தமிழக அரசிடம் புகார் மனு அளிக்க எளிய வழி….

தொழில் முனைவோருக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அரசு எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் உரிமம் வாங்குவதில் தொடங்கி, வங்கிக்கடனுதவி வாங்கி, தொழிற்சாலையைக் கட்டி, ஆட்களைப் பணியமர்த்துவது, இயந்திரங்களை நிறுவுவது, அவற்றை இயக்குவதுவரை ஒரு மகாப்பெரிய வேலையாகத்தான் இருக்கிறது.

இதில் உள்ள தடைகளை நீக்க அரசாங்கங்கள் தங்களால் முடிந்தவரை போராடிக்கொண்டுதான் இருக்கின்றன. சிவப்பு நாடா முறையை நீக்கிவிட்டு ஒற்றைச்சாளர முறையைக் கொண்டுவந்துவிட்டோம். ஆனால் அது இன்னும் எல்லாத்துறைகளுக்கும் பரவவில்லை. புதிய தொழில்முனைவோரிடம் அதுகுறித்த விழிப்புணர்வும் இல்லை. அதேபோல தொழில்துறை சந்திக்கும் சவால்களை ஆட்சியாளர்களிடம் நேரடியாகக் கொண்டுசெல்லவும் சரியான வழிமுறை இல்லை.

என்னதான் தொழில்நுட்பம், இணையவழி ஒப்புதல்கள் என்று முன்னேற்றம் வந்தாலும் நம் நாட்டில் ஊழலைத்தான் இன்னும் ஒழிக்க முடியவில்லை. தொழில்முனைவோரின் பெரும் தலைவலிகளில் அரசு அதிகாரிகளை ‘கவனித்து’ ஒப்புதல்கள் வாங்குவது முக்கியாமானது. இதற்காகவே ஒரு கணிசமான தொகையை தொழில்முனைவோர் ஒதுக்கவேண்டிவருகிறது. இதற்கான சரியான தீர்வை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவரவேண்டும்.

இதுபோன்ற பல்வேறு சவால்களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல என்னதான்வழி? எல்லா தொழில்முனைவோருக்கும் தொழில்துறை அமைச்சரோ, நிதித்துறை அமைச்சரோ, சட்டத்துறை அமைச்சரோ பரிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை. அதேபோல நேரடியாக ஒரு அமைச்சரையோ, முதல்வரையோ, பிரதமரையோ, வங்கிகளின் தலைவர்களையோ நினைக்கும்நேரத்தில் சந்தித்துவிடமுடிகிறதா? இல்லையே! இந்த சிக்கலுக்குத்தீர்வுதான் மின்னஞ்சலில் புகார்கள், ஆலோசனைகளை அனுப்புவது.

எல்லா அமைச்சர்கள், முதல்வர்களின் விபரங்கள் தமிழக அரசின் இணையதளமான http://www.tn.gov.in/ministerslist இல் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள்கூட இல்லை. புகார் கொடுக்க வேண்டுமென்றால் நீங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் துறை இணையதளத்துக்குச் செல்லவேண்டும். அங்கும் அமைச்சரின் மின்னஞ்சல் முகவரிகள் இல்லை என்பதால் அந்தந்தத் துறை செயலர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஆலோசனைகள், புகார்களை அனுப்பலாம்.

இதைவிட சிறப்பான இன்னொருவழி இருக்கிறது. அதுதான் மாண்புமிகு முதல்வர் அவர்களின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்புவது. http://cmcell.tn.gov.in/index.php என்ற அந்த இணையதளத்தின் நீங்கள் தாராளமாக உங்கள் புகார்கள், ஆலோசனைகள், குறைகளை அனுப்பலாம். இதில் உள்ள வசதி என்னவென்றால், நீங்கள் அனுப்பிய புகாரின் நிலை என்ன, என்னென்ன நடவடிக்கைகள் அதன்மீது எடுக்கப்பட்டுள்ளன என்பதுகுறித்த விபரங்களையும் நீங்கள் இந்த தளத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

மின்னஞ்சல், இணையதளங்கள்மூலமாக அனுப்பும் கடிதங்கள் ஓர் ஆதாரம் என்பதால் பிற்காலத்தில் அரசு தரப்பிடம் பேசும்போதும் நீதிமன்ற வழக்குகளின்போதும் இவை மிகவும் உதவியாக இருக்கும்.

-அருண்மொழி.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.