தற்சார்பு பொருளாதாரம் (புதிய தொடர்)

தற்சார்பு பொருளாதாரம் (புதிய தொடர்)

கொரொனா ஊரடங்கு பல்வேறு துறைகளைப் பதம் பார்த்திருக்கிறது. அரசுத்துறைகளில்   படிகள் குறைப்பு,  தனியார் துறையில் ஊதிய குறைப்பு,  ஆட்குறைப்பு  முதலிய பல்வேறு சவால்களை ஏழை மக்களும் நடுத்தர வர்க்க மக்களும்  சந்தித்து வருகின்றனர்.

 அதே நேரத்தில் இயற்கை நமக்கு ஒரு  அனுபவத்தையும் தந்திருக்கிறது. நம்மில் பலரும் வீட்டுத் தோட்டம்  அமைக்கத் தொடங்கியிருக்கிறோம். மாடித்தோட்ட வல்லுநர்கள் பலரும் உருவாகி இருக்கின்றனர்.

சிகை அலங்காரம் முதல் வீட்டுக்கு வெள்ளையடிப்பதுவரை, சமையல் கற்றுக்கொள்வது முதல் வீட்டைச் சுத்தம் செய்வதுவரை நமக்கு நாமே செய்து கொள்ளும் ஒரு புதிய போக்கை இந்த மூன்று மாதங்களில் நாம் கண்டிருக்கிறோம்.

 அதாவது நமது சொந்த தேவைகளுக்குப் பிறரைச் சாராமல் நமது தேவைகளை நாமே செய்து கொள்வதுதான் அது.  தற்சார்புப் பொருளாதாரம் என்று இதற்குப் பெயர்.

ஒன்றுபட்ட ரஷ்ய நாட்டில் கிராம  சோவியத் என்ற பெயரில் இம்முறை இருந்திருக்கிறது. நமது நாட்டில் மகாத்மா காந்தியடிகள் கிராம சுயராஜ்யம் என்ற பெயரில் இதனை வலியுறுத்தினார்.  ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற ஓர் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது கனவு.

இன்றைக்கும் காந்தி ஆசிரமங்கள், திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம், விருதுநகர் மாவட்டம் டி. கல்லுப்பட்டியிலுள்ள  காந்தி நிகேதன் ஆசிரமம் முதலிய பல்வேறு இடங்களில் இம்மாதிரி நீங்கள் பார்க்க முடியும்.

தங்களுக்குத் தேவையான பொருட்களை தாங்கள் உறுதி செய்து கொண்டு நிறைவாக வாழும் வாழ்க்கை முறை அங்கு இன்னும் இருக்கிறது.

அதேபோல திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் ஊராட்சி தன்னளவில் தற்சார்பு பொருளாதாரத்தை உறுதி செய்ததை சில ஆண்டுகளுக்கு முன்பு செய்திகளில் படித்திருப்பீர்கள்.

 ஒரு அமைப்பாக , ஊராட்சியாக, சிற்றூராக இவற்றையெல்லாம் செய்யும்போது  ஒரு குடும்பமாக, ஒரு வீடாக நாம் ஏன்  இவற்றை எல்லாம் செய்ய முடியாது?

இதுவரை கத்தியைப் பிடித்திராத  கைகள் முதன் முறையாகக் கத்திரி பிடித்து தங்கள் குழந்தைகளுக்கு முடி வெட்டியதை நாம் கண்டோம் அல்லவா!  உண்மையைச் சொல்லுங்கள்… நீங்களும் கொஞ்சூண்டு சமையல் கலை நிபுணர் ஆகி விட்டீர்கள் அல்லவா!

இவையெல்லாம் உங்களுக்கு ஒரு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கும்.  அந்த மகிழ்ச்சி, நம்மாலும் இதைச் செய்ய முடியும்; இதற்காக நாம் வேறு யாரையும் சார்ந்து வாழ வேண்டியதில்லை என்ற மனநிறைவால் வருவது.

 காலம் முழுக்க நாம் எப்படி வாழ்ந்து விட முடியுமா என்றால் ’இல்லை’ என்பதுதான் விடையாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் நமது இன்றைய தேவைகளைச் சுருக்கிக்கொண்டு சிக்கனமாக வாழ்வதன் மூலம் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் என்பதையும் இந்த ஊரடங்கு நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

குப்பை நொறுக்குத்தீனிகளை உண்ணாமல், தேவையற்ற திட்டங்களில் முதலீடு செய்யாமல், ஷாப்பிங் மால்களுக்குச் சென்று பணத்தை வாரி இறைக்காமல், புகை கக்கும் வாகனங்களை ஓட்டிக் கொண்டு வெறுமனே சுற்றித் தெரியாமல்  நம்மால் வாழ முடியும் என்பதை இது கற்றுக் கொடுத்திருக்கிறது.

நாம் என்னதான் ஓட்டம் ஓடினாலும் இறுதியில் நமக்கு முக்கியமானது எனது குடும்பம்தான், குழந்தைகள்தாம் என்பதையும்   இதே ஊரடங்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

வேறுபாடு தெரியவேண்டும்

இந்த ஊரடங்கு  வாழ்க்கை கொடுத்த நீதியைப்  பின்பற்றி நாம் எதிர்வரும் காலங்களில் வாழ முடியும்.  அதாவது எது இன்றியமையாதது, எது ஆடம்பரம் என்ற வேறுபாட்டை உணர்ந்து வாழும் வாழ்க்கை முறை.

பல ஆடம்பரங்களை நாம் அத்தியாவசிய தேவைகள் என்று கடந்த காலங்களில் நினைத்து செலவு செய்து வந்திருக்கிறோம்.   இனி அதற்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அதேபோல நம்மிடம் உள்ள திறமைகளைப் பயன்படுத்திக் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.

சிக்கனம் மற்றும் நிதித் திட்டமிடல் மூலமாகக் கையில் இருப்பதை இறுக்கிப் பிடித்துக் கொள்ளவும் புதிய செல்வத்தைச் சேர்க்கவும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் கிராமப்புற பழமொழி சொல்வதுபோல ’சிறுகக் கட்டிப் பெருக வாழவேண்டும்’.

என்ன செய்யலாம்?

 சிறுகக் கட்டிப் பெருக வாழ்வதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் திட்டமிடுதல்தான்.  ஒவ்வொரு மாத சம்பளத்துக்கும் முன்பே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து பேசி அடுத்த மாதத்திற்கான செலவை வரவை திட்டமிட்டுக் கொள்ளலாம்.  இதனடிப்படையிலேயே அடுத்தடுத்த திட்டங்கள் இடம்பெறவேண்டும்.

 சேமிப்பு

 நீங்கள் எவ்வளவுதான் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பவராக இருந்தாலும் லட்சங்களில் சம்பளம் பெறுபவராக இருந்தாலும் கூலித் தொழிலாளியாக இருந்தாலும் இறுதியில் உங்களுக்காக நிற்கப் போவது உங்களது சேமிப்பு மட்டும்தான்.  எனவே உங்கள் வருவாயில் குறிப்பிட்ட பகுதியை நிச்சயமாகச் சேமிப்புக்காக ஒதுக்கிவிட வேண்டும்.  எத்தகைய சேமிப்பு என்பதை நீங்களே பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

முதலீடு

 சேமிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முதலீடும்  முக்கியம்.  பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறீர்களா?; பரஸ்பர நிதியில் முதலீடு செய்கிறீர்களா?; கடன் பத்திரங்களில் கண் வைக்கிறீர்களா?; அல்லது வீட்டு மனையில் பணத்தைப் போடுவீர்களா?- என்பது உங்களைப் பொறுத்தது.

தற்போது இணையத்தில் உலகமே  இருக்கிறது.  உங்களது வருவாய்க்கு ஏற்ற சரியான முதலீட்டுத் திட்டம் என்ன என்பதை

 அதில் உள்ள தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது நிதி திட்டமிடல் வல்லுநர்களைஉதவிக்கு அழைக்கலாம்.

நிறையப் பணத்தைத் திருப்பித் தருகிறார்கள் என்று நம்பி ஏமாற்றும் திட்டங்களில் முதலீடு அறவே தவிர்க்கப்பட வேண்டும்.  அதீத வட்டி, சூதாட்டம் ஆகியவற்றின் பின்  செல்வதைக் கனவிலும் நினைத்துப்  பார்க்க வேண்டாம்.

 மறு பரிசீலனை

 உங்களது சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றை அவ்வப்போது பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.போதுமான அளவுக்கு லாபம் தராத முதலீடுகள் மற்றும் சேமிப்புகளை மடைமாற்றி விடுவதற்கு இது மிகவும் உதவும்.

பங்குச்சந்தை சார்ந்த திட்டங்கள், நேரடி பங்குச் சந்தை வணிகம் ஆகியவற்றில் நீங்கள் ஈடுபடுபவராக இருந்தால் உங்கள் வயது, முதலீடு செய்ய  உங்களிடம் உள்ள தகுதி, அடுத்து வர இருக்கிற செலவுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

 பலமுறை யோசியுங்கள்

 எந்த செயலையும் செய்வதற்கு முன்பு இந்த செலவு தேவையா என்பதைப் பலமுறை யோசிப்பது நல்லது.  ஐந்து ரூபாய் விலை குறைவாகக் கிடைக்கிறது என்று அடித்துப் பிடித்து சந்தையில் கத்தரிக்காய் வாங்க அலைகிறோமோ….

அதற்குப் பதிலாக  மொட்டை மாடியில் அல்லது வீட்டின் முன்புறமோ பின்புறமோ இருக்கும் இடத்தில் நான்கு கத்தரிக்காய் விதைகளைத் தூவி விட்டால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் அரை கிலோ கத்தரிக்காய் கிடைக்கும் நீங்கள் ஏன் அதை முயலக்கூடாது?

அழகு நிலையத்திற்குச் சென்று தான் முகச்சவரம் செய்து கொள்வேன் என்று நீங்கள் நினைப்பவராக இருந்தால் நீங்கள் ஏன் வீட்டிலேயே முகச்சவரம் செய்து கொள்ளும் நபராக மாறி விடக்கூடாது?   வெளி உணவு தான் பிடிக்கும் என்று நினைப்பவர்கள் அந்த உணவுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலேயே  சமைப்பதைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது?

 பிராண்டுகளின் அடிமையாகாதீர்கள்

 சிலருக்கு ஒரு பழக்கம் இருக்கும்.  ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் செல்பேசியை ஒருவர் வாங்கி வைத்திருப்பார். அந்நிறுவனம் அடுத்தடுத்த செல்பேசிகளின் மாதிரிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு முறை சந்தையில் அவை அறிமுகமாகும்போதும்  இவர் கிளர்ச்சி ஏற்பட்டு அதனை வாங்க முயற்சி செய்வார்.  நிறுவனம் வளர்ந்து கொண்டே போகும். இவரது சட்டைப்பை சுருங்கிக் கொண்டே போகும்.  இதற்குக் காரணம், குறிப்பிட்ட வணிக பயிரின் மீது உள்ள மிகையான பற்றுதான்.

உங்களுக்குத் தேவை நல்ல படக்கருவியும் நல்ல ஒளி அளவும் நினைவுத் திறனும் கொண்ட செல்பேசி தான் என்றால் அது எப்போது பூர்த்தி ஆகிறதோ அத்தோடு அடுத்த செல்பேசி வாங்குவதற்கான திட்டத்தைத் துண்டித்து விட வேண்டும்.

எது தேவையோ அதற்கான பொருளை வாங்கினால் போதுமானது. எவையெல்லாம் சிறப்பாக இருக்கின்றனவோ அவை எல்லாம் நம் கையில் இருக்க வேண்டும் என்று நினைப்பது நிச்சயமாக வணிகச் சின்னங்களுக்கு அடிமையாவதுதான்.  தற்சார்பு வாழ்க்கை வாழ நினைக்கும் ஒருவர் இதனைச் செய்யவே கூடாது.

கஞ்சத்தனம் தப்பில்லை

 சிக்கனமாக இருப்பது சரி; கஞ்சத்தனமாக இருப்பது தவறு என்றே பலரும் சொல்லக் கேட்டிருப்போம்.  ஏனெனில், சிக்கனம்,கஞ்சத்தனம் -இவ்ற்றுக்கிடையில்  இருப்பது ஒரு சிறிய நூல் அளவு இடைவெளிதான்.  செலவுகளைச் சுருக்கிக் கொள்வது சிக்கனத்தில் வரும்.  இன்றியமையாத் தேவையையும் சுருக்கிக் கொள்வது  கஞ்சத்தனத்தில் சேரும்.

பொதுவாகக் கருமியாக இருப்பவர்களை உலகம் கேலி செய்து கொண்டிருக்கும்.  அதுபற்றி கொஞ்ச காலத்துக்கு நீங்கள் கவலைப்பட வேண்டாம்.  உங்கள் கையில் காசு இல்லாத போது அந்த உலகத்திலிருந்து  எவரும் உங்களுக்கு உதவப் போவதில்லை. உண்மையிலேயே உங்களிடம் அன்பு கொண்டோர் மட்டுமே உதவிக் கரம் கொடுக்க வருவர்.

எனவே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிக்கனமாகவும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஞ்சத்தனமாக இருந்து வாழ்க்கை நடத்துங்கள்.  தேவையான விஷயங்களுக்காக ஒரு நல்ல நிதி கையில் சேர்ந்துவிடும்.

அதை வைத்துக்கொண்டு இன்றியமையாத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யும் பொழுது உலகம் வாய்பிளக்கும்.  அப்போதும் அது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.

தற்சார்புப் பொருளாதாரம் குறித்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாக முனைவு வெளியிட இருக்கிறது அவற்றைப் படித்து பயன் பெறுங்கள்.

(வளரும்)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *