ஏற்றுமதி செய்யலாமா!

ஏற்றுமதி செய்யலாமா!

திரைப்படங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் என்றாலே.. பளபளக்கும் கண்ணாடி மாளிகை களையும், நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு விமானத்தில் பறக்கும் தொழிலதிபர் களையுமே காட்டுவார்கள்.

ஆனால் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை பார்க்கும்போது நமக்கு பெரிய குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. காரணம் ஒரு நிறுவனம் கண்ணாடி மாளிகையாக இருந்தால் இரண்டு தெரு தள்ளி மற்றொரு ஏற்றுமதி நிறுவனம் 100 சதுர அடி பரப்பில் ஒரு சந்துக்குள் அமைந்திருக்கும்.

உண்மையில் ஏற்றுமதி நிறுவனம் தொடங்குவது, நடத்துவது என்பது மிகக்கடினமான பொருள் செலவு மிக்க வேலையா? அல்லது மிகச்சிறிய அளவில் முதலீடு செய்து அதிக லாபம் பார்க்கும் துறையா என்பதுதான் நமது குழப்பத்திற்கு காரணமாக இருக்கிறது.

 

இந்த குழப்பம் தீர வேண்டுமென்றால் ஏற்றுமதி தொழில் தொடங்குவது தொடர்பான விளக்கங்களைப் பெற வேண்டும். இங்கு ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்குவது எப்படி என்று பார்ப்போம்.

 

பெயர் 

 

எந்த நிறுவனத்திற்கும் பெயர் சூட்டுவது என்பது மிக மிக முக்கியமான அதே நேரத்தில் அடிப்படையான கட்டம். இப்படித்தான் பெயர் வைக்கவேண்டுமென்று எந்தச் சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை.  அதேநேரத்தில் மிகப் பெரிய வணிக நிறுனங்களான டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்களை கொண்டு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை நீங்கள் தொடங்கினால், டிரேட் மார்க் முதலிய அறிவு சார் சொத்துரிமை, சட்ட சிக்கல்கள் வரக்கூடும். எனவே புதுமையான, எளிமையான பெயர்களைத்    தேர்ந்தெடுப்பது நல்லது.

 

எடுத்துக்காட்டாக உங்கள் பெயர் கவின் என்று இருந்தால் நீங்கள் கவின் எக்ஸ்போர்ட்ஸ் என்று வைத்துக் கொள்ளலாம். அதற்கு முன்பாக நீங்கள் அறிவு சார் சொத்துரிமை அமைப்பின் இணைய தளத்துக்குச் சென்று இந்த பெயரில் வேறு யாரேனும் டிரேட் மார்க் பதிவு செய்து இருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்வது நல்லது.

 

பொதுவாக நிறுவனத்தின் பெயருக்கு பின்னால் எக்ஸ்போர்ட்ஸ், இம்பெக்ஸ், இன்டர் நேஷனல், குளோபல் ஆகிய சொற்கள் இருந்தால் நீங்கள் ஒரு ஏற்றுமதி நிறுவனம் என்பது எளிதில் பார்ப்போருக்கு புரிந்துவிடும்.

 

அடுத்தது என்ன? 

 

அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது நிறுவனத்தின் பெயரில் ஒரு நடப்புக்கணக்கை வங்கியில் தொடங்குவது. நடப்புக்கணக்கு தொடங்க வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் நிறுவனத்தை ஏதேனும் ஒரு அரசு அமைப்பிடம் பதிவு செய்து இருக்க வேண்டும்.

 

கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் மாநாகராட்சிகளில் நீங்கள் உரிமம் பெற்று இருந்தால் போதுமானது. அல்லது வணிக வரித்துறையின் டின் எண்ணை பெற்றிருக்க வேண்டும். இவையெல்லாவற்றிலும் மேற்கண்ட இரண்டு நடைமுறைகளுக்குமே சிறிதளவு பணம் செலவாகும்.

 

ஆனால் பணமே செலவழிக்காமல் நிறுவனத்தை பதிவுசெய்ய ஒரே வழி. இந்திய அரசின் சிறு, குறு, நரத்தர தொழில்கள் நிறுவனத்    திடம் (எம்.எஸ்.எம்.இ.) இணைய வழியாகவே விண்ணப்பித்து சான்றிதழை சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்துகொள்வதுதான்.

 

அடுத்தது என்ன? 

உங்களது நிறுவனத்தின் பெயரில் (முழு முகவரியுடன்) ஒரு வணிக முத்திரை (ரப்பர் ஸ்டாம்ப்) செய்துகொள்ள வேண்டும். இதுதவிர For Kavin Exports என்ற ரப்பர் ஸ்டாம்பையும் செய்துகொள்ள வேண்டும். இதுதவிர உங்கள் நிறுவனப் பெயரில் ஒரு லெட்டர்பேட் ஒன்றை அச்சிட்டுக்கொள்ள வேண்டும்.

 

இரண்டு ரப்பர் ஸ்டாம்ப்புகள் உங்கள் லெட்டர் பேடில் நடப்புக்கணக்கு தொடங்க உதவுமாறு ஒரு கடிதம், நீங்கள் சிறுதொழில் நிறுவனம் என்பதற்கான சான்றிதழ் (இணையத்தில் பதிவிறக்கம் செய்த அதே சான்றிதழ்தான்). இவற்றையெல்லாம் கொண்டு போய் வங்கியில் கொடுத்தால் விண்ணப்பம் கொடுத்து பூர்த்தி செய்யவும் உதவுவார்கள். ஒன்றிரண்டு நாட்களிலேயே நிறுவனத்தின் பெயரில் நடப்புக்கணக்கு தொடங்கப்பட்டுவிடும்.

 

 

இதன் பின்னர் வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் அலுவலக இணையதளத்தில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி உரிமம் வாங்குவதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதனை பூர்த்தி செய்துகொள்வதுடன் உங்கள் வங்கியாளர் நீங்கள் அந்த வங்கியில் தான் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று சான்றளிக்கும் கடிதம் ஒன்றைத் தருவார்.

 

அதனை வைத்துக்கொண்டு நீங்கள் உங்கள் அடையாள சான்று, இருப்பிடச் சான்று, நிறுவனத்தின் பெயரில் ஒரு அறிவிப்புப் பலகையை உங்கள் அலுவலகத்தில் அல்லது வீட்டில் வைத்திருக்கிறீர்கள் என்பதற் கான சொந்த சான்று ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு போய் சென்னை சாஸ்திரிபவனில் உள்ள வெளிநாட்டு வர்த்தகத்திற்கான மண்டல இயக்குநர் ஜெனரல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதனை வங்கிவரைவாக செலுத்த வேண்டும்.

 

நீங்கள் விண்ணப்பித்த அன்று    மாலையே உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்பதை சொல்லி விடுவார்கள். மறுக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணமும் சொல்லப்பட்டுவிடும். திருத்தம் செய்து புதிய கட்டணம் இன்றி மீண்டும் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 20 நாட்களில் ஏற்றுமதி, இறக்குமதி உரிமம் வீடு தேடி வந்துவிடும்.

 

உரிமம் வாங்கித்தரும் நிறுவனங்கள் இந்த சேவைக்கு 3000 முதல் 10,000 வரை வசூலிக்கிறார்கள். ஏற்றுமதி இறக்குமதி உரிமம் வாழ்நாள் முழுமைக்குமானது. இதனை புதுப்பிக்க    வேண்டியதில்லை. உலகமெங்கும் எந்த நாட்டிற்கும்      ஏற்றுமதி இறக்குமதி செய்ய இந்த சான்றே போதுமானது.

 

இப்போது இணையம் மூலமாகவே ஏற்றுமதி உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் வசதியும் வந்துவிட்டது என்பதால் நடை, நேரம் மிச்சம். (கூடுதல் தகவல்களுக்கு: http://dgft.gov.in/)

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

3 thoughts on “ஏற்றுமதி செய்யலாமா!”

  1. அருண்

    Comment…அறிவுசார் சொத்துரிமை இணைய தள முகவரி கூறுங்கள்

    1. Intellectual Property India,  
      Anna Salai, Guindy Industrial Estate, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032

Leave a Comment

Your email address will not be published.