வருமான வரிவிலக்கு தரும் அற்புதத்திட்டம் சுகன்யா சம்ருதி

உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே இருக்கின்றன.இந்த நிலையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போன்ற ஒரு தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறோம். அதாவது மத்திய அரசு இரண்டு வருடங்களுக்கு முன்னால் பெண் குழந்தைகளுக்காக “சுகன்யா சம்ருதி யோஜனா” என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தது இல்லையா? இதைப் பற்றித்தான் பேசப் போகிறோம்.

 

வருமான வரித் தாக்கலுக்கும்,இந்த “சுகன்யா சம்ருதி யோஜனா” திட்டத்திற்கு என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? பெண் குழந்தைகளுக்கான இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால், உங்கள் வருமான வரியில் விலக்கு கிடைக்கும். அதுமட்டுமல்ல, உங்கள் வீட்டு பெண் தேவதைகளின் கல்விக்கும்,எதிர்கால வாழ்க்கைக்கும் இத்திட்டம் மிகவும் கைகொடுக்கும்.

அதனால் இந்த “சுகன்யா சம்ருதி யோஜனா” திட்டம் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாமா?

 

“சுகன்யா சம்ருதி யோஜனா” திட்டம் ஒரு சிறிய முதலீட்டுத் திட்டம். பிறந்த பெண் குழந்தை முதல் அதிகபட்சமாக பத்துவயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்காக, நீங்கள் இந்தத் திட்டத்தில் சேமிக்கலாம்.மற்ற முதலீட்டுத் திட்டத்தை விட,இந்த “சுகன்யா சம்ருதி யோஜனா” திட்டத்தில் அதிக அளவு வட்டி (8.1%) கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.

 

 

இந்தத் திட்டத்தின் கீழ்,ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒரே ஒரு “சுகன்யா சம்ருதி யோஜனா” கணக்கை அக்கவுண்ட்டை மட்டுமே தொடங்க முடியும். அஞ்சலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உங்கள் பெண்குழந்தைகளை இந்தத் திட்டத்தில் சேர்க்கலாம்.

golden-1702289_640

உங்கள் பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழைக் கொடுத்து,  குழந்தையை இந்தத் திட்டத்தில் சேர்க்கலாம். இந்தத் திட்டத்தில் சேர்ந்ததிலிருந்து, பதினான்கு  ஆண்டுகள்வரை நீங்கள் பணத்தை செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக, உங்கள் பெண் குழந்தை பத்து வயதில் இருக்கும்பொழுது நீங்கள் இத்திட்டத்தில் உங்கள் குழந்தையை இணைத்தால்,உங்கள் குழந்தைக்கு இருபத்திநான்கு வயது ஆகும்வரை நீங்கள் இத்திட்டத்தில் பணத்தை செலுத்திவர  வேண்டும்.

 

கணக்கை ஆரம்பித்த நாளிலிருந்து,சரியாக இருபத்தியொரு ஆண்டுகள் கழித்து நீங்கள் சேமித்த பணம் முதிர்வடையும். குழந்தை,பத்தாம் வகுப்பை நிறைவு செய்த பிறகு அல்லது குழந்தை பதினெட்டு வயதைப் பூர்த்தி செய்த பிறகு,குழந்தையின் உயர்படிப்பு போன்ற காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

 

இந்தத் திட்டத்தில் சேரும்பொழுது, ரூ.1000ஐ உங்கள் கணக்கைத் தொடங்கவேண்டும். அதன்பிறகு ரூ.100 மற்றும் அதன் மடங்கில், ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் கணக்கில் பணம் செலுத்தலாம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடியும். வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80c ன் கீழ் நீங்கள் ஒவ்வொரு வருடமும் இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்கும் தொகைக்கு வருமானவரி விலக்கு உண்டு.

 

அதுமட்டுமல்ல ஒரு அஞ்சலகத்திலிருந்து இந்தியாவின் எந்த ஒரு அஞ்சலகத்துக்கும் அல்லது வங்கிக்கும் இந்த “சுகன்யா சம்ருதி யோஜனா” அக்கவுண்ட்டை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.அதுமட்டுமல்ல நீங்கள் தத்தெடுக்கும் பெண்குழந்தைக்கும் கூட இந்த “சுகன்யா சம்ருதி யோஜனா” கணக்கைத் தொடங்கலாம். ஆன்லைனில் பணத்தை செலுத்தும் வசதியும் இந்தத் திட்டத்தில் இருக்கிறது.

-சு.கவிதா.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *