மாவட்டத் தொழில் மையம் (டிக்) பற்றித் தெரியுமா?

இன்றைக்கு தொழில் முனைவோர் தொழிலுக்கான மூலதனத்தை திரட்ட எங்கெங்கோ தேடி அலைகிறார்கள். எல்லோரிடமும் ஆலோசனை கேட்கிறார்கள். ஏஞ்சல் முதலீட்டாளர்கள், தனியார் நிதியங்கள், பணம் பெருத்த தனிநபர்கள் ஆகியோரிடம் முதலீடு கேட்டு, தங்கள் திட்ட அறிக்கையுடன் செல்கின்றனர். இவையெல்லாம் நவீனயுக முதலீடு திரட்டும் வழிகள். இவை சிறப்பானவை என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.  அதே நேரத்தில் நமது பாரம்பரிய முதலீடு திரட்டல் வழிமுறையான வங்கிக் கடன், அரசுத்துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் மூலம் நிதிதிரட்டுவது ஆகியவற்றை மறந்துவிடலாகாது.

money-2696219_640

அரசு அமைப்புகள், வங்கிகள் ஆகியவைகளின் மூலம் கடனுதவி பெற்று தொழில் தொடங்கும் போது பல்வேறு சலுகைகள் நமக்கு கிடைக்கும்.

அதேநேரத்தில் தனியாரிடமிருந்து பெறப்படும் முதலீடுகளில் சில சங்கடங்கள் நேர்வதையும் நாம் மறுக்க முடியாது.

 

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஏஞ்சல் முதலீட்டாளரிடமிருந்து முதலீடு பெறுவதாக வைத்துக் கொள்வோம், அவர்கள் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல், உங்கள் இயக்குநரவையிலும் இடம் கேட்பார்கள். நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்துவிட முடியாது. அதில் அவர்களின் பங்கும் அழுத்தமும் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட நடைமுறைப்படிதான் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தும் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள்.

”உங்களைப்போல பல நிறுவனங்களில் நாங்கள் முதலீடு செய்திருக்கிறோம். எங்களுக்கு இத்துறையில் நல்ல அனுபவம் இருக்கிறது. எனவே நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள்” என்று சொல்லும்போது தொழில்முனைவோர்  ‘சரி’ என்று தலையாட்டுவதைத்தவிர வேறு வழியில்லை.

entrepreneur-1340649_640

தொழில் முனைவோரை அழுத்தத்திற்கு உள்ளாக்கி, தொழில் முனைவோரை தொழிலை விட்டு ஓட வைக்கும் துணிகர முதலீட்டாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் இல்லாமல் இல்லை. அதேநேரத்தில் தொழில் பன்மடங்கு பல்கிப்பெருக உதவும் முதலீட்டாளர்களும் இருக்கிறார்கள். ”எனக்கு இந்த வம்பே வேண்டாம். முதலீடு வேண்டாம்; ஆனால் கடனுதவி வேண்டும். என் தொழிலை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்பவர்களுக்கு ஏற்றவை நமது வழக்கமான முதலீடு திரட்டும் நடைமுறைகள்.

 

நூம் இரண்டு வகைகளாக இவற்றை பிரித்துக் கொள்வோம். ஓன்று வங்கிகள் அளிக்கும் கடனுதவிகள், இரண்டு அரசு வெவ்வேறு துறைகள் மூலமாக செய்யும் உதவிகள். வங்கிக் கடனுதவிகள்பற்றி பின்னர் பார்ப்போம். இப்போது தமிழக அரசின் தொழில் வணிகத் துறை இயக்குனரகம், தொழில் முனைவோருக்கு வழங்கும் உதவிகளைப் பற்றிப் பார்க்கலாம். இந்த தொழில் வணிகத்துறை இயக்குனரகத்தின் கீழ்தான் மாவட்ட தொழில் மையங்கள் வருகின்றன.

 

இந்த மாவட்ட தொழில் மையங்களின் நோக்கம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதும் தொழில் கூட்டுறவு அமைப்புகளை ஊக்குவிப்பதுமாகும்.  ஓவ்வொரு மாவட்டத்திலும் இந்த மாவட்டத் தொழில் மையம் இயங்குகிறது. இதன் தலைமைப் பொறுப்பில் ஒரு பொது மேலாளர் இருப்பார். அவர் இணை மற்றும் துணை இயக்குநர் பதவிக்கான அதிகாரத்தைப் படைத்தவர். அவருக்கு உதவி செய்ய திட்ட மேலாளர், மேலாளர் (கடனுதவிகள்), மேலாளர் (பொருளாதாரப் புலனாய்வு), மேலாளர் (கிராம நிர்வாகம்) மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய ஊழியர்கள் இருப்பார்கள்.

 

இந்த மாவட்ட தொழில் மையங்களுடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்பு, தொழில் வணிகத் துறையின் முதன்மைச் செயலாளர்/ தொழில் துறை ஆணையர் ஆகியோருக்கு இருக்கிறது.  அரசு நடைமுறைப்படுத்துகிற வெவ்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து இந்த மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர்கள் அடிக்கடி கூட்டங்கள் கூட்டி விவாதித்து ஆவன செய்வார்கள்.

tools-15539_640

ஒற்றைச்சாளரமுறை கண்காணிப்பு கமிட்டி:

ஆக, ஒரு தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு பல்வேறு அரசு அமைப்புகளிடம் சென்று விண்ணப்பித்து அனுமதி வாங்குவது கடினமான விஷயமாக இருக்கிறது. இதனைச் சரி செய்வதற்காகத்தான் ஒற்றைச்சாளரமுறை கொண்டுவரப்பட்டது. இதன்படி ஒரேயொரு விண்ணப்பத்தை அளித்தால் போதும், அனைத்து துறைகளிலிருந்தும் அனுமதி கிடைத்துவிடும். இதன்மூலம் தேவையற்ற அலைச்சல் தொழில் முனைவோருக்கு தவிர்க்கப்படுகிறது.

 

இம்முறையை சரிவர நிர்வகிப்பதற்கான ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் இந்த கமிட்டி. இதன் தலைவராக மாவட்ட ஆட்சியர் இருப்பார். மாவட்ட தொழில் மையத்தினுடைய பொது மேலாளர் உறுப்பினர்- செயலராக இருப்பார். இவர்கள் தவிர மாவட்ட தீயணைப்பு அலுவலர், துணை இயக்குநர் (சுகாதாரம்), துணை இயக்குநர் (நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம்) ஆகியோர்  இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

 

மாவட்ட தொழில் மேம்பாட்டு ஆலோசனைக் குழு:

மாவட்டத் தொழில் மையத்தின் நிர்வாகத்தின்கீழ் இருக்கக்கூடிய முக்கியமான மற்றோர் அங்கம்,  மாவட்ட தொழில் மேம்பாட்டு ஆலோசனைக் குழு ஆகும். மாவட்ட ஆட்சியர் இதன் தலைவராக இருப்பார். மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர் உறுப்பினர்- செயல் இயக்குநராக இருப்பார். மாவட்ட ஊராட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில் துறையினர், வெவ்வேறு மாவட்ட அளவிலான தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகள்,   ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

 

மானிய கடனுதவித் திட்டங்கள்:

இந்த மாவட்ட தொழில் மையங்கள் முக்கியமாக  இரண்டு வேலைகளைச் செய்கின்றன. சிறிய அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான மானிய உதவிகள், தொழில்களில் பின்தங்கிய ஒன்றியங்கள் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டங்கள், குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களுக்கான சிறப்பு மூலதன மானியத் திட்டங்கள், ஜெனரேட்டருக்கான மானியத் திட்டம், வட்டி மானியத்திட்டம், மதிப்புக் கூட்டு வரியைத்  திரும்பப் பெறுவதற்கான மானியத் திட்டம் ஆகியவற்றை இந்த மாவட்ட தொழில் மைங்கள் செயல்படுத்துகின்றன.

 

சுயதொழிலைப் பொறுத்தவரையிலும் இந்த மாவட்ட தொழில் மையங்கள் மூன்று முக்கியமான திட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றன. முதலாவது திட்டம் பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உறுதியளிப்புத்திட்டம் (இது முன்பு பி.எம்.ஆர்.ஒய் என்ற பெயரில் இருந்தது).  அதேபோல இன்னொரு முக்கியமான திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை உருவாக்கும் திட்டம்.  அடுத்து புதிய தொழில் முனைவோருக்கான  திட்டம்.

quality-control-1257235_640

தரக்கட்டுப்பாடு:

அதேபோல தரக்கட்டுப்பாட்டு சம்பந்தமான விஷயங்களிலும் மாவட்டத் தொழில் மையங்கள் முக்கியமான பங்காற்றுகின்றன.  தரமான மின் சாதனங்களைத் தயாரிப்பது, பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை இந்த மாவட்ட தொழில் மையங்கள் மேற்கொள்கின்றன. இதற்கான சட்டங்களை இவை உறுதியாக பின்பற்றுகின்றன.

ஐ.எஸ்.ஐ ஐளுஐ முத்திரை இடப்பட்ட மின் சாதனங்கள் மட்டுமே உற்பத்தி செய்வதை இவை உறுதிப்படுத்துகின்றன. மின்சாதனங்களைப் போலவே தரமான இரும்புப் பொருள்களை உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது ஆகியவற்றை கண்காணிக்கின்ற பணியையும் மாவட்டத் தொழில் மையங்கள் மேற்கொள்கின்றன.

 

நலிவடைந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைப் புனரமைத்தல்:

மாவட்டத் தொழில் மையம் செய்கின்ற முக்கியமான பணிகளில் ஒன்றாக இதைச் சொல்லலாம். பல்வேறு காரணங்களால் நசிந்துபோன, மூடப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றை ஆய்வு செய்து, மாநில அளவிலான ரிசர்வ் வங்கியால் ஏற்படுத்தப்பட்ட கமிட்டிக்கு அதை இம்மையம் அனுப்பிவைக்கும். அந்த கமிட்டியின்  தலைவராக சிறு, குறு, நடுத்தர தொழில்களின் அமைப்பின் செயலாளர் இருப்பார்.  மூன்று மாதங்களுக்க ஒரு முறை இந்த கமிட்டியின் கூட்டம் நடைபெறும்.

 

நலிவுற்ற நிறுவனங்களை மறுபடியும் புனரமைப்பதற்கான வாய்ப்புகளை அந்தக் கூட்டம் ஆராயும்.  இதுபோன்ற நிறுவனங்களை லாபகரமாக மாற்றுவதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன, யாரெல்லாம் இதற்கு நிதியுதவி செய்ய முடியும் என்பதையெல்லாம் ரிசர்வ் வங்கி அலசி ஆராயும். பெரும் கடனீந்தோர், வெவ்வேறு சவால்கள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு எல்லோரிடமும் பேசி சுமூக நிலைக்கு கொண்டு வர  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட நிறுவனங்களை மறுபடி உயிர்ப்பிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதுதான் இதில் விசேஷமான அம்சம்.

 

சிறு, குறு நிறுவனங்களுக்கான ஆலோசனை மையம்:

இவை தவிர சிறு, குறு நிறுவனங்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனை மையங்களையும் தொழில் வணிகத்துறை நடத்துகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் இருக்கின்றன. இவற்றின் வேலை என்னவென்றால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகைகளைப் பெற்றுத்தருவதுதான். இந்நிறுவனங்கள்   பல்வேறு அரசுத்துறைகளுக்கு சப்ளை செய்ததற்கான தொகையில் நிலுவை இருந்தால்  இம்மையங்கள் அதனை உரிய முறையில் பெற்றுத்தரும்.

 

இவ்வாறு பல்வேறு வகையிலும் தொழில் முனைவோருக்கு உதவியாக இருக்கக்கூடிய மாவட்ட தொழில் மையங்களுக்கு நீங்கள் ஒருமுறையாவது செல்லவேண்டும். அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேச வேண்டும்.  உங்கள் தொழிலுக்கு, அவர்கள் எப்படியெல்லாம் உதவி செய்ய முடியும் என்பதைக் கண்டறிந்து அதன்பிறகு அவர்களின்  ஆலோசனையின்படி எங்கு வாய்ப்பிருக்கிறதோ அங்கு கடனுதவிக்கும் ஆலோசனைக்கு செய்யலாம்.

-ஹரிதா ராஜலட்சுமி

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *