பிக் பாஸ் பாடம் 2 : தெரிந்ததைச் செய்வோம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் நமது வாசகர்கள் பலருக்கும் வியப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் வியப்போ, திகைப்போ தேவையற்றது என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன ‘பிக் பாஸ்’ பாடத்தில். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

 

இரண்டு அணுகுமுறைகள்:

 

சந்தைப்படுத்துதலில் இரண்டு விதமான அணுகுமுறைகள் இருக்கின்றன. ஏற்கனவே தெரிந்த விஷயத்தை, துறையை எடுத்துக்கொண்டு அதில் தங்களது புதுமைகளைப் புகுத்தி தங்களது பொருளைத் தயாரித்து விற்பது ஒரு அணுகுமுறை. இரண்டாவது அணுகுமுறை என்ன தெரியுமா? ஒரு விஷயத்தை முதன்முறையாக நாமே சந்தைக்கு அறிமுகப்படுத்தி, அந்தத்துறையில் நாங்கள் கொண்டு வந்திருக்கிற இந்தப்பொருள் ‘இப்படியாக்கும்…அப்படியாக்கும்’ என்று சொல்லி சந்தைக்குள் கம்பீரமாக நுழைவது.

இரண்டையும் எடுத்துக்காட்டுக்களுடன் பார்க்கலாம்.

 

இன்றைக்கு ஆப்பிள் செல்பேசி சக்கைப்போடு போடுகிறது. அதற்கு இந்தியாவில் கடும் போட்டியாக இருக்கிறது சாம்சங். இவர்கள் இருவரையும் விலையில் சண்டைக்கு இழுக்கிறது ஜியோமியின் ‘ரெட் மி’ செல்பேசிகள். உண்மையில் இந்த நிறுவனங்கள் எவராது செல்பேசியை முதன்முதலில் கண்டறிந்தனரா? இல்லையே! அல்லது இவர்களுள் யாராவது ‘உலகுக்கு செல்பேசியை நாங்கள்தான் அறிமுகம் செய்தோம்’ என்று சொல்லிவிடமுடியுமா? முடியாது. சொன்னால் மோட்டரோலா நிறுவனம் சண்டைக்கு வந்துவிடும்.

2007Computex_e21Forum-MartinCooper
முதல் செல்பேசியை அறிமுகப்படுத்திய மோட்டரோலாவின் அலுவலர் மார்ட்டின் கூப்பர்.

உலகிலேயே முதன்முதலில் 1973இல் செல்பேசியை வணிகரீதியில் அறிமுகப்படுத்திய நிறுவனம் அது. செங்கல் அளவுக்குத்தான் முதலில் செல்பேசிகள் அறிமுகமாகின. செல்பேசி என்றால் என்ன, அதன் பயன்பாடு என்ன, அது எப்படி இயங்குகிறது என்றெல்லாம் விளக்கவேண்டிய பணி இருந்தது மோட்டரோலா நிறுவனத்துக்கு.

 

”ஓஹோ, இதுதான் செல்ஃபோனா!” என்று உலகம் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு கேட்டது.
“அதுவேதான்” என்று ஓங்கி ஒலித்தபடி சந்தைக்குள் வந்து வசதியாக உட்கார்ந்துகொண்டன போட்டி நிறுவனங்கள். ஆக, செல்பேசிக்கு ஒரு சந்தையை உருவாக்கியது ஒரு நிறுவனம். அந்த இடத்தில் தங்களது திறமையைக்காட்டி தங்கள் பொருட்களுக்கு கடைவிரித்தவை பின்னால் வந்த நிறுவனங்கள். இது ஒரு அணுகுமுறை.

 

இரண்டாவது அணுகுமுறை ‘புதிய வாய்ப்புகளை உருவாக்குவது’ என்பதாகும். மேலே கண்ட எடுத்துக்காட்டில் மோட்டரோலா செய்ததே அதுவேதான். மேலும் ஓர் எடுத்துக்காட்டின்மூலம் இதனை விளக்கிவிடலாம்.. நான் இங்கு சொல்லப்போவது உங்களில் பலருக்கும் தெரிந்த கதைதான்.

மாத்தி யோசி!

ஷூ தயாரிக்கும் நிறுவனம் அது. அதன் விற்பனைப்பிரிவுக்கு ஒரு மேலாளரைப்பணியமர்த்த வேண்டும்.. சல்லடைபோட்டுத் தேடியதில் இரண்டு திறமைசாலிகளைக் கண்டுபிடித்தனர்.

அந்நிறுவனம் எதிர்பார்த்த அனைத்து தகுதிகளும் அவ்விருவருக்கும் இருந்தன. இவ்விருவரில் யாருக்கு வாய்ப்பு தருவது? குழம்பிவிட்டார் நிறுவனத்த்லைவர். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார். இருவருக்குமே ஒரு தேர்வு வைத்துவிடுவது என்று.

 

shoe

இருவரையும் அழைத்தார். அவர்களை வெகுதொலைவில் உள்ள ஒரு நாட்டுக்கு நிறுவனத்தின் செலவில் அனுப்பிவைத்தார். அங்கு தங்கள் நிறுவனத்தின் ஷூவுக்கு என்ன மாதிரியான விற்பனை வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்துவர வேண்டும் என்பதே அவர்களுக்கான தேர்வு.

 

சென்று சேர்ந்த ஒரே வாரத்தில் பின்னங்கால் பிடரியில் அடிக்க திரும்ப வந்தார் முதலாமவர். அவரிடம் நிறுவனத்தலைவர் என்ன விஷயம் என்று கேட்டார்.

 

“சார், நம்ம ஷூவை அந்த நாட்டில் விற்க வாய்ப்பே இல்லை”

 

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

 

“அங்குள்ள மக்களுக்கு ஷூ அணியும் பழக்கமே இல்லை”

 

“ ஓ அப்படியா…சரி..நீங்கள் சென்று வாருங்கள். உங்களை மனித வளத்துறை தொடர்பு கொள்ளும்” என்று சொல்லிவீட்டார் நிறுவனத்தலைவர்.

 

அடுத்தவரும் வந்தார். வாயெல்லாம் பல்!

 

“சார், நமது ஷூவுக்கு அங்கு மிகப்பெரிய சந்தை காத்துக்கொண்டிருக்கிறது”

 

“அப்படியா, எப்படிச் சொல்கிறீர்கள்?”

 

“அங்கு யாருக்கும் ஷூ அணியும் வழக்கமே இல்லை. ஷூ அணிவதை அவர்களுக்குப் பழக்கப்படுத்திவிட்டால் நாம்தான் அங்கு ராஜா. முதல் ஆளாக அங்கு செல்வதால் எளிதில் சந்தையை நம் கட்டுப்பாட்டுக்கொள் கொண்டுவந்துவிடலாம்”

 

இரண்டாமவருக்கு வேலை கிடைத்துவிட்டது.

இதில் நடந்தது என்ன? கொஞ்சம் மெனக்கெட்டால் புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்கலாம். அதில் முன்னோடியாக ஆவதுடன் முதலிடத்துக்கும் வந்துவிடலாம் என்பதுதான்.

 

எது சரி?

புதிய சந்தையை உருவாக்குவது, ஏற்கனவே போட்டுவைக்கப்பட்ட பாதையில் நமக்கே உரிய பாணியில் பயணித்து வெற்றிபெறுவது-இவ்விரண்டில் எந்த அணுகுமுறை சரியானது?
இதில் சரி, தவறு என்று ஏதுமில்லை. எல்லாமே நிறுவனங்களின் பார்வை, சூழல், சந்தை, அவர்தம் தயாரிப்பு ஆகியவற்றைப் பொறுத்தது.

 

2356_bbtamil_2270

விஜய் தொலைக்காட்சி, இரண்டாவது அணுகுமுறையைக் கையில் எடுத்தது. பிரிட்டனில் பிரபலமாக இருந்த ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியின் இந்திய வடிவம்தான் ‘பிக் பாஸ்’. இந்தியில் அது சக்கைப்போடு போட்டு பல ஆண்டுகள் ஆனபிறகே தமிழிலும் அதனைக்கொண்டுவர வேண்டும் என்று ஸ்டார் குழுமம் நினைத்தது.

 

இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்றால் பெரிய முதலீடு தேவை. ஏற்கனவே விஜய் தொலைக்காட்சி நாடறிந்த ஒன்று என்பதால் ஸ்பான்ஸர்கள் கிடைப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்காது. நிகழ்ச்சியைப்பற்றி கொஞ்சம் விளம்பரம் செய்துவிட்டால் விளம்பரதாரர்கள் குவிந்துவிடுவர். ஆக, அதிலும் பிரச்சனை இல்லை.

 

ஆனால் பிரபலங்கள்?

அதுதான் கொஞ்சம் மண்டையைக் குடைகிற வேலை. அதனை ஒழுங்காக செய்துவிட்டால் கைநிறைய லாபத்தோடு ஒர் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி தயார். விஜய் டிவியின் பிராண்டையும் நோகாமல் ரீ-பொஷிஷனிங் செய்துவிடலாம்.

 

இங்கும் விஜய் டிவிக்கு முன்னோடிகள் இருந்தனர். ஆம், பிக் பிரதர் மற்றும் இந்திய பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் கூட்டம் கூட்டமாக ஒன்றும் கலந்துகொள்ளவில்லை. மிகச்சிலர் தவிர. ஆனால் அந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் விரைவில் பிரபலங்களாக ஆகிப்போயினர்.

 

ஒரு வேலை முடிந்தது. அடுத்தபடியாக, நிகழ்ச்சியை நடத்துபவர் யார் என்பதை முடிவுசெய்ய வேண்டும். இதில் சறுக்கிவிட்டால் வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைத்த கதையாகிவிடும். ஏற்கனவே பிக்பாஸ் ஷோ நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள் எல்லோரும் பெரும் நடிகர்கள். அதேபாதையில் போனால் போகிறது…

 

ஆனால் அந்தப்பிரபலம் யார்?

 

(தொடரும்)

அருண்மொழி

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *