தோனியிடம் பாடம் படிப்போம்!

“தட்ஸ் எ சிக்ஸ், தட்ஸ் எ ஹூஜ் சிக்ஸ், இட் ஹாஸ் டர்ன் அவுட் டு பி தி கேப்டன்’ஸ் கேம், வாட் எ பினிஷெர் ஹி இஸ்”…

 

இந்த வாக்கியங்களே உணர்த்திவிடும் நாம் யாரைப்பற்றி விவரிக்க விழைகிறோம் என்று.

 

அவர்….

மஹேந்திரசிங்தோனி!

cricket-150559_1280

இந்தப்பெயரின் தொனியையும், இம்மனிதரின் தோரணையையும் ரசிக்காத கிரிக்கெட்         ரசிகர்கள் இருக்கவேமுடியாது. கிரிக்கெட் பிடிக்காதவர்களுக்கும் அது புரியாதவர்களுக்கும்கூட இவரைப் பிடிக்கிறது.

 

கிரிக்கெட் இவரின் உயிர் மூச்சு, கிரிக்கெட் களம் இவர் தாய் நாடு, இந்திய அணி கிரிக்கெட் பந்து இவருடைய தோழன்.(தன் கரங்களைத்  தாண்டி வெளியில் விடவே மாட்டார்).தலையில் நீளமான முடியுடன் எப்பொழுதும் முகத்தில் புன்னகை மலரத் தன்னை நோக்கி வரும் பந்துகளில்பெரும்பான்மையை ஆடுகளத்திற்கு வெளியில் வீசியெறியும் “சிக்சர் இயந்திரமா இவர்?” என்று அனைவரையும்ஆச்சரியப்படுத்தியவர்தான் இந்த தோனி.

 

’எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு சக்தி கிடைக்கிறது?’ என்ற கேள்விக்கு”நான் தினமும் 2 லிட்டர் பால் குடிப்பேன்” என்று அசால்டாக சொன்ன இந்த மனிதரின் உண்மையான பலம்பால்தானோ என்று யோசித்தால்,  நிஜத்தில் வேறாக இருக்கிறது.

 

 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில்  பான் சிங் என்பவருக்கும் தேவகி தேவி என்பவருக்கும் மகனாகப்  பிறந்தவர்தான் தோனி. இவருக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் உள்ளனர். அவருடைய தந்தைக்கு மிக்கோன் என்னும் நிறுவனத்தில் ஒரு சாதாரண வேலைதான் கிடைத்தது. இவர்களது குடும்பம்எளிமையான குடும்பமே தவிர வறுமையான குடும்பமாக எப்போதும் இருந்ததில்லை.

 

அவருடைய பள்ளிக்காலம்,  DAV ஜவஹர் வித்யா மந்திர் என்னும் பள்ளியில் கழிந்தது. பிள்ளை பருவத்தில் தோனி,  கால் பந்திலும், இறகுப் பந்துவிளையாட்டிலும் கைதேர்ந்தவராக இருந்தார். ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபொழுது மாவட்ட அளவில் விளையாடினார்.  பின்பு சில குழுக்களுக்காக இந்த விளையாட்டுகளுக்காக விளையாடத் தேர்வானார்.

 

தோனி அவருடைய கால்பந்து அணியின் கோல் கீப்பராக பயிற்சி பெற்றிருந்தார். அவருடைய பயிற்சியாளரால்உள்ளூர் கிரிக்கெட் கிளப் ஒன்றில் விக்கெட் கீப்பராக விளையாடச் சென்றார். கிரிக்கெட் விளையாட்டில் பயிற்சிஇல்லாத போதும் கோல் கீப்பிங் பயிற்சியால் விக்கெட் கீப்பிங்கை அவரால் சிறப்பாக செய்ய முடிந்தது.

 

தன்னுடையமுதல் ஆட்டத்திலேயே பயிற்சி இல்லாமல் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்த தோனி அனைவர் மனத்திலும்இடம்பிடித்தார். அதுவே பின்னாட்களில் தொடர்ந்து கமாண்டோ கிளப்புக்கு ஆஸ்தான விக்கெட் கீப்பராகவிளையாடும் வாய்ப்பை அவருக்குப் பெற்றுத்தந்தது.

dhoni 2

தொடர்ந்து தன்னுடைய சிறப்பான விளையாட்டால் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார். இதுவே1997-98 ஆம் ஆண்டில் வினூ மான்காட் ட்ரோபிக்கு பதினாறு வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் விளையாடவாய்ப்பாய் அமைந்தது. அதிலும் தோனி சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினார்.

 

தோனி தன்னுடைய பத்தாம் வகுப்புக்குப் பிறகு கிரிக்கெட்டில் தன கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். இப்படித்தான் கால் பந்து பயின்ற தோனி, கிரிக்கெட் ஜாம்பவானாக விஸ்வரூபம் எடுக்க தன முதல் படியை எடுத்து வைத்தார்.என்னதான் திறமையும் ஆர்வமும் கிரிக்கெட்டில் இருந்தாலும் அவருடைய குடும்ப சூழல் அவர் ஒரு வேலையைக்கையிலெடுத்தே ஆகவேண்டும் என்ற சூழலுக்கு தள்ளியது.

 

2001 முதல் 2003 வரை மிதினாபூர் என்னும் ரயில்நிலையத்தில் ரயில் அனுமதிச் சீட்டு ஆய்வாளராகப் பணியாற்றினார். அவருடன் பணியாற்றியவர்கள் இன்றும்அவருடைய நேர்மையையும் அவர் தனது வேலையில் காட்டிய ஆர்வத்தையும் நினைவுகூருகிறார்கள்.

 

என்னதான் குடும்ப சூழல் அவரை கிரிக்கெட்டை விட்டுத் தள்ளிப்போக செய்திருந்தாலும் அவருடைய மனம்கிரிக்கெட்டை விடுவதாய் இல்லை. வேலை எப்போதும் முடியும், எப்பொழுது சென்று மட்டையைக் கையில்பிடிப்போம் என்கிற ஆர்வமே அவரிடம் நிரம்பி இருந்தது.

 

உள்ளூர் கிரிக்கெட் கிளப்புகளில் தொடர்ந்து தன்னுடையஅசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவர் வேடிக்கை பார்த்து நிற்கவில்லை.வாய்ப்பை அவரே ஏற்படுத்தினார்.

 

cricket-150561_1280

மட்டையைக் கையில் எடுத்தபொழுதெல்லாம் பந்தை மைதானத்துக்கு வெளியில்விரட்டியடித்தார். கையுறை மாட்டி விக்கெட் கீப்பராக நின்றால், தானே அந்தப் பந்துக்கு மதில் சுவராய் நின்றார். இப்படி அமைதியாக தன்னுடைய வேலையையும் ஆக்ரோஷமாக கிரிக்கெட்டையும் விடாதுபற்றிக்கொண்டிருந்த தோனிக்கு 2003 இல் இந்தியா A அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

 

இந்தியா A அணியில் விளையாடிய தோனி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அனல் பறக்க செய்தார்.தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.

 

இவருடைய விளையாட்டு திறன்அப்பொழுது இந்திய அணியின் கேப்டனாக இருந்த சௌரவ் கங்குலியின் கண்களில் பட்டது. தோனியை இந்தியஅணியில் விளையாடச் செய்யலாம் என்று முடிவெடுத்தார் ஆனால் இந்திய A அணியின் அப்போதைய பயிற்சியாளர்சந்தீப் பாட்டில் தோனிக்கு பதிலாய் தினேஷ் கார்த்திக்கை பரிந்துரை செய்தார்.

 

2004 இல் இந்திய அணியில் விக்கெட்கீப்பராக ராகுல் டிராவிட் இருந்த சமயம் அடுத்த விக்கெட் கீப்பராக வருபவர் பேட்டிங்கிலும் சிறந்து விளங்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர்   அப்பொழுதே தோனி இதற்கு சரியான தீர்வாக இருப்பார் என்ற நிலை ஏற்பட்டது. அப்பொழுதே தோனி இந்திய அணியில் விளையாட வாய்ப்பை பெற்றார்.

 

இசைஞானி இளையராஜாவின் முதல் பாடல் பதிவின்போது பணியை ஆரம்பிக்கும்போதே மின் தடை ஏற்பட்டது போல்தோனி தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே பூஜ்யம் எடுத்து வெளியேறினார். இருந்தபோதும் அடுத்ததாக, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய முழுத் திறமையையும் காட்டிஎதிராணியினரை ஓடவிட்டார் தோனி.

 

அதன் பின் திரும்பிப் பார்க்க நேரமே இல்லை இந்த இளைஞனுக்கு.தொடர்ந்து வந்த அத்துணை ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடினார் தோனி. விக்கெட் கீப்பராக இருந்து அவர்செய்த சாதனைகள் அவருடைய மானசீக முன்னோடியாக நினைத்திருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் கில்கிரிஸ்டின் சாதனைகளுக்குச் சமம் ஆனது.

 

இந்த ஆட்டங்கள் தொடர சரியான பயிற்சி இல்லாமல் இந்திய அணி 2007 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையைவிளையாடச் சென்றது. 2004 ஆம் ஆண்டில் இறுதி ஆட்டம் வரை சென்ற இந்திய அணி அடுத்த உலகக் கோப்பையில்முதல் சுற்றிலேயே வெளியேறியது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

நமது மக்கள் பாசத்தையும் வெறுப்பையும் உச்ச நிலையில்தான் காட்டுவார்கள்… ஆம் இதற்கு பலியானதுதோனியின் இல்லம். அவருடைய வீடு தாக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினருக்கு காவல்துறை பாதுகாப்புஅளித்தது. இந்தியாவின் இந்த மோசமான நிலைமைக்கு பல்வேறு காரண காரியங்களை ஆராய்ந்து கடைசியில்தலைமையில் மாற்றம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர். தோனி துணை நிலை கேப்டனிலிருந்து முதல் நிலை கேப்டனாக  உயர்த்தப்பட்டார்.

 

2007 ஆம் ஆண்டில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்ட 20-20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தோனியின் தலைமையில் காலம் இறங்கியது. வந்த எதிரணியினர் அனைவரையும்பாரபட்சம் இல்லாமல் விளாசித் தள்ளியது இந்திய அணி. மற்ற அணிகள் இந்த விளையாட்டைப் புரிந்துகொள்ளவே நேரம் எடுத்துக்கொண்டிருந்த நேரம் இந்திய அணி, யோசித்தவர்களை ஓரம் கட்டிவிட்டு மளமளவென  முன்னேறியது. இந்த புது கேப்டன் என்ன மாயம்தான் இந்திய அணிக்குச் செய்தாரோ என்று அனைவரும்மூக்கின்மீது விரல் வைத்தனர்.

 

ஆட்டக் களத்தில் இறங்கியதும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் சாரதியாக இருந்ததுபோல் மொத்த இந்திய அணியின்சாரதியை தோனி செயல்பட்டார். அவரின் உற்சாக சிரிப்பு, ஒரு பந்து தன் கட்டுப்பாட்டை விட்டுச் சென்றால் அடுத்த பந்தை எறிவதற்குள் அவர் வியூகத்தை மாற்றிய திறன்,  பந்துகள் பௌண்டரிகளை நோக்கிச் சென்றபோதுவெறுப்படைந்து நின்ற பந்து வீச்சாளர்களையும் ’விட்டுத் தள்ளு அடுத்த பந்தில் உன் பலத்தை காட்டு’ என்பதுபோல்அவர் கைதட்டும் நுணுக்கம் என்று தோனியை ஒரு கேப்டனாக இருந்து ரசித்துக்கொண்டே போகலாம்.

 

இவைஅனைத்தும் சேர்ந்ததால் செப்டம்பர் 24 , 2007 ல்உயர்த்திப் பிடித்தோம் உலகக் கோப்பையை. இந்தியர் அனைவருக்கும்ஆஸ்கார் பெற்றதைப்போன்ற ஒரு பிரமிப்பு ஏற்பட்டதற்கு முழு முதல் காரணம் தோனி மட்டுமே.

 

தன் மீது கல் எறிந்தவர்கள் மீது பூக்கள் எறிந்தார் தோனி. அதன் பின்னர் நடந்த அனைத்தும் வரலாறே. ஒரு நாள் ஆட்டமானாலும் சரி இன்னிங்ஸ்சாக இருந்தாலும் சரி 20-20 ஆக இருந்தாலும் சரி அனைத்துவிளையாட்டு நிலையிலும் தோனிக்கு நிகர் தோனிதான் என்ற நிலைமையை ஏற்படுத்தியது இந்த ராஞ்சி சிங்கம்.

 

2011 அடுத்த மைல் கல்லாக அமைந்தது இந்திய அணிக்கு. தான் மனமார குருவாக நேசித்துப் போற்றும்இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சினின் ஓய்வுக்கு முன்பு ஒருமுறையாவது அந்த உலகக்கோப்பையை வென்றேதீர வேண்டும் என்கிற முனைப்புடன் தோனியின் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

 

எந்த கிரிக்கெட் ரசிகனால் மறக்க முடியும் அந்த இறுதி ஆட்டத்தை? அதுவரை ஆறாம்நிலையில் களமிறங்கிய தோனி, சச்சின் அவுட்டாகி வெளியில் வந்ததும் தானே முன்வந்து நான்காம் நிலையில்நின்று ஆடினார். அவருடைய ஆட்டமும் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நின்றேவிட்டது. இக்கட்டான  நிலையில்இருந்த இந்திய அணியை கேப்டன் என்கிற பொறுப்புடன் ஆடி இறுதிப் பந்து வரை நிலைத்து நின்றார்.

 

இறுதி பந்தில் அவர்அடித்த ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸர்… அப்பப்பா அனைத்து இந்தியர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.

 

“தட்ஸ் இட்இந்தியா ஹாஸ் லிப்ட் தி வேர்ல்ட் கப் ஆப்ட்டர் 28 இயர்ஸ்… தட்ஸ் தி கேப்டன்.. தட்ஸ் தி கேப்டன் தோனி” இந்தவாக்கியங்களை யாராலும் மறந்திருக்க முடியாது.

 

இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகும் பல்வேறு சூழல்களில் தோனி விமர்சனத்துக்கு உள்ளாகாமல் இல்லை ஆனால்அதை எவ்வாறு சரி செய்வது எப்படி பதிலடி கொடுப்பது என்கிற பொறுப்புணர்வு தோனிக்கு அதிகமாகவே உள்ளதைநாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர் வாயால் பதில் பேசுவதைவிட தன் விளையாட்டால் பதில்சொல்வதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்.

 

அண்மையில்கூட ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் “எப்பொழுது நீங்கள் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப்போகிறீர்கள்?” என்று கேட்டார்.

 

அதற்கு தோனி, சிரித்துக்கொண்டே ”கொஞ்சம்அருகில் வாருங்கள்” என்று அழைத்து. “ என்னைப் பார்த்தல் வயதவன் போல் தெரிகிறதா? நான் நல்ல உடல்ஆரோக்கியத்துடன் இருக்கிறேனா? என்னால் அடுத்த உலக கோப்பாய் வரை விளையாடமுடியும் என்று நீங்கள்நினைக்கிறீர்களா?” என்று கேள்விகளை டோனியை அடுக்க..  அந்த நிருபர் எல்லா கேள்விகளுக்கும் ’ஆம்’ என்றுபதில் சொல்ல, “ அவ்வளவுதான், நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள்” என்று அவரையே மடக்கினார் தோனி.

 

ஆம் இவர்சாதாரண கேப்டன் அல்ல, மற்றவர்களை சாதிக்க தூண்டும் கேப்டன். விளையாட்டை விளையாட்டாய் பார்க்கவும்இவருக்குத் தெரியும் அதையே வேறுபடுத்தி தன்னை எதிர்ப்பவர்களை எதிர்க்கவும் இவருக்குத் தெரியும்.

 

ஒவ்வொரு தொழில்முனைவோரும் தோனியிடம் இந்த குணங்களை சுவீகரித்துக்கொள்ள வேண்டும். விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் நம்முடைய குறிக்கோளில் மட்டுமே உறுதியாய் இருப்போம்.அதைத் தடுக்கவரும் எதையும் பொருட்படுத்த வேண்டிய எந்த அவசியமும் நமக்கு இல்லை.  வெற்றி பெற்றபின் இதே உலகம் நம்மைக் கொண்டாடப்போகிறது என்பதையும் மறக்க வேண்டியதில்லை.

 

-மரிய ரோஸ்லின்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *