தொழில்முனைவோரும் கிரெடிட் கார்டும்…

 

புதிதாகத் தொழில்தொடங்க நினைக்கும் நிறையத் தொழில்முனைவோர் தங்கள் தொழிலுக்குத் தேவைப்படும் நிதியைப் பெற்றுக்கொள்ள கிரெடிட்கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.

 

ஆனால் இதுபோல நிதிவசதிக்காக கிரெடிட்கார்டை பயன்படுத்துவது புதிதாகத் தொழில் தொடங்கி நடத்த நினைப்பவர்களுக்கு நல்லதல்ல என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

 

 

புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் அதற்கான முதலீட்டைப்பெற கிரெடிட்கார்டைத் தவிர்த்து வேறு வழிகளில் முயற்சிக்கலாம். கையில் வைத்திருக்கும் சேமிப்பு அல்லது அதிக வட்டிக்கு ஆசைப்படாத நண்பர்கள்,உறவினர்களிடம் பணம் கடனாகப் பெறலாம்.

 

money-256314_640

அதைவிட்டுவிட்டு கிரெடிட்கார்டை நீங்கள் பயன்படுத்த ஆரம்பித்தால் அதற்காக நீங்கள் செலுத்தும்  மாதாந்திர வட்டி உங்களது வருமானத்தைப்  பதம் பார்த்துவிடும். இதில் இரண்டு வகைகள் உண்டு.

 

மூலப்பொருட்களை வாங்க கிரடிட் கார்டைப் பயன்படுத்துவோர் ஒரு வகை. ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து கிரடிட் கார்டைப் பயன்படுத்தி பணமாக எடுப்போர் இன்னொரு வகை. இரண்டிலுமே புதிய தொழில்முனைவோர் கவனமாக இருக்க வேண்டும்.

 

கிரெடிட் கார்டுக்கு  வட்டி கட்டவேண்டும் என்று சொன்னதும் யார்தான் வட்டி வாங்கவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு நீங்கள் அதிக வட்டி செலுத்தியாக வேண்டும். எவ்வளவு தெரியுமா? சுமார் 40%. இது புதிய தொழில்முனைவோருக்கு எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா?

 

ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் தொழிலுக்காக கிரெடி கார்ட் பயன்படுத்தும்பொழுதும் குறிப்பிட்ட தொகையை பரிவர்த்தனைக் கட்டணமாக கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பிடித்துக் கொள்வர். தற்போது அதனுடன் ஜி.எஸ்.டியும் சேர்ந்துவிட்டது.  இதுவும் உங்களுக்கு ஒரு தேவையற்ற செலவுதானே!

 

அதுமட்டுமல்ல, உங்களை கிரெடிட் கார்டு  வாங்க வைப்பதற்காக தேன் ஒழுகப் பேசும் கிரெடிட் கார்ட் நிறுவனங்கள், நீங்கள் தவணை தேதியைத் தவற விடும்போது கடுமை காட்டுவர்.

 

முதல் இரண்டு மூன்று மாதங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. அதன் பிறகு திடீரென்று நீங்கள் வாங்கிய பணத்திற்கான வட்டிவகிதம் சர்ரென்று மேலே ஏறும்.நீங்கள் அதலபாதாளத்தில் விழுந்துவிடுவீர்கள். அதிலும் கிரெடிட் கார்டு குறித்த விழிப்புணர்வு எதுவுமில்லாமல் புதிதாகக் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு இவை மிக பெரிய அதிர்ச்சியைத் தந்துவிடும்.

 

worried-30148_640

உங்களது கிரெடிட் கார்டு குறித்த விபரங்கள் தவறான மனிதர்களின் கைகளுக்குப் போய்விட்டால் மோசடி சம்பந்தபட்ட  கட்டணம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களுக்கு அபராதமாக கிரெடிட் கார்டு நிறுவனங்கள் விதிதுவிடும். யாரோ செய்த தவறுக்கு  நீங்கள் தண்டம் அழ வேண்டியிருக்கும்.

 

நீங்கள் புதிதாகத் தொழில் தொடங்கியவர் என்கிறபோது உங்களால் மாதாமாதம் நிரந்தர வருமானத்தைப் பார்க்க முடியாது. ஆனால் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் அதற்கான மாதவட்டியை சரியாகச் செலுத்தியாகவேண்டும்.

 

அப்படி நீங்கள் மாதவட்டியை ஒருமாதம் செலுத்தாமல் இருந்தால்கூட அதற்கான அபராதத்தை நீங்கள் செலுத்த நேரிடும். இந்த நிலை தொடர்ந்தால் உங்களது நம்பகத்தன்மை பாதிக்கப்படும்.அதன்பிறகு உங்களால் வேறெங்கும் நிதியுதவியைப் பெற முடியாது.

 

கிரெடிட் கார்டு பயன்படுத்தி அதிக அளவில் பணத்தைக் கடனாகப் பெற்று நீங்கள் ஒரு தொழிலை ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதுபோன்ற சமயங்களில் உங்களால் விரும்பி,ரசித்து உங்கள் தொழிலைக் கவனிக்க முடியாது. இவ்வளவு ரூபாய் கடன் வாங்கி இந்தத் தொழிலை ஆரம்பித்திருக்கிறோம்.

 

நம்மால் இதற்கான வட்டியை சரியாகக் கட்ட முடியுமா?அசலை திருப்பிக் கொடுத்துவிட முடியுமா?என்கிற பதட்டத்துடனும்,பயத்துடனுமே நீங்கள் உங்கள் தொழிலை செய்கின்ற சூழ்நிலை உண்டாகிவிடும். இது உங்களுக்கு அதிக மன அழுத்தத்தை தந்துவிட இதன் காரணமாக தொழிலில் நீங்கள் நிறைய சொதப்ப ஆரம்பித்து விடுவீர்கள்.

 

எனவே, கூடுமானவரை உங்கள் தொழிலுக்கும் கிரெடிட் கார்டுக்கும் இடையே ஆரோக்கியமான இடைவெளி இருக்கட்டும்.

 

-பாலாஜி.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *