கொரொனா நிதி: யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள்?

கொரொனா நிதி: யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள்?

நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலைக் கருத்தில்கொண்டு இந்தியத் தொழில்முனைவோர் கொரோனா தடுப்பு, மீட்புப் பணிகளுக்காக கோடிக்கணக்கில் நன்கொடைகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.  இவை குறித்த தகவல்களைப் பார்க்கலாமா!

 

கொரோனா தொற்று இந்தியாவைக் குறிவைக்க ஆரம்பித்த உடனேயே முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டியது டாடா குழுமம். 

தொழில்முனைவோருக்கு இருக்கவேண்டிய நேர்மை, தொழில் அறம் ஆகிய மிக முக்கியப் பண்புகளை எதன் பொருட்டும் டாடா குழுமத்தினர் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள்.

அதேபோல வாரி வழங்குவதிலும் தாங்கள் வள்ளல்தான் என்பதை தற்போது மீண்டும்  ஒருமுறை இவர்கள் நிரூபித்திருக்கின்றனர்.

அதாவது டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் ஆகியவை சேர்ந்து ரூ.1500 கோடியை கொரொனா மீட்புப் பணிகளுக்காக வழங்கியுள்ளன.

கொரோனாவை அண்டவிடாமல் தடுக்கும் தனிமனிதப் பாதுகாப்புக் கருவிகள், சுவாசக் கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும், கொரொனாவைக் கண்டறிய உதவும் பரிசோதனைக் கருவிகளைத் தயாரிப்பதற்கும், கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மையங்களை உருவாக்குதல் மற்றும் அதனைக் கையாள சுகாதாரப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சியை அளிப்பது போன்றவற்றுக்கும் இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று டாடா சேரிடபிள் டிரஸ்ட்டின் தலைவரான ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

 

விப்ரோ குழுமத்தைச் சேர்ந்த அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன்  ரூ.1125 கோடியை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அள்ளித் தந்திருக்கிறது.

 

இவைதவிர பொது நிறுவனங்களும் கொரோனாவுக்கு எதிரான தங்களது பங்களிப்பை நன்கொடைகள் மூலம் காட்டியுள்ளன. உதாரணத்திற்கு இந்தியாவின் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான  லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) கொரொனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.650 கோடியை நன்கொடையாக அளித்து தனது தாராள மனதைக் காட்டியிருக்கிறது.

அதேபோல இந்தியாவின்  ரிலையன்ஸ் நிறுவனமும் ரூ.500 கோடியை பிரதமர் நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறது. இதுதவிர மகாராஷ்டிராவின் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியையும், குஜராத்தின் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியையும் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி வழங்கியிருக்கிறார்.

இவைதவிர தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் பணியிலும் ரிலையன்ஸ் குழுமம் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறது. 

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை அடைந்த பேடிஎம்(paytm) நிறுவனத்தின் தலைவரான விஜய் சேகர் ஷர்மா, பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி வழங்கியிருக்கிறார்.

 

இந்தியாவின் மற்றுமொரு புகழ்பெற்ற நிறுவனமான ஐடிசி(ITC) ரூ.150 கோடியை கொரொனா ஒழிப்புப் பணிகளுக்கு வழங்கியிருக்கிறது. இதுதவிர சமூகத்தில் ஆதரவற்று வாழ்கின்ற மக்களுக்காகவும், கிராமப்புற சுகாதாரப் பணிகளுக்காகவும் இந்த நிறுவனம் கணிசமான நிதியை ஒதுக்கியிருக்கிறது.

 

அதேபோல இந்தியாவின் மிக முக்கியமான நிதித்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஹெச்டிஎப்சி குழுமம், பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ.150 கோடியை நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என்று இந்த நிறுவனத்தின் தலைவரான தீபக் பரேக் தெரிவித்திருக்கிறார்.

 

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யும் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.105 கோடியை பிரதமர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறது.

 

இவைதவிர இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ், அதானி குழுமம் , வேதாந்தா நிறுவனம், பஜாஜ் குழுமம், ஐ.டி ஜாம்பவானான இன்போஸிஸ் போன்றவையும் கொரொனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தலா ரூ.100 நூறு கோடியை வழங்கியிருக்கின்றன.

 

மக்களைத் தங்கள் பக்கம் கட்டிப்போட்டு வைத்திருக்கும் “டிக்-டாக்” நிறுவனமும் தங்களது சமூக அக்கறையைக் காட்டத் தவறவில்லை.

 

கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ள டிக்-டாக் நிறுவனம் தங்களின் உயிரை துச்சமென நினைத்து மக்களின் உயிரைக் காப்பாற்றப் போராடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு நான்கு லட்சம் பிரத்யேக பாதுகாப்பு உடைகள், மருத்துவர்களுக்கான இரண்டு லட்சம் உயர்தர முகக்கவசங்கள் போன்றவற்றை வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

 

பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் தங்களது இரண்டு நாள் ஊதியமான ரூ.100 கோடி ரூபாயை  கொரொனா நிவாரண நிதியாக  வழங்கியிருக்கிறார்கள். அதேபோல தனது நிறுவனத்தின் ஆண்டு லாபத்தின் 0.25 சதவீதத் தொகையை கொரோனாவுக்கு எதிரான போராட்டதிற்குத் தர இருப்பதாகவும் எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

 

அதேபோல கோட்டக் மஹிந்த்ரா வங்கியின் தலைவர் உதய் கோட்டக் (சொந்தப்பணம்) மற்றும் கோட்டக் மகேந்திரா வங்கி நிர்வாகம் ஆகியவை இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 கோடியை வழங்கியுள்ளனர். இவர்களைப் போலவே பிசிசிஐ எனப்படும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.51 கோடியை கொரோனா தடுப்புப் பணிகளுக்காக வழங்கியிருக்கிறது.

-பாலா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.