ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்! (தொடர்-2)

அலுவலகம் இல்லாமல் ஒரு வங்கி!

“ஒர் அலுவலகக் கட்டடம்கூட இல்லாமல் வங்கி நடக்கிறதா?” என்று கேட்பவர்களுக்கு, வங்கித் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்து, அடுத்த கட்டப் புரட்சியை ஆரம்பித்து விட்டது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். தொழில் துவங்க, எண்ணம் (Idea) மட்டுமே தேவை. இடம், பொருள் மற்ற அனைத்தும் நாம் நினைக்கும் அளவுக்கு சிரமமில்லை என்பதற்கு வங்கித்துறையின் சமீபத்திய மாற்றங்களே சான்று.

 

வங்கித் தொழில்நுட்பம் (Financial Technology or #FinTech)

 

மிகச் சமீபத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் (DBS) என்கிற வங்கி, தனது வங்கிச் சேவையை இந்தியாவில் தொடங்கி, ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திருக்கிறது, ஒரு கிளையைக் கூடத் திறக்காமல்! அதாவது, தொடக்கத்தில் வங்கிச் சேவைக்கென்று ஒரு கிளைக் கட்டிடமோ, அலுவலகமோ கிடையாது. முழுவதும், கைபேசித் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு தொடங்கப்பட்ட நவீன வங்கி (Digital Bank) இது. இன்றும் பெரிய அளவுக்கு கிளைகள் கிடையாது.

 

நம்ப முடிகிறதா? ஆனால், இது வெற்றிகரமாக நடந்திருக்கிறது. ஏப்ரல் மாதம் நடந்த கிரிக்கெட் திருவிழாவின் (IPL) போது தான் இந்தச் சேவை தொடங்கியது.  இதன் தொடக்க விழாவில் கிரிக்கெட் பிரபலம் டெண்டுல்கருடன் (Tendulkar) சேர்ந்து டிபிஎஸ் (DBS) தலைமை நிர்வாகி “பியுஷ் குப்தா” (Piyush Gupta) இந்தச் சேவையை தொடங்கி வைத்து, இதை வங்கித் துறையின் “வாட்ஸ்-ஆப் (WhatsApp)” தருணம் என்றார். அதாவது, வங்கித் துறையில் இது ஒரு புரட்சி என்கிறார்.

 

“வங்கிக் கணக்கை எங்குத் துவங்குவது?”, இணைய உலாவகத்தில் (Internet Browsing Center) அல்லது காபி டே (Coffee Day) போன்ற இடங்களில் இருந்து துவங்கலாம், வெறும் 90 நொடிகளில்!

 

“வங்கிச் சேவை, எவ்வாறு நடை பெறுகிறது?”, இயல்பான கேள்வி தான். பல பரிவர்த்தனைகள் உங்களின் கைபேசி மூலமாகவும், சில பரிவர்த்தனைகள் மற்ற வங்கியின் உட்கட்டமைப்பின் (Infrastructure) துணை கொண்டும் நடக்கும்.

dbs

உதாரணத்திற்கு, உங்கள் வங்கி கணக்கில் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். வேறொரு வங்கியின் தானியங்கி இயந்திரத்தின் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் சேர்க்கலாம் அல்லது நீங்கள் பணிபுரியும் நிறுவனம், உங்களது சம்பளத்தை இந்த வங்கியில் செலுத்தலாம். பணத்தைப் பெற வேறொரு வங்கியின் தானியங்கி இயந்திரத்தின் மூலமோ அல்லது வங்கி அட்டையின் மூலமாக நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களை நீங்கள் விரும்பும் அங்காடியில் வாங்கிக் கொள்ளலாம். என்ன அருமையான ‘உத்தி (Idea)’ பாருங்கள்!

second pix

வங்கித் தொழில்நுட்பம் புதியது அல்ல

 

வங்கித் தொழில்நுட்பம் ஒன்றும் இந்தியத் தொழிற்துறைக்குப் புதியது அல்ல. ஏற்கனவே, ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) 2008-ம் ஆண்டில் துவங்கியது போன்ற சேவை தான். ஆனால், அந்தச் சேவை இணையத்தை மைய்யமாக வைத்துக் கொடுக்கப்பட்ட சேவை. அதாவது, இணையத்தில் வங்கியின் வலைதளத்தைக் கொண்டு உங்களின் கணக்கை இயக்கலாம்.

 

பி2 (B2) என்ற அந்தச் சேவையைத் துவங்கி வைத்த போது அதன் நிர்வாகி நம் முன் வைத்த கேள்வி “கடைசியாக எப்போது வங்கிக் கிளைக்கு வந்தீர்கள்? ஓரிரு மாதங்களுக்கு முன்பா அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு?” என்பதுதான். இந்தக் கேள்விக்கு உங்களின் பதில் எதுவாக இருப்பினும், தொழில்நுட்ப வளர்ச்சியின் துணையால் வங்கிக்குச் செல்லும் தேவை குறைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

 

நினைத்துப் பாருங்கள்… வங்கிச் சேவைக்கான தேவை அதிகரித்து, வங்கிச் சேவை நமது வாழ்வின் ஒரு முக்கியமாகிவிட்ட இன்றைய நிலையில், நாம் வங்கிக்குச் செல்லும் தேவை மட்டுமே குறைந்துவிட்டது. இதற்குக் காரணம், வங்கி நம்முடனே பயணித்துக் கொண்டிருக்கிறது.

 

வங்கிகளுக்கு வங்கித் தொழில்நுட்பம் தேவைப்பட்டதற்கான காரணம், வங்கிக் கிளையை நடத்தும் செலவு அதிகரித்து வருகிறது என்பதுதான் (குறிப்பாக வங்கிச் சேவையைக் குக்கிராமத்திற்குக் கொண்டு செல்வதில்). “ஒரு வாடிக்கையாளர் வங்கிக்கு நேரில் சென்றால் வங்கிக்கு 200 ருபாய் செலவு, தானியங்கி இயந்திரத்தை உபயோகித்தால், வெறும் 20 ருபாய் மட்டுமே செலவு”, என்கிறார் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டை (Standard Chartered) சேர்ந்த நிர்வாகி, சியாமல் சக்சேனா (Shyamal Saxena). எனவே, வங்கித் தொழில்நுட்பம் வங்கிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

 

வங்கிச் சேவையை, ஒரு கட்டடமின்றித் தொடங்கலாம் என்ற “உத்தி (Idea)” மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தையும் (Technology), அதற்கான உட்கட்டமைப்பையும் (Infrastructure) உருவாக்கி உங்கள் முன் நிறுத்தி இருக்கிறது. ஆக, வங்கித் தொழில்நுட்பம், ஓர் உத்தியின் விளைவே!

 

“தொழில்” நீங்கள் நினைக்கும் அளவிற்குச் சிரமமில்லை. ஓர் அலுவலகக் கட்டிடமின்றிப் பல கோடிகளைக் கையாளப்போகும் ஒரு வங்கி இயங்க முடியுமானால், நீங்கள் துவங்க விரும்பும் தொழில் ஏன் இயங்க முடியாது? சரி, அலுவலகக் கட்டிடமில்லாமல் சேவை புரியும் வங்கிகளை விடுங்கள். வங்கியாக இல்லாமல் வங்கிச் சேவை புரியும் ஒரு நிறுவனத்தைப்பற்றி? ஆச்சர்யமாக இருக்கிறதா? அடுத்த  பதிவில் அதைப்பற்றிப் பேசுவோம்.

 

(தொடரும்)

-கதிரவன் மனோகரன்.

(முகப்பு புகைப்படம்: http://www.b.amsterdam/wp-content/uploads/2016/03/fintech.png)

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *