பயன் மிகு தளங்கள்: டிஜிட்டல் விசிட்டிங் கார்டு போன்று செயல்படும் அபவுட்.மீ (புதிய தொடர்)

டிஜிட்டல்

                 டிஜிட்டல் யுகத்தில்  இணையத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பொழுதுபோக்கு நோக்கில் இணையத்தை அணுகலாம், கற்றலுக்காக அணுகலாம், வர்த்தக நோக்கில் அணுகலாம். இவைத்தவிர, அலுவல் நிமித்தமாக இணையத்தை பயன்படுத்தலாம், ஆய்வு நோக்கிலும் பயன்படுத்தலாம். இளைப்பாறவும் இணையத்தை நாடலாம், இணையத்தில் மூழ்கி முத்தெடுக்கலாம். உங்கள் தொழில் வாழ்க்கைக்கும் இணையம் அடித்தளமாக அமையலாம்.

இணையம் உங்களுக்கு என்னவாக இருக்கிறது என்பது முக்கியம்.

இணையத்தில் இருந்து என்ன பெறுகிறீர்கள் என்பது, இணையத்தை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொருத்தே அமைகிறது. அந்த வகையில், இணையத்தை இன்னும் சிறப்பாக பயன்படுத்துக்கொள்ள வழிகாட்டும் இணைய தளங்கள் அநேகம் இருக்கின்றன. அத்தகைய பயன் மிகு இணையதளங்களை அடையாளம் காட்டுவது தான் இந்த தொடரின் நோக்கம்.

உங்கள் தனிப்பட்ட முன்னேற்றத்தில் துவங்கி, உலகை மாற்றக்கூடிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்க ஊக்குவிப்பது வரை, பல வகையில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய பயன் சார்ந்த இணையதளங்களை பார்க்கலாம்.

உங்களுக்காக ஒரு தளம் – about.me

இந்த தொடரை, உங்களுக்கான இணையதளத்தில் இருந்தே துவங்கலாம். அதாவது உங்களுக்கான சொந்த இணையதளத்தை உருவாக்கி கொள்ள உதவும் இணையதளத்தில் இருந்து துவங்கலாம்.

சொந்த இணையதளம் என்றவுடன் உங்களில் பலர் உற்சாகமாகலாம். எனக்கு இணையத்தில் தொழில் செய்யும் எண்ணம் எல்லாம் இல்லை, எனக்கு எதற்கு சொந்த இணையதளம் என நினைக்கலாம். இன்னும் சிலர், அது தான் பேஸ்புக்கில் எல்லாம் இருக்கிறோமோ, தனியே இணையதளம் எதற்கு என கேட்கலாம்.

டிஜிட்டல் விசிட்டிங் கார்டு

டிஜிட்டல் யுகத்தில், இணையத்தில் உங்களுக்கு என ஒரு இணைய பக்கம் இருப்பது அவசியம் என்பது தான் இவற்றுக்கான பதில். அதாவது நீங்கள் யார் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒரு பக்கம். உங்களின் இணைய அடையாளம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அல்லது உங்கள் டிஜிட்டல் விசிட்டிங் கார்டு என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் யார்?, உங்கள் திறன்கள் என்ன? உங்கள் கனவு என்ன? என்ன சாதித்திருக்கிறீர்கள் அல்லது என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? என்பது போன்றவற்றை எல்லாம் கச்சிதமாக உணர்த்தும் ஒரு பக்கம் இணையத்தில் உங்களுக்கு என இருந்தால் நல்லது தானே.

இத்தகைய ஒரு அறிமுக பக்கத்தை, இணையத்தில் உங்களுக்கென உருவாக்கி கொள்ள வழிகாட்டும் இணையதளம் தான் ’அபவுட்.மீ’ (https://about.me/).

இணையத்தில் சொந்த தளங்களை சுயமாக, சுலபமாக, இலவசமாக உருவாக்கி கொள்ள உதவும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. ஆனால், அபவுட்.மீ அவற்றில் இருந்து மாறுபட்டது. பயனாளிகள், தங்களை இணைய உலகிற்கு அறிமுகம் செய்து கொள்ள உதவும் வகையில் அவர்களுக்கான இணைய இருப்பதை இந்த தளம் உருவாக்கி கொள்ள வழி செய்கிறது.

இமெயில் கணக்கு துவங்குவது போல் இணைய தள துவக்கம்

இந்த சேவையை பயன்படுத்தவும் கோடிங், புரோகிராமிங் தெரிந்திருக்க வேண்டாம்.

இணையத்தில் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கி கொள்வது முக்கியம் என கருதுபவர்கள், இமெயில் கணக்கு துவக்குவது போல மிக எளிதாக அதை செய்து கொள்ளலாம்.

தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள உங்களுக்கான இலவச பக்கத்தை உருவாக்கவும் எனும் இணைப்பை கிளிக் செய்து, பதிவு செய்து கொண்டால், சுய பக்கம் உருவாகிவிடும். இனி இந்த பக்கத்தில் பயனாளிகள் தங்களைப்பற்றிய சுய விவரத்தை இடம்பெற செய்யலாம். அவரவர் விருப்ப படி, சுருக்கமாக அல்லது விரிவாக தங்களைப்பற்றிய குறிப்புகளை எழுதலாம். இந்த அறிமுகத்தில், ஒருவர் தனது சாதனைகள், லட்சியங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நீங்கள் தேடப்படும் இடத்தில், நீங்களே ஆஜராகி உங்களை சரியாக அறிமுகம் செய்து கொள்ளும் பணியை இந்த இணைய பக்கம் நிறைவேற்றும்.

புதியவர்களிடம் விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு, உங்களை பற்றி சுய அறிமுகம் செய்து கொள்வது போல, இந்த பக்கம் அமைந்திருக்க வேண்டும்.

இதன் பிறகு, உங்களை பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கான ஒரு இணைப்பை சேர்த்துக்கொள்ளலாம். அந்த இணைப்பு உங்கள் வலைப்பதிவாக அல்லது வேறு எந்த இணைய வடிவமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

தொழில்முறை வல்லுனர்கள், தங்களை அறிமுகம் செய்து கொண்டு, ஆர்வம் உள்ளவர்களை தங்கள் தொழில் பக்கத்திற்கு அழைத்து வர இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சமூக ஊடகங்களில் பகிரலாம்

சுய விவரங்களை பூர்த்தி செய்தவுடன், உங்கள் பெயரில் அபவுட்.மீ, இணைய பக்கம் தானாக உருவாக்கப்பட்டு விடும். இந்த இணைய முகவரியை வலைப்பதிவு, சமூக ஊடக பக்கம் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து கொள்ளலாம். இதில் உள்ள இணைப்பை கிளிக் செய்பவர்களுக்கு உங்களை பற்றிய சரியான அறிமுகம் கிடைக்கும்.

அது மட்டுமல்ல, இணையத்தில் யாரேனும் உங்களைப்பற்றி தேடினால், தேடல் முடிவுகளில் இந்த பக்கமும் இடம்பெற்றிருக்கும். அதாவது, நீங்கள் தேடப்படும் இடத்தில், நீங்களே ஆஜராகி உங்களை சரியாக அறிமுகம் செய்து கொள்ளும் பணியை இந்த இணைய பக்கம் நிறைவேற்றும்.

இணைய யுகத்தில், வேலைக்கு தேர்வு செய்பவர்களும் சரி, இன்னும் பிற வல்லுனர்களும், ஒருவர் பொருத்தமானவரா என்பதை அறிய இணையத்தில் அவர்களைப்பற்றிய விவரங்களை தேடிப்பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இத்தகைய தேடலில், ஒருவரின் சமூக ஊடக பக்கங்களும், இன்னும் பிற தகவல்களும் முன்னிலை பெற்றால், அவரைப்பற்றிய சரியான சித்திரமாக அமைய வாய்ப்பில்லை. ஆனால், கவனமாக உருவாக்கப்பட்ட சுய அறிமுக பக்கம், தேடல் முடிவில் முன்னிலை பெற்றால் அது மிகச்சிறந்த தன்னிலை அறிமுகமாக அமையும். அதை தான் அபவுட்.மீ சேவை சாத்தியமாக்குகிறது.

ஆக, முதலில் உங்களுக்கான இணைய அடையாளத்தை உருவாக்கி கொள்ளுங்கள்!

இது இலவசம்

அபவுட்.மீ தளத்தின் அடிப்படை சேவை இலவசமானது. ஆனால் கூடுதல் அம்சங்கள் தேவை எனில் கட்டண சேவையை நாடலாம். இப்போது இந்த தளம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு கூடுதல் அம்சங்களும் இணைந்துள்ளன. பயனாளிகள் தங்கள் இமெயில் கையெழுத்தை சேர்க்கும் வசதி, தங்களை சந்திப்பதற்கான திட்டமிடல் படிவத்தை சேர்க்கும் வசதி உள்ளிட்டவை புதிதாக கவரும் அம்சங்களாக இருக்கின்றன.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on google
Google+
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *