சீன அதிபரின் வருகை ஏன் முக்கியமானது?

சீன அதிபரின் வருகை ஏன் முக்கியமானது?

மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ள சீன அதிபர் ஜின் பிங் பற்றியும் சீன-இந்திய உறவைப்பற்றியும்தான் இன்று உலகமே பேசிக்கொண்டிருக்கிறது. ஒரு மாதமாக தமிழக அரசு ஊழியர்கள் இரவு பகலாக மாமல்லபுரத்தைத் தூய்மைப்படுத்தியும், அழகுபடுத்தியும் வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக அரசு இயந்திரமுமே பரபரவென்று இருக்கிறது.

எல்லா ஊடகங்களிலும் இதே செய்தியாக இருக்கிறது. 7 அடுக்குக்கும் மேல் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்தில் பல மாற்றங்கள், பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்குக் கடற்கரை சாலை ஆகிய பகுதிகளிலில் பல நிறுவனங்கள் இன்று விடுமுறையை அறிவித்துவிட்டன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு பணித்துவிட்டன.

எதற்காக இந்த ‘முறைசாரா’ சந்திப்பு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றுகிறது?

பல காரணங்கள் இருக்கின்றன. கலாச்சார, மொழி, பண்பாட்டு, பொருளாதார அடிப்படையில் சீன அதிபரின் தமிழக வருகை முக்கியத்துவம் வாய்ந்தது.

Xi Jinping. Poto: Adnilton Farias/VPR

சோஷலிச நாடான சீனாவை முதன்முதலாக அங்கீகரித்த-கம்யூனிசத்தை ஏற்காத நாடு என்றால் அது இந்தியாதான். சீனாவுக்கும் இந்தியாவுக்குமான நல்லுறவுக்கு அன்றைய பிரதமர் நேரு பெரும் காரணமாக இருந்தார். அவருக்குப் பிறகு பிரதமர் பதவியை அலங்கரித்த ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாயி முதலிய பலரும் இந்திய-சீன உறவுக்கு அடித்தளமிட்டிருக்கின்றனர்.

2014ல் சீன அதிபர் ஸி ஜின் பிங் இந்தியாவுக்கு வந்தபோது பல்வேறு துறைகள் தொடர்பான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இன்னொரு வியப்பூட்டும் செய்தியையும் தெரிந்துகொள்ளுங்கள். 1960 களிலேயே தமிழகத்துக்கு வந்திருக்கிறார் அன்றைய சீன அதிபர் சூ யென் லாய். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவமனையையும் அன்றைக்குத் திறந்து வைத்திருக்கிறார்.

இத்தனைக்கும் நமக்கும் சீனாவுக்கும் 1962ல் எல்லையில் போரே நடந்தது. அருணாச்சலப் பிரதேசம், திபெத் பிரச்சனை, காஷ்மீரின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பு ஆகியவை இன்றளவுக்கும் இரு நாடுகளின் நட்புறவைப் பதம் பார்ப்பவையாகவே தொடர்கின்றன.

இருப்பினும் எதற்காக நம்மவர்களும் சீனர்களும் இந்த சந்திப்பில் நெகிழ்கின்றனர் என்றால் காரணம் இருக்கிறது. அதுதான் நமக்கும் சீனர்களுக்கும் இடையேயான தொப்புள் கொடி உறவு. போகர் முதல் போதி தர்மர்வரை பல்துறை வல்லுநர்கள் இங்கிருந்து சீனாவுக்குச் சென்று வேதியியல், மருத்துவத்துறையில் கணிசமான பங்களிப்பைச் செலுத்தியிருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம்.

யூவான் சுவாங் முதலான பல்வேறு சீனப் பயணிகள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்து நமது வாழ்நிலையை சீனத்தில் பதிவு செய்திருக்கின்றனர். அன்றைய இந்திய மன்னர்கள் அவர்களுக்கு ஏகப்பட்ட உதவிகளைச் செய்திருக்கின்றனர். நமது வரலாற்றை எழுதுவதில் பெரும் பங்களிப்பை சீனப் பயணக்குறிப்புகள் வழங்குகின்றன.

இவையெல்லாம் இடைப்பட்ட காலத்தில்தான். வெகு காலத்துக்கு முன்பே தமிழகம், சீனாவுடன் வணிகத்தோழனாக இருந்திருக்கிறது. அன்றைய பெருநகரமாக இருந்த காஞ்சிபுரம்தான் சீனத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான வணிகத்துக்கு சாட்சியாக இருந்திருக்கிறது.

மாமல்லபுரம் துறைமுகம்தான் சீனத்துறைமுகங்களை இணைக்கும் பாலமாக இருந்திருக்கிறது. அதனால்தான் இம்முறை இந்தியப்பிரதமருடனான சந்திப்புக்கு தில்லியைத் தேர்ந்தெடுக்காமல் காஞ்சிபுரத்தின் பண்டைய துறைமுக நகரமான மாமல்லபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆயிரம் உரசல்கள் இருந்தாலும் சீனர்கள் நம்முடனான கலாச்சார உறவைத் துண்டிக்க விரும்பியதே இல்லை. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக சீன வானொலியைச் சொல்லலாம். 50 ஆண்டுகளாக தமிழ் நிகழ்ச்சிகளை அது வழங்கிவருகிறது. தமிழத்தில் அந்த வானொலிக்கு நேயர் மன்றங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. திருக்குறளையும் கன்பூஷியஸ் தத்துவங்கள், சீனப் பழமொழிகளையும் ஒப்பிட்டு அற்புதமான வீடியோவை அண்மையில் வெளியிட்டிருக்கிறது தமிழ்ப்பிரிவு.

சீனப் பல்கலைக்கழங்கள் பலவற்றிலும் இந்திய மொழிகள் கற்றுக்கொடுக்கப்பட்டுவருகின்றன. தமிழகத்தில் சீன மொழி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இது இன்னும் அடுத்தடுத்த கட்டங்களை எட்டினால் இரு நாடுகளின் கலாச்சார-பண்பாட்டு உறவுகளுக்கும் நன்மை பயக்கும்.

தற்போது இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜின்பிங் இடையிலான சந்திப்பு ‘முறைசாரா சந்திப்பு’தான் என்றாலும், அதிகாரப்பூர்வமான விஷயங்களைப் பேசவும் பரிமாறவும் எவ்விதமான தடைகளும் இல்லை. எனவே, எல்லைப் பிரச்சனை, ஜம்மு-காஷ்மீர் விஷயத்தில் நிலைப்பாடு, இறக்குமதி-ஏற்றுமதியில் உள்ள தடைகளை நீக்குதல், விசா நடைமுறைகளில் உள்ள கட்டுப்பாடுகளைக் களைதல் ஆகியவை பேசப்படலாம்.

அல்லது “உங்கள் ஊரில் உணவு பிரமாதம், கலை நிகழ்ச்சிகள் அட்டகாசம்” என்று ஜின்பிங் சொல்வதோடும் நிறைவுபெறலாம். இவ்விரண்டில் எது நடந்தாலும் அது நமக்கு நல்லதே.

எப்படி என்று கேட்கிறீர்களா?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரும், உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசின் தலைவரும் பரஸ்பரம் சுமுகமாகப் பேசி, பல்வேறு கடந்தகால கசப்புகளைக் களைய இது ஒரு வாய்ப்பை அளிக்கும். மேலும் நிகழ்கால, எதிர்கால ஒத்துழைப்பைப்பற்றிய புரிதலுக்கும் இது ஒரு நல் வாய்ப்பு. அடுத்தடுத்து நடக்க இருக்கிற வணிக, ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு இணக்கமான சூழல் தேவை.

அதற்கான தொடக்கப்புள்ளிதான் இந்த முறைசாரா சந்திப்பு. இது வெற்றி பெறட்டும்!

தமிழ்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *