வெற்றிக்கதை படித்தால் தொழில் தொடங்கிவிடலாமா?

தொழில் முனைவோர் அனைவரிடமும் காணும் பொதுவான விஷயம் என்று ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? வெற்றிபெற்ற தொழில் முனைவோரின் வாழ்க்கை வரலாற்றை விலாவாரியாகப்படிப்பதுதான். புதிய தொழில் முனைவோருக்கு ஆலோசனை சொல்ல யாருமே இல்லாத நிலை இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆலோசனைகளைக் கொட்டுகிறார்கள். தொழிலில் வெற்றி பெற்றவர் தோல்வியடைந்தவர் தொழில் வேடிக்கை பார்த்தவர் என்று ஆலோசனை சொல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதை சரி என்றோ, தவறு என்றோ நான் இங்கு சொல்ல வரவில்லை.

super-hero-3083468_640

மாறாக, நமக்குக் கிடைக்கும் அறிவுரைகள், ஆலோசனைகளை நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுகுறித்துத்தான் இக்கட்டுரை பேசப்போகிறது.

இன்றைக்கு தொழிலில் வெற்றி பெற்றோரின் கதைகளை இணையத்தில் பத்திரிகைகளில் படிக்கிறோம். யூ டியூப் சானல்களில் அவர்களின் நேர்காணல்களைப் பார்க்கிறோம்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கண்டு வியக்கிறோம். இது தவறா? நிச்சயம் இல்லை.

 

நமது கேள்வியெல்லாம், இவற்றை எப்படி நமக்கு ஏற்றாற்போல பயன்படுத்தவிருக்கிறோம் என்பதுதான். பொதுவாக, ஒரு தொழில்முனைவோரின் வெற்றிக்கதையைப்படிக்கும்போது என்ன நடக்கிறது?

 

ஒரு எடுத்துக்காட்டின்மூலம் இதனை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். நீங்கள் ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திரு.திருபாய் அம்பானியின் வெற்றிக்கதையைப் படிக்கிறீர்கள். அது எவர் எழுதிய கதையாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதனைப் படிக்கும்போது உள்ளுக்குள் என்ன நடக்கிறது?  இனம் புரியாத ஒரு பரவசம்…ஒரு நம்பிக்கை…ஒரு உத்வேகம் உங்களுக்குக் கிடைக்கிறது.

 

  எதனால் இது நடக்கிறது? நம்மைப் போலவே ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர், தனது உழைப்பை மட்டுமே முதலீடாகக்கொண்டு  ஒரு வணிக சாம்ராஜ்யத்தையே கட்டியமைத்தது நம்மைப் பரவசப்படுத்துகிறது. அது நமது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.  அதேபோல நாமும் சாதிக்க முடியும் என்று தோன்றுகிறது.

 

  இதுவரை சரிதான். ஆனால் சிலர் இருக்கின்றனர்.. அவர்களுக்கு இது பத்தாது. நிறைய வெற்றிக்கதைகளைப் படிப்பர். கைகால் நரம்பெல்லாம் முறுக்கேறும். அடுத்து என்ன செய்வர் என்று கேட்கிறீர்களா?

 

மின்னல் வேகத்தில் அடுத்த வெற்றிக்கதையைப் படிக்கவோ/பார்க்கவோ தொடங்கிவிடுவர். அவர்களுக்குள் கனன்றுகொண்டிருக்கும் சொந்தத் தொழில் கனவு எனும் தீயை அணையாமல் பார்த்துக்கொள்கின்றனராம். அதற்காகத்தான் இந்த வாசிப்பு, யூ-டியூப் எல்லாமுமாம்…

 

சரி, எவ்வளவு நாட்களுக்கு அப்படிப் பார்த்துக்கொண்டே இருப்பார்களாம்? அவர்களுக்கும் தெரியாது. கேட்டால் சண்டைக்கு வந்துவிடுவர். வேண்டாம்! எப்போது தொழில் தொடங்குவீர்கள் என்று கேட்கலாமில்லையா! அப்போதுதான் திருதிருவென்று விழிப்பர்.

 

ஒரு விஷயத்தை புதிய தொழில்முனைவோர் புரிந்துகொள்ளவேண்டும். நம்மைப்புதுப்பித்துக்கொள்ளவும் தன்னம்பிக்கையை வளர்க்கவும் தொழிலில் முன்னோடிகளின் வரலாற்றைத்தெரிந்துகொள்வதில் தவறு ஏதுமில்லை. ஆனால் அதுவே உங்கள் தொழிலாக ஆகிவிடக்கூடாது. எதையும் முயற்சி செய்யாமல் ஏட்டுச்சுரைக்காயை மட்டும் கையில் வைத்துக்கொண்டிருந்தால் கறி சமைக்க முடியுமா?

 

business-2987962_640

இந்த வெற்றிக்கதை அனுபவங்களைப்பொறுத்தவரை நாம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க மறந்துவிடுகிறோம். இந்த வெற்றிக்கதை நூல்கள் பெரும்பாலும் அந்தத் தொழிலதிபர்களால் ‘தன் வரலாறாக’ எழுதப்படுவதில்லை.

அவர்கள் சொல்லக்கேட்டோ, அல்லது அவர்களைப்பற்றிப் படித்தோ பத்திரிகையாளர்கள் அல்லது எழுத்தாளர்கள்தாம் இவற்றை எழுதுவர். அவ்வாறு எழுதும்போது புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும்வகையில் எழுத்துநடையை லாவகமாகக் கையாள்வர்.

 

எடுத்துக்காட்டாக: “யோசித்தார் நம்ம ஆள். பளிச்-என்று ஒரு ஐடியா! கொஞ்சம் கூடுதல் உழைப்பு மட்டும் தேவைப்பட்டது. அடுத்த சில நாட்களில் அவரது கையில் காசோலைகள் கொட்டத் தொடங்கின” என்று ஒரு தொழில்முனைவோரின் வெற்றிக்கதையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

 

இவ்வாறு எழுதுவதன் நோக்கம், ‘மாற்றி யோசி’ என்று வாசகனைத் தூண்டுவதுதான். வார்த்தை ஜாலம் காரணமாக, அந்தத் தொழில்முனைவோரின் கடும் முயற்சி, உழைப்பு, ஆய்வு மிக எளிதான ஒரு விஷயம்போல சொல்லப்பட்டுவிட்டது.

 

இதனைப்படிக்கும் புதிய தொழில்முனைவோர் ஒன்றை கவனிக்கவேண்டும். பளிச்-சென்று ஒரு ஐடியா வருவதற்குமுன்பு அந்தத்தொழில் முனைவோர் எவ்வளவு ஆய்வு செய்திருப்பார். அந்தரத்திலிருந்து, சூனியத்திலிருந்து எந்தக் கண்டுபிடிப்பும் வந்துவிடுவதில்லை. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். இதனை எழுத்தாளர்/நூலாசிரியர் எழுதாமல் விட்டிருக்கலாம். நீங்கள்தான் ஊகித்துக்கொள்ளவேண்டும்.  ஒரு சூப்பர் ஐடியாவை வைத்துக்கொண்டு கொஞ்சூண்டு உழைத்தவுடன் காசோலைகள் கொட்டுமா என்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளவேண்டும்.  அற்புதமான ஐடியாவுக்கு செயல் வடிவம் கொடுக்க அந்தத் தொழில்முனைவோர் எவ்வளவு பாடுபட்டிருப்பார் என்பதை நூலாசிரியர் உங்கள் கற்பனைக்கே விட்டுவிட்டார் என்று புரிந்துகொள்ளுங்கள்.

 

எந்த நாடாக இருந்தாலும் சரி, எந்த மொழி பேசும் தொழில் முனைவோராக இருந்தாலும் சரி, எந்தத்துறையாக இருந்தாலும் அவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தாமல் முன்னேறியிருக்கமுடியாது.எல்லா ‘வெற்றிக்கதை’களின் அடிநாதமும் அதுதான். அதேபோல ‘மாற்றி’ யோசிப்பதும் தொழிலில் உங்களை வெற்றிபெறச்செய்யும்.

 

வெற்றிக்கதைகளைப்படித்துவிட்டு மோட்டுவளையைப்பார்த்துக்கொண்டு இருக்கும்போது உங்களுக்குக் கிடைக்கும் புரிதல் தனி. நீங்களை உங்கள் தொழிலைத் தொடங்கி நடத்தும்போதே அதே புத்தக வரிகள் (அல்லது தொழில்முனைவோரின் வெற்றி வீடியோ) உங்களுக்கு வேறுவிதமான புரிதலை ஏற்படுத்தும். தொழில்துறை முன்னோடிகளின் வாழ்க்கைப்பாடத்திலிருந்து நமக்குப்பொருந்தக்கூடிய அம்சம் எது என்பதைப்பார்த்து அதை நடைமுறைப்படுத்துவதே புத்திசாலித்தனம்.

business-2409456_640

‘போருக்குப்போகாதவரை ஒருவனுக்கு  வீரன் என்று சொல்லிக்கொள்ளத்தகுதி இல்லை’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. ‘இவ்வளவு தொழில் நூல்களைப் படிக்கிறாயே, எப்போது தொழில் செய்யப்போகிறாய்?’ என்று யாராவது கேட்டுவிட்டால் என்ன செய்வது? எனவே, உடனே களமிறங்குங்கள்.

 

தொழில்துறை முன்னோடிகளின் வரலாறுகளில் உள்ள பட்டறிவை உங்கள் அனுபவ அறிவோடு ஒப்பிட்டு கொண்டுசொல்லும்போதுதான் அவற்றால் உங்களுக்கு பலன் கிடைக்கும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்து செயலில் இறங்குங்கள். புத்தகங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலிருந்தும்கூட தொழில்முன்னோடிகள் கைகொடுக்கவும் அறிவைப்பகிரவும் தாமாகவே வருவார்கள்.

 

-அருண்மொழி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *