ரூ. 2 லட்சம் ஆன 50 பைசா!

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு  முன்பு சென்னை மெரினா கடற்கரையில் தள்ளுவண்டியில் நொறுக்குத்தீனி வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி இப்போது எந்த நிலையில் இருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

 

அதே மெரினாவில் 5 வண்டிகளில் நொறுக்குத்தீனி, பொரித்த மீன், பலூன் சுடும் துப்பாக்கிக் கடை, ரங்க ராட்டினம் என்று  கலக்கிக் கொண்டிருப்பார் என்றுதானே?

 

அதுதான் இல்லை. பெட்ரீஷியா நாராயண் என்ற அந்தப்பெண்மணி, இன்றைக்கு சென்னை முழுக்க கிளை விட்டு நிற்கும் பிரசான் சந்தீபா செயின் ஆப் ரெஸ்டாரன்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்.

 

எந்தவித வணிகப் பின்புலமும் இல்லாமல், சுயம்புவாக இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் இந்தத் தமிழச்சி.

 

 

“என்னுடைய திருமண வாழ்க்கை தோற்றுப் போனபிறகு குழந்தைகளைக் காப்பாற்ற எனக்குப் பணம் தேவைப்பட்டது. எனக்கு நன்கு தெரிந்த சமையல் தொழிலைக் கையில் எடுத்துக் கொண்டேன். உண்மையாக உழைத்தேன். நிறைய வாய்ப்புகளை தேடிப் பிடித்தேன். அவ்வளவுதான்!”  என்கிறார்.

 

breakfast-2408818_640

பெட்ரீஷியா பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். தனது பதினேழு வயதில் காதல்  திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவரது  திருமண வாழ்க்கை சரி வர அமையவில்லை.

“என்னுடைய கணவருக்கு குடிப்பழக்கம் வேறு இருந்ததால்,தினம் தினம் அடி, உதை என்று என்னுடைய வாழ்க்கை நரகமாகிப் போனது” என்கிற இவர், ஒரு கட்டத்தில் தன் இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளோடு  வீட்டை விட்டுத் துரத்தப்பட்டிருக்கிறார்.

 

illustration-2223973_640

“ஒரு பாதுகாப்புக்காக என் அம்மா வீட்டுக்குப் போனேன்.அங்கே போனேனே தவிர, என்ன ஆனாலும் சரி நம்மையும்,நம் குழந்தைகளையும் நாமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வைராக்கியத்தை மட்டும் கூடவே வைத்துக் கொண்டேன்.

 

எனக்கு நன்றாகச் சமைக்க வரும். அதனால் வீட்டில் இருந்தபடியே ஜாம், ஸ்குவாஷ், ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்து அக்கம்பக்கத்தில் விற்க ஆரம்பித்தேன். அந்த வகையில் கிடைத்த சொற்பப்  பணம் எனக்குப் பெரிய உதவியாக இருந்தது.

 

அதுமட்டுமல்ல,  எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட, ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருப்பதுதான் நமக்கு நல்லது என்று முடிவெடுத்தேன். என் தந்தையின் நண்பர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.

 

சுயமாகத் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு,வியாபாரம் செய்ய  தள்ளுவண்டியைக் கொடுத்து உதவுபவர் அவர். அவ்வாறு தள்ளுவண்டியை வைத்து வணிகம் செய்ய நினைப்பவர்கள்,தங்கள் கடையில் இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுத்து உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

 

இந்த சமயத்தில் தான் எனக்கு ஒரு யோசனை வந்தது. நாம் ஏன் அந்தத் தள்ளு வண்டியை வாங்கி அதில் நொறுக்குத்தீனி வணிகம் செய்யக் கூடாது என்று யோசித்தேன்.

 

எனவே அவரிடமிருந்து இலவசமாக அந்தத் தள்ளுவண்டியைப் பெற்ற நான், மாற்றுத் திறனாளிகள் இருவரை வேலைக்கு சேர்த்துக் கொண்டேன். வாடிக்கையாளர்களுக்கு காபி வழங்கும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன்.

 

sky-3243038_640

நான் மெரினா கடற்கரைக்கு அருகில் வசித்தவள் என்பதால்  குடிசை மாற்று வாரியத்தில்  முறைப்படி அனுமதி பெற்று,   அண்ணா சதுக்கத்தின் அருகில் தள்ளு வண்டியில் கட்லெட், சமோசா, காபி, தேநீர், பழச்சாறு போன்றவற்றை விற்பனை செய்யத் தொடங்கினேன்.

முதல் நாள் என்னுடைய கடையின் வருமானம் தெரியுமா? வெறும் ஐம்பது பைசா!

ஆனாலும், அடுத்த நாள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வணிகத்தைத் தொடர்ந்தேன். ரூ.600க்கு விற்பனை. அது நம்பிக்கையளித்தது”  என்று சொல்லும் இவர் சுமார் இருபது வருடங்கள் தள்ளுவண்டியில் அதிகாலை முதல் இரவு பதினோரு மணிவரை  நொறுக்குத்தீனி  வணிகம் செய்து வந்திருக்கிறார்.

 

“ஒரு அதிகாலையில், குடிசை மாற்று வாரியத்தின் இயக்குநர், கடற்கரையில் நடைப்பயிற்சி வந்துகொண்டிருந்தார். நான் கடையில் நின்று வணிகம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்த அவர், என்னைத் தனது அலுவலகத்துக்கு  வரச் சொன்னார். நான் செய்து வரும் விஷயங்களைப் பற்றித் தெளிவாக அவரிடம் விளக்கினேன்.

 

அதன் பிறகு குடிசை மாற்று வாரியத்தின் உணவகத்தை நடத்தும் ஒப்பந்தம்  எனக்குக் கிடைத்தது. இது தான் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த  முதல்  திருப்பு முனை” என்கிற இவர், அதன் பிறகு மேற்கொண்டதெல்லாம் அசுரத்தனமான உழைப்பு மட்டுமே.

 

“அந்த உணவகத்தில் நான் காட்டிய கடின உழைப்பு மற்றுமொரு தனியார் வங்கியின் உணவகத்தின் ஒப்பந்தத்தையும் எனக்குப் பெற்றுத் தந்தது. தினமும் சுமார் 300 பேருக்கு சமைக்க  வேண்டிய பொறுப்பான வேலை அது” என்கிறார்  இவர்.  இது போன்ற புதுப் புது வாய்ப்புகள் தான்  தன்னுடைய சமையல் திறமையை நாளுக்கு நாள் பட்டை தீட்டியதாகக் கூறுகிறார் பெட்ரீஷியா.

 

ஒருபக்கம் வேலையில் முன்னேறி வந்துகொண்டிருந்தாலும்,மறுபக்கம் கணவர் மூலமாக இவருக்குப் பிரச்னைகள் மறுபடியும் வர ஆரம்பித்தன. ஆனால்  தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றியிருக்கிறார் தனது நுண்ணறிவின்மூலம்.

 

“ஒரு முறை என் கணவர்  என்னோடு கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மனது முழுக்க பாரமாக இருந்ததால்சட்டென்று கண்ணில்பட்ட நகரப் பேருந்து ஒன்றில் ஏறி விட்டேன். அந்தப் பேருந்து எங்கு செல்லும் என்றும் எனக்குத் தெரியாது”

 

jam-428094_640

அதனால் அந்தப் பேருந்து செல்லும் கடைசி நிறுத்தம்வரைக்கும் பயணச்சீட்டு எடுத்துக் கொண்டேன்.

அந்தப் பேருந்து என்னை மத்திய அரசுக்குச் சொந்தமான  தேசிய துறைமுக நிர்வாகப் பயிற்சிப்பள்ளி இருக்கும் பகுதியில்  இறக்கிவிட்டது.

 

சட்டென்று  யோசித்தேன்……உடனே அந்தப் பள்ளிக்குள் சென்று அதன் நிர்வாக அதிகாரியைச் சந்தித்தேன். நான் அதுவரை செய்து வந்த சமையல் ஒப்பந்தப் பணிகளைப்பற்றிக் கூறி  ‘உங்கள் பள்ளியில் எனக்கு எதுவும் வாய்ப்புக் கிடைக்குமா?’ என்று கேட்டேன்.

 

உடனே அவர் ‘என்ன ஒரு ஆச்சர்யம்! நாங்கள் இப்போதுதான் எங்கள் பள்ளிக்கு நல்ல ஒரு உணவக ஒப்பந்ததாரரைத் தேடிக் கொண்டிருந்தோம்’ என்று சொல்லி எனக்கு அந்த ஆர்டரைக் கொடுத்தார்.

சுமார் 700 மாணவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் மிகவும் முக்கியமான அந்த வேலை என்னிடம் வந்து சேர்ந்தது”என்று புன்னகைக்கிறார்.

 

ஆனால் வாழ்க்கை சிலரை ஒருபோதும் ஆசுவாசமடைய விடுவதில்லையே! தான்  ஆசை ஆசையாய் வளர்த்த தன் மகளுக்கு அப்போதுதான் திருமணம் செய்து வைத்து அழகு பார்த்திருக்கிறார் பெட்ரீஷியா.  ஆனால் திருமணம் முடிந்த ஒருமாதத்தில் நடந்த எதிர்பாராத சாலை விபத்தில் இவரின் மகளும்,மருமகனும் உயிரிழந்துவிட்டது மரண வலி.

 

petrishiya narayan

இந்த வேதனையிலிருந்து மீள, மிகுந்த சிரமப்பட்ட இவர், சுறுசுறுப்பான வாழ்க்கையே துயரங்களை மறக்க வைக்கும் மாமருந்து என்பதில் நம்பிக்கை கொண்டு அதுநாள் வரை தனக்குக் கிடைத்த  தொழில் அனுபவங்களைக் கொண்டு பிரசான் சந்தீபா ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் உணவகம் ஒன்றை சொந்தமாகத் தொடங்கினார். மறுபடியும்  தொழில் நான்கு கால் பாய்ச்சலில் ஓடத்தொடங்கியது.

 

சென்னையில் ஒரே ஒரு இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட அந்த சந்தீபா ரெஸ்டாரன்ட், இன்று ‘சந்தீபா செயின் ஆப் ரெஸ்டாரன்ட்ஸ்’-ஆக சென்னையின் பல இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

பெட்ரீஷியாவின்  இவரின் இன்றைய ஒரு நாள் வருமானம்  சராசரியாக ரூ.2  லட்சம். இதன் தொடக்கம் என்னவோ இன்று நாம் மதிக்கவே மதிக்காத 50 பைசாதான்.

 

எத்தனை துயரங்கள்  வந்தாலும்,அதை எல்லாம் தாண்டித் தாண்டி தொடர்ந்து  பயணித்துக்கொண்டே இருக்கும் பெட்ரிஷியா போன்ற பெண்களைப் பார்க்கும்போதெல்லாம்  “அட, வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாமே!” என்ற நம்பிக்கை துளிர்விடத்தான் செய்கிறது.

-சு.கவிதா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *