பிக் பாஸ் சொல்லும் பாடம் என்ன? (நிறைவுப்பகுதி)

பிக் பாஸ் தொடர் கற்றுத்தரும் மேலாண்மைப்பாடங்கள் என்ன என்று இரண்டு தொடர்களில் பார்த்தோம். இது அதன் நிறைவுப்பகுதி இது.

 

பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக சுருங்கிவிட்ட ஒன்றல்ல.  மற்ற மொழிகளில் எப்படியோ, தமிழைப்பொறுத்தவரை  அந்நிகழ்ச்சி, ஒரு வாய்ப்பு…ஒரு திட்டம்….ஒரு சந்தைப்படுத்தல்….

 

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க தமிழகத்தில் எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் இருந்தபோதும் ஏன் விஜய் டிவி கமல்ஹாசனைத்தேர்ந்தெடுத்தது என்பது மிகவும் நுணுக்கமான விஷயம்.

 

இதுவரை வணிக விளம்பரங்களில் தலைகாட்டியிராத கமலை போத்தீஸ் நிறுவனம் தனதுவிளம்பரத்துக்கு அழைத்துவந்தது எவ்வளவு பிரம்மாண்ட முயற்சியோ, அதே அளவுக்கு பிரம்மாண்ட முயற்சி, அவரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்கு அழைப்பது. அதில் விஜய் டிவி வென்றது.

kamal-haasan-bigg-boss-e1498478428394

கமலை வைத்து  நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது பல வகைகளிலும் அனுகூலம் தரக்கூடியது.  சூழ்நிலை சமாளிப்பதிலும் புதிய உருவாக்கத்தை உருவாக்குவதிலும் கமல் வித்தகர்.

அதனால்தான் ஹிந்தியிலும் தெலுங்கிலும் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் தமிழ் நிகழ்ச்சிக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. தமிழ் பிக் பாஸ் அரசியல் பேசினார்; பொருளாதாரம்  பேசினார்; சமூகத்தைப்பற்றிப் பேசினார்.

 

ஒரு உச்சநடிகர் அதிலும் குறிப்பாக இதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சி எதுவுமே தொகுத்து வழங்காத ஒருவர்… நிறையப் படிக்கும் பழக்கம் உள்ளவர், வசீகரம் மிக்கவர் என்று பார்க்கும் பொழுது வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.  அஜீத், விஜய், விஜய் சேதுபதி, சீயான் விக்ரம், கார்த்தி, தனுஷ் என்று இளைய நடிகர்களைப் பிடிக்கலாம். ஆனால் விஜய் சேதுபதி தவிர மற்றவர்கள் எவரும் பொதுவெளியில் கருத்துக்களை சொல்வார்களா என்பது சந்தேகமே. ரஜினி போன்ற குறைவாகப் பேசும் உச்ச நட்சத்திரம் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துவரமாட்டார்.

 

ஆக, இருக்கிற ஒரே வழி, கமலைப் பிடிப்பதுதான். வசீகரம் மிக்கவர்; உச்ச நட்சத்திரம்; அறிவுஜீவி என்று அறியப்படுபவர்; தான் நினைத்த்தை எந்த சூழ்நிலையிலும் பட்டவர்த்தனமாகப் பேசுபவர்; சமூகப் பிரக்ஞை உள்ளவர் என்று எந்தக் கோணத்தில் பார்த்தாலும் கமல்தான் இந்நிகழ்ச்சிக்குப் பொருத்தமானவராக இருக்கிறார். ஆனால் திரையுலகில் புகழின் உச்சியில் இருக்கும் கமல் எப்படி ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு ஒருங்கிணைப்பாளராக வருவார்?

 

ஆனால் பேசுகிறபடி பேசியதால் அவர் வந்தார். அதிலேயே விஜய் டிவிக்கு பாதி வெற்றி வந்துவிட்டது. அதன்பிறகு நிகழ்ச்சிக்கு அது ஒன்றே பெரிய விளம்பரமாக உருவெடுத்தது. எதிர்பார்ப்பை எகிறவைத்தது. இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நடந்தது வேறு கதை. இருக்கிற கதாபாத்திரங்களை வைத்தே நிகழ்ச்சி பிரபலமடைந்தது.

 

நிகழ்ச்சியில் ஒவ்வொரு கோணத்திலும் கமல் தனது அறிவுஜீவித்தனத்தை, தர்க்கத் திறனை நிரூபித்தார். காயத்ரி ரகுராமை கேள்விகளாலும் சைகையாலும் (தலை முடியைத் தொட்டுக்காட்டி) கிண்டலடித்தார். ஜூலியை, கஞ்சா கருப்புவை, வையாபுரியைத் தனித்தனி மொழிகளால் கையாண்டார். பார்வையாளர்களின் மனதைப்படித்து, அதற்கேற்ப கேள்விகளை எழுப்பினார். அல்லது பதில் சொன்னார். ‘சேரி பிஹேவியர்’ என்ற மோசமான சொல்லாடல் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டபோது அதனைப்பேசுபொருளாக அவர் எடுக்கவேயில்லை. அதுவும் நிகழ்ச்சியின் பிரபலத்துக்கு உதவியது.

 

Oviya-Kamal-H

ஜூலி, நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது கமல் நடந்துகொண்ட விதம்தான் மேலாண்மைப்பாடத்தில் ‘பிரச்சனைகளை எதிர்கொள்ளல் (crisis management)’ எனும் சொல்லுக்கான சரியான எடுத்துக்காட்டு எனலாம்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் கடும் கோபத்துக்கு ஆளான ஜூலி, சொந்த வாழ்க்கையில் பாதுகாப்பாக நடமாட முடியுமா என்கிற அளவுக்கு சூழல் சென்றது. அதை உணர்ந்த கமல் “ என் தங்கையை வெளியே அனுப்புகிறேன். அவரைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு” என்று பொதுமக்களின் கைகளில் பொறுப்பை ஒப்படைத்தார். அது வெகுவாகப் பாராட்டப்பட்டது.

 

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பான அம்சம் என்னவென்றால், கமலும் விஜய் டிவியும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பயன்படுத்திக்கொண்டதுதான். விளையாட்டு நிகழ்ச்சிகளில் சமூகப் பிரச்சனைகள் குறித்த கருத்துக்களை விஜய் டிவி அனுமதிப்பதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் எல்லா விதிகளும் கமல் விஷயத்தில் தளர்த்தப்பட்டன. கடவுள் மறுப்பு, நீட் எதிர்ப்பு என்று தனது நிலைப்பாட்டை பிக் பாஸ் மேடையிலேயே பகிரங்கமாக அறிவித்தார் கமல். நிகழ்ச்சி மென்மேலும் சூடுபிடித்தது.

 

party symbol

உச்சகட்டம் எது தெரியுமா? கமல் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததுதான். இது விஜய் டிவிக்கே எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருக்கக்கூடும். டி.ஆர். பி எகிறியது. இது விஜய் டிவிக்கு லாபம். எந்த செலவும் இல்லாமல் (அதுவும் ஊதியத்துடன்) தனது அரசியல் வருகையை அறிவிக்கும் மேடையாக பிக் பாஸைக் கமல் பயன்படுத்திக்கொண்டார்.

 

இது கமலுக்கு லாபம். இன்றைக்கு கமல், மதுரையில் தனது அரசியல் மாநாட்டைத்  தொடங்கி, கட்சிக்கொடி, சின்னம், கட்சிப்பெயர் என்று எல்லாவற்றையும் அறிவித்துவிட்டார். இணையதளம் வாயிலாகத் தீவிரமாக கட்சு உறுப்பினர்களையும் சேர்த்துவருகிறார்.

 

கமலுக்கு அரசியல் ஆதாயம்…மற்றவர்களுக்கு என்ன லாபம் என்கிறீர்களா? நிறையவே இருக்கின்றன. நிகழ்ச்சியின் விளம்பரதாரர்களுக்கு நல்ல விளம்பரம். அவர்களின் எல்லா வகையான  தயாரிப்புகளும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்பட்டன. போட்டிகள், பரிசுகள் என்று எல்லாவற்றிலும் அவை இடம்பெற்றன.

 

arya

இதுதவிர இன்னொரு லாபம் இருக்கிறது. அது காட்சி ஊடக நிறுவனங்களுக்கு (visual media). உள்ளடக்கமே இல்லாத ஒரு உள்ளடக்கத்தை, கதையே இல்லாத ஒரு படத்தைப் பல வாரங்கள் ஓட்டி, அதனைத் தமிழகத்தின் பேசுபொருளாக மாற்றி, அதனை வெற்றிபெறச் செய்யவும் முடியும் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியின்மூலம் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

இதனைப்பின்பற்றி, கலர்ஸ் டிவி, நடிகர் ஆர்யாவுக்குப் பெண் பார்க்கும் படலத்தை நிகழ்ச்சியாக ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. அந்நிகழ்ச்சியும் பிரபலமடையத் தொடங்கியிருக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தனியாக கதை, திரைக்கதை, வசனம் ஆகியவை தேவையில்லை. பங்கேற்பாளர்களே உள்ளடக்கத்தை இயல்பாகவே உருவாக்கிவிடுவர்.  எனவே நிகழ்ச்சியின் வெற்றியும் ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டதாகவே ஆகிவிடும்.

 

நான் இங்கே சொல்லியிருப்பது பனிக்கடலின் மேலே மிதக்கும் பனிச்சிகரத்தின் உச்சியில் இருக்கும் பனிக்கட்டிபோலத்தான். பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் நீங்கள் ஆராய்ந்தால் ஏகப்பட்ட மேலாண்மைப் பாடங்கள் கிடைக்கும். இந்தப்பார்வை நமக்கு வந்துவிட்டால் திரையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் பல பாடங்கள் எளிதில் புரியத்தொடங்கும்.

(நிறைந்தது)

 

-அருண்மொழி.

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.