தொழிலதிபர்கள் தற்கொலை ஏன்?

தொழிலதிபர்கள் தற்கொலை ஏன்?

கஃபே காஃபி டே நிறுவனத்தின் தலைவர் திரு வி.ஜி. சித்தார்த்தா அவர்களுடைய அகால மரணம்  தொழில் உலகை மட்டுமல்ல, எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நேற்று இரவு தனது வாகனத்தில் ஓட்டுனருடன் சென்ற அவர் நேத்ராவதி ஆற்றங்கரையோரம் வாகனத்தை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். அதன்பின் அவர் மாயமாகியிருக்கிறார். 

 

தற்போது அவருடைய தற்கொலை குறிப்பு கடிதம் கிடைக்கப் பெற்றிருக்கிறது.  இதை பலரால் நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. காரணம், சித்தார்த்தா அவர்களின் இந்த முடிவுக்கு காரணம் நிதி நெருக்கடி என்கிறது அக்கடிதம்.  சுமார் 1700 கோடி வர்த்தகம் செய்யும் இவருடைய நிறுவனத்துக்கு எப்படி நிதி நெருக்கடி வந்திருக்க முடியும் என்ற கேள்வி இன்னும் பலருக்கு மண்டையைக் குடைகிறது.  

டீ, காபி கடைகள் என்றாலே அவை இப்படித்தான் இருக்கும் என்ற பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று சித்தார்த்தா விரும்பினார்.

அதனை எடுத்து 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் கபே காபி டே  நிறுவனம். ‘ஒரு கப் காபியால் எல்லாம் சாதிக்க முடியும்’ என்ற வணிகத் தாரக மந்திரத்தோடு களமிறங்கிய காபி டே, 1752 கிளைகளுடன் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.

 

அடுத்த ஆண்டுக்குள் ரூ.2200 கோடிக்கும் மேல் வணிகம் செய்வதே சித்தார்த்தாவின் இலக்கு. காபி தவிர பல்வேறு துறைகளிலும் அவரது நிறுவனம் கோலோச்சுகிறது. பிரபல கணிப்பொறி நிறுவனமான மைண்ட் ட்ரீ, இவருடைய நிறுவனம்தான்.

அப்படிப்பட்ட வெற்றிபெற்ற தொழிலதிபரான சித்தார்த்தா ஏன் தற்கொலை முடிவுக்குப் போக வேண்டும்? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரி சோதனைக்கு உள்ளான காபி டே நிறுவனம் பல சிக்கல்களில் சிக்கியது. சில பொருளாதார் முடிவுகள் நிறுவனத்துக்கு கடன் சுமையைக் கொண்டு வந்துவிட்டிருக்கின்றன.

ஆனால் அவற்றிலிருந்தெல்லாம் சித்தார்த்தா வெளிவந்திருக்க முடியும். “வருமான வரித்துறை நெருக்கடி, நான் எடுத்த சில தவறான முடிவுகள், சரியான வணிக மாதிரியை உருவாக்குவதில் நான் அடைந்த தோல்வி ஆகியவைதான் என் முடிவுக்குக் காரணம். உடனடியாக சொத்துக்களை விற்றுப் பணமாக்கி, கடன்களை அடைக்க இயலாத நிலை. அதனால்தான் இம்முடிவை எடுக்கிறேன். இதற்கும் எனது நிர்வாகிகளுக்கும் தொடர்பு இல்லை. அடுத்து வர இருக்கும் நிர்வாகம் நிறுவனத்தை சரி செய்யும்” என்று அவர் கைப்பட எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. 

பெரிய நிறுவனங்களை கட்டிய, வித்தியாசமான யோசனைகளைத் தொழிலாக மாற்றி வெற்றியை சாத்தியப்படுத்திய தொழில்முனைவோர் எதற்காக இந்த தற்கொலை முடிவுக்கு செல்கிறார்கள்? சிந்திக்க வேண்டிய விஷயம். 

சிறிய தொழில் முனைவோரோ, பெரிய தொழில் முனைவோரோ…ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டால் இதற்குப் பிறகு வெளி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று நினைத்து விடுவது தான் பிரச்சனைக்குக் காரணம்.  ஆனால் உண்மையில் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் என்று ஏதுமில்லை.

 

 சித்தார்த்தாவை விடுங்கள். பெரிய பெரிய மேலாண்மைப் பள்ளியில் படித்தவர்கள், அறிவுஜீவிகள் கூட தற்கொலை முடிவுக்கு சென்றுவிடுகின்றனரே… அது ஏன்?

 

இப்போதுதான் ஒரு எளிய பழமொழியை நினைவு படுத்த வேண்டி இருக்கிறது. ”உங்களது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்தால் அது இரட்டிப்பாகிறது. அதேநேரத்தில் துக்கத்தைப் பகிர்ந்தால் அது  பாதியாக குறைகிறது” என்பதுதான் அந்தப் பழமொழி.

மிகப் பெரிய மனிதர்கள் கூட சறுக்கிவிடும் இடம் இதுதான். தனக்கு நேர்ந்த சிக்கலைத் தீர்க்கவே முடியாது; தனக்கு உதவி செய்ய யாராலும் முடியாது என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுவதுதான் தற்கொலையை நோக்கி அவர்களை உந்தித் தள்ளுகிறது.

ஆனால் நண்பர்களே,  உலகில் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை.

உங்கள் நிறுவனம் நடப்பட்டு விட்டால், பொருளாதார நெருக்கடியில் மாட்டிக்கொண்டுவிட்டால் உடனடியாக அதற்குரிய வல்லுநர்களிடம் பேசி. அரசுடன் பேசி, வங்கிகளிடம் பேசி மறு சீரமைப்பு செய்து கொள்ள முடியும். அதேபோல பொருளாதார சிக்கல் தொடர்பான விஷயங்களை வழக்குகளின் மூலமும் தீர்வு கண்டுவிட முடியும்.

 

இது ஒருபுறமிருக்க, தொழில் கூட்டமைப்புகளுடன் இணக்கமான உறவைப் பேணி, அவர்கள்மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்து பிரச்சனைகளைத் தீர்க்க முயலலாம். இவையெல்லாம் ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகள்தாம். இன்னும் நூற்றுக்கணக்கான தீர்வுகள் இருக்கக்கூடும்.

சிறிய தொழில் முனைவோரோ, பெரிய தொழிலதிபரோ… எவராக இருந்தாலும் உயிர் என்பது ஒன்றுதான்.

தொழில் வெற்றிக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும்போது அதிக துன்பத்தைச் சந்திப்பது குடும்பம் மட்டுமே… வெளியுலக வெற்றி-தோல்விகளுக்காக குடும்பத்தைப் பழிவாங்குவது நியாயமற்றது.

இனியாவது தொழில்முனைவோர் ஒரு விஷயத்தை நினைவில் கொண்டால் நல்லது. வாழ்க்கை எனும் பெருங்கடலில் பிழைத்திருக்க ஆயிரம் வழிகள் உண்டு. வேலை, சுய தொழில் என்று ஏகப்பட்ட வழிகள். ஒன்று மே இயலாதவர்கள் பிச்சை எடுத்தேனும் பிழைத்துக்கொள்கின்றனர். ஆக, வருவாய் ஈட்டல் மட்டுமே வாழ்க்கையன்று. வாழ்க்கையின் ஒரு பகுதிதான். 

ஆனால் வாழ்க்கை என்பது கிடைத்தற்கரிய பெரிய வரம். முன் ஜென்மம் என்று ஒன்று இருந்ததாக இன்னும் அறிவியல்பூர்வமாக மெய்ப்பிக்கப்படவில்லை. அடுத்த பிறவியும் நிச்சயமில்லை.

இந்தப்பிறவி மட்டுமே உண்மை. இதுதான் பாக்கியம். இந்தப் பிறவியை, உயிரை எந்தக் காரணம் கொண்டும் நாம் மாய்த்துக்கொள்ளக்கூடாது. இயற்கையின் படைப்பில் எல்லா உயிர்களுக்கும் ஒரு காரணம், தேவை உண்டு. அதைத் தேடிக் கண்டடைவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்!

-அருண்மொழி.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *