தொழில்முனைவோருக்கு அமேசான் பேன்ட்ரி சொல்லும் செய்தி என்ன?

இந்திய ஆன்லைன் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்க நிறுவனமான அமேசான் தற்போது அமேசான் பேன்ட்ரி(AMAZON  PANTRY) என்ற பெயரில் ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விற்பனையிலும் இறங்கியிருக்கிறது.

 

அதுமட்டுமல்ல, இந்த மளிகைப் பொருட்கள் விற்பனை மக்களிடையே பெறும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இப்படி அந்நிய நிறுவனங்கள் தங்கள் தொழிலை நம்நாட்டில் கோலோச்சிக் கொண்டிருப்பது பாரம்பரியமான சில்லரை வர்த்தகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

 

shopping-3225130_640

அதேநேரத்தில் அவர்கள் தங்கள் தொழிலை வளர்க்கப் பயன்படுத்தும் நேர்மையான யுக்திகளை நாமும் கையாண்டு நம்முடைய தொழிலை வளர்த்துக்கொள்ளலாம். அதில் தவறு ஏதுமில்லை. அப்படி மளிகைப் பொருட்கள் விற்பனையில் அமேசான் பின்பற்றும் நல்ல விஷயங்கள் என்னென்னவென்று  பார்க்கலாமா!

 

காலம் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. மளிகைச் சீட்டை அண்ணாச்சி கடையில் கொடுத்துவிட்டு வந்தால் வீட்டிற்கே கொண்டு வந்து டோர் டெலிவரி செய்துவிடுகின்றனர். ஆனால் இத்தோடு மட்டும் நின்றுவிடாமல் அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் பெரிய பலசரக்குக் கடைகள் ஆன்லைனிலும் மளிகைப் பொருட்கள் விற்பனையை ஆரம்பிக்கலாம்.

 

அமேசான் செய்வது பெரிய அளவில் என்றால் நீங்கள் உங்களுக்கு ஏற்ப ஒரு வட்டத்தைத் தேர்வு செய்து ஆன்லைன் மளிகை விற்பனையை ஆரம்பிக்கலாம். அமேசான் பேன்ட்ரி சொல்லும் முதல் பாடம் இதுதான்.

 

ஒன்றுக்கு நான்கு நிறுவனத் தயாரிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து தரமான பொருட்களை வாங்கும் மனோபாவம் நம்முடையது. இதை நன்றாகப் புரிந்துகொண்ட அமேசான் மளிகைப் பொருட்கள் விற்பனையையும் இதைச் சார்ந்தே அமைத்திருக்கிறது.

 

நீங்கள் துவரம்பருப்பு வாங்க நினைத்தால் டாட்டா, அக்ரோ பிரெஷ், பதஞ்சலி இப்படி எல்லா நிறுவனத் தயாரிப்புகளையும் பட்டியலிடுகிறது அமேசான். ஒப்பிட்டுப் பார்த்து நமக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம்.dish-970446_640

தரமான பொருட்களை சற்று விலை குறைவாக  வாங்கவேண்டும் என்பதுதானே நம்முடைய நோக்கமாக இருக்கிறது! நம்முடைய எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட அமேசான் ஒவ்வொரு பொருளையும் அதன் எம்.ஆர்.பி விலையை விட சற்று குறைவாக விற்கிறது. அதுமட்டுமல்ல, பொருட்களின் எம்.ஆர்.பி  விலையிலிருந்து அதிகபட்சமாக 30%வரை இங்கே தள்ளுபடி கிடைக்கிறது.

 

பெட்ரோல்,டீசல் விலை கண்ணைக் கட்டும் இந்தக் காலகட்டத்தில் இருந்த இடத்திலிருந்து தேவையான பொருட்களை விலை குறைவாகப் பெற யாருக்குத்தான் பிடிக்காது?

 

அமேசானின் மிகப்பெரிய பலமே குறித்த  நேரத்தில்  பொருட்களை டெலிவரி  செய்வதுதான். மளிகைப் பொருட்களையும் இவர்கள் குறித்த நேரத்தில் அனுப்பி வைத்துவிடுகின்றனர். நேரம் தவறாமை என்ற மிக முக்கியத் தொழில் பாடத்தை இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

 

அடுத்தது பேக்கிங். வெறுமனே எல்லாப்பொருட்களையும் ஒரு அட்டைப் பெட்டியில் அடைத்து அவர்கள் அனுப்பி வைப்பதில்லை.  ஒரு பெரிய அட்டைப்பெட்டியில் தனித்தனி அறைகளை வைத்திருக்கின்றனர். பருப்பு வகைகள் ஒருபக்கம்… டெட்டால், ஹார்பிக், பினைல் போன்ற பாட்டில் வகைகள் ஒருபக்கம்… சானிட்டரி நாப்கின்கள் மற்றுமொரு அறையில் என்று அவர்கள் பார்த்துப் பார்த்து பேக்கிங் செய்கின்றனர்.

 

package-24549_640

அந்த அட்டைப் பெட்டிக்குள்ளேயே என்னென்ன பொருட்கள் உள்ளே இருக்கின்றன அவை என்ன விலை என்பது குறித்த ரசீதும் அதற்குள்ளேயே இருக்கிறது. பொருட்களை அக்கறையுடன் அனுப்பி வைக்கும் அவர்களது இந்த செயல்பாடு அந்நிய நிறுவனம் என்கிற அவர்களது பிம்பத்தை வாடிக்கையாளர்களின் மனதிலிருந்து மறக்கச் செய்துவிடுகிறது.

 

ஆன்லைனில் வாங்கிய ஒரு மளிகைப் பொருள் சேதமாகி இருந்தால் உடனே அதை மாற்றித் தருகின்றனர். ஒருவேளை அந்தக் குறிப்பிட்ட ஒரு பொருள் இருப்பு இல்லையென்றால் பணத்தை உடனடியாகத் திருப்பித் தந்துவிடுகின்றனர்.

 

“எப்போது பணத்தை திருப்பித் தருவீர்கள்?” என்று கேட்டு தினமும் மின்னஞ்சல் அனுப்பத் தேவையில்லை. இந்த மிக முக்கிய நேர்மையான செயல்பாடுதான் அமேசானை ஆன்லைன் உலகத்தின் ராஜாவாக வைத்திருக்கிறது.

  -பாலாஜி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *