நம்பிக்கை சரி; மூட நம்பிக்கை?

அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவுதான் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டு இருந்தாலும், ஒருபக்கம் மூடநம்பிக்கைகளை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டுதான் நம் ஊரில் தொழில் முனைவோர் பலரும் இயங்குகின்றனர்.

 

cat-3049098_640

தொழில் சம்பந்தமாக எந்தப் புதிதான  செயலை செய்ய  நினைத்தாலும், செவ்வாய்க்கிழமைகளில் பலர் செய்ய மாட்டார்கள். செவ்வாய் வெறும் வாயாம்! (அதற்கு பதிலாக ‘செவ்வாய் …வருவாய்’ என்று சொன்னால் என்னவாம்?).

 

செவ்வாய்க்கிழமைகளில் புதிதாக ஒரு செயலை செய்தால்,அந்த வேலை சிறப்பாக அமையாது என்கிற தயக்கம் இன்றும் நிறையப் பேரிடம் இருக்கிறது.

 

இப்போதும் பாருங்கள்….ஆடி மாதத்தில் எந்தவொரு தொழிலும் மந்தமாக இருக்கும்.”ஆடி மாசம் ஆரம்பிக்கப்படும் எந்தவொரு தொழிலும் ஆடிப்போகும்” என்கிற நம்பிக்கையின் விளைவாக நம் ஊரில் ஆடி மாதம் மட்டும் எந்தவொரு தொழிலும் சிறப்பாக இயங்காது.

 

இந்த விஷயத்தில் விவரமானவர்கள் துணிக்கடைக்காரர்கள்தாம். அவர்கள்தாம் ‘ஆடித் தள்ளுபடி’ கொடுத்து ஆடி மாதத்தைக்கூட சுறுசுறுப்பான மாதமாக வைத்திருக்கின்றனர்.

 

horoscope-96309_640

அதுமட்டுமல்ல, ‘தொழில் தொடங்க,அல்லது ஆர்டர்கள் எடுக்க,கொடுக்க அமாவாசை தினம்தான் பொருத்தமாக இருக்கும்.

 

அந்த நாளில் ஆர்டர்கள் எடுத்தால்,அது விருத்தியடையும்’  என்பது நம் தமிழ்ச்சமூகத்தை சேர்ந்த பெரும்பாலான தொழிலதிபர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. அதனாலேயே அது எவ்வளவு பெரிய தொழில் முடிவாக இருந்தாலும் அவை அமாவாசை தினத்தில் முடிக்கப்படுகின்றன.

 

குறிப்பாக அஷ்டமி,நவமி நாட்களை தொழில் செய்பவர்கள் விரும்பவே மாட்டார்கள். தொழிலுக்கான திட்டங்களைப் போடும்பொழுது அந்த மாதத்தில் எப்போது அஷ்டமி, நவமி வருகிறது என்பதைக் கண்டறிந்து,அந்த நாட்களைத் தவிர்த்து தங்களுடைய தொழில் திட்டங்களை முன்னெடுப்பர்.

 

இதில்  வியப்பான தகவல் என்னவென்றால், அது எப்பேர்ப்பட்ட தொழில் ஒப்பந்தமாக இருந்தாலும்  வெள்ளிக்கிழமைகளில் அல்லது மாலைநேரம் விளக்கு வைத்தபிறகு பணத்தைக் கொடுக்க  தொழில் முனைவோர் சிலர் துணிவதில்லை.

 

இதுபோல,வளர்பிறை,தேய்பிறை எப்போது வருகிறது என்று உன்னிப்பாகக் கவனிக்கிறவர்களும் உண்டு. தேய்பிறையில் ஆர்டர்கள் எடுக்காத தொழிலதிபர்களும் நம் ஊரில் இருக்கிறார்கள்.

 

அதனால் தேய்ந்துபோனவர்களும் உண்டு. இதில் நம்பிக்கை இல்லாமல் துணிந்து முடிவெடுத்து தொழிலை வளர்பிறையாக உயர்த்தியவர்களும் உண்டு.

 

சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்பதை விட்டுவிட்டு, தங்களுடைய  ஜாதகத்தின் அடிப்படையில் தொழில் சார்ந்த முடிவுகளை எடுப்பவர்களும் இருக்கின்றனர்.

 

achieve-1822503_1280

கட்டம் என்ன சொல்கிறதோ, அதை மட்டும் நம்பிக்கொண்டு மற்ற எதைப்பற்றியும் யோசிக்காமல் தடாலடி தொழில் முடிவுகளை எடுப்பவர்களும், எண் கணித ஜோதிடத்தைக் (நியூமராலஜி) கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு, அதற்கேற்ப தொழில் சார்ந்த முடிவுகளை எடுப்பவர்களும்  இங்கே அதிகம்.

 

கெவுளி கத்துவது, பூனை குறுக்கே செல்வது போன்ற நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து,  “இல்லை..இல்லை இப்போது சகுனம் சரியில்லை. நேரம் சரியில்லை” என்பதுபோன்ற முடிவுக்கு தாங்களாகவே வந்து தங்கள் தொழிலை அடுத்தடுத்துக் கொண்டு செல்லாதவர்கள் எத்தனையோ பேரை நாம் பார்க்கிறோம்.

 

இப்படி மூடநம்பிக்கைகளின் கூடாரமாகத் தொழில் செய்பவர் களின்  மனநிலை இருந்துவிட்டால்  முயற்சியும் நம்பிக்கையும் குறைந்து,பயமும்,தயக்கமும் தொடர்ந்து இயங்கவிடாமல் செய்துவிடும். அதனால் உங்களை நம்புங்கள்.உங்கள் உழைப்பை நம்புங்கள்.உங்களுக்கு எந்நாளும் பொன்னாளே!

-பாலாஜி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *