மார்வாடிகள் எப்படி ஜெயிக்கிறார்கள்?

எல்லோரும்தான் பிஸினஸ் செய்கிறார்கள்.ஆனால் மார்வாடிகள் செய்யும் பிஸினஸ் மட்டும் அவர்களை எப்போதுமே வெற்றிப்பாதையில் கொண்டு செல்கிறது. அடகு பிடிப்பது(PAWN BROKING),நகைக் கடைகள் நடத்துவது,டெக்ஸ்டைல்ஸ் மற்றும் இரும்பு சம்பந்தமான தொழில்கள் செய்வது என்று மார்வாடிகள் கைவைக்காத துறைகள் இல்லை. பதிக்காத முத்திரைகள் இல்லை.

 

எப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு சிறப்பாக பிஸினஸ் நடத்த முடிகிறது? அந்த ரகசியங்களைப் பார்க்கலாமா?

 

பிஸினஸ் என்பதை அவர்கள் மிகவும் பிராக்டிக்கலான ஒரு விஷயமாகப் பார்க்கிறார்கள். அதை ஏதோ பரபரப்புடன் செய்ய வேண்டிய ஒரு செயலாக அவர்கள் பார்ப்பதில்லை. தினசரி வாழ்க்கையின் ஒரு அங்கமாக அவர்களுக்கு அவர்களுடைய பிஸினஸ் இருக்கிறது.

 

அதுமட்டுமல்ல, குடும்பம், பிஸினஸ் இரண்டையும் தனித்தனியாகப் பார்க்கும் மனோபாவமும் மார்வாடிகளிடம் கிடையாது. தங்கள் வீட்டுப் பெரியவர்கள் வீட்டில் பேசிக்கொள்ளும் பிஸினஸ் சம்பந்தமான விஷயங்களைக் கேட்டுக் கேட்டே அந்த வீட்டுக் குழந்தைகள் வளர்கிறார்கள். அதனால், தொழில்  என்பதை,ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல், ஒரு  புது விஷயமாக அவர்கள் பார்ப்பதில்லை.

 

அதனால்தான் அப்பாவிடமிருந்தோ,தாத்தாவிடமிருந்தோ பிஸினஸ் பொறுப்பை எடுத்துக்கொள்ளும் அடுத்த தலைமுறையினர், பிஸினஸில் ஏதோ பல வருட அனுபவம் பெற்றவர்கள்போல இயல்பாக செயல்பட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

Marwadi_Husband_and_Wife_in_Traditional_Attire_Rajasthan_India
இவர்கள் ராஜஸ்தானின் மார்வார் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மார்வாரி என்று அழைக்கப்படுகின்றனர்.

மரியாதை, நம்பிக்கை, சொன்ன வாக்கைக் காப்பாற்றுவது இந்த மூன்றும் மார்வாடிகள் மிகத் தீவிரமாகப் பின்பற்றும் பண்புகள். வருகின்ற வாடிக்கையாளர்களை நல்ல விதமாக நடத்தி, திரும்பத் திரும்ப தங்கள் கடைக்கே அவர்கள் வரும்படியான மேஜிக்கை நிகழ்த்தி விடுகிறார்கள். இத்தனை மணிக்கு கொடுத்துவிடுகிறோம் என்று சொன்னால்,அதை சரியாக அத்தனை மணிக்கே டெலிவரி செய்வதிலும் மார்வாடிகள் கவனத்துடன் இருப்பார்கள்.

அதுமட்டுமல்ல, பிஸினஸ் பேச்சுவார்த்தைகளில் (NEGOTIATIONS) மார்வாடிகள் கைதேர்ந்தவர்கள். தங்களுடைய இந்தத் திறமையின் மூலம் பிஸினஸ் டீல்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வார்கள். அதேபோல கணக்குப்போட்டு ரிஸ்க் எடுக்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.

 

மார்வாடிகள் பிஸினஸில் கோலோச்சுவதன் இன்னபிற ரகசியங்களைப் பகிர்கிறார் ஸ்ரீரங்கத்தில் இயங்கிவரும் ஷோபா ஜுவல்லரியின் உரிமையாளர்களில் ஒருவரான சேத்தன் குமார்.

 

”மார்வாடிகளாகிய நாங்கள்  எத்தனையோ தொழில்கள் செய்தாலும்,அதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை அடகு பிடிப்பது மற்றும் நகைக் கடைத் தொழில்கள்தான். நாடு முழுக்க எங்கள் மக்கள் இந்தத் தொழிலை செய்துவருகிறார்கள்.

 

எங்களின் பூர்வீகம் ராஜஸ்தான். பாலைவன பூமி. இங்கே வெயில் காலத்தில் வெயில் ஐம்பது டிகிரிவரை செல்லும். குளிர்காலத்தில் கடுங்குளிர் வாட்டும். குடிநீர்ப் பற்றாக்குறையும் அந்தப் பகுதிகளில் கடுமையாக இருக்கும். இப்படிப்பட்ட மண்ணின் மைந்தர்களாக நாங்கள் இருப்பதாலோ என்னவோ, இந்தியாவின் எந்த ஒரு மூலைக்கும் இடம் பெயர்ந்து அங்கு  தொழில் செய்து வாழ்வதுஎன்பது எங்களுக்கு மிகவும் இலகுவாக இருக்கிறது.எந்த ஒரு காலநிலையையும் சமாளித்து வாழ்கின்ற சாமர்த்தியம் எங்கள் மரபணுக்களிலேயே இருப்பதால், வாழுமிடம் எங்களுக்குப் பெரிய விஷயமல்ல.

 

5d6b148f-6695-43ec-a24e-7b19d4e39fef
சேத்தன் குமார்

அதேபோல,எங்கு தொழில் செய்யச் செல்கிறோமோ அந்த இடத்து மொழியை சீக்கிரம் கற்றுக்கொண்டு விடுவோம்.அந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் அந்தந்த கலாச்சாரங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப எங்கள் பிஸினஸை செய்ய ஆரம்பிப்போம்.

 

பெரும்பாலும் நாங்கள் கூட்டுக்குடும்பமாக இருப்போம். எனவே,வ்ஒருவரது  பிஸினஸுக்கு மற்றவர் துணை நிற்பது எங்களுக்குள் இயல்பான விஷயம்..

 

அதேபோல அண்ணன்,தம்பி ஒற்றுமை எங்களது மிகப் பெரிய பலம். ஒரு பிஸினஸை எந்த வித ஈகோவும் இல்லாமல்,அண்ணன் தம்பிகள் சேர்ந்து நடத்துவதை எங்களிடம் நிறையப் பார்க்க முடியும்.

 

பெரியவர்களின் வார்த்தைகளை கேட்கும் பழக்கம் எங்களிடம் அதிகம். பிஸினஸில் பழம் தின்று கொட்டை போட்ட அப்பா மற்றும் தாத்தாவின் வார்த்தைகளை நாங்கள் பெரிதும் மதிப்போம். அதேசமயத்தில் பிஸினஸில் புதுப்புது மாற்றங்களைப் புகுத்துவதிலும் நாங்கள் தவறுவதில்லை.

 

’தரம்’ என்கிற விஷயத்க்தில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்வதில்லை. தரம் சரியாக இருக்கும்போதுதான் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

 

ஐம்பது ரூபாய் பிஸினஸ் என்றாலும் சரி, ஐந்துலட்ச ரூபாய் பிஸினஸாக இருந்தாலும்சரி,எங்களது அர்ப்பணிப்பு உணர்வு ஒரே மாதிரியாக இருக்கும்.

 

அதேபோல,நேரம் தவறாமை எங்களது மிக முக்கியக் கோட்பாடு. இத்தனை மணிக்கு கடை திறக்க வேண்டுமென்றால், அத்தனை மணிக்கு டானென்று திறந்து விடுவோம். இத்தனை மணிக்கு டெலிவரி செய்கிறோம் என்று வாக்குக் கொடுத்தால்,அந்த நேரத்துக்கு சரியாகக் கொடுத்துவிடுவோம்.

 

Rahulbajaj
ராகுல் பஜாஜ், தலைவர், பஜாஜ் குழுமம் (புகைப்படம்: Norbert Schiller)

வாடிக்கையாளர்களை கையாள்வதில் நாங்கள் மிக கவனமாக இருப்போம்.குறிப்பாக அவர்களை மரியாதையாக நடத்துவோம்.ஒரு நகையை வாங்குவதற்காக அவர்கள் எங்கள் கடைக்கு வந்துவிட்டு,எதுவும் வாங்காமல் போனால், நாங்கள் ஒருபோதும் கோபப்படமாட்டோம். என்ன காரணங்களால் நகை வாங்க வந்தவர்களை எங்களால் தக்க வைக்க முடியவில்லை என்பதை யோசித்து அதற்கேற்ப செயல்படுவோம்.

 

மார்வாடிகள், வாடிக்கையாளர்களிடம் கறாராக நடந்துகொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, எங்களிடம் நகைகளை அடகு வைப்பதற்காக நிறையப் பேர் வருவார்கள். அப்படி வருபவர்களில் பலர், அவர்களது பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக பணம் கேட்டு வருவார்கள். அதனால்,அவர்கள் அடகு வைக்கும் பொருளின் மதிப்புக்கு சற்று அதிகமாகவே பணம் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

 

அதுபோன்ற சூழ்நிலைகளில் நாங்கள் விடாப்பிடியாக நிற்க மாட்டோம். நாங்களும் கொஞ்சம் இறங்கி வந்து,அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வோம்.இதுபோன்ற எங்களின் விட்டுக்கொடுத்தல்களால் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க உதவும்” என்கிறார் சேத்தன் குமார்.

 

சு.கவிதா

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *