பாகிஸ்தான்: யோசித்துத்தான் செய்கிறீர்களா?

பாகிஸ்தான்: யோசித்துத்தான் செய்கிறீர்களா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டுவிட்டது. இது இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.

 

இது, பாகிஸ்தானைப் பொறுத்தவரை அரசிய பிரச்சனை. ஐ.நா.சபையைப் பொறுத்தவரை சர்வதேச பிரச்சனை. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உரிமைப் பிரச்சனை. ஆனால் இதனை பாகிஸ்தான் கையாண்ட விதம் பல்வேறு கேள்விகளை எழுப்பிவிட்டது.

 

விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் கொதிப்புக்கு உள்ளான பாகிஸ்தான், இதனை சர்வதேச அரங்குக்குக் கொண்டு செல்வதாகக் கூறியது. இந்தியத்தூதரிடம் அதிகாரப்பூர்வமான கண்டனத்தைப் பதிவு செய்தது. அத்தோடு விட்டிருக்கலாம். ஆனால் அதற்குப்பிறகு பாகிஸ்தான் செய்தது எதுவுமே ரசிக்கும்படியாக இல்லை.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இயக்கப்படும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் ஓர் அற்புதம்.

எல்லைகளைக் கடந்தும் உறவுகளை, வணிகத்தைப் பேணுவோருக்கு அந்த ரயில் ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்திய ரயில்வே துறையும் பாகிஸ்தானிய ரயில்வே துறையும் கூட்டாக இணைந்து இந்த ரயிலை இயக்கி வருகின்றன.

 

இந்திய நாடாளுமன்றம், 370 ஆவது சட்டப்பிரிவு திருத்தத்தைக் கொண்டு வந்த உடனேயே ஆத்திரமடைந்த பாகிஸ்தான் உடனடியாக அந்த ரயிலை நிறுத்தியது. எங்கு தெரியுமா? இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில்.

 

பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட பயணிகள் செய்வதறியாமல் அந்த ரயிலில் காத்திருக்க வேண்டியிருந்தது. இதற்குமேல் ரயிலை இயக்க முடியாது என்று பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் கூறிவிட்டனர். அதனையடுத்து இந்திய ரயில்வே அந்த ரயிலை இயக்கி, இந்தியாவுக்குள் கொண்டுவந்துவிட்டது.

 

எந்த வகையில் பார்த்தாலும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை மிக மோசமான ஒன்றாகும். பொதுமக்கள், சிறு வணிகர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு நாடு தாண்டி வருவோர் என்று எல்லோருடைய கண்டனத்தையும் ஒரு நொடியில் பெற்றுவிட்டது பாகிஸ்தான்.

 

தூதரகரீதியிலான உறவுகளும் மிகவும் மோசமடைந்துவிட்டன. அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் கமிட்டி, நாடாளுமன்றக் கூட்டுக்குழுக்கூட்டம் ஆகியவற்றின் பரிந்துரையின்பேரில் அமைச்சரவையைக் கூட்டினார் பாகிஸ்தான்நாட்டின்  பிரதமர் இம்ரான் கான்.

அடுத்து அதிர்ச்சி தரத்தக்க முடிவு ஒன்றை எடுத்தார். இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத் தொடர்புகளையும் துண்டித்துவிடுவது என்பதே அம்முடிவு.

இம்ரான் கான்

இந்தியாவுக்கு பதிலடி தருவதாக நினைத்துக்கொண்டு தனக்குத்தானே தீங்கிழைத்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.

வர்த்தகத்தொடர்புகளை நிறுத்திவிடுவதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மட்டும்தானா பாதிக்கப்படப் போகின்றனர்? பாகிஸ்தானின் உற்பத்தியாளர்களும் ஏற்றுமதி இறக்குமதி வணிகர்களும்தான்.

 

அதுஒருபுறமிருக்கட்டும், உடனடியாக ஒரு நாட்டுடன் வர்த்தக உறவைத்துண்டிப்பதாக இருந்தால் முதலில் பாதிக்கப்படுவோர் யாராக இருப்பார்கள்? ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும்தான்.

 

இந்த முடிவை எடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இரு நாடுகளிலிருந்தும் அனுப்பப்பட்ட சரக்குகள் அந்தந்த நாடுகளின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்குப் பெட்டக முனையங்களுக்குச் சென்றுவிட்டனவா?; அப்படி சென்றிருந்தால் அவற்றை உரிய இறக்குமதியாளர்களிடம் சேர்க்க இயலுமா?; அந்தந்த சுங்க வரி அலுவலகங்கள், சரக்குகளை உரியவர் பெற்றுக்கொள்ள அனுமதிப்பரா?; ஒப்பந்த விவசாயத்தின்மூலம் ஒப்பந்தம் போட்ட வேளாண் பெருமக்களுக்கு ஆர்டர்கள், பணம் கிடைக்குமா?;

 

ஏற்கனவே அனுப்பப்பட்ட சரக்குகளுக்கான பணத்தை உரியவருக்கு வழங்குவது எப்படி?; இறக்குமதியே மட்டுமே நம்பியிருக்கும் துறைகளுக்குன் புதிய உற்பத்தியாளர்களைக் கண்டறிந்து தருவது எப்படி? …. இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகளைக்  கொஞ்சம்கூட யோசிக்காமல் அந்நாடு முடிவெடுத்துவிட்டது.

 

அடிப்படையில் பாகிஸ்தான், ஏற்றுமதி வணிகத்தைப் பொறுத்தவரை ஒரு நெருங்கிய கூட்டாளி ஆகும்.

 

கடந்த நிதியாண்டில் நாம் 2.01 பில்லியன் டாலர் மதிப்புக்கு பல்வேறு சரக்குகளை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறோம். அவர்கள் 0.49 பில்லியன் டாலருக்கு நமக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றனர்.

பருத்தி, வேதிப்பொருட்கள்,  பெயிண்ட், பிளாஸ்டிக் பொருட்கள்,  மருந்துகள், தேயிலை, முதலிய நூற்றுக்கணக்கான பொருட்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதேபோல பழங்கள், சிமெண்ட், எள் , தோல் பொருட்கள் முதலியவற்றை அவர்களிடமிருந்து நாம் இறக்குமதி செய்துவருகிறோம்.

 

மேலும் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக பாகிஸ்தானுக்கு ‘வர்த்தகத்தில் மிகவும் விரும்பத்தக்க நாடு’ என்ற அந்தஸ்தை 1996ல் நாம் கொடுத்தோம். புல்வாமா தாக்குதலுக்குப்பிறகு இந்தியா அதனை  விலக்கிக்கொண்டுவிட்டது.

 

தற்போது இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத் தொடர்புகளையும் அதிகாரப்பூர்வமாகத் துண்டித்துக்கொண்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக இறக்குமதி-ஏற்றுமதி செய்யும் சிறப்பு ஒப்பந்தத்தையும் ரத்து செய்திருக்கிறது.

 

இதுகுறித்த செய்தியை அந்நாட்டிலிருந்து வெளிவரும் ‘டான்’ செய்தித்தாள் வெளியிட்டிருக்கிறது. அதற்குப் பின்னூட்டமிட்டுள்ள அந்நாட்டு வாசகர்கள் பலரும் ‘இதனால் பாகிஸ்தானின் பொருளாதாரம்தான் பாதிக்கும்’ எனவும் ’இது, சாமானிய பாகிஸ்தானிக்கு மேலும் சுமையைத்தான் கொடுக்கும்’ எனவும், ’இது பாகிஸ்தானிய வர்த்தகர்களைக் கொல்லும் முடிவு’ எனவும் குறிப்பிட்டுள்ளனர். (ஆதாரம்: https://www.dawn.com/news/1499076/pakistan-formally-suspends-trade-with-india).

 

பொதுவான ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் தவிர, பாகிஸ்தான் கைவைத்துள்ள அடுத்த விஷயம் கலைத்துறை ஆகும். இந்தியத் திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் பெருவாரியான வரவேற்பும் சந்தையும் உண்டு. ஆனால் பாலிவுட் திரைப்படங் களுக்கு அங்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

இரு நாடுகளுக்கு இடையிலான சூட்டைத் தணிக்க கலையும் கலாச்சாரமுமே வழி என்ற அடிப்படையைக்கூட அந்நாட்டு ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

உலக அளவில் வர்த்தகமும் கலை-கலாச்சாரப் பரிமாற்றமுமே ஒரு நாட்டின் கெளரவமான முகங்கள் ஆகும். மேலும் சமூக அமைதி, வணிக அமைதி ஆகியவை அரசியல் ஸ்திரத்தன்மை, பிற நாடுகளுடனான நல்லுறவு ஆகியவற்றுக்கு வித்தாக அமையும்.

 

அவற்றைக் கேள்விக்குறியாக்கிவிட்டதன்மூலமாக பாகிஸ்தான் பெறுவதற்கு ஏதுமில்லை. இழப்பதற்குத்தான் நிறைய இருக்கின்றன.

 

-அருண்மொழி.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.