வாரென் பப்பெட் தரும் டாப்-20 தொழில் ஆலோசனைகள்

வாரென் பப்பெட் தரும் டாப்-20 தொழில் ஆலோசனைகள்

அமெரிக்கத் தொழில் சக்கரவர்த்தியான வாரென் பப்பெட் தரும் டாப்-20 தொழில் ஆலோசனைகள் உங்களுக்காக….

1) காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்…..இதுதான் தொழில் செய்பவர்கள் கைகொள்ள வேண்டிய மிக முக்கிய வெற்றி மந்திரம்.இதைவிட சிறந்தது வரலாம் என்று ஒருபோதும் காத்திருக்காதீர்கள்.  அப்படி ஒன்று வராமலே கூடப் போகலாம்.

2) குறிப்பிட்ட ஒரு தொழிலைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அந்தத் தொழிலுக்குள் இறங்கவே இறங்காதீர்கள்.

3) இன்று நட்டவுடன் நாளை பழம் பறிக்கும் எண்ணத்தோடு தொழில் செய்ய வேண்டாம். நீண்டகால முதலீடும் நிலைத்த செயல்பாடும்தான் தொழிலில் வெற்றியைக் கொடுக்கும்.

4) நீங்கள் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் தொழிலில்  உங்களிடம் பொறுமை இல்லையென்றால் அந்தத் திறமையெல்லாம் வீண்தான். கருவில் இருக்கும் குழந்தை வெளியேவர ஒன்பதுமாதம் காத்திருக்கத்தானே வேண்டும்!

5) இந்த தொழில் உலகம் பார்ப்பதற்குப் பரவசமாகத்தான் இருக்கும். ஆனால் மயங்கி விடாதீர்கள். கவனத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.

6) தொழிலில் ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள். முதல் படியிலிருந்து ஆறாவது படிக்குத் தாவினால் அடிபடும் வாய்ப்பு அதிகம் என்பதை மறக்காதீர்கள்.

7) எந்தெந்த நிறுவனங்கள் பெரும்பாலும் லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதனைக் கவனியுங்கள். அதுபோன்ற நிறுவனங்களின் பிரான்சைஸ் உரிமையைப் பெற முயற்சியுங்கள். இதுபோன்ற முயற்சிகள் நிச்சயம் நல்ல பலனைத் தரும்.

8) தொழில் நிறுவனங்களின் பங்குகளை வாங்க நினைக்கிறீர்களா? என்ன மாதிரியான தொழில் அது,அதற்கு சந்தையில் எதிர்காலம் இருக்கிறதா  என்பதைப் பார்த்து அதன் பங்குகளை வாங்குங்கள்.

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கவே கூடாது என்று கண்ணை மூடிக்கொண்டு முடிவு செய்யாதீர்கள். சரியாகச் செயல்படாத தலைமையின் காரணமாகக்கூட   அந்தத் தொழிலானது இறங்குமுகத்தில் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது இல்லையா!

9) தொழிலில் வெல்ல வேண்டுமா? இந்த இரண்டு விதிகளை மறக்கவே மறக்காதீர்கள்.

விதி ஒன்று: தொழில் செய்ய வந்திருப்பது பணத்தை இழப்பதற்காக அல்ல

விதி இரண்டு: முதலாவது விதியை ஒருபோது மறக்கக்கூடாது.

10) பணம் மட்டுமே  வாழ்க்கையில்லை என்பதுபோன்ற முட்டாள்தனமான கொள்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துக்கொண்டு தொழில் செய்யாதீர்கள். தொழிலில் ஏற்றம் காணவே முடியாது.

11) அதே சமயத்தில் தொழிலில் வெல்ல அறநெறிகளை விற்றுவிடாதீர்கள். ஒழுக்கமான உயர்வே உண்மையான வெற்றியாக இருக்கும்.

12) தொழிலில் உச்சம் தொடவேண்டும் என்று நினைத்து அசாதாரண செயல்களை செய்யவேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை. செய்கிற வேலையை சிறப்பாகச் செய்து வாடிக்கையாளர்களை நூறு சதவீதம்  திருப்திப்படுத்தினால் போதும். ஜெயித்துவிடலாம்.

13) தொழிலின் வெற்றியை பணத்தைக் கொண்டு மதிப்பிடாதீர்கள். அந்தக் குறிப்பிட்ட தொழிலில் நீங்கள் குறிப்பிடத்தகுந்த உயரத்தை அடைந்தபிறகு உங்களை எத்தனை பேர் விரும்புகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். இதுதான் உங்களது உண்மையான வெற்றியாக இருக்க முடியும்.

14) எவ்வளவு பெரிய,சிறப்பான தொழில் ஒப்பந்தமாக இருந்தாலும் தவறான மனிதர்களோடு அதை செய்து கொள்ளாதீர்கள். அந்தத் தொழிலின் முடிவு ஒருபோதும் சரியாக அமையாது.

15) தொழிலைக் கட்டமைக்க நீண்ட காலம் ஆகும். ஆனால் அதை ஐந்தே நிமிடத்தில் அழித்துவிடலாம். அதனால் எதைச் செய்தாலும் ஒன்றுக்கு இரண்டு தடவை கவனித்துச்செய்யுங்கள்.

16) நான் இந்தத் தொழிலின் மூலமாக பெறும் பணக்காரர் ஆகப்போகிறேன் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள். நான் இப்படித்தான் எப்போதும் சொல்லிக்கொள்வேன். எண்ணத்திற்கு அதிக வலிமை இருக்கிறது.

17) தொழிலில் நான் செய்வது மட்டுமே சரி என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். உங்களைவிட சிறப்பாகச் செயல்படுகிறவர்களது வழிமுறைகளைப் பின்பற்றத் தயக்கம் காட்டாதீர்கள்.

18) ஒரேயொரு வருமானத்தை மட்டும் நம்பி இருக்காதீர்கள். இரண்டாவது  வருமானத்திற்கு கைவசம் இன்னொரு தொழிலும் இருக்கட்டும்.

19) ஒரே இடத்தில் உங்கள் அத்தனை முதலீடையும் போடாதீர்கள். ஒருவேளை அதில் பிரச்னை ஏற்பட்டால் உங்கள் நிலைமை மோசமாகிவிடும்.

20) கடைசியாக ஒன்று….மனிதத்தை விற்று ஒருபோதும் தொழில் செய்யாதீர்கள். அதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஒருபோதும் நிம்மதியைத் தராது.

-ஜெயலட்சுமி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *