வீட்டிலேயே நடத்தலாம் கோடை வகுப்புகளை!

பள்ளிப் பிள்ளைகளுக்கு கோடைவிடுமுறை கிடைத்தாகிவிட்டது. விளையாட்டு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியும் மகிழ்ச்சி நிமித்தமுமாகவே இந்தநாட்களை குழந்தைகள் கடக்க நினைப்பர்.

 

 

ஆனால் நாள்முழுக்க அவர்களை வீட்டில் வைத்து சமாளிப்பது என்பது அம்மாக்களுக்கு மிகவும் சவாலான ஒரு நிலை.

 

table-3281047_640 (1)

குழந்தைகளின் தொல்லைகளை சமாளிக்க முடியாமல் அவர்களை கோடைவிடுமுறை சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பும் அம்மாக்களும் நம் ஊரில் உண்டு.

ஆனால் கோடைவிடுமுறை சிறப்பு வகுப்புகளுக்கான கட்டணங்களைப் பார்த்தால் தலை சுற்றிவிடும். எங்கேயாவது நியாயமான கட்டணத்தில் சிறப்பான முறையில் கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றனவா என்பதுதான் அம்மாக்களின் இன்றைய முக்கியத் தேடலாக இருக்கிறது.

 

”இந்தத் தேடலை பெண்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு துறையில் அல்லது இரண்டு மூன்று துறைகளில் உங்களுக்குத் திறமை இருக்கிறதா?

 

அப்படியென்றால், அவை சேர்ந்த கோடைவிடுமுறை சிறப்பு வகுப்புகளை நீங்களே நடத்தத் தொடங்கலாம்.

 

அதன்மூலம் ஒரு தொழில்முனைவராக நீங்களும் உருவெடுக்கலாம்” என்கிறார் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சினேகா ஸ்ரீனிவாசன்.

 

சினேகா ஸ்ரீனிவாசன்
சினேகா ஸ்ரீனிவாசன்

கடந்த பதினைந்து ஆண்டுகளாக குழந்தை களுக்கு  ஓவியம் வரையச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர் கோடை விடுமுறை வந்தால் கோடைவிடுமுறை சிறப்பு வகுப்புகளை எடுக்க ஆரம்பித்துவிடுகிறார்.

 

 

”இதன்மூலம் ஒவ்வொரு கோடைவிடுமுறை சமயத்திலும் குழந்தைகளோடு குழந்தையாய் எனது நாட்கள் மகிழ்ச்சியுடன் நகர்கின்றன.

அதுமட்டுமல்ல,ஒரு குறிப்பிட்ட அளவு பணமும் என் கைக்குக் கிடைத்துவிடுகிறது” என்கிறார்.

 

“நான் தமிழில் எம்.ஏ,பிஎட் முடித்திருக்கிறேன். இதுதவிர எனக்கு வரைவதில், தைப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால்  ஆசிரியர் தொழில்நுட்பப் பயிற்சியையும் (T.T.C) முடித்திருக்கிறேன்.

 

ஓவியத்தில் ஈடுபாடு இருந்த காரணத்தால், தெரிந்த குழந்தைகளுக்கு ஓவியம் வரையச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன்.  வாய்வழி விளம்பரங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் பலரும் வரத்தொடங்கினர்.

 

yoga-1146277_640

வீட்டில் இடம் போதவில்லை. எனவே, வீட்டின் அருகில் இருந்த இடத்தை வாடகைக்குப் பிடித்தேன்.

குழந்தைகள் அதிகம் என்பதால், மற்றுமொரு ஓவியப் பயிற்சியாளரையும் உதவிக்கு வைத்திருக்கிறேன்.

 

வாரத்தின் இரண்டு நாட்கள் அங்கே ஓவிய வகுப்புகள் எடுப்பேன். வாரத்தின் இரண்டு நாட்களும் ஒவ்வொரு குழந்தைக்கும் இங்கே ஒருமணிநேரம் ஓவியப் பயிற்சி கொடுக்கப்படும்.

 

handy-craft-1485094_640

ஒரு மாதத்திற்கு எட்டு வகுப்புகள் அவர்களுக்குக் கிடைக்கும். மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் முதல், எட்டாம் வகுப்பு படிக்கின்ற பெரிய மாணவர்கள்வரை பலர் என்னிடம் ஓவியம் பயில்கின்றனர்.

 

பொதுவாக வாரத்தில் இரண்டு நாட்கள் நடக்கும் ஓவிய வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 ஐ (சிலர் அதற்கும் அதிகமாக) சில ஓவியப் பயிற்சி நிலையங்கள் கட்டணமாக வசூலிக்கின்றன.

 

ஆனால் என்னைப்பொறுத்தவரை, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப அதிகபட்சமாக மாதத்திற்கு ரூ.500வரைதான் வசூலிக்கிறேன். இட வாடகை மற்றும் ஓவிய உதவியாளருக்கான சம்பளம் போக ஒரு குறிப்பிட்ட தொகை எனக்கு இந்த வகுப்புகள்மூலம் கிடைக்கிறது.

 

இந்த நேரத்தில் நான் முக்கியமான மற்றுமொரு செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஓவியம் சார்ந்த படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் ஓவியவகுப்புகள் எடுக்கவேண்டும் என்றில்லை.

 

ஓவியம் வரையும் திறமையும் கற்பனை வளமும் வண்ணங்கள் குறித்த அறிவும் குழந்தைகளுக்கு படிப்படியாக ஓவியக் கலையை எப்படி அறிமுகம் செய்யவேண்டும் என்பதுகுறித்த பட்டறிவும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஓவிய வகுப்புகள் எடுக்கலாம்” என்கிறார் சினேகா.

 

“ஒவ்வொரு கோடைவிடுமுறை சமயத்திலும் தொடர்ச்சியாக பத்து அல்லது பதினைந்து நாட்கள் பல்வேறு கலைகள் சேர்ந்த ஒரு தொகுப்பாக (package) இந்தக் கோடைவிடுமுறை சிறப்பு வகுப்புகளை நடத்துகிறேன். நாளொன்றுக்கு இரண்டுமணிநேரம் வகுப்புகள் நடக்கும்.

 

hands-2319834_640

வெறும் ஓவியம் மட்டுமென்றால் குழந்தைகள் அலுப்பாக உணர்வர். அதனால் வீணான பொருட்களிலிருந்து கைவினைப்பொருட்களை உருவாக்குவது, கண்ணாடியில் ஓவியங்கள் வரைவது, மெஹந்தி போடுவது போன்றவற்றை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்.

 

நான் யோகா பயிற்சியாளராகவும்  இருக்கிறேன் என்பதால் குழந்தைகளுக்கான யோகப் பயிற்சிகளை விளையாட்டாகக் கற்றுக்கொடுக்கிறேன். இதுதவிர, குட்டிக்குட்டி ஸ்லோகங்கள், பஜனைப் பாடல்கள், அறிவுத் திறனை மேம்படுத்த உதவும் விளையாட்டுக்கள் என்று குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் அறிமுகம் செய்து வருகிறேன்.

 

ஓவியம், கைவினைப்பொருட்கள் சார்ந்த இதுபோன்ற கோடைவிடுமுறை வகுப்புகளுக்கு ரூ.800லிருந்து ரூ.1000வரை கட்டணம் வாங்கலாம். ’சிறப்பு வகுப்புகளை நடத்த இடத்துக்கு எங்கே போவது? தனியாக வாடகைக்கு இடத்தைப் பிடித்தால் அதற்கே பாதிப் பணம் செலவாகுமே!’ என்று நினைப்பவர்கள் வீட்டின் மொட்டை மாடியையே உங்களுக்கான களமாக்கிக் கொள்ளலாம்.

 

birds-2672101_640

அதில் துணியால் பந்தல் போட்டு, கீழே பாய் விரித்து இயற்கையான சூழலில் வகுப்புகளை நடத்தலாம். ஆனால் மொட்டை மாடி என்பதால் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல… ஓவியப் பயிற்சிக்கான பெயிண்ட், பிரஷ், கண்ணாடி, சார்ட் பேப்பர் போன்ற உபகரணங்களை நீங்கள்தான் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

 

”வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு குழந்தைகளை அணுகாமல் உங்கள் குழந்தையிடம் நீங்கள் எப்படி இயல்பாய், மகிழ்வாய் இருப்பீர்களோ, அதுபோன்ற அன்பை எந்தவொரு போலித்தனமும் இல்லாமல் அவர்களுக்கு வழங்கவேண்டும்.

 

கூடவே ஆரோக்கியமான நொறுக்குத்தீனியையும் அவர்களுக்கு அந்த நேரத்தில் வழங்கி வந்தால் அவர்கள் உங்கள் அக்கறையில் தன் தாயை உணர்வர்.

 

உங்கள் வகுப்புகளை அதன்பிறகு அவர்கள் நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். உங்கள் வகுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் மூலமாகவே பிரபலமடைய ஆரம்பிக்கும்.” என்கிறார் இந்தத் துறையில் அனுபவம் மிக்கவரான சினேகா ஸ்ரீனிவாசன்.

(தொடர்புக்கு: சினேகா ஸ்ரீனிவாசன் :6382412084)

-சு.கவிதா.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *