’ரூ.500, 1000 செல்லாது’ – சரியா, தப்பா?

ஒட்டுமொத்த இந்தியாவும் திகைத்துப்போய் நிற்கிறது இன்று மாலைமுதல். காரணம், பிரதமர் மோடி அறிவித்த ஒற்றை அறிவிப்புதான்:

“இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது”.

 

முதலில் இந்த செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் யாரும் நம்பக்கூட இல்லை. அப்படியெல்லாம் ஒரு பிரதமர் திடீரன்று அறிவிப்பாரா என்பதுதான் அவர்களது எண்ணம்.modi

 

ஆனால் தொலைக்காட்சிகளில் நேரலைகளில் பிரதமர் மோடி அதே அறிவிப்பை விளக்கமாக வெளியிட்டபோது இந்தியாவே உறைந்துவிட்டது.

இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தோர் இரு பிரிவினர்.

 

கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் இனி செல்லாதா?  என்று விக்கித்துப்போன ஏழை, எளிய, நடுத்தர வர்க்கம் ஒரு பிரிவு.

 

சட்டத்தின் கண்களின் மண்ணைத்தூவிவிட்டு கறுப்புப்பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகள் இன்னொரு பிரிவு.

 

இந்த விஷயத்தை ஆழமாக உற்று நோக்கினால் நமக்குப் பல விஷயங்கள் புலப்படுகின்றன. கறுப்புப்பணப் புழக்கம், கள்ள நோட்டுப்புழக்கம் என்று இரு பெரும் தீய சக்திகள் நமது நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்துவருகின்றன. எதிர்கால இந்தியாவுக்கும் இவையே பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.  அரசாங்கமும் என்னென்னவோ முயற்சிகளைச் செய்துபார்க்கிறது….ஆனால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

கடைசியில் பிரம்மாஸ்திரமாக ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததுடன், அவற்றை இவ்வாண்டு இறுதிக்குள் வங்கி, அஞ்சலகங்களில் செலுத்தி புதிய நோட்டுக்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் ஒரு அறிவிப்பை பிரதமர் வெளியிட்டிருக்கிறார்.

 

அண்மையில் வெளிவந்த தமிழ்ப்படம் ஒன்றில் ஒரு கதாபாத்திரம் இதைத்தான் சொல்லும். ”பேசாம ஆயிரம் ரூபாய் நோட்டை ஒழிக்கச் சொல்லுங்க. எல்லா திருட்டுப் பணமும் அந்த வடிவத்துலதான் பதுங்கி இருக்கு” என்பது அந்த வசனம். அது மத்திய அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் புரிந்ததோ என்னவோ, சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள்.

 

new-rs-500-2000-notes-650_650x400_61478622987
புதிய ரூபாய் நோட்டுக்கள்

பழைய நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும் என்றாலும்கூட அதற்கு அடையாள அட்டையைக் காட்ட வேண்டியது அவசியம் என்ற உத்தி பிரமாதம்.

 

ஒரு சாமானியன், கோடிக்கணக்கில் பணத்தை வங்கியில் கொடுத்து புதிய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க வந்தால் உடனே தகவல் வருமான வரித் துறைக்குப் போய்விடும். அவரது கணக்கில் காட்டப்படாத பணம் வெளிவந்துவிடும் அல்லது அவர் ஏதாவது பணக்காரர்/பதுக்கல்காரரின் பினாமியா என்ற தகவல் வெளிவந்துவிடும்.

 

வங்கியில் பழைய கரன்சியை மாற்றிக்கொள்ளலாம் என்பதோடு நிற்கவில்லை மத்திய அரசு. மாறாக, நாளொன்றுக்கு ரூ.4000 அளவுக்கே தொகையை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் ஒரு முட்டுக்கட்டையைப் போட்டுவிட்டது. கோடிகளைக் குவித்துவைத்திருப்போர் நான்காயிரம் நான்காயிரம் ரூபாய்களாக மாற்றி என்றைக்கு மொத்த கறுப்புப் பணத்தையும் வெள்ளையாக்குவது?

 

சாத்தியம் இல்லாத விஷயம்தானே!

 

அந்த இடத்தில் வென்றிருக்கிறது மத்திய அரசின் ராஜ தந்திரம்!

 

பதுக்கல்காரர்களின் பணத்தை செல்லாக் காசாக்குவது சரிதான். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது. ஆனால் சாமானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை மத்திய அரசு கணக்கில் கொள்ளவே இல்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.

 

மாலைமுதல் தற்போதுவரை ஏ.டி.எம்களில் கூட்டம் அலைமோதுகிறது. நானூறு ரூபாய்களாகப் பணத்தை எடுத்துக்கொண்டுவிடலாம் என்று எல்லோரும் எண்ணுவதே காரணம்.

மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வங்கிகள், ஏ.டி.எம்கள் இயங்காது என்பதால் மக்களின் பதற்றம் அதிகமாகிறது.

பெட்ரோல் பங்குகள், அரசு மருத்துவமனைகள், கூட்டுறவு அங்காடிகளில் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுடன் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள்.

வாடகை செலுத்த, பயணம் செல்ல, கடன் கொடுக்க, திருப்பி செலுத்த என்று பல்வேறு தேவைகளுக்காக ஆயிரம், ஐநூறு ரூபாய்களாகப் பணத்தை கையில் இன்றைக்கு எடுத்து வைத்திருப்போருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு அவர்கள் கைகளில் இருக்கப்போவது வெறும் காகிதம்தான்.

 

அரசு மருத்துவமனைகளில் பழைய நோட்டுக்கள் பெறப்படும் என்பது உண்மைதான். ஆனால் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் இவற்றை வாங்க மறுத்தால் ‘அடகுப்பணத்தை’ ஆஸ்பத்திரியில் கட்டி, சிகிச்சை பெறக் காத்திருக்கும் ஏழைகளின் நிலை பரிதாபம் அல்லவா?

சாதகம்:

இந்த நடைமுறைச் சிக்கல்களைக் கழித்துவிட்டுப்பார்த்தால் அரசின் இந்த தடாலடி முடிவு உண்மையிலேயே கறுப்புப்பணத்துக்கு மரண அடி கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இனி பிளாஸ்டிக் மணி என்று சொல்லப்படும் டெபிட், கிரடிட் கார்டுகள், வங்கிவழி இணைய சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாகக் கூடும்.

 

கள்ளநோட்டு கும்பல்களும் தங்கள் கைவரிசையைக் காட்டி பொருளாதாரத்தை நசியச்செய்ய முடியாது.

 

 விமர்சனங்கள்:

திடீரென்று அறிவிப்பு வந்ததால் பொதுமக்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். அறிவிப்பு செய்த முறையை முன்கூட்டியே திட்டமிட்டு நேர்த்தியாக செய்திருக்கலாம்.

15003227_406883139700255_2483146610810266908_o
இனி ரூ.500 நோட்டு செல்லாது என்பதைக் காட்டும் வகையில் முகநூலில் உலாவரும் வேடிக்கை புகைப்படங்கள்

ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றுகிறேன் பேர்வழி என்று இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு. இது கறுப்புப்பண முதலைகளுக்கு மகிழ்ச்சியான விஷயமாகத்தானே அமையும்?

 

இன்று பதுக்கல்காரர்கள் ரொம்பவே தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் பணத்தை கரன்சியாக வைத்திருக்காமல் பினாமி சொத்துக்களாக, அசையாச் சொத்துக்களாக வைத்திருந்தால் இந்த ‘ரூபாய் நோட்டு மாற்றம்’ அவர்களை எதுவுமே செய்யப்போவதில்லை.

 

ஒரு நாட்டில் முறைகேடுகளை ஒழிக்க வேண்டுமானால் கரன்சியை மாற்றினால் மட்டும் போதாது. (அடுத்து வருகிற அரசு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாதவை என்று அறிவிக்குமா? அதற்கடுத்து நூறு ரூபாய் நோட்டுக்களா?) மாறாக கறுப்புப்பணம் உருவாகும் ஊற்றுக்கண்ணை அடைக்க வேண்டும்.

 

பொதுவாழ்வில் நேர்மையற்றவர்களால்தான் ஊழல் உருவாகிறது. ஊழலில் பிள்ளைதான் கறுப்புப்பணம். எனவே அரசியலில் இருந்து தொடங்க வேண்டும் களை எடுக்கும் பணியை.

 

அதேபோல கறுப்புப்பணம், பதுக்கல், வரி ஏய்ப்பு வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும்.

 

-அருண்மொழி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *