வங்கியல்லாத வங்கி தெரியுமா? (ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்! -தொடர் 3)

 

“அதெப்படி, வங்கியாக இல்லாமல் வங்கிச் சேவை புரிய முடியும்?”.

 

முடியும் என, ஒர் அமெரிக்க நிறுவனம் உலகிற்கு உணர்த்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பே பால் (Paypal) நிறுவனம், அமெரிக்கச் சட்டத்தின் படி ஒரு வங்கியே அல்ல. ஆனால், மக்களின் நன்மதிப்பைப் பெற்று வங்கிகள் கொடுக்கும் சேமிப்பு (வட்டியில்லா), கடன் அட்டை, சிறிய தொழிற்கடன் ஆகிய சேவைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

 

1999-ல் பே பால் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்றைக்கு, பெரும்பாலான சிறிய இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட அமெரிக்க வாடிக்கையாளர்களுக்குச் சேவை புரிந்துவிட்டு பேபால் மூலமாகத்தான் தமது கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்த நிறுவனமும் தனக்கென்று ஒரு வங்கிக் கிளை அலுவலகம் வைத்திருக்கவில்லை, வங்கித் தொழில்நுட்ப அடிப்படையிலேயே தனது சேவைகளைக் கொடுத்து வருகிறது. விரல் நுனியில் உங்கள் சேவைக்காகக் காத்திருக்கும் ஒரு நிறுவனத்திற்கு எதற்குத் தனியாக ஒர் அலுவலகக் கிளை என்று நினைத்தது தான் இதில் முக்கியமான உத்தி (Idea).paypal_ITSS-1

 

 

ஒரு வங்கிக் கிளையை நிறுவ, குறைந்தபட்சம் 3,560 சதுர அடி இடம் தேவை என்று பேங்கோகிராபி (Bancography) என்ற அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. கிளைக்கான வாடகை, வேலையாட்கள், சம்பளம், மின்சாரத் தேவை, உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு என எவ்வளவு செலவு என்று நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள். எனவே, வங்கிகளுக்கு, வங்கித் தொழில்நுட்பம் பெரிய வரப்பிரசாதம்.

 

“அதெல்லாம் சரி தான். தாங்கள் கூறும் அனைத்து உதாரணங்களும் பெரிய நிறுவனங்களைச் சுற்றியே இருக்கிறதே” என்கிறீர்களா? பல சிறிய நிறுவனங்களும் ஓசையின்றித் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

 

அப்படி ஒரு நிறுவனம் தான், ரெட் பஸ் (Red Bus). 2005-ல் தீபாவளிக்கு ஊருக்குச் செல்லப் பேருந்துப் பயணச்சீட்டுக் கிடைத்திருந்தால் அதன் நிறுவனர்கள் ஊருக்குச் சென்றிருப்பார்கள்; நாம் இன்னும் தீபாவளி பொங்கலுக்குப் பயணச்சீட்டு வாங்க அல்லாடிக் கொண்டிருந்திருப்போம். பயணச்சீட்டுக் கிடைக்காமல் இருந்த ஒருவரின் எண்ணத்தில் ஒரே வாரத்தில் உருவான ஒரு தொழில் தான் இன்றைக்கு ரூ.600 கோடி வருமானத்தை எட்டியிருக்கிறது (2013-ம் ஆண்டின் கணக்குப் படி).

 

கருவியும் காலமும்


“கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு”, என்றுரைக்கிறார் நமது வள்ளுவப் பெருந்தகை.

இதன் பொருள், “உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன்” (கலைஞர் எழுதிய உரை). இந்த அறிவுரை, அமைச்சருக்கு மட்டுமல்ல; தொழில் தொடங்க முனையும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

 

ரெட் பஸ் (Red Bus) நிறுவனத்திற்கு முன்பு ஒவ்வொரு போக்குவரத்து நிறுவனமும் தனக்கென ஒர் இணையதளம் வைத்திருந்தது. ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் உங்களுக்கு இடம் கிடைக்கவில்லையெனில் அடுத்த இணையதளத்தை இயக்கித் தேட வேண்டும். எவ்வளவு சிரமமென்பதைச் சிந்தியுங்கள்.

 

redbus25072015

ரெட் பஸ் (Red Bus) நிறுவனம் அனைத்துப் போக்குவரத்து நிறுவனங்களிடமும் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒரே தளத்தில் அனைத்து வழிகளுக்கும், அனைத்துப் போக்குவரத்து நிறுவனங்களின் இணைய முன்பதிவையும் கொண்டு வந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றது. ரெட்பஸ் (Red Bus) நிறுவனர்களின் யோசனைதான் (Idea) இத்தொழிலின் அடிப்படை.

 

மக்களுக்குத் தேவையான அல்லது பயனுள்ள எதுவும் சோடை போகாது என்பதற்கு ரெட்பஸ் (Red Bus) நிறுவனத்தின் வெற்றி ஒர் உதாரணம். இதன் நிறுவனர்கள், இந்த நிறுவனத்தை நிறுவும் முன் சாதாரணமாக ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள் என்பதை நம்ப முடிகிறதா?

 

துணிந்து களமிறங்குங்கள்!

 

இன்றைக்கு இந்தியாவில் கணிசமான தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்கிறார்கள். உங்களைச் சுற்றியும் பல வல்லுநர் கூட்டம் சத்தமின்றி, ’பணி செய்வதே கடன்’ என்று மிக வேகமாக ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறது.

வீட்டுக்கொரு தொழில் நடந்த சமூக அமைப்பு மாறி இன்று, வீட்டுக்கொரு பொறியாளர் பணி புரிந்து வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறார். தேடுங்கள் உங்களின் எண்ணத்தை… கூட்டுங்கள் உங்களைச் சுற்றி இருக்கும் வல்லுநர் கூட்டத்தை! பிறகு நீங்களே வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.

இவ்வாறு தனது சக வல்லுநர்களுடன் தொழிலை ஆரம்பித்து மிகப் பெரிய வெற்றி கண்ட, உலகப் பெரும் பணக்காரரான பில்கேட்ஸை ஜெயிக்க வைத்த யோசனை என்ன தெரியுமா? காத்திருங்கள், விரிவாகப் பேசுவோம்!

– கதிரவன் மனோகரன்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *