உங்கள் நிறுவனம் மகிழ்மதியா?

பாகுபலி  படம் பார்த்தீர்கள்தானே?

 

 

 

“என்ன ஒரு கேள்வி கேட்டுவிட்டீர்கள்” என்று கொதித்துவிடாதீர்கள். ‘பாகுபலி பார்க்காமல் போவது  2017இன் பெரும் பாவம் என்பது எனக்கும் தெரியும். அழகியலும் பிரம்மாண்டமும் கலந்த அந்தக் கலவை  நிச்சயமாக இந்திய திரைத்துறையின் மணிமுடியில் ஒரு மயிலிரற்குதான். மாற்றுக்கேள்வியே இல்லை.

ஆனால், முனைவில் இதுபற்றி நாம் ஏன் பேசுகிறோம்? காரணம் இருக்கிறது.

 

பாகுபலியில் இடம்பெறும் மகிழ்மதி அரசை வைத்து ஒரு சிறிய நிர்வாகக் கதையைச் சொல்லப்போகிறேன் (அதானே பார்த்தேன் என்கிறீர்களா?)

 

மகிழ்மதியை ஒரு நிறுவனமாக எடுத்துக்கொள்வோம். அதனை ஒரு நிர்வாகியாகப் பார்த்தால் நாம் என்னென்ன முடிவுகளுக்கு வர முடியும் என்று பேசுவோமா?

 

எல்லா நிறுவனங்களையும்போலவே மகிழ்மதியும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய நாடு. அதாவது நிறுவனம். அதனைக் காலம்மாலமாக நிர்வகித்துவருவோர், மிகவும் நல்லெண்ணம் படைத்தவர்கள். அதாவது அந்தக்காலத்து கிராமத்து பஞ்சாயத்துத்தலைவர் அல்லது ஊர்த்தலைவர்மாதிரி.

ஆனால் பாருங்கள், வெறும் நல்லவராக இருந்துவிட்டால்மட்டும் போதாதே, வல்லவராகவும் இருந்தாகவேண்டுமே…இல்லாவிட்டால் நல்லவர்கள் ஏமாளிகள் ஆவதைத் தடுக்கமுடியாதே!

 

Ramya-Krishna-in-Bahubali

அதேதான் பாகுபலியின் சிவகாமி தலைமையிலான நிர்வாகத்திலும் நடந்தது. சில நிறுவனங்களில் நீங்கள் கவனித்திருக்கக்கூடும்…நிறுவனத்துக்கு அவர்களால் எந்த நன்மையும் இருக்காது. நிர்வாகத்திறனும் இருக்காது…ஆனால் அவர்கள் நிர்வாகத்தில் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பார்கள். சிவகாமியின் கணவர் பிங்கலத்தேவன் மாதிரி.

இவர்களைப்போன்ற நிர்வாகிகளால் நிறுவனத்துக்கு சேதாரம்தான் அதிகம். வெளியில் அப்பாவிகள்போல இவர்கள் தோன்றினாலும் இவர்களுக்குள்ளும் தெளிவான திட்டம் ஒன்று இருக்கும். அதுதான் ‘பிழைப்புவாதம்’.

 

அதனை நடைமுறைப்படுத்தவேண்டுமென்றால் அவர்களுக்கு உண்மையிலேயே வேண்டியவர்கள் கையில் அதிகாரம் இருக்க வேண்டும். அதாவது, பல்வாள் தேவன்போல ஒரு ஆள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தங்களது வாழ்க்கை சிரமமின்றி நடக்கும் என்று Nasser-as-Bijjaladeva-Baahubaliசிவகாமியின் கணவரான நாஸர் நினைப்பது மாதிரி.

 

பல்வாள் தேவன் கையில் சிக்கிய மகிழ்மதியாகப் பல நிறுவனங்கள் நசிந்ததும் நசிந்துகொண்டிருப்பதும் தொழில் உலக வரலாறு காணும் காட்சிதான். யார் என்ன ஆனாலும் சரி, தான் ஆண்டால் போதும் என்று நினைக்கும் பல்வாள் தேவனின் மனோபாவம் இன்றும் பல மேலாளர்கள், நிர்வாகிகளுக்கு இருக்கிறது. மாற வேண்டிய மனோபாவம் அது.

 

எதையும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே முடிவெடுக்கும் சிவகாமியின் வளர்ப்பான பாகுபலியிடம் எல்லாத்திறமைகளும் இருக்கின்றன. மக்களிடம் கனிவு, வீரம், வசீகரம், முடிவெடுக்கும் திறன் என்று. பாகுபலியைப் போன்ற நிர்வாகிகள் பல நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். அவர்களிடமும் ஊழியர்களிடத்தில் பரிவு, விமர்சனங்களைத் துணிந்து வைக்கும் வீரம், தனி மனித ஆளுமையில் வசீகரம் என்று அவர்களிடம் எல்லாமும் இருக்கும்.

29bahubali3

 

ஆனால் தங்களது வளர்ப்பு முறை காரணமாக இவர்கள் ‘கணக்குகளைப்போட்டு’ வேலை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். தொழிலுக்குள்ளும் அதற்கு வெளியேயும் நடக்கும் அரசியல் பற்றியெல்லாம் இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.

இது நல்ல குணம் போலத் தெரிந்தாலும் இவர்களால் தங்களையே காப்பாற்றிக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட சூழலில் நீங்களும் இருந்தால் கட்டப்பாக்களால் புறமுதுகில் குத்தப்படுவீர்கள்.

ஒரு நிர்வாகி, நல்லவராக இருந்தால் மட்டும் போதாது; வல்லவராகவும் இருக்க வேண்டும் என்பதற்கு அமரேந்திர பாகுபலி ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

 

bahubali 2

இப்படி எல்லாவற்றுக்கு தலையாட்டிவிடும் ‘நல்லபிள்ளை’ பாகுபலிக்குத்தான் பிரச்சனை வருமா? குந்தள நாட்டு இளவரசி தேவசேனா போன்றோருக்கும் வரும். பாகுபலியைப்போன்ற அப்பாவி அல்ல அவள். எவ்வளவு பெரிய ஆளையும் எதிர்த்துக் கேள்வி கேட்கவும் விமர்சனம் வைக்கவும் தவற மாட்டாள் தேவசேனா.

 

நிறுவனத்தின் நலனுக்காக் கறாரான விமர்சங்களை வைக்கும் தேவசேனா போன்ற ஊழியர்களைப் பெரும்பாலும் நிறுவனத்தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் பழிவாங்கப்படுவது தொடர்கிறது. ஒரு நிர்வாகி, விமர்சனத்துக்கும் ஆலோசனைக்கும் காது கொடுக்கவில்லை என்றால் துரோகங்களுக்கு தன்னையே விலை கொடுக்க வேண்டியிருக்கும். சிவகாமி ஆற்றில் போன மாதிரி.

 

அவந்திகா பற்றி இங்கே குறிப்பிட்டாகவேண்டும். அந்தப்பெண்ணுக்கு, தேவசேனாவைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால் ராஜ விசுவாசம் காரணமாகவும் மக்களின் விருப்பத்துக்காகவும் உயிரைப்பணயம் வைத்து அமைப்பு முறைக்கு (பல்வாள் தேவனின் அரசுக்கு) எதிராக ஆயுதமேந்திப் போராடுகிறாள். இப்படி ஒரு பெண், அவளது குழு இருப்பதே சிவகாமிக்கோ, அமரேந்திர பாகுபலிக்கோ தெரியவில்லை.

 

பல நிறுவனங்களில் நெஞ்சுக்கு நீதியாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் அவந்திகா. பாகுபலி ஒரு திரைப்படம் என்பதால் அவந்திகா, மகேந்திர பாகுபலிக்கு மனைவியாகி, அரியணையில் அமர முடிந்தது.

540872ஆனால் உண்மையில் விசுவாசமும் அறிவும் நேர்மையும் நிறைந்த ஊழியர்களை அவ்வளவு உயரத்திலா வைத்துவிடுகிறோம்? ஒவ்வொரு தொழில் முனைவோரும் நிர்வாகியும் தங்களது மனசாட்சியைக் கேட்கவேண்டிய கேள்வி இது.

பாகுபலி படத்தில் பிரதான  பிரதான கதாபாத்திரம் இல்லை என்றாலும் குமாரவர்மனின் பாத்திரம் முக்கியமானதுதான். அவனது இயல்பு என்ன? பயந்த சுபாவம். அதனால் அவன் கோழையாகத் தோற்றமளிக்கிறான். அமரேந்திர பாகுபலி, “எல்லா கோழைகளுக்கும் வீரனாக ஆவதற்கு வாழ்க்கை ஒரு வாய்ப்பை வழங்கும் குமார வர்மா!” என்று சொல்கிறான். அதனையேற்று அவனும் தனக்குள்ளிருந்த வீரத்தை வெளியே கொண்டுவருகிறான்.

 

olympic-8-tamnna-bhatia-archery-bahubali

ஒரு தொழில் நிறுவனத்தில் ஊழியர்கள் மட்டுமல்ல, நிர்வாகிகளும் தங்களுக்குள் இருக்கும் அனைத்துத் திறமைகளையும் பரீட்சித்துப்பார்ப்பதில் தயக்கம் காட்டக்கூடாது.

யார் கண்டார்கள், நீங்கள் பல லட்சம் செலவு செய்து வாங்கும் ‘வல்லுநர் ஆலோசனைக்’ கருத்தை உங்கள் நெடுநாள் ஊழியர் அநாயசமாக சொல்லிவிடக்கூடும். எனவே, எல்லோருக்கும் வாய்ப்பளிப்பது என்பது நிறுவனத்தில் முக்கியமானது. ஊழியர்கள் செய்யும் சிறப்பான பணிகளுக்கு அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குவதில் நிர்வாகிகளுக்கு சிறிதும் தயக்கம் இருக்கக்கூடாது.

 

பாகுபலி படத்தின் மையப்புள்ளியான கட்டப்பாவைப்பற்றிச் சொல்லாமல் இக்கட்டுரை நிறைவுபெற முடியாது. இப்படத்தின் முதல் பகுதியைப் பார்த்தவர்களுக்கு முதலில் கட்டப்பாவின்மீது பலத்த மரியாதை ஏற்பட்டது உண்மை.

அதே கட்டப்பா, அமரேந்திர பாகுபலியைப் பின்னாலிருந்து ஒரு கோழைபோல கத்தியால் குத்திக் கொன்றது பார்வையாளர்களை உறையவைத்தது. ‘கட்டப்பா ஏன் பாகுபலையைக் கொன்றார்?’ என்பது மில்லியன் டாலர் கேள்வியாக ஓராண்டாக மக்களின் மனங்களைக் குடைந்தது. அதற்கான விடை இரண்டாம் பாகத்தில் கிடைத்தது.

kattappa-pic-5

 

கட்டப்பா, நீதி நேர்மை பார்த்து பகுத்தறிவின் துணைகொண்டு முடிவெடுப்பவர் அல்லர். ஒரு வீரமான, ஆஜானுபாகுவான அடிமை. அரியாசனத்தில் யார் அமர்ந்திருந்தாலும் அவர்களுக்காக உயிரையே கொடுப்பார். அங்கு அவருக்கு அறிவு வேலையே செய்யாது.

இத்தகைய குருட்டு விசுவாசமும் அடிமைப்புத்தியும்தான் அமரேந்திர பாகுபலியையே வஞ்சகமாகக் கொல்லும்வரை அவரை இட்டுச்சென்றது.

 

இரண்டாம் பாகத்தில் அவருக்கு வரும் வீரம், வாய்மையால் வந்த வீரமல்ல. பகுத்தறிவால் எழுந்த கோபமும் அல்ல. ‘ஒரிஜினல்’ ஓனர் இருக்கும்போது ‘டூப்ளிகேட்’ ஓனருக்கு விசுவாசமாக இருந்துவிட்டோமோ என்ற பரிதவிப்பும் குற்ற உணர்ச்சியும்தான்.

 

நீங்கள் சொல்லுங்கள். கட்டப்பா போன்ற ஊழியர்கள் உங்களுக்குத்தேவையா?  அல்லது சுய சிந்தனையுடன் முடிவெடுக்கும் எளிய ஊழியர்கள் போதுமா? உங்களது வாக்கு இரண்டாவது வகைக்குத்தான் என்பது எனக்குத் தெரியும்.

 

 

உங்கள் நிறுவனமான மகிழ்மதி, தானும் செழித்தோங்கி, தன்னை நம்பியிருப்போரையும் காக்க வேண்டுமென்றால் நீங்கள் நிச்சயம் ‘பாகுபலி’ படத்திலிருந்து கொஞ்சம் நிர்வாகப் பாடம் கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

 

-அருண்மொழி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *