்பித்தது. விளைவு…..டெஸ்கோ, அட்சா போன்ற பிரிட்டனின் பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களுக்கும் உணவு ஆலோசகராக செயல்பட ஆரம்பித்தேன்.”என்கிற இவர் இதோடு சும்மா இருக்கவில்லை.  அடுத்து புத்தகம் எழுதுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

 

இந்திய மசாலாக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்திய உணவு வகைகளை பிரிட்டன் மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் ’ஸ்பைஸ் மேஜிக்’ என்ற சமையல் குறிப்பு நூலை இவர் வெளியிட்டு பிரிட்டனின் நாடறிந்த பிரபலமாகியிருக்கிறார்.

 

“நம்முடைய திறமையை, அறிவுத்திறனை  யாருக்காகவோ செலவழிப்பதைவிட  நாம் ஏன் சொந்தமாக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதில் நம் உழைப்பைக் கொட்டக் கூடாது என்று யோசித்தேன். உடனே செயலில் இறங்கினேன். ’ஸ்பைஸ் மேஜிக்’  என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.

 

பல்வேறு உணவுத் தயாரிப்புக் கம்பெனிகளுக்கு ஆலோசகராக செயல்படுவது, இந்திய உணவுகள் பற்றிய கருத்தரங்குகள் நடத்துவது என்று பல வேலைகளை எங்கள் நிறுவனம் மூலம்  செய்து வருகிறோம்” என்று சொல்லும் பிங்கி அதன்பிறகு தன்னுடைய ஒவ்வொரு திறமையையும் பணமாக்க ஆரம்பித்திருக்கிறார்.

 

அதாவது  மற்றவர்கள் ரசிக்கும் விதமாக தனக்குப் பேச வரும் என்பதால் இதை மூலதனமாக வைத்து  கார்பரேட் நிறுவன ஊழியர்களிடையே  தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் உத்வேக உரைகளை நிகழ்த்தி வருகிறார் பிங்கி. இதன் காரணமாகவும்  பணமும்,புகழும் பிங்கியின் கதவைத் தட்டோ தட்டென்று தட்டுகின்றன.

 

தன்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல் அதை சரியான விதத்தில் சரியான நேரத்தில் பயன்படுத்தினால் சிகரம் தொடலாம் என்கிற பிங்கியின் கதை முன்னேறத் துடிக்கும் தொழில்முனைவோருக்கு நல்லதொரு வாழ்க்கைப்பாடம். சரிதானே நண்பர்களே?

-சு.கவிதா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *