முத்ரா: சிறுதொழில் முனைவோருக்காக ஒரு சூப்பர் திட்டம்

முத்ரா: சிறுதொழில் முனைவோருக்காக ஒரு சூப்பர் திட்டம்

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை நிறைய இருக்கிறது. ஆனால் பணத்திற்கு எங்கே போவது? வங்கியில்  கடன் பெறலாம் என்றால் ஏதேனும் பிணையம்/உத்தரவாதம் கொடுத்தால் தானே வங்கியிலிருந்து கடன் பெற முடியும் என்று கவலைப்படுபவரா நீங்கள்?

கவலையை விடுங்கள். உங்களைப் போன்ற தொழில் முனைவோராகும் கனவில் இருப்பவர்க்கு  கைகொடுக்கும் ஒரு கடன் திட்டம் தான் “பிரதமரின் முத்ரா யோஜனா திட்டம். இத்திட்டம் 2015-ம் ஆண்டு நமது இந்தியப் பிரதமரால் தொடங்கி வைக்கபட்டது.

முத்ரா திட்டம் என்றால் என்ன?

விவசாயம் சாராத சிறு, குறு தொழில்முனைவோர்க்கு வழங்கப்படும் கடன் திட்டதிற்கு முத்ரா திட்டம் என்று பெயர். அதாவது  ‘Micro Units Development and Refinance Agency Bank”(  ‘MUDRA Bank) என்கிற பொதுத்துறை நிதி நிறுவனம் மூலமாக இந்தக் கடனுதவி வழங்கப்படுவதால் இத்திட்டம் முத்ரா திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

Image by Shameer Pk from Pixabay

அதிகபட்சம் எவ்வளவு தொகை கிடைக்கும்?

அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் இத்திட்டம் மூலம் கடனாகப் பெற முடியும். அவரவர் ஆரம்பிக்கும் தொழிலின் தன்மைக்கு ஏற்ப கடனுதவியைப் பெற முடியும். முத்ரா கடனுதவித் திட்டதில் மூன்று சிஷு(Shishu), கிஷோர்(Kishor), தருண்(Tarun) ஆகிய மூன்று வகையான உட்பிரிவுகள் இதில் இருக்கின்றன.

எந்தெந்தப் பிரிவிலிருந்து எவ்வளவு தொகை கடன் கிடைக்கும்?

அதிகபட்சம் ஐம்பதாயிரம் வரைக்குமான கடனுதவியை சிஷு என்கிற பிரிவின் மூலமாகப் பெற முடியும்.

ஐம்பதாயிரத்துக்கு மேலிருந்து அதிகபட்சமாக ஐந்து லட்சம் வரைக்குமான கடனுதவியை கிஷோர் என்கிற பிரிவிலிருந்து பெறலாம்.

ஐந்து லட்சத்துக்கு மேல், அதிகபட்சம் பத்து லட்சம் வரையிலான கடனுதவியை தருண் என்கிற பிரிவு கொடுக்கிறது.

எந்தெந்தத் தொழில்களுக்கு?

பாக்கு மட்டையிலிருந்து பொருட்கள் தயாரிப்பது, தீப்பெட்டி தயாரிப்பு, ஆடு வளர்ப்பு, பால் பண்ணை, பேக்கரி வைப்பது, சிறிய அளவிலான துணிக்கடை வைப்பது, முடி திருத்தகம், காய்கறிக் கடை வைப்பது………இப்படி எந்தவொரு சிறுதொழிலுக்கும் முத்ரா திட்டதின் மூலம் கடனுதவியைப் பெற முடியும். ஆனால் வீடு கட்டுவது, திருமணச் செலவுகள், சொந்த உபயோகம் (personal loan) போன்றவற்றுக்கு இந்தத் திட்டம் மூலம் கடனுதவியைப் பெற இயலாது.

செய்யவேண்டியது என்னென்ன?

பதினெட்டு வயது நிரம்பிய ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் என்று யார் வேண்டுமானாலும் முத்ரா திட்டம் மூலம் கடனுதவியைப் பெற முடியும். நீங்கள் வசிக்கும் பகுதியிலிருக்கும் தேசியமயமாக்கபட்ட வங்கிகளில் இந்தக் கடனுதவியைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். ஒவ்வொரு தேசியமயமாக்கபட்ட வங்கியிலும்  முத்ரா கடனுதவியை வழங்கும் அதிகாரி இருப்பார்.

எனவே கடனுதவியைப் பெறுவதற்காக தேசியமயமாக்கபட்ட வங்கியை அணுகும் பொழுது நீங்கள் என்ன தொழில் செய்யப் போகிறீர்கள்? அதற்கு எவ்வளவு செலவாகும்? உங்கள் தொழிலுக்கு என்னென்ன கருவிகள், உபகரணங்கள் தேவைப்படும்? அதற்கு எவ்வளவு செலவாகும்? எந்த இடத்தில் அந்தத் தொழில் அமையப் போகிறது என்பதுபோன்ற உங்கள் தொழில்சார்ந்த அனைத்துத் தகவல்களையும் தெளிவாகக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றைத் தயார்செய்து வங்கிக்கு எடுத்துச் செல்லவேண்டியது அவசியம்.

நீங்கள் கொடுக்கும் விரிவான தகவல்களின் அடிப்படையில் சிசு, கிஷோர், தருண் ஆகிய மூன்று பிரிவுகளில் எதிலிருந்து கடனுதவி அளிக்கவேண்டும் என்பதை வங்கியில் இருக்கும் முத்ரா அதிகாரி தீர்மானிப்பார்.

பலருக்கும் ஒரு ஐயம் இருக்கிறது. இத்திட்டம் பொதுத்துறை (அரசு) வங்கிகளில்தான் இருக்கிறதா என்று. அந்த ஐயம் தேவையற்றது. இது மத்திய அரசின் திட்டம் என்பதால் அனைத்து முன்னணி தனியார் வங்கிகளிலும் இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.

கைகொடுக்கும் முத்ரா அட்டை

முத்ரா திட்டதின் கீழ் உங்களுக்கு கடனுதவி கிடைத்துவிட்டால், உங்களுக்கு வழங்கப்பட்ட கடன்தொகை உங்களது உங்களுக்கென்று பிரத்யேகமாக கொடுக்கப்பட்டிருக்கும் முத்ரா கணக்கில் சேர்ந்துவிடும். கூடவே உங்களுக்காக முத்ரா டெபிட் கார்டையும் அதிகாரிகள் வழங்கிவிடுவார்கள். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு ரூ.5 லட்சம் கடன் தருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தொகை உங்களது முத்ரா  கணக்கில் வந்துவிடும்.

தொழிலை ஆரம்பித்தபிறகு எப்போதெல்லாம் உங்களுக்கு பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த அட்டையைப் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்குத் தேவையான பணத்தை அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எவ்வளவு பணம் முத்ரா கணக்கிலிருந்து எடுக்கிறீர்களோ அதற்கு மட்டும் வட்டியை செலுத்தினால் போதும்.

இதுவரை எவ்வளவு தொகை கடனாக அளிக்கப்பட்டுள்ளது?

முத்ரா வங்கி மூலம் 2019-2020-ம் நிதியாண்டில் இதுவரை ரூ.1,55,981.83 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல முத்ரா திட்டத்தின் மூலம் அதிக அளவிலான தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கும் மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த மாநிலங்களாக  தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்கள் விளங்குகின்றன.

முத்ரா கடனுதவித் திட்டம் குறித்து மேலும் பல தகவல்களை அறிய https://www.mudra.org.in என்கிற இணைய முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

பாலா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *