நீரை மிச்சப்படுத்த அசத்தல் சாதனம்!

நீரை மிச்சப்படுத்த அசத்தல் சாதனம்!

நாலு காசு சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் ஒவ்வொரு தொழில்முனைவோரும் குறிப்பிட்ட ஒரு தொழிலை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் தன் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல் தங்களது தொழிலால் இந்த சமூகத்திற்கும் நல்லது நடக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் தொழில் செய்பவர்களும் நம் ஊரில் பெருகி வருகிறார்கள்.

அப்படி தங்களுடைய ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மூலமாக தங்களது சமூக அக்கறையை காட்டியிருக்கிறார்கள் இளைஞர்களான அருண் சுப்பிரமணியன், ரோஷன் கார்த்திக் ஆகிய இருவரும்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு எர்த் போகஸ் (EARTH  FOKUS)  என்கிற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை இவர்கள்  ஆரம்பித்தனர். நாம் வாழ்கின்ற சூழலைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வைக் கண்டுபிடிப்பதுதான் இவர்களது நிறுவனத்தின் வேலையாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக நம் ஊரில் தலைவிரித்தாடும்  நீர் பிரச்சனையை எடுத்துக்கொள்வோம். நம் ஊரை மட்டுமல்ல, இந்த உலகத்தையே நீர்  பிரச்சனைதான் அதிகம் பயமுறுத்துகிறது.

அடுத்த உலகப்போர் ஒன்று மூளுமானால் அது நீருக்காகவே இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் இன்னும் ஒருவருடத்திற்குள் சுத்தமாகத் தண்ணீரே இல்லாமல் போகலாம் என்கிற செய்தி கடும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வளவு ஏன், தொழில்நுட்ப நகரமான பெங்களூருவும் வரும்காலத்தில் இதுபோன்ற நீர்ப்பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடலாம் என்றும் செய்திகள் வருகின்றன.

இது ஒருபுறம் என்றால்,கிடைக்கின்ற கொஞ்ச நீரையும் அலட்சியமாக வீணாக்குகின்ற மனோபாவம் நம்மிடையே நிறைய இருக்கின்றது. குறிப்பாக கையைக் கழுவுகிறோம் பேர்வழி என்று நம் இஷ்டத்திற்கு நீரை வீணாக்குகிறோம்.

ஒவ்வொரு முறை குழாயில் கையைக் கழுவும்போதும் சுமார் முன்னூறு மில்லி லிட்டர்  நீரை நாம் வீணாக்குகிறோம்.

அதுமட்டுமல்ல, ஒவ்வொருவரும் சராசரியாக ஓராண்டுக்கு இரண்டாயிரம் முறை கையைக் கழுவுகிறோமாம். அப்படி என்றால் உலகம் முழுக்க நீர் இதன் மூலம் எவ்வளவு வீணாகிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்படி நீரை வீணாக்காமல் பயன்படுத்த ஒரு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறது “எர்த் போகஸ்” நிறுவனம். சாதனம் என்றவுடன் என்னமோ எதோ என்று குழம்பாதீர்கள். இது பித்தளையினாலான ஒரு சிறிய குழல்(NOZZLE) போன்ற அமைப்பு அவ்வளவுதான். இந்த சாதனத்திற்கு அவர்கள் “QUAMIST” என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த சாதனத்தை நீர்க்குழாய்களில் பொருத்திக்கொண்டால் போதும், இது நீரை தபதபவென்று கொட்டவிடாமல் குறைத்து பனிபெய்வதுபோல நீரைக் குழாய்களிலிருந்து விழச் செய்யும்.

இதன் மூலம்  அதிகத் தண்ணீர் வீணாகாது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் குழாயைத் திறந்து வீணாக்கும் நீரில் 95% ஐ இதன்மூலம் மிச்சப்படுத்தலாம் என்று சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறாது எர்த் போகஸ் நிறுவனம்.

 

 

எட்டு டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.500 விலையுள்ள இந்த சாதனத்தைப் பயன்படுத்தினால் நீரின் பயன்பாடு குறைந்து குடிநீருக்கான கட்டணமும் இதன் மூலம் கணிசமாகக் குறையும் வாய்ப்பிருக்கிறது என்றும் அந்த நிறுவனம் சொல்கிறது.

சரியாகத்தான் சொல்றீங்க!

-ஜெயலட்சுமி.

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

No Content Available

Leave a Comment

Your email address will not be published.