நீங்கள் பங்குச்சந்தைக்குப்  புதுவரவா?

வாரென் பப்பெட் தரும் டாப்-20 தொழில் ஆலோசனைகள்

இதோ உங்களுக்கான சூப்பர் முதலீட்டு ஆலோசனைகள்!

முதலீட்டாளர்களின் முன்னோடியாகத் திகழ்பவர் வாரன் பப்பெட். குறிப்பாக பங்குச்சந்தை வணிகத்தில் எதை எப்போது செய்து லாபத்தை அள்ளமுடியும் என்பதைச் சரியாகக் கணிப்பதில் வித்தகர் அவர்.   பங்குச் சந்தை முதலீட்டில் புதிதாக நுழைபவர்களுக்கு இவர் தன்னுடைய  அனுபவ ஆலோசனைகளையும்  அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அவற்றுள் முக்கியமான சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

  1. பலவற்றில் பிரித்துப் பிரித்து முதலீடு செய்வது வேலைக்கு ஆகாது.

இந்த மேற்சொன்ன வாக்கியத்தை மேலோட்டமாகப் பார்த்தால், ஆமாம் இதுதானே புத்திசாலித்தனமான ஒரு முடிவு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சிறந்த முதலீட்டாளர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்கிறார் வாரன் பப்பெட். குறிப்பாக ஒரு சிறந்த முதலீட்டாளர்  நீண்டகால முதலீட்டில் குறிப்பிட்ட பங்குகளை வாங்குவதோடு தன்னுடைய அந்த முதலீட்டின் மீது உறுதியான நம்பிக்கையையும் கொண்டிருப்பார் என்று அடித்துச் சொல்கிறார் வாரன்.

Image by Lorenzo Cafaro from Pixabay

ஒரே ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒருவேளை அந்தப் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் என்ன செய்வது என்கிற பயத்தில் சிலர் பிரித்துப் பிரித்து பல்வேறு நிறுவனங்களில் பங்குகளை வாங்குவர். இப்படி பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கும்போது ஒவ்வொரு நிறுவனத்தின் பங்கு மதிப்பைப்  பின்தொடர்ந்து கணிப்பது என்பது சிரமமாகிப் போய்விடும். இது முதலீட்டில் ஒரு நிலையற்ற தன்மையைக் கொடுத்துவிடும் என்பது வாரன் பப்பெட்டின் திடமான கருத்து.

  1. உங்கள் மீது நீங்கள் முதலீடு செய்யுங்கள்.

ஒரு சிறந்த முதலீட்டாளராக நீங்கள் வரவேண்டுமா? அப்படியென்றால் உங்களது திறமைகளை மெருகேற்றிக்கொள்ளுங்கள். உங்களது திறமையை வளர்த்துக்கொள்ள முதலீடு செய்யுங்கள். இதன்மூலம் நீங்கள் சிறந்த முதலீட்டாளராக முடியும் என்று வாரன் பப்பெட் உறுதியாகச் சொல்கிறார். வாரன் பப்பெட்டின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் எழுபத்தியைந்து சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் நுழையப் போகும் தொழில் சார்ந்த திறன்களை வலுப்படுத்திக்கொள்ளும் விஷயங்களில்தான் முதலில் முதலீடு செய்கிறார்கள் என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

  1. நான் ஒரு சிறந்த முதலீட்டாளர் என்று உங்களை நீங்களே நம்புங்கள்!

சரியான முடிவெடுக்கும் திறனே பங்குச்சந்தை வணிகத்தில் வெற்றியை ஈட்டித்தரும். நாம் கணிப்பது சரியாக இருக்காது, அதே சமயத்தில்  மற்றவர் யார் சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற மனநிலையிலிருந்து முதலில் வெளியே வாருங்கள் என்கிறார் இந்த முதலீட்டுச் சக்கரவர்த்தி. பங்குச்சந்தையில் கால் வைப்பவர்கள் முதலில் பயத்தைத் தூக்கி எறியவேண்டும் என்றும் இவர் வலியுறுத்துகிறார்.  பங்குச்சந்தை குறித்த அறிவை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டு அதன் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள். பங்குச்சந்தை வணிக நிலவரம்  குறித்து உங்களைச் சுற்றியிருப்பவர்கள் சொல்கின்ற ஒவ்வொரு விஷயத்தையும் மனதில் போட்டுக்கொண்டு குழம்பாதீர்கள். சரியான அணுகுமுறையுடன் கூடிய தில்லுக்குத்தான் துட்டு என்பதே வாரன் பப்பெட்டின் வாக்கு.

  1. ஓவர் டோஸ் வேலைக்கு ஆகாது!

குறிப்பிட்ட ஒரு முதலீடு குறித்து உடனே ஒரு முடிவுக்கு வருவது அல்லது அந்த முதலீடு குறித்து அளவுக்கு அதிகமாகச் சிந்திப்பது ஆகிய இரண்டுமே தவறானவை என்கிறார் வாரன் பப்பெட். அப்படியென்றால் எப்படித்தான் முதலீடு செய்வதாம்? என்கிறீர்களா? அதற்கும் வாரன் பப்பெட்டிடம் பதில் இருக்கிறது.

“நீங்கள் எந்த வணிகத்தில் அல்லது நிறுவனத்தில் முதலீடு செய்யவிரும்புகிறீர்களோ அவை குறித்து முழுவதுமாகப் புரிந்துகொள்ளுங்கள். நானெல்லாம் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு விரும்பினால்  குறிப்பிட்ட அந்த நிறுவனம் எவ்வாறு பணம் ஈட்டுகிறது என்பதையும், எந்தவிதமான அளவுகோல்களை அடிப்படையாகக்கொண்டு அந்த நிறுவனம் நடக்கிறது என்பதையும் உற்றுநோக்குவேன். உற்றுநோக்க ஆரம்பித்த ஒரு பத்து நிமிடங்களுக்குள் என்னுடைய மேற்சொன்ன கேள்விகளுக்கான பதில் கிடைக்காவிட்டால் அந்த நிறுவனத்தையே பிடித்துக்கொண்டிருக்கமாட்டேன். அதை விட்டுவிட்டு வேறொரு நிறுவனம் குறித்த தகவல்களைப் பெறச் சென்றுவிடுவேன். என்னுடைய அனுபவத்தின் மூலம் உங்களுக்குச் சொல்லவருவது இதைத்தான். நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனம் குறித்த தகவல்கள் உங்களைக் குழம்ப வைக்கிறது என்றால் அதைப் புறக்கணித்துவிட்டு அடுத்த நிறுவனத்திற்குச் சென்றுவிடுங்கள்” என்கிறார் வாரன்.

  1. பங்குகளை வாங்கினால் நீங்களும் அந்த நிறுவனத்தின் ஒரு அங்கம்தான்.

“உதாரணத்திற்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் குறிப்பிட்ட அளவு பங்குகளை நீங்கள் வாங்க இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கண்ணை மூடிக்கொண்டா அதனை வாங்குவீர்கள்? அது உங்களுக்கும் சொந்தமாகப் போகிறது என்பதால் அந்த அங்காடிக்கு எந்த மாதிரியிலான பொருளாதார நிலையில் வசிக்கும் மக்கள் அதிகம் வருகிறார்கள்? யாரெல்லாம் அந்த அங்காடியின் விநியோகஸ்தர்கள், அந்த அங்காடியில் பொருட்களின் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? இந்த அங்காடிக்கு வேறு எந்தெந்தக் கடைகளெல்லாம் போட்டியாக உள்ளன என்று பலவற்றையும் யோசித்துத்தானே முடிவெடுப்பீர்கள்.

அதேபோல ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்போதும், நாளை நாமும் இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராகப் போகிறோம். நாமும் நாளை இந்த நிறுவனத்தின் ஒரு அங்கம்தான் என்கிற மனநிலையுடன் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தை ஆய்வு செய்யுங்கள். அப்படி ஆய்வு செய்து பங்குகளை வாங்கியபிறகும் நம்முடைய நிறுவனம் என்கிற அதே மனநிலையில் அதனைப் பின்தொடருங்கள்” என்பது வாரன் பப்பெட்டின் ஆலோசனையாக உள்ளது.

  1. தவறுகளிலிருந்து பாடம் கற்கவேண்டியது அவசியம்.

இதெல்லாம் அடிக்கடி கேட்கின்ற ஒரு அறிவுரைதான். இதிலென்ன பிரமாதம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பங்குச்சந்தையில்  வணிகம் செய்பவர்களுக்கு இருக்கவேண்டிய மிகமிக முக்கியான பண்பு இதுதான் என்று அடித்துச் சொல்கிறார் வாரன் பப்பெட். “ஒவ்வொரு முறையும்  பங்குச்சந்தை சார்ந்த வணிகத்தில் நீங்கள் தவறிழைக்கும்போதும் அதை அப்போதைக்கான நிகழ்வாக நினைத்துக் கடந்து போகாமல் ஒரு கோப்பு ஒன்றில் அதனைப் பதிவு செய்யுங்கள். ஒவ்வொருமுறையும் நீங்கள் செய்கின்ற சின்னச் சின்னத் தவறுகளைக்கூட கோப்பில்  பதிவு செய்ய மறக்காதீர்கள்.  ஒவ்வொரு புது முதலீட்டின் போதும் இந்தக் கோப்பை எடுத்துப் பார்த்து நாம் செய்த தவறுகளைப் புரிந்துகொண்டால் அந்தப் புது முதலீட்டில் அதிகமான தவறுகள் நடக்காது. அதுமட்டுமல்லாமல் தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை உங்களோடு வைத்துக்கொள்ளாமல் உங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் போன்றவர்களிடமும் பகிரவேண்டியது அவசியம்” என்கிற மிகமுக்கிய ஆலோசனையை முன் வைக்கிறார் வாரன் பப்பெட்.

  1. உடனே வாங்கி,உடனே விற்காதீர்கள்!

“ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை வாங்குகிறீர்களா? அதனை அப்படியே விட்டுவிடுங்கள். உடனே வாங்கி, உடனே விற்கும் மனநிலை இருந்தால் அதில் பெரிதாக லாபம் பார்க்க முடியாது. பங்குகளை நீண்டகாலம் வைத்திருந்து அதன் மதிப்பு கணிசமாக உயர்ந்தவுடன் விற்பதே புத்திசாலித்தனம். அப்படித்தான் நான் செய்கிறேன்” என்கிறார் இந்தத் தொழில் வித்தகர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *