வாழையில் இருக்குது வாய்ப்பு!

இன்றைய கிராமப்புற பெண்களின் இதயமாகவும் முதுகெலும்பாகவும் குரலாகவும் திகழ்பவை சுய உதவிக்குழுக்கள். தனியார் தொண்டு அமைப்புகள் மற்றும் தமிழக அரசு ஆகியோர் வழங்கும் குறுங்கடன்கள், சுழல்நிதி ஆகியவைதான் இந்த மாயாஜாலத்திற்கு காரணம்.

(படம்: நன்றி: www.taminadumahalir.org
(படம்: நன்றி: www.taminadumahalir.org

சாதாரண பொருளாதார பின்புலம் உள்ள பெண்கள் கூட தங்களுக்குள் ஒரு குழுவாக இணைந்துகொண்டு குறைந்த வட்டிக்கு தமக்குள் கடன் உதவி செய்து கொள்ளுதல், சிறுதொழில்கள் செய்ய ஊக்குவித்தல்,உதவுதல் ஆகியவற்றின் மூலம் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொண்டுள்ளனர்.

 

இதன் பின்னணியாக நிற்பவை குறுங்கடன் வழங்கும் சேவை நிறுவனங்கள் அத்தகைய சேவையை ஓசையின்றி செய்துவருகிறது  திருச்சியை சேர்ந்த கிராமோதயா மைக்ரோ ஃபைனான்ஸ் அமைப்பு.

அதன்  தலைமை செயல் அலுவலரான கீதா முனைவு இதழுக்கு அளித்த நேர்காணல்….

 

கிராமோதயா பற்றி சொல்லுங்கள்!

1987-ம் ஆண்டு திரு. தாமோதரன் என்பவரால் தொடங்கப்பட்ட அமைப்பு இது. 26 ஆண்டுகளாக சுகாதாரம், குடிநீர், பெண்கள் மேம்பாட்டுத்திட்டங்களை இந்த அமைப்பு கிராமப்புறங்களில் செயல்படுத்தி வருகிறது. இது அறக்கட்டளைகள் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அமைப்பு. இதில் 4200 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அங்கம் வகிக்கின்றன. அவற்றில் மொத்தம் 60,000 பெண்கள் இயங்குகிறார்கள்.

 

என்ன மாதிரியா நிதி உதவிகள் இக்குழுக்களுக்கு வழங்கப்படுகின்றன?

ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.5 லட்சம் வரை சுழல்நிதி வழங்கப்படுகிறது. அதுதவிர தொழி ல் தொடங்க ரூ.60,000 கடனாக அளிக்கப்படும். இதில் 10 ,000 ரூபாய்க்கு வட்டி கிடையாது. மீதமுள்ள 50,000 ரூபாய்க்கு 12 சதவீத வட்டி பெறப்படும்.

 

நீங்களே நேரடியாக கடன் தருவீர்களா?

இல்லை. நாங்கள் சுயஉதவிக்குழுக்களின் செயல்பாட்டினை ஆராய்ந்து தர மதிப்பீட்டை தருவதோடு நின்றுவிடுகிறோம். கடன்உதவியை எங்களின் பரிந்துரையின்பேரில் வங்கிகள் வழங்குகின்றன.

 

பொதுவாக சுய உதவிக்குழுக்களுக்கு தொழில்கடன் வழங்கும்போது என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?

சுழல்நிதி என்று வரும்போது எந்த பிரச்சனையயும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட தொழில் செய்வதற்காக கடன் வழங்கும்போது சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக செங்கல்சூளை வைக்க வங்கி கடன் முன்வருகிறது என்று வைத்துக்கொள்வோம். செங்கல் சூளை என்றால் என்னவென்றே தெரியாத மகளிர் எப்படி அந்தத்தொழிலை தொடங்குவார்கள்?

 

இந்த இடத்தில் பயிற்சிக்கான தேவை எழுகிறது. அதேபோல ஒரு குழு ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதை அவர்கள் எங்கு போய் எப்படி விற்பார்கள்? அதற்கு அவர்களுக்கு சந்தைப்படுத்துதல் குறித்த தெளிவு வேண்டுமல்லவா? எனவே இவற்றில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டி இருக்கிறது.

 

இந்த சவாலை எப்படி முறியடிக்கிறீர்கள்?

சில நேரங்களில் குழுவாக செயல்படுவது, நினைத்த பலன்களை தராது. அதுபோன்ற சூழ்நிலைகளில் நாங்கள் ஒவ்வொரு தனிநபருக்கும் ஏற்ற வகையில் தொழிற்கடன்களை வடிவமைக்கிறோம். மேலும் தொழில்முனைவு, சந்தைப்படுத்துதல் முதலான பல்வேறு அம்சங்களை அடக்கிய ஒருவார தொழிற்பயிற்சி அளிக்கிறோம்.

 

திறன்மேம்பாட்டு பயிற்சிகள் பற்றி கூறுங்கள்!

நாங்கள் மொத்தம் 15 வகையான தொழிற்பயிற்சிகளை அளிக்கிறோம். திருச்சி பகுதியில் வாழை ரொம்பவே பிரபலம். தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் இங்குதான் இருக்கிறது. எனவே வாழை சார்ந்த தொழிற்பயிற்சிகளை எமது குழுக்களுக்கு நாங்கள் முன்னுரிமை தந்து வழங்குகிறோம்.

வாழையிலிருந்து கலைப்பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கிறோம். மேலும் வாழைத்தண்டு தொக்கு, வாழைப்பழ பிஸ்கட், வாழைப்பழ ஜாம் முதலான  20 வகையான உணவுப்பொருட்களை தயாரிக்க கிராமோதயா பயிற்சி அளிக்கிறது. இவற்றை உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு பொருட்களின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

 

இவற்றை எங்கு விற்கிறீர்கள்?

வெளியே எங்கே போய் விற்பது? எங்களிடம் 60 ஆயிரம் பேர் இருப்பதால் உற்பத்தியாகும் பொருட்கள் எங்களுக்குள்ளேயே விற்றுத்தீர்ந்துவிடுகின்றன.

 

வாழையிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை எங்கு பெறுகிறீர்கள்?

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் கிராமோதயா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி 5 ஆண்டுகளுக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதலை அவ்வமைப்பு எங்களுக்கு வழங்கும். அதற்கு பதிலாக நாங்கள் எங்கள் ஆய்வு, சந்தைப்படுத்துதல் ஆகிய நேர்வுகளின்போது தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை பிரபலபடுத்துவோம். தற்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2 ஆண்டுகளை கடந்துவிட்டது.

 

சிறு தானிய உற்பத்தியில் உங்கள் மகளிர் குழுவினர் ஈடுபட்டுள்ளார்களா?

சிறு தானியத்தை மதிப்புக்கூட்டி விற்பனை செய்துவருகிறோம். எடுத்துக்காட்டிற்கு சோள சப்பாத்தி, சோள பிஸ்கட், வரகு தயிர்சோதம் ஆகியவற்றை சொல்லலாம்.

 

உள்நாட்டில் உங்கள் தயாரிப்புகளுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

மிகவும் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. பல்வேறு வியாபாரிகள் தங்களிடம் எங்கள் தயாரிப்புகளை வாங்கிச்சென்று தங்கள் வணிகப்பெயர்களில் அவற்றை விற்கின்றனர்.

 

இதுவரை கிராமோதயா அமைப்பினால் பயனடைந்தோர் எவ்வளவு பேர்?

கிராமோதயா அமைப்பு 6000 பயனாளிகளுக்கு 5.3 கோடி அளவிற்கு நிதியை வழங்கியிருக்கிறது. எங்கள் அமைப்பின் துணை நிறுவனமான கார்டியன் அமைப்பு 30 ஆயிரம் பேருக்கு 14 கோடியை வழங்கி இருக்கிறது.

 

இதுபோன்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்துவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

நிதிவசதிதான். குறுங்கடன் நிறுவனங்களுக்கு பெரிய சவால்.  வங்கிக்கடன் வாங்கச்சென்றால்  அமைப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டும்.

 

உங்களது நிதிமூலம் என்னென்ன?

வங்கிக்கடன்கள் தான் முக்கியமூலம். மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த கார்டியன் என்ற அமைப்பு ரூ.4.5 கோடி நிதி உதவி அளித்திருக்கிறது.

 

துணிகர முதலீட்டாளர்கள் (வெஞ்சர் கேப்பிட்டலிஸ்ட்) ஏஞ்சல் இன்வெஸ்டர்கள் ஆகியோரை அணுகி இருக்கிறீர்களா?

அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். இது தொடர்பாக ஒரு துணிகர  நிறுவனத்துடன் பேசி வருகிறோம்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *