ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்! (புதிய தொடர்)

“பல மைல்கள் நீளும் நெடும்பயணம், இரு கால்களின் துணை கொண்டே தொடங்குகிறது”

-சீன தத்துவ அறிஞர் ‘லா சூ’ (6-ம் நூற்றாண்டு).

 

 

உண்மை!   ஒரு பெரும் தொழில் சாம்ராஜ்யம்கூட, ஒரு சிறிய முனைவிலிருந்தே தொடங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, தொழில் முனைவது என்பது ஒரு சவாலான ஒன்றாக இருந்தது.  ஒரு தொழிற்சாலையை அமைத்து உற்பத்தி செய்யவோ, அல்லது சிறிய அளவில் அங்காடி ஒன்றை நிறுவி, அதன் மூலம் பொருட்களை விற்பதற்கோ, இடமும், பொருளும், அதிக மூலதனமும் தேவைப்பட்டது. தொழில் தொடங்கிய பின் பொருட்களின் விற்பனைக்கும், வாடிக்கையாளர்களிடம் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்கும், வாடிக்கையாளர்களைத் தங்கள் பொருட்களை நோக்கி ஈர்ப்பதற்கும் பெரும் தொகை தேவைப்பட்டது.

 

இன்றைய நிலையில், தொழில் தொடங்குவதில் சிரமங்கள் மிகவும் குறைவு. நவீனத் தொழில்நுட்பத்தின் வருகை, உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. முன்பிருந்தது போல், தொழில் தொடங்க, பெரிய தொழிற்சாலைகளோ, மக்கள் சந்திக்கும் பெரிய இடமோ, மிகப்பெரிய பண முதலீடோ இன்றைக்குத் தேவையில்லை.

 

வாடிக்கையளர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குத் தேவையான சேவையை வழங்கினாலே போதும். இணையமே, புதிய தொழிற்சாலை. சமூக வலைதளங்களே, அதிக மக்கள் கூடும் பெரிய இடம்.

 

வாடிக்கையாளர்களைக் கொண்டே கட்டமைக்கப்பட்ட நிறுவனங்கள்

 

எந்தப் பொருளையும் உற்பத்தி செய்யாத, விற்பனை செய்யாத ஒரு நிறுவனம் கோடிகளைக் குவிக்க முடியுமா? முடியும். எடுத்துக்காட்டு: ஃபேஸ்புக்.  தனது உறுப்பினர்களின் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களைக்த் தனது வலைத்தளத்தில் பதிவேற்ற ஒரு தளமாகத் தொடங்கப்பட்டதுதான் அந்நிறுவனம்.facebook

 

2015-ம் ஆண்டில், 17.9 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டி இருக்கும் பேஸ்புக் நிறுவனம், தனது வலைத்தளத்தில் பதிவேற்றப்படும் எந்தப் புகைப்படத்தையோ, கட்டுரையையோ தான் எழுதுவதோ, பதிவேற்றுவதோ இல்லை.

 

2014-ஆம் ஆண்டில், 2,436 கோடி வருமானம் ஈட்டிய ஃப்ளிப்கர்ட் (Flipkart) என்ற இந்திய  நிறுவனம், தான் விற்கும் எந்த ஒரு பொருளையும் உற்பத்தி செய்யவில்லை. வெறும் ஒரு இணையதளத்தை அமைத்து, பொருட்களை விற்கும் நிறுவனத்தையும், வாங்க விரும்பும் வாடிக்கையாளரையும் இணைத்து இவ்வளவு பெரிய வருமானத்தை ஈட்டி சாதித்திருக்கிறது. இந்நிறுவனம், அமேசான் (Amazon) போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்தியச் சில்லரை வர்த்தகத் துறையில் கோலோச்சுகிறது.

flipkart

அவ்வளவு ஏன்? ஒரு திரைப்படத்தைப் பார்க்க, முன்கூட்டியே அரங்கிற்குச் சென்று, பணம் செலுத்தி, சீட்டைப் பெற்றுப் பின்பு குடும்பத்தை அழைத்துச் சென்று படம் பார்க்கும் நிலை இன்னும் தொடர வேண்டுமா என்று ஒரு நிறுவனம் சிந்தித்தது.

 

ஆர்ப்சென் டெக்னாலஜீஸ் (Orbgen Technologies) என்கிற நிறுவனம், அதனையடுத்து தொடங்கியதுதான் டிக்கெட் நியூ (Ticket New) என்கிற இணையதளம். இந்த நிறுவனமும், கோடிக்கணக்கில் செலவு செய்து திரைப்படம் எதையும் எடுக்கவில்லை, தனக்கென்று ஒரு திரையரங்குக்கூட வைத்திருக்கவில்லை.

ticket new

 

இதுபோன்ற  நிறுவனங்கள் செய்த ஒரே பணி, மக்களை ஈர்த்து, அவர்களைக் கொண்டே, அவர்களின் தேவையை மையமாகக் கொண்டே, தங்களின் இணைய தளங்களைக் கட்டமைத்ததுதான்.

 

பெரிய இடம், பொருள், ஏவல் தேவையில்லை.  

 

இந்தியா போன்ற பெரு நாடுகளின் பலம் அவற்றின் மக்கள் தொகைதான். மக்கள் தொகை இருக்குமளவிற்குத் தொழில் வாய்ப்புகளும் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. தனது படிப்புக்கேற்ற வேலை, வயது முதிர்ந்தவுடன் பணி ஓய்வு என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, தொழில் முனைந்து தனக்கென ஒரு தனித்துவ அடையாளத்தைத் தேடும் பெரிய இளைஞர்க் கூட்டமும் அதற்கான வெளியும் சரிவர அமைந்த நவீன யுகத்தில் நாம் வாழ்கிறோம்.

 

மேற்கூறிய உதாரணங்கள் அனைத்தும் உங்களுக்கு ஒன்றை உணர்த்தி இருக்கும். தொழில் தொடங்க, பெரிய இடமோ பொருளோ தேவை இல்லை, வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்திச் செய்யும் உத்தி (Idea) ஒன்று மட்டுமே தேவை. உங்களின் ஒரு சிறிய எண்ணம், நீங்கள் வாழும் சமுதாயத்தின் தற்காலப் பணியைச் சுலபமாக்கவும், சமுதாயத்தில் வாழ்பவர்களின் வளர்ச்சிக்கும் உதவுமேயானால்; உங்களின் முயற்சி, நிச்சயம் நீங்கள் நினைக்கும் உயரம் சென்றடயும்.

 

தொழிலில் வெற்றி பெற உத்தி (Idea) மட்டுமே தேவை. இன்றைய நிலையில் தொழில்நுட்ப புரட்சியின் விளைவால் ஒர் அலுவலகக் கட்டிடம் கூட இல்லாமல் ஒரு வங்கியை நடத்த முடியும். அவ்வாறு நடக்கும் ஒரு பெரிய வங்கியைப் பற்றி விரிவாக அடுத்தப் பதிவில் பார்ப்போமா ?.

(தொடரும்)

 

கதிரவன் மனோகரன்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

1 thought on “ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்! (புதிய தொடர்)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *