“ஊட்டியில் பசியோடு தூங்காதீங்க!”

“ஊட்டியில் பசியோடு தூங்காதீங்க!”

“சொந்தமாகத் தொழில் செய்வது போன்ற பெருமிதம் தரும் வேலை வேறு எதுவும் இல்லை. அந்தத் தொழிலையும் மனிதத் தன்மையோடு செய்தால் அதுதரும் மனநிறைவே தனி. அதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.” என்கிறார் ஊட்டியைச் சேர்ந்த இருபத்தியாறு வயது இளைஞரான  முகேஷ் ஜெயின்.

ஊட்டியில் இருக்கும் மெயின் பஜாரில் “ஜெயின்ஸ் 89  கபே” என்கிற சிற்றுண்டி உணவகத்தை இவர் நடத்தி வருகிறார். சான்ட்விச் வகைகள்,விதவிதமான் மில்க் ஷேக், பால், காபி, தேநீர் போன்றவை இவரது கடையில் கிடைக்கின்றன.

ஒரு இருபத்தியாறு வயது இளைஞர் சிற்றுண்டி  உணவகத்தை நடத்துவதில் சிறப்பு என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

 எல்லோரையும் போல வெறும் லாபத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு முகேஷ் இந்த சிற்றுண்டி உணவகத்தை நடத்தவில்லை. “DON’T  SLEEP  HUNGRY”  என்கிற உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு இவர் இந்த சிற்றுண்டி உணவகத்தை நடத்தி வருகிறார்.

அதுமட்டுமல்ல இந்த “DON’T  SLEEP  HUNGRY”  என்ற மந்திரத்தைத் தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக நிறையப் பேரிடம் கொண்டு செல்லும் முயற்சியிலும் இவர் இறங்கியிருக்கிறார். 

அசாத்தியக் குளிர்,மழை காரணமாக ஊட்டியில் இரவு எட்டரை மணி ஆகிவிட்டாலே கொஞ்சம் கொஞ்சமாக கடைகளை மூட ஆரம்பித்துவிடுவார்கள். சிறுசிறு உணவகங்கள் கூட ஒன்பது ஒன்பதரை மணிக்குள் மூடப்பட்டுவிடும். நகரின் மத்தியில் இருக்கும் பெரிய உணவகங்களைக்கூட  அதிகபட்சம் பத்துமணிக்கு மூடிவிடுவர்.  

இதன் காரணமாக ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு  இரவு நேரத்தில் தாமதமாக செல்பவர்கள் அல்லது சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்கள், வயதானவர்கள் போன்றோர்  உணவு,பால் போன்றவை கிடைக்காமல் சிரமப்படுவார்கள்.

எனவே தங்கள் ஊருக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இரவு நேரத்தில் சாப்பிடாமல் தூங்கக்கூடாது என்கிற நோக்கத்தில் “DON’T  SLEEP  HUNGRY” என்கிற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு காலை ஒன்பது மணிக்குத் திறக்கும் தன்னுடைய சிற்றுண்டி உணவகத்தை இரவு 11 மணிவரை நடத்தி வருகிறார் முகேஷ்.

\இரவு பதினோரு மணிக்குமேல் சுற்றுலாப் பயணிகள் எவருக்கேனும் பால், உணவு போன்றவை தேவைப்பட்டால் இவரது அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்-அப் செய்தால் போதும், இரவு இரண்டு மணி ஆனாலும் உணவைத் தயாரித்து வாடிக்கையாளருக்குக் கொடுத்துவிடுகிறார்.

“அடிப்படையில் நாங்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அம்மா, அப்பா இருவரும்  முப்பது வருடங்களுக்கு முன்னால் ஊட்டியில்  நிரந்தரமாகத் தங்கி விட்டனர்.  அப்பா இங்கே தேநீர்க் கடை நடத்தி வருகிறார். கூடவே ராஜஸ்தானிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றில் நீலகிரி மாவட்ட செய்தியாளராகவும் செயல்படுகிறார்.

அம்மா குடும்பத் தலைவி. எனக்கு அண்ணனும் தம்பியும் இருக்கிறார்கள். அப்பாவின் தேநீர்க் கடை வருமானம் மட்டுமே எங்கள் குடும்பத்துக்கான ஆதாரம் என்பதால் வீட்டின் பொருளாதாரச் சூழ்நிலையை உணர்ந்த  நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடனேயே வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டேன்.

முதன் முதலில் துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அதன்பிறகு சுற்றுலா வழிகாட்டி, ஒப்பனைப் பொருட்களை மொத்தவிலைக்கு விற்பனையாளர் என்று கிட்டத்தட்ட 27 வகையான வேலைகளைச் செய்தேன். 2015-ல் ஊட்டியின் புகழ் பெற்ற ஹோட்டல் குழுமம் ஒன்றில் வரவேற்பறைப்  (FRONT OFFICE) பணியாளராக கடைசியாக வேலைக்குச் சேர்ந்து அங்கு இரண்டு வருடங்கள் பணியாற்றினேன்.

அந்த ஹோட்டலில் மொத்தம் 87 தங்கும் அறைகள் இருக்கின்றன. அங்கு வேலை செய்யும்பொழுதுதான் விருந்தோம்பல் குறித்த சகல விஷயங்களையும் கற்றேன். அதன்பிறகே எனக்குத் தொழில் முனைவோராக மாறவேண்டும் என்கிற ஆசை  வந்தது” என்கிறார் முகேஷ்.

“அந்த ஹோட்டல் குழுமத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்குள் சொந்தத் தொழில் செய்யவேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தியது. எனவே நான்கு அறைகள் கொண்ட காட்டேஜ் ஒன்றை முதலில் குத்தகைக்கு எடுத்து அதை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட ஆரம்பித்தேன்.

அது தந்த வெற்றியில் பதினைந்து தங்கும் அறைகள் கொண்ட மற்றொரு காட்டேஜை குத்தகைக்கு எடுத்தேன். அடுத்து இருபது அறைகள் கொண்ட தங்கும் விடுதியைக் குத்தகைக்கு எடுத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரத் தொடங்கினேன்.

எங்களுடைய விடுதி  அறைகளில் தங்கியிருந்த  சுற்றுலாப்பயணிகளில் சிலர்  இரவு பத்து மணிக்கு மேல் பால்,உணவு போன்றவை கிடைக்காமல் சிரமப்பட்டது என் கவனத்திற்கு வந்தது. எனவே நான் நடத்தி வரும் விடுதிகளிலேயே சிற்றுண்டி உணவகங்களை ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணத்திலும் நான் இருந்தேன்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைப் பெருமளவு பாதித்தது. இது தவிர சொந்தமாக தங்கும் விடுதிகள் வைத்திருப்பவர்கள் தங்கும் அறையின் கட்டணத்தை குறைத்ததன் விளைவாக என்னுடைய தொழில் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியது.

இதன் காரணமாக, நான் நிர்வாகம் செய்துவந்த தங்கும் விடுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் அனைத்துத் தங்கும் விடுதிகளையும் விற்றுவிட்டு மறுபடியும் ஆரம்பப் புள்ளிக்கே வந்தேன். அடி விழும்போது முடங்கிவிடாமல் இன்னும் அதிக உத்வேகத்துடன் எழுந்து நிற்பதே ஒரு தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய முக்கியப்பண்பு என்பது என் எண்ணம். எனவே,

‘இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. அப்படி இருக்க, எதற்கு கவலைப்படவேண்டும்?’ என்று என்னை நானே தேற்றிக்கொண்டு ஊட்டியில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளுக்கான பயண ஏற்பாட்டு முகவராகப் பணியாற்றத் தொடங்கினேன். இது தவிர, நான் முன்பே தீர்மானித்து வைத்திருந்த சிற்றுண்டி உணவகத்தையும் தொடங்கும் வேலையில் இறங்கினேன்.

இந்த சிற்றுண்டி உணவகத்தில் பல்வேறுவகையான சாண்ட்விச் உணவுகளைத் தயாரிக்க இரண்டு ஆட்களை வேலைக்கு ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் வேலைக்கு வரவில்லை. வேறு ஆட்களும் கிடைக்காததால் சிற்றுண்டி உணவகம் திறக்கப்படாமல் அப்படியே நின்றுபோனது.

’அடுத்தவரை ஏன் நம்பிக்கொண்டு நேரத்தை வீணாக்குகிறாய்? நீயே களத்தில் இறங்கு’ என்று நண்பர்க எனக்கு ஆலோசனை தந்தனர். அம்மாவுக்குக்  காய்கறி நறுக்கிக் கொடுப்பதைத்தவிர வேறு எதற்காகவும் சமையல்கட்டுப் பக்கம் செல்லாத நான், யூ-டியூப் மூலமும், அம்மாவிடம் கேட்டும் சாண்ட்விச் போன்ற சிற்றுண்டி வகைகளைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டேன்.

என் அப்பா ஊட்டியில் 1989-ம் ஆண்டுதான் தேநீர்க் கடையை ஆரம்பித்தார். எனவே அதை நினைவுபடுத்தும் பொருட்டு  ’ஜெயின்ஸ் 89  கபே’ என்கிற சிற்றுண்டி உணவகத்தைத்  தொடங்கினேன்”. என்கிற  முகேஷ்தான் கடையின் தொழிலாளி, முதலாளி எல்லாமுமே. இவரது கைவண்ணத்தில் விதவிதமான சாண்ட்விச், மில்க் ஷேக், தேநீர் வகைகள் பட்டையைக் கிளப்புகின்றன. குறிப்பாக இவரது தயாரிப்பான முறுக்கு சாண்ட்விச்சுக்கு அங்கே ரசிகர்கள் ஏராளம்.

ஒரே நேரத்தில் அதிக வாடிக்கையாளர்கள் வந்தால், அவர்களிடம் ஆர்வத்துடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே கடகடவென சிற்றுண்டிகளைத் தயார் செய்து அசத்திவிடுகிறார் முகேஷ். சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என்று பலதரப்பட்வர்களும் இவரது வாடிக்கையாளர்கள்.

இரவு நேரங்களில் 1989-ம் ஆண்டு வெளிவந்த அற்புதமான தமிழ், இந்தி திரைப்படப்பாடல்கள் இவரது கடையில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த சூழ்நிலையை ரசித்தபடி இங்கே சிற்றுண்டி சாப்பிட வருபவர்களும் உண்டு.(இசை மீது கொண்ட ஆர்வத்தால் டி.ஜே (Disk Jockey)யாகவும் முகேஷ் பகுதிநேரப் பணியாற்றுகிறார்).

“வெறும் லாபம் பார்க்கும் தொழிலாக மட்டும் இந்த உணவகத்தை  நான் பார்க்கவில்லை. முடிந்தவரை மனிதத்தை விடாமல் தொழில் செய்யவே விரும்புகிறேன்.” என்கிற முகேஷ், இரவு பத்து மணிக்கு மேல் குழந்தைகளுக்குப் பால் வேண்டி யாரேனும் இவரது கடைக்கு வந்தால் அந்தப் பாலை இலவசமாக வழங்குகிறார்.

அதேபோல உதகையில் இரவு பத்து மணிக்குமேல் மருந்துக் கடைகள் மூடப்பட்டுவிடும் என்பதால் தலைவலி, காய்ச்சல் போன்றவற்றுக்கான முதலுதவி மருந்துகளையும் கேட்பவர்களுக்கு இலவசமாகத் தருகிறார.ஊரே அடங்கிவிடும் நள்ளிரவுப் பொழுதில் உணவோ, பாலோ தேவையெனில் இவரது எண்ணுக்கு வாட்ஸ்-அப் செய்தால் போதும், உடனே தயாரித்துக் கொடுத்தனுப்பிவிடுகிறார்.

இதற்காகவே ஊட்டியில் இருக்கின்ற எல்லாப் பெரிய மற்றும் சிறிய தங்கு விடுதிகளில் தன்னுடைய  எண்ணைக் கொடுத்து வைத்து  அவர்களுடன் நல்லதொரு தொடர்பில் இருக்கிறார். அதுமட்டுமல்ல இப்படி நள்ளிரவில் உணவு தயாரித்துக் கொடுத்தாலும் அதிக லாபம் வேண்டி உணவின் விலையை இவர் உயர்த்துவதில்லை. கடையில் அந்தக் குறிப்பிட்ட உணவு என்ன விலையோ அதேவிலைதான் நள்ளிரவிலும் தொடர்கிறது.

“சாப்பிடாமத் தூங்கக்கூடாது” என்று  ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்குச் சொல்வார் இல்லையா! அதையே தான் நானும் சொல்கிறேன். இந்த மலைத்தாயின் மடி தேடி வருகிற யாரும் சாப்பிடாமல் தூங்ககூடாது” என்று நெகிழ்கிற முகேஷ் ஜெயின் மனித நேயத்துடன் இணைந்த தன் தொழிலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டுசெல்லும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

(தொடர்புக்கு: முகேஷ் ஜெயின்: 79999 12341)

-சு.கவிதா.

 

      

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on google
Google+
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *