ஆயுத பூஜைக்கு அட்டகாசமான 5 தீர்மானங்கள்

ஆயுத பூஜைக்கு அட்டகாசமான 5 தீர்மானங்கள்

ஒருவர் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும், அவர் எவ்விதமான கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் (இல்லாவிட்டாலும்கூட) அவர் வணங்கும் முதல் தெய்வம் என்றால் அது நிச்சயம், அவரது தொழில்தான். அதனால்தான் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று நம் முன்னோர் சொல்லிவைத்தனர். அதனை உலகமெங்கும் கொண்டாடும் நாள்தான் ‘மே’தினம்.

அதேநேரத்தில் நம் நாட்டில் கொண்டாடப்படும் உழைப்பாளர் தினம் என்பது ஆயுத பூஜைதான். போர்த்தொழில் செய்தோர் தங்கள் ஆயுதங்களை வணங்கும் நாளாக இது தொடங்கியிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சாம்ராட் அசோகர்தான் இதனைத் தொடங்கி வைத்தார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், செய்யும் தொழிலுக்கு உதவும் கருவிகளை மதித்துப் போற்றும் நாளாக இந்துக்களால் கொண்டாடப்படும் நாள்தான் ஆயுத பூஜை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

உழைப்பையும் உழைப்புக்கு உதவியாக இருக்கும் தொழிற்கருவிகளையும் போற்றும் இந்த நாளில் நாம் என்னவெல்லாம் செய்கிறோம்? தொழிற்சாலை இயந்திரங்கள், கணிப்பொறிகள், வேளாண் கருவிகள், எழுதுபொருட்கள் முதலான அனைத்துக்கும் மரியாதை செய்கிறோம். பூஜை அறையில் வைத்து வணங்குகிறோம்.

 

கல்விக் கடவுளான கலைமகளைப் போற்றும் வகையில் பாடநூல்கள், எழுதுகோல்கள் முதலியவற்றையும் திலகமிட்டுப் போற்றுகிறோம். வண்டி வாகனங்களைக் கழுவித் தூய்மைப்படுத்தி அவற்றையும் அங்கீகரிக்கிறோம்.

அதனோடு சேர்த்து இவற்றையும் செய்தால் ஆயுத பூஜை இன்னும் சிறக்குமல்லவா!

1.ஒரு நாள் போதுமா?

ஆண்டுக்கு ஒரேமுறை மட்டும் இயந்திரங்களையும் பணியிடத்தையும் தூய்மைப்படுத்தினால் போதுமா? ஆண்டுக்கு ஒரு முறை மட்டும்தான் உணவு உண்கிறோமா? சுவாசிக்கிறோமா? இல்லையே! அதேபோல தொழிற்சாலையோ, பணியிடமோ-எதுவாக இருந்தாலும் ஆயுதபூஜைவரை காத்திருந்துதான் தூய்மைப்படுத்த வேண்டுமா? கொஞ்சம் மாற்றி யோசியுங்கள். தூய்மைதான் கடவுள் தன்மைக்கு அடுத்த தெய்வீகத்தன்மை என்று சொல்லக்கேட்டிருக்கிறோம்.

தூய்மையான தொழிற்கூடமும் அலுவலகமும் நாள்தோறும் நாம் நம் நாளைப் புத்துணர்வுடன் தொடங்க ஊக்கமாக அமையும் இல்லையா! எனவே, இனி மாதத்துக்கு ஒரு முறையாவது தொழிற்சாலையை முழுவதுமாகத் தூய்மைப்படுத்துங்கள். இயந்திரங்களை தினமும் சுத்தம் செய்யுங்கள்.

அலுவலகம் எப்போதும் ‘பளிச்’ என்று இருக்கட்டும். சுத்தம் சோறு போடுகிறதோ இல்லையோ, நேர்மறையான எண்ணங்களை மனதுக்குள் கொண்டு வந்து கொட்டும்.

2.அவர்களே நாயகர்கள்!

நீங்கள் வளரும் தொழில் முனைவோராக இருந்தா லும் சரி, வளர்ந்த தொழிலதிபராக இருந்தாலும் சரி, உங்கள் மிகப்பெரிய சொத்து என்பது என்ன தெரியுமா? நிச்சயமாக உங்கள் ஊழியர்கள்தாம். அவர்கள் இன்றி நீங்களும் இல்லை, உங்கள் தொழிலும் இல்லை. எனவே, ஆயுத பூஜையன்று அவர்களே எல்லா உரிமைகளையும் எடுத்துக்கொள்ளட்டும். தொழிலைக் கொண்டாடட்டும். நீங்கள் தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பாருங்கள்.

விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்த ஊழியர்கள், சேதாரத்தை, செலவினத்தை மீதப்படுத்திய ஊழியர்கள், தங்களது சமூக சேவை/கலை/விளையாட்டு போன்ற நடவடிக்கைகளால் நிறுவனத்துக்குப் புகழ் சேர்த்த ஊழியர்கள் ஆகியோருக்குப் பரிசு, பாராட்டு, பதவி உயர்வு தரும் நாளாக ஆயுத பூஜையை ஆக்கலாம்.

3.அடுத்த கட்டத்தை நோக்கி…

எல்லாத் துறைகளும் தொழில்நுட்பத்தில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் காலம் இது. நீங்கள் மட்டும் அந்தக் காலத்து ஆளாகவே இருந்தால் எப்படி? உங்கள் துறையில் நீங்கள் பயன்படுத்தும் இயந்திரங்கள், மென்பொருட்கள், மின்னணு சாதனங்களை எப்படி குறைந்த செலவில் நாளது தேதிக்கு ஏற்றவாறு புதுப்பிப்பது (update) என்று பாருங்கள்.

தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டத்துக்கு நகரும்போது நீங்கள் உங்களைத் தக்க வைக்கிறீர்கள். அடுத்தபடியாக, உங்கள் செலவு குறைகிறது. வருவாய் அதிகரிக்கிறது. இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கும் நாளாக ஏன் ஆயுதபூஜையை ஆக்கிக்கொள்ளக்கூடாது?

4.பயிற்சி

நீங்கள் தொழிற்சாலையை நடத்துபவராக இருந்தால் இயந்திரங்களை இயக்குவோர், பழுதுநீக்குவோர் ஆகியோருக்குத் தேவையான புதிய பயிற்சிகளை வழங்கலாம். அதற்கான செலவையும் உங்கள் நிறுவனமே ஏற்றுக்கொள்ளலாம். ஊழியர்கள் பெற்ற பயிற்சி உங்கள் நிறுவனத்தின் செலவைக்குறைக்கும். அத்துடன் நேரம் மிச்சப்படும். உற்பத்தித்திறனும் கூடும்.

Image by PanJoyCZ from Pixabay

பயிற்சிபெற்ற ஊழியர் உடனடியாக பணியைவிட்டுச் சென்றுவிட்டால் என்ன செய்வது என்று சிந்திக்கத்தேவையில்லை. பொதுவாக இதுபோல நிறுவனங்களின் செலவில் பயிற்சிபெறும் ஊழியர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது.

ஒருவேளை மூன்று ஆண்டுகளுக்குள்ளாக அவ்வூழியர் வேலையைவிட்டுச் செல்வதாக இருந்தால் பயிற்சிக் கட்டணத்தொகையை அவர் நிறுவனத்துக்குச் செலுத்தியாக வேண்டும்.

5.சமரசம் உலாவும் இடமே!

நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் தொழிலாளர்-நிறுவனத் தகராறுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் நன்னாளாக ஆயுத பூஜை அமையட்டுமே! நீளும் தொழிற்தகராறுகள் தொழிலுக்கு மட்டுமல்ல, தொழிலாளருக்கும் துன்பத்தைத் தருபவையே. அவற்றை நீதிமன்றத்துக்கு வெளியே (out of the court)  தீர்க்கலாமே!

தொழிலாளர் நலத்துறையின் சமரச அலுவலர்கள் முன்னிலையிலோ, அல்லது நீதிமன்றத்தின்  சார்பில் நடத்தப்படும் மாற்றுமுறை தீர்வு நடுவங்கள் (Lok Adalat) மூலமாகவோ பேசி ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம். இதனால் பணம், நேரம், மன உளைச்சல் ஆகியவை தவிர்க்கப்படும். தொழிலாளர்-தொழில் நிறுவனத்துக்கு இடையேயான நல்லுறவும் வலுப்படும்.

– சிந்தன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *