லே-ஆப் காலத்தை சிரமமின்றிக் கடக்க…

லே-ஆப் காலத்தை சிரமமின்றிக் கடக்க…

நிறைய பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களில் அவ்வப்போது LAYOFF  என்கிற பணிநீக்கம் நடந்துகொண்டேதான் இருக்கிறது.  அதிலும் தற்போது கொரொனா ஊரடங்கு, சும்மா கிடந்த சங்கை அநியாயத்துக்கு ஊதிக் கெடுத்துவருகிறது. 

கைநிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை என்று நம்மை வளமான வாழ்க்கையின் உச்சத்தில் வைக்கும் இதேவேலை சில சமயங்களில் திடீரென்று பறிக்கப்பட்டுவிடும்பொழுது அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வேலை பறிபோன ஊழியர்கள் தவித்துவிடுகிறார்கள். .

அடுத்த வேலை சீக்கிரம் கிடைத்துவிட்டால் இந்தச் சூழ்நிலையை சுலபமாகக் கடந்துவிடலாம். ஆனால் புதிய வேலை கிடைக்கத் தாமதமாகிறபோது குடும்பம், குழந்தைகள் பராமரிப்புச் செலவுகள், மருத்துவச் செலவுகள், வீட்டு ஈ.எம்.ஐ என்று எல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாகக் கண்முன்னே நிற்கும்பொழுது  நிலைமையை சமாளிக்க முடியாமல் சிலர் திடீரென்று பக்கவாதம், இதயநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

எதிர்மறை எண்ணம் வேண்டாமே!

இன்னும் சிலரோ தற்கொலை போன்ற எதிர்மறையான நிலையை நோக்கியும் செல்கிறார்கள். பொருளாதாரம் சார்ந்த அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் மனரீதியிலான பாதிப்புக்கு உள்ளாகுபவர்களும் அதிகம்.

ஒரு வேலை பறிபோனதற்காக உடலை வருத்திக் கொள்வதும், உயிரை மாய்த்துக் கொள்வதும் எவ்விதம் சரியானதாக இருக்க முடியும்? அதுமட்டுமல்லாமல் கணநேரத்தில் நாம் எடுக்கின்ற தவறான முடிவு நம்மை மட்டுமல்லாமல் நம்மைச் சார்ந்து வாழும் குடும்பத்தினரையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும் என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் புத்திசாலித்தனத்தோடு செயல்பட்டால் இந்த லே-ஆப் காலத்தை சிரமமின்றிக் கடந்துவிடலாம்.

சிரமமின்றிக் கடக்க என்ன செய்யலாம்?

வேலையிலிருக்கும் ஒவ்வொரு ஊழியரும் தனது ஆறுமாத சம்பளத்தை சேமிப்பாக வைத்திருக்கவேண்டும். அதுதான் சரியான நிதி நிர்வாகம் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். எனவே வேலையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கைநிறைய சம்பளம் மாதாமாதம்  வந்துகொண்டிருந்தாலும் “இப்போது நமக்கு வேலை இருக்கிறது. ஒருவேளை நம்முடைய வேலை திடீரென்று பறிபோய்விட்டால் குடும்பத்தை நகர்த்த பணத்திற்கு எங்கே போவது? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.

இந்த முன்னெச்சரிக்கை உணர்வு மனதிற்குள் வந்துவிட்டதா? ஆம் என்றால் மாதாமாதம் ஐயாயிரம்,பத்தாயிரம் என்று குறிப்பிட்ட தொகையைத் தனியாக சேமிக்கத் தொடங்குங்கள். இப்படி ஒரு நான்கைந்து வருடங்கள் நீங்கள் செய்தீர்கள் என்றால் ஒரு கணிசமான தொகை சேர்ந்துவிடும்.

இந்தப் பணத்தை வேறு எதற்காகவும் செலவு செய்யாமல் சேமிப்பைத் தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும். நீங்கள் சேமிக்கும் இந்தப் பணம் LAYOFF காலத்தில் குடும்பத்தை நகர்த்த , ஈ.எம்.ஐ கட்ட  உங்களுக்குத் துணை நிற்கும். நீங்களும் எவ்விதப் பயமும், பதட்டமுமின்றி புதிய வேலையைத் தேடலாம்.

திட்டம் போடுங்க!

லே-ஆப் காலத்தில் தாம்-தூம் என்று செலவு செய்யாமல் பட்ஜெட் போட்டு செலவுகள் செய்யவேண்டும். குடும்பத்தினர் அனைவரும் இந்தக் காலகட்டத்தில் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். ஹோட்டல், சினிமா, மால் போன்றவற்றுக்கு அதிகமாகப் பணம் செலவழிப்பதை குறிப்பாகத் தவிர்ப்பது நல்லது. அதேபோல வீட்டில் தொலைக்காட்சி நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருந்தால், அதை மாற்றி கையில் பணம் இருக்கிறதே என்று பெரிய அளவில் எல்.ஈ.டி தொலைக்காட்சி வாங்க முனையக் கூடாது.

அதையும் மீறி வீட்டிற்குத் தேவையான எந்தவொரு பொருளை வாங்கினாலும் சரி, கண்ணை மூடிக்கொண்டு சொன்ன விலைக்கு அவற்றை வாங்காமல் பேரம் பேசி நியாயமான விலைக்கு அவற்றை வாங்கவேண்டும். லே-ஆப் காலத்தில் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் விலைமதிப்பற்றது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ரகசியமல்ல!

நமக்கு நடந்த லே-ஆப் விஷயம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்று அதை மறைத்து மறைத்து வைக்காதீர்கள். வீட்டிற்குள்ளேயே முடங்கியும் கிடக்காதீர்கள். நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே இயல்பாக இருங்கள். மகிழ்ச்சியுடன்,உற்சாகத்துடன் வளைய வாருங்கள். குறிப்பாக உங்களது நண்பர்கள், உங்களது துறை சார்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகளிடம் உங்களது லே-ஆப் குறித்துப் பேசுங்கள். அவர்களிடமிருந்து உங்களுக்கு மாரல் சப்போர்ட் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுக்குப்  புதிய வேலை கிடைக்கவும் அவர்கள் உதவி செய்வார்கள்.

 வேலை கிடைக்கும் வரை சும்மாவே இருக்காமல் ஏதேனும் பகுதி நேர வேலையைத் தேடிக்கொள்ளலாம். ஈகோ எதுவுமில்லாமல் இதுபோன்ற வேலைகளைச் செய்யும்பொழுது, குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்கும். வாழ்க்கையில் மீண்டும் உயர்ந்துவிடலாம் என்கிற நம்பிக்கையும் மனதிற்குள் உண்டாகும்.

“வேலை தேடிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் கிடைக்கவேயில்லை” என்று அங்கலாய்ப்பதை தவிர்த்துவிட்டு அதற்கான மாற்று வழிகளை யோசிக்கலாம்.

குறிப்பாக எந்தத் துறையில் உங்களுக்கு அறிவும், ஆர்வமும் இருக்கிறதோ அது சார்ந்த சிறுதொழில் ஒன்றைத் தொடங்கி தொழில் முனைவோராக அவதாரம் எடுக்கலாம்.

சிறுதொழில் முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகளையும்,கடனுதவியையும் வழங்க அரசாங்கம் வழங்கிக்கொண்டேதான் இருக்கிறது. எனவே வேலைகேட்டு நிறுவனம் நிறுவனமாக ஏறி இறங்குவதைவிட தொழில் முனைவோராக மாறி, நான்கு பேருக்கு நாமே கெத்தாக வேலை கொடுக்கலாம்.

பாலா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *