” எல்லோருக்கு நஞ்சற்ற உணவு!” -சொல்கிறது www.myrightbuy.com

ரசாயனங்கள் இல்லாத மளிகைப் பொருட்கள், நஞ்சற்ற காய்கறிகளை மக்களுக்கு விற்பனை செய்வது, இதன்மூலம் விவசாயிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட வருவாய்-இவ்விரு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது www.myrightbuy.com என்ற இணையதள நிறுவனம்.

 

அதன் நிறுவனரான எஸ்.ராஜ்கிரண், முனைவு இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இது:

 

உங்களைப்பற்றிச் சொல்லுங்கள்!

அடிப்படையில் எங்கள் பூர்வீகம் திருவனந்தபுரம்தான். அப்பா அம்மா இருவரும் நூலகர்கள். நடுத்தரக் குடும்பம் எங்களுடையது. படித்து வளர்ந்தது எல்லாமே திருவனந்தபுரத்தில்தான். மலேசியாவில் கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற்றேன். படிப்பை முடிந்ததும் அங்கேயே ஒரு கல்லூரியில் பேராசிரியராக  ஒரு வருடம் பணியாற்றினேன்.

 

அதன் பிறகு இந்தியா வந்த பின் சென்னையில்  டி.எஸ்.ஆர்.சி என்ற நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக 5 ஆண்டுகள்  பணியாற்றினேன்.  அதன் பின் டிடி சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப தலைமைப் பொறுப்பில் இருந்தேன். அந்நிறுவனம் பல்வேறு தூதரகங்கள், துணைத்தூதரகங்களுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனமாகும்.

IMG-20160627-WA0011
எஸ்.ராஜ்கிரண்

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று எப்போது தோன்றியது?

டி.எஸ்.ஆர்.சி.யில் வேலை செய்துகொண்டிருந்தபோதுதான் சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அந்த எண்ணம் வந்தவுடனேயே வெளியில் வந்து அதனை செயலாற்றவும் செய்தேன்.

 

 

சிறு வயதிலிருந்தே தொழில் என்பது எனது மிகப் பெரிய விருப்பமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். அந்த ஆர்வம் அதிகம் இருந்ததன் காரணமாக பல தொழிலதிபர்களின் வெற்றிக்கதைகளைப் படித்துக்கொண்டே இருந்திருக்கிறேன். ஆனால் என்ன தொழில் செய்யலாம் என்ற கேள்விமட்டும்  எப்போதுமே இருந்தது.

 

எந்தெந்தத் தொழில்களையெல்லாம் பரிசீலித்தீர்கள்?

தாத்தா – பாட்டி காலம்வரை எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் அடிப்படை விவசாயம்தான். என்றாலும் அப்பா காலத்தில் எல்லாம் விட்டுப் போயிற்று. எங்களாலும் அதைத் தொடர முடியவில்லை. ஆனால் இடையில் விட்ட விவசாயத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்றுமட்டும் ஆசை இருந்தது. ஐடி துறையிலிந்து விவசாயத்திற்குச் செல்வது என்பது நினைத்துப்பார்க்கக்கூட கஷ்டமான விஷயம்.

 

தவிர, விவசாயத்திற்கு முன் அனுபவமும் முக்கியம். ஆக மொத்தமாக ஐ.டி-யை விட்டுட்டு விவசாயத்துக்குள் செல்வதைவிட நமக்குத் தெரிந்த ஐ.டி யை வைத்து விவசாயத்தில் என்ன செய்யலாம் என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கினேன்.

 

agri

இது குறித்து நண்பர்கள் பலருடன் தொடர்பு கொண்டு பேசியபின், விவசாயிகள் வாடிக்கையாளர்கள் இவர்கள் இருவரையும் இணைக்கக்கூடிய ஒரு மேடை போன்ற அமைப்பை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் தோன்றியது. இதனைத் தொடர்ந்து உருவானதுதான் மை ரைட் பை.காம் (www.myrightbuy.com) என்ற இணையதளம்.

 

இந்த இணையதளத்துக்கான தேவை என்ன?

இதனை உருவாக்கியதற்குக் காரணம், இரு முக்கியப் பிரச்சனைகளை எதிர்கொள்வதுதான்.

அவற்றில் ஒன்று நாம் வாங்கும் பொருட்கள் (காய்கறிகளிலிருந்து தொடங்கி அனைத்திலும்) எவ்வளவு நச்சு இருக்கிறது என்பது நாம் அறியாத விஷயமாக இருப்பதுதான்.  இன்று உரம், பூச்சி மருந்து, களைக்கொல்லி தெளிக்காத காய்கறிகளே இல்லை என்று ஆகிவிட்டது.

 

இவற்றின்மூலம் விளைந்த காய்கறிகள், பழங்களை உண்பதால் நமக்கு ஏகப்பட்ட உடற்கோளாறுகள் வரும் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால், விஷமுள்ள காய்கறியா, இல்லையா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இது முதல் பிரச்சனை.

 

மற்றொன்று விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பது எட்டாக்கனியாக இருப்பதுதான். இவர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையில் இருக்கும் முகவர்கள், இடைத்தரகர்கள் போன்றவர்களுக்கே பெரும்பான்மையான தொகை போய்க்கொண்டிருக்கிறது. இவ்விரண்டு  பிரச்சனைகளையும் தீர்க்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் மை ரைட்பை!

 

எப்படி இந்த பிரச்சனைகளைத் தீர்க்கிறீர்கள்?

IMG-20160627-WA0012
பங்குதாரர் சதீஷ் உடன் ராஜ்கிரண்

விவசாயிகளிடமிருந்து வேளாண் விளைபொருட்ளை வாங்கி அவற்றை புத்தம்புதிய காய்கறிகளாக, ப்ரஷ்ஷாக ….நேரடியாக நுகர்வோர்க்கு உயர் தரம், சரியான விலையுடன் கொண்டு சேர்க்கிறோம்.

நமக்காக வெகு தூரத்தில் இருக்கும் கிராமங்களில் அரிசி பருப்பு, காய், பழம் என கஷ்டப்பட்டு தயார் செய்து இரவு பகல் உழைக்கும் இவர்களுக்கு நியாயமான தொகை போய்ச் சேர வேண்டும். மூன்றாவதாக, கஷ்டப்பட்டு தயாரிக்கும் விவசாயிகளுக்குத்தான் நியாயமான தொகை சென்று சேரவில்லை, காசுகொடுத்து வாங்கும் நமக்காவது கிடைக்கிறதா? அதுவும் இல்லையே!

 

இதையும் எங்களது நிறுவனம் சரியாகக் கையாண்டு, நியாயமான விலையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள் நுகர்வோருக்குக் கிடைப்பதை நாங்கள் உறுதிப்படுத்தியிருக்கிறோம்.

 

உங்கள் இணையதளத்தில் என்னவெல்லாம் கிடைக்கும்?

www.myrightbuy.com இணையதளத்தில் மளிகை சாமானிலிருந்து காய்கறிவரை எல்லாமே கிடைக்கும். இங்கு கிடைக்கும் அனைத்துப் பொருட்களிலும் எந்தவித பூச்சி மருந்தும் கலக்காதவையாக மிகவும் சுத்தமாக இருக்கும். நீங்கள் எந்த பொருள் ஆர்டர் செய்தாலும் சரி, மறுநாள் காலையில் உங்களுக்கு வந்து சேரும்.

 

நாங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்குவதால் அவர்களுக்கும் நியாயமான விலையை கொடுக்க முடிகிறது. உடனடியாக வாடிக்கையாளர்களுக்கும் சப்ளை செய்வதால் அவர்களுக்கும் தரமான பொருட்களை, நியாயமான விலையில் எங்களால் கொடுக்க முடிகிறது.

 

இதுபோன்ற இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றனவே?

எங்களது வித்தியாசம் என்பது என்னவென்றால், நாங்கள் உற்பத்தி நிலையிலேயே பொருட்களைக் கண்காணிக்கிறோம் என்பதுதான். இதற்காக கணிசமான அளவுக்கு ஊழியர்களை நியமித்திருக்கிறோம்.

 

அவர்கள், விவசாயிகளுக்கு பயிரிடுதலில் தேவையான உதவிகளை எந்த நேரமும் செய்யத் தயாராக இருக்கின்றனர். இதனால் தரத்தை, விளைநிலத்திலேயே உறுதி செய்துவிட முடிகிறது. வேறு யாரும் இந்த அளவுக்கு களத்தில் இறங்கிப் பணியாற்றுவதில்லை.

 

உங்களிடம் பொருள் வாங்க முடியும்; விற்க முடியுமா?

முடியும். ஒரு விவசாயி எங்கள் மூலமாக விற்பனை செய்வதற்கு ஒரு சில வரைமுறைகள் உண்டு. இயற்கை வேளாண்மையை அவர் மேற்கொள்கிறார்  என்பதற்கு அரசு வழங்கும் சான்றிதழ் அவரிடம் இருக்க வேண்டும்.

நாங்கள் சில நேரங்களில் திடீர் பரிசோதனை செய்வோம். அப்போது சில விளைபொருட்களை எடுத்து அதில் ரசாயனங்கள் ஏதும் கலக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வோம்.

 

காய்கறி மட்டும்தான் விற்கிறீர்களா?

எங்களது வெப்சைட் மூலமாக இந்தியா முழுவதும் மளிகைப் பொருட்களை விற்பனை .செய்து வருகிறோம். காய்கறிகளைப் பொறுத்தவரை சென்னையில் மட்டுமே தற்போது சப்ளை செய்து வருகிறோம். கூடிய விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

 

கலப்படமில்லாத உணவுப் பொருளைப் பெற எல்லாருக்கும் உரிமை இருக்கிறது- அதை எல்லோருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

-ஐயன் கார்த்திகேயன். (புகைப்படங்கள்: கிருஷ்ணா)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

2 thoughts on “” எல்லோருக்கு நஞ்சற்ற உணவு!” -சொல்கிறது www.myrightbuy.com”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *