ஜம்மு&காஷ்மீர்…. அடுத்தது என்ன?

ஜம்மு&காஷ்மீர்…. அடுத்தது என்ன?

இந்த நாள் இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஒரு நாள். ஒரு தரப்புக்கு இது சரித்திர புகழ் வாய்ந்த ஒரு வெற்றி  நாள். இன்னொரு தரப்போ இது ஜனநாயக படுகொலை என்று துக்கத்தையும் கண்டனத்தையும் தெரிவிக்கிறது. . ஜம்மு காஷ்மீர் சிறப்பு அரசு 370 இன்று  ரத்து செய்யப்படுகிறது .அதன் அங்கமாக உள்ள பிரிவு 35ஏ இதன் மூலம் காலியாகிறது.

வெறும்  சிறப்பு அந்தஸ்தை  மட்டுமல்ல; மாறாக ஜம்மு-காஷ்மீர் தனது மாநில அந்தஸ்தையும் இழந்திருக்கிறது. இனி அது ஒரு யூனியன் பிரதேசம்.  மேலும் அதன் ஒரு பகுதியாக இருந்த லடாக் தற்போது தனி யூனியன் பிரதேசமாக ஆக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டசபை இருக்கும். ஆனால் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இருக்காது. நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக அது  செயல்படும்.

 பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. 

ஆனால் வியப்பூட்டும் வகையில் கடந்த தேர்தலில் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்த பகுஜன் சமாஜ் கட்சி இந்த திருத்தத்துக்கு முழு ஆதரவை வழங்கி விட்டது. பிஜூ ஜனதா தளத்தின் ஆதரவும் எளிதில் கிடைத்துவிட்டது.

இவைதவிர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சிவசேனா, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்கு தேசம், ஷிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் ஒருமித்த குரலில் 370 ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்ய ஆதரவளித்துவிட்டன.

 

தமிழகக் கட்சிகளுள் அ.இ.அ.தி.மு.கவும் இதில் அரசுக்கு ஆதரவாக நின்றுள்ளது. அக்கட்சியின் எம்.பி திரு.நவநீத கிருஷ்ணன், அரசின் இம்முடிவை ஆதரித்துப் பேசிவிட்டார்.

பா.ஜ.க.வின் பரம எதிரியாகக் காட்டிக்கொண்ட ஆம் ஆத்மி கட்சி, 370 ஆவது பிரிவு நீக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அரவிந்த கேஜ்ரிவால், மத்திய அரசுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். 

தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றன. எது எப்படி இருப்பினும் தனது அசுர பலத்தால் தனது நெடுநாள் கனவை பா.ஜ.க நிறைவேற்றியிருக்கிறது.

370 சட்டப்பிரிவையும் 35 ஏ உட்பிரிவையும் நீக்குவது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது. அதற்கு முன்பாக இந்த சட்டங்களை இயற்றியவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 இந்தியா சுதந்திரம் பெற்றபோது நாடு இரண்டாகப் பிரிந்ததல்லவா…அப்போது ஜம்மு காஷ்மீர் ஒரு மாநிலமாக இருக்கவில்லை. ஒரு நாடு போல தனியாக இயங்கிவந்தது. ஹரிசிங் என்ற மன்னர் அப்பகுதியை ஆண்டுவந்தார். அப்போது இந்தியாவுடன் தனது பகுதியை இணைக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். 

அந்த நிபந்தனைகளை உறுதிமொழியாக்கித் தந்தது இந்திய அரசு. அதாவது இந்திய நாட்டுக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதிக்கும் (அப்பகுதி மக்கள் தங்களைத் தனி பிரதேசத்தவராகவே கருதுகின்றனர்) ஒப்பந்தம் போடப்பட்டது.

(ஒப்பந்தத்தின் இரண்டாவது தரப்பு, ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்ள, திருத்த அனுமதி அளித்ததா என்பது சிக்கலான கேள்வி. அதுகுறித்த விவாதங்கள் இனிதான் சர்வதேச அரங்கிலும் இந்திய அளவிலும் எழும்பும் எனலாம்).

இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய சட்டங்கள் ஏதும் ஜம்மு காஷ்மீரில் செல்லாது. மாறாக, அவற்றைத்தழுவி, அவ்வூர் நிலைமைகளுக்கு ஏற்ப தனிச்சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம். மேலும் அங்கு தனிக்கொடி, தனி அரசியலமைப்புச் சட்டம் ஆகியவை உண்டு. ‘நிரந்தரக் குடியுரிமை’ முதலிய விஷயங்கள் உண்டு.

 

இந்தியக்குடிமக்கள் எவரும் ஜம்மு காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது. அதேபோல ஜம்மு காஷ்மீரப்பெண், இந்திய மாநிலங்களில் வாழும் ஒருவரைத் திருமணம் செய்தால் அவர் சொந்த மாநிலத்தின் ’நிரந்தரக்’ குடியுரிமையை இழப்பார்.

இந்த சிறப்பு அந்தஸ்து குறித்த பல்வேறு வழக்குகளை உயர், உச்ச நீதிமன்றங்கள் சந்தித்துவருகின்றன. தற்போது நாடாளுமன்றமே சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவை நீக்கிவிட்டது. இது தொழில் உலகில் என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கும் என்று பார்ப்போம்.

1.அரசியல் அமைதி

இன்றைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஜம்மு காஷ்மீரில் இது அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம். இதனைப் பிரிவினைவாதிகளும் சமூக விரோத சக்திகளும் தங்களுக்கு சாதகமாக்க முயலலாம். எனவே அரசியல் அமைதி, தொழில் அமைதி போன்ற விஷயங்களில் அரசு சவால்களை சந்திக்க நேரலாம். சிறு தொழிலோ, பெருந்தொழிலோ, அமைதி அங்கு இருந்தால்தான் பிழைக்கும். 

 

2.உள்கட்டுமானத்தில் முதலீடு

இனி இந்தியாவுக்கு கட்டுப்பட்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாறுவதால் மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக அங்கு செல்லும். மேலும் சாலை வசதி, மருத்துவம் முதலான உள் கட்டுமானத்தில் கார்ப்பரேட் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வாய்ப்பு உண்டு.

அங்கு என்ன விதமான அடிப்படைக் கட்டுமானப் பணிகள் நடைபெறாலும் அப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். உள்ளூர் மக்கள் இனியாவது ஒற்றுமையாக இருந்து தங்கள் பார்வையை சொந்தத் தொழிலின் பக்கம் திருப்பியாக வேண்டும்.

 

3.சுற்றுச்சூழலுக்கு ஆபத்து?

இயற்கையின் செல்லப்பிள்ளையான காஷ்மீரப் பள்ளத்தாக்கு, ஒப்பீட்டளவில் மாசுபாடு குறைந்த பகுதியாகும்.

தற்போது இதன் கதவுகள் ஒட்டுமொத்தமாகத் திறந்து விடப்படுவதால் சுற்றுச்சூழலைப்பாதிக்கும் தொழில்கள் எளிதில் உள்ளே நுழைந்துவிட வாய்ப்புண்டு. அதனைத் தடுக்கும் வகையில் அம்மாநிலத்துக்கென்று சிறப்புச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். 

4.குழுமத் தொழில்களுக்கு வாய்ப்பு 

ஒரே பகுதியில் ஒரு தொழிலைச் செய்வோர் கூட்டாக இணைந்து ஒரே வணிகப் பெயரில் உற்பத்தி செய்வதை, விற்பனை செய்வதை குழுமத் தொழில் (cluster approach) என்பர். அந்த வகையில் காஷ்மீரத்துக்கே உரிய கைவினைப்பொருட்கள், பழ உற்பத்தி முதலிய பல்வேறு தொழில்களில் குழுமத்தொழில்களை மத்திய அரசு ஊக்குவிக்கலாம். உள்ளூர் இளைஞர்களுக்கு இதில் முன்னுரிமை தரலாம்.

 

5.பசுமைத்தொழில்களுக்குக் கதவு திறப்பு

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் உற்பத்தி செய்கின்ற பொருட்களை ஏற்றுமதி செய்யும் மண்டலத்தை அரசுகள் இணைந்து உருவாக்கலாம்.

அதன்மூலம் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் உருவாகும். இதற்கான தனி முகமைகள்  மாநில அளவில் உடனடித் தேவை. ஆனால் உள்ளூர் நிறுவனங்கள்தாம் இதில் அதிக அளவு ஊக்குவிக்கப்பட வேண்டும். தற்சார்புப் பொருளாதாரம்தான் அம்மக்களின் வாழ்வாதாரத்தையும் சுய மரியாதையையும் காப்பாற்றும். 

-அருண்மொழி.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *