கஞ்சத்தனம் நல்லதே! (தற்சார்புப் பொருளாதாரம்- தொடர் 2)

கஞ்சத்தனம் நல்லதே! (தற்சார்புப் பொருளாதாரம்- தொடர் 2)

என்ன நண்பர்களே…..கஞ்சத்தனம் எப்படி ஒரு நல்ல இயல்பாக இருக்கமுடியும் என்கிறீர்களா? கையில் இருக்கும் பணத்தை தாம்தூம் என்று செலவழித்து அழித்துவிட்டு, தான் மட்டுமல்லாது தன்னுடைய குடும்பத்தையும் சேர்த்துத் தெருவில் நிறுத்தும் சில மனிதர்களைப் பார்க்கும்போது கஞ்சத்தனம் அப்படி ஒன்றும் தவறான இயல்பல்ல என்றே தோன்றுகிறது.

இன்னும் சொல்லப்போனால் பொருட்களை, உடமைகளை முறையாக, முழுவதுமாகப் பயன்படுத்துபவர்களை இந்த உலகம் கஞ்சன் என்றே அழைக்கிறது.

நீங்கள் சுருளிராஜனா?

நடிகர் சுருளிராஜன் நடித்த “மாந்தோப்புக் கிளியே” என்கிற திரைப்படத்தில் அவர் சரியான கஞ்சனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பார்.

அதிலும் சுருளிராஜன் நடித்த காட்சிகள் அதிகம் மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் சிக்கனமாக இருங்கள் என்கிற செய்தியைத்தான் அவரது கதாபாத்திரம் நமக்கு உணர்த்த ஆசைப்பட்டது.

அழகர்சாமி தாத்தா

அதேபோல ’பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமலை சிகரெட் அட்டையில் கணக்கெழுதும் இயல்புள்ள மனிதராகக் காட்டியிருப்பார்கள். நான் சிறுபிள்ளையாக இருந்தபோது எங்கள் கிராமத்தில் அழகர்சாமி தாத்தா என்றொருவர் இருந்தார்.

அவர் பிறர்  பயன்படுத்திவிட்டுத் தூர எறியும் சிகரெட் அட்டைகளை மெனக்கெட்டுச் சேகரிப்பார். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாகக் கணக்கெழுதப் பயன்படுத்துவார். அப்பொழுதெல்லாம் நானும் அவரைக் கருமி என்றே நினைத்திருக்கிறேன்.

ஆனால் கணக்கெழுதுவதற்காக நூறு, இருநூறு என்று பணத்தைப் போட்டு நான் வாங்கிய நாட்குறிப்பு பயன்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பதைப்  பார்க்கும்போதெல்லாம் அழகர்சாமி தாத்தாவின் நினைவு வந்துபோகிறது.

பால் பாயிண்ட் பேனா

இன்றைய காலகட்டத்தில் சற்று வளர்ந்த பிள்ளைகள் இருக்கின்ற வீட்டில் அவர்கள் எழுதுவதற்குப் பயன்படுத்துகின்ற பேனாவுக்கு ஆகும் செலவு அதிகம். ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இந்தச் செலவு இருப்பதால் இதை நாம் யாருமே பெரிதுபடுத்துவதில்லை.

அதிலும் பால் பாயின்ட்-பேனா(ball pen) போன்றவை தீரப்போகும் நிலைக்கு வந்தவுடனேயே அதைத் தூக்கிப்போட்டுவிட்டுப் புதிதாக ஒரு பேனாவை வாங்குபவர்களாக இந்தக்காலப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

’பகவதி’  திரைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் நடிகர் விஜய் தீரப்போகும் நிலையில் இருக்கின்ற பால் பேனாவில் உள்ள  ரீஃபிலை வெளியே எடுத்து அதனை ஊதி, ஊதிப் பயன்படுத்துவார். நாமும் சிறுபிள்ளைகளாக இருந்தபோது பால் பாயின்ட் பேனாவை உதறி உதறி, ஊதி, ஊதி கடைசிவரை அதனைப் பயன்படுத்தியவர்கள்தானே?

காலண்டர் அட்டை

இவ்வளவு ஏன்? நம்மில் பலர் பாடப் புத்தகங்களுக்குக்கூட பழைய மாத நாட்காட்டியில் உள்ள தாள்களால் அட்டை போட்டுத்தான் பயன்படுத்தியிருக்கிறோம். ஆனால் இப்போதோ பள்ளி ஆரம்பித்தவுடன் குழந்தைகளின் பாடப்புத்தகங்களுக்கு அட்டை போடுவதற்காக  பழுப்பு அட்டைகளை(brown sheet)மொத்தமாகக் காசு கொடுத்து வாங்கிவிடுகிறோம்.

அந்தக் கல்வியாண்டு முடியும்போது பாதிப் பழுப்பு அட்டைகள் மட்டுமே பயன்படுத்திவிட்டு மீதியை அப்படியே வைத்துவிடுகிறோம். பின்னர் இந்தப் பழுப்பு அட்டைகள் இருப்பதையே மறந்து அடுத்த கல்வியாண்டுக்கு மறுபடியும் புதிதாக பழுப்பு அட்டைகள் வாங்குகிறோம். இதனால் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அளவு பணம் வீணாவதை நாம் கண்டுகொள்வதேயில்லை.

சித்ராவின் கைவண்ணம்

இதைப்பற்றிப் பேசும்போது எனது பக்கத்து வீட்டுக்காரரான சித்ராவைப் பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது. தன்னுடைய குழந்தைகளின் பழைய நோட்டுப் புத்தகங்களில் இருக்கும் எழுதப்படாத தாள்களைக் கிழித்து பெரிய ஊசி கொண்டு அவற்றைத் தைத்து ரப் நோட்டுக்களை(rough note) அவர் தயாரித்து விடுவார்.

வீட்டில் பாடங்களை எழுதிப்பார்க்க மற்றும் பள்ளியில் ஆசிரியர்கள் சொல்வதைக் குறிப்பெடுக்க அந்த  நோட்டுக்களைத்தான் அவரது குழந்தைகள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதுகுறித்த எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாமல் நம்மில் பலர் ஒரு நோட்டுப் புத்தகம் இருபது ரூபாய் என்று ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் அதிகபட்சமாக  ஐநூறு ரூபாய் வரைக்கும் ரஃப் நோட்டுக்கள் வாங்குவதற்காக மட்டும் செலவிட்டுக்கொண்டிருக்கிறோம்.

மாத நாட்காட்டியின் பயன் இதுவென்றால், தினசரி நாட்காட்டியின் பயன்பாடு வேறுவிதமாக இருக்கிறது. என்னுடைய தோழி ஒருவர் தினசரி நாட்காட்டியில் உள்ள தாள்களை ஒவ்வொரு நாளும் கிழித்துக் கிழித்து  அதைப் பத்திரமாகச் சேமித்து வருவார்.

குறிப்பிட்ட அளவு சேர்ந்ததும் அதனைக் கோவிலில் கொண்டுபோய் வைத்துவிடுவார். இந்தத் தாள்கள் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் விபூதி, குங்குமம் மடித்துவைத்துக்கொள்ள உதவும் என்பதற்காக அவர் இதனைச் செய்துவருகிறார் என்பதை அறிந்ததும் ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு காய்

Image by M Ameen from Pixabay

அதேபோல என்னுடைய இன்னுமொரு தோழி ஒரே இடத்தில் எல்லாக் காய்கறிகளையும் வாங்கமாட்டார். ஒரு கடையில் வெங்காயம், தக்காளி மட்டும் விலை மலிவாகக் கிடைக்கும். மற்றுமொரு கடையில் கீரை வகைகள் சல்லிசாகக் கிடைக்கும். மற்ற காய்கறிகள் குறிப்பிட்ட அந்தக் கடையில் விலை மலிவாகக் கிடைக்கும் என்று சொல்லி, ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி காய்கறிகளை வாங்குவார்.

“இப்படி அலையறதுனால பெரிசா என்ன கிடைக்கப்போகுது?” என்று அவரிடம் கேட்டால்,  “இப்படிப் பார்த்துப் பார்த்து விலை மலிவாக விற்கும் இடங்களில் காய்கறிகளை வாங்குவதால் ஒவ்வொரு முறையும் மொத்தமாக எனக்கு இருபது ரூபாய் மிச்சமாகிறது. இந்தப் பணத்தில் என் பிள்ளைக்கு ஏதாவது சாப்பிட வாங்கிக்கொண்டு செல்வேன்” என்பார் அவர்.

இது ஒருபுறமிருக்க முன்பே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இந்தக் கொரோனா காலத்தில் மிக எளிமையாக நடந்தேறுகின்றன. இப்படி எளிமையாகத் திருமணத்தை நடத்திவிட்டு இதன்மூலம் மிச்சமான பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய சில தம்பதி குறித்த செய்திகளையும் சமீபத்தில் நான் படித்தேன்.

சிக்கனத் திருமணம்

திருமணம் பற்றிப் பேசும்போது எனது தூரத்து உறவினர் வீட்டுத் திருமணம் குறித்துப் பேசாமலும் இருக்கமுடியாது. அவர் தனது மகளின் திருமணத்தை மிக எளிமையாகக் கோவிலில் நடத்தினார். பின்னர் வரவேற்பு நிகழ்வை ஒரு சிறு கூடத்தில் நடத்தினார். கேசரி, இட்லி, ஊத்தப்பம், சாம்பார், சட்னி ஆகியவை  பாக்கு இலைத் தட்டில் வைத்துப் பரிமாறப்பட்டன.

“ஊர்ப் பெருமைக்காக இலை நிறைய வகைவகையான உணவைப் பரிமாறுவதால் என்ன பயன்? இலையில் பரிமாறப்படும் உணவு வகைகளில் பாதி வீணாக்கப்பட்டு குப்பைத் தொட்டிக்குத்தான் செல்கின்றன.

அதற்குப் பதிலாக இப்படி எளிமையாக விருந்தை வைத்து அதன்மூலம் மிச்சமாகும் பணத்தின் ஒருபகுதியை எளியமக்களுக்காகவும், மீதியுள்ள பணத்தை மணமக்களின் எதிர்கால வாழ்க்கைக்காவும் கொடுக்க முடிவெடுத்துள்ளேன்” என்று அவர் சொன்னபோது அவரைக் கஞ்சன் என்று மனதிற்குள் திட்டியதற்காக நாங்கள் வெட்கப்பட்டோம்.

பழசும் புதுசும்

அதேபோல இருபதாயிரம், முப்பதாயிரம் என்று விலைகொடுத்து தன்னுடைய திருமணப் புடவையை வாங்காமல் அம்மாவின் திருமணப் புடவையில் சில நகாசு வேலைகளைச் செய்து அதனை மெருகேற்றி தன்னுடைய திருமணத்தன்று அதையே உடுத்திக்கொண்ட இளம்பெண் குறித்த செய்தியைப் படித்தபோது இன்றைய சூழ்நிலையில் அதீத சிக்கனம் வாழ்வை வளமாக்கும் என்றே தோன்றுகிறது.

அவர்தாம் பெரியார்!

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ’பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் குறித்த செய்தியை உங்களிடம் பகிர விரும்புகிறேன். தந்தை பெரியார் நீண்ட தூரப் பயணத்திற்கு ஒரே ரயிலைப் பயன்படுத்தமாட்டாராம்.

எடுத்துக்காட்டாக, திருச்சியிலிருந்து சேலம் செல்வதற்கு நூற்றியைம்பது ரூபாய் ரயில் கட்டணம் ஆகிறது என்றால் அவர் நேரடி ரயிலைப் பயன்படுத்தாமல் திருச்சியிலிருந்து அடுத்த பெரிய நிறுத்தத்தில் இறங்குவாராம்.

அடுத்த ரயிலைப் பிடித்து இப்படியே சேலம் சென்றடைவாராம். இப்படி ஒரே வண்டியில் செல்லாமல் இடையில் நிறுத்தி, அடுத்த வண்டியில் ஏறுவதால் நேரடிக் கட்டணத்தைவிட பத்து ரூபாய் குறைவாகவே இருக்கிறது என்றும், இந்தப் பத்து ரூபாய் ஒரு எளிய மனிதருக்குப் பயன்படும் என்பதால் இப்படிச் செல்வதாகவும் அவர் சொல்வாராம். அப்படி சிக்கனமாக சேமித்தால்தான் அந்தக் காசு பொதுக்காரியங்களுக்குப் பயன்படும் என்பாராம்.

என்ன நண்பர்களே…

இப்போது சொல்லுங்கள், கஞ்சத்தனம் நல்லதுதானே?

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *