வருமானவரி கட்டவைக்க புது உத்தி!

வாக்களிப்பது எப்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையாய கடமையோ, அதேபோல, வருமானவரியை சரியாகச் செலுத்துவதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் மிக முக்கியக் கடமையாகும்.

 

நியாய தர்மங்களுக்குக் கட்டுப்பட்டு தங்கள் வரியை சரியாகச் செலுத்துபவர்களின் எண்ணிக்கை நம் ஊரில் மிகக் குறைவு.அப்படி,தங்கள் வருமானவரியை செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்கள்,மற்றும் தனிநபர்கள் குறித்த விவரங்களை வருமானவரித்துறை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

 

அதுவும் யார் யார் எவ்வளவு வருமானவரியை பாக்கி வைத்திருக்கிறார்கள் என்கிற விவரத்தை தேசிய நாளிதழ்கள் அனைத்திலும் ஒரு முழு பக்க அளவில்  வெளியிட்டிருக்கிறது வருமானவரித்துறை.

 

இந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகாவது சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களது வருமான வரி பாக்கியைக் கட்டிவிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பில் இந்தத் தகவல்களை நாளிதழ்களில் குறிப்பிட்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல,இந்த விளம்பரத்தைப் பார்த்தபிறகு,உடனடியாக அவர்கள் தங்கள் வருமானவரி பாக்கியைச் செலுத்தவேண்டும் என்றும் அந்த விளம்பரத்தில் அறிவுறுத்தி இருக்கிறது.man-1675685_640

 

வரியைக் கட்டாமல் விட்டதாக,மொத்தம் இருபத்திநான்கு பெயர்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இரண்டுமே  இதில் அடங்கும்.

 

நிறுவனமாக இருப்பின்,அந்த நிறுவனத்தின் பெயர் மற்றும் யாரால் அந்த நிறுவனம் எந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது, அந்த நிறுவனத் தலைவரின் PAN  எண்,அந்த நிறுவனம் எந்தெந்த வருடங்களில் எவ்வளவு வருமான வரியைக் கட்டாமல் பாக்கி வைத்திருக்கிறது என்பது போன்ற தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன. தனிநபராக இருப்பினும் மேற்சொன்னதுபோல, PAN எண் உட்பட அந்த நபர் குறித்த அத்தனை தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன.

 

இதில் அதிகபட்சமாக,டெல்லியைச் சேர்ந்த  ஸ்டாக் குரு  என்கிற நிறுவனம் ரூ.86.27 கோடி வருமான வரி பாக்கி வைத்திருக்கிறதாம்.2009-2010,மற்றும் 2010-2011 நிதி ஆண்டுக்கான வருமான வரித் தொகைதானாம் இது. இதில் ஆச்சர்யமான,வருந்தத்தக்க தகவல் என்னவென்றால், 1989-1990ம் நிதி ஆண்டில் வருமானவரியைச் செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

 

கொல்கத்தாவைச் சேர்ந்த அருண் சோன்கர் என்கிற தனிநபர் ரூ.51.37 கோடி வருமானவரி பாக்கி வைத்திருக்கிறார்.அதே கொல்கத்தாவைச் சேர்ந்த கிஷன் ஷர்மா என்கிற மற்றொருவர் ரூ.47.52 கோடி வருமானவரி பாக்கி வைத்திருக்கிறார்.

 

அகமதாபாத், குவகாத்தி, விஜயவாடா, நாசிக், சூரத், டெல்லி, வதோதரா, கொல்கத்தா என்று அத்தனை நகரங்களையும் மொத்தமாகச் சேர்த்தால்,மொத்தம் ரூ.490 கோடி வருமானவரித் தொகை வசூலாகாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

 

இந்த ஆண்டு மட்டுமல்ல,  கடந்த சில ஆண்டுகளாகவே நம்முடைய வருமானவரித்துறை இப்படி வருமானவரியை பாக்கி வைத்திருக்கும் 96 நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டிருக்கிறது.

 

இதுக்கு மேல அசிங்கம் என்ன இருக்கு? தயவு செஞ்சு வரியைக் கட்டிடுங்களேன்பா!

-ஆதர்ஷ்.   

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *