ஷாப்பிங் மோகத்தைக் குறைக்க 10 வழிகள்

ஷாப்பிங் மோகத்தைக் குறைக்க 10 வழிகள்

வீட்டை விட்டு வெளியே சென்றாலே ஏதாவது செலவு செய்தே ஆகவேண்டும் (compulsive  spending)  என்கிற தீவிர மனநிலையில்  உள்ளவரா நீங்கள்? இதிலிருந்து தப்பிக்க நிறைய வழிகள் இருக்கின்றன.

1.முதலில் வகைவகையாய், ரகம்ரகமாய் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கிரெடிட் கார்டுகளை விட்டொழியுங்கள். கார்டு கையில் இருந்தால்,அது இருக்கின்ற தைரியத்தில்  எந்தப் பொருளைப் பார்த்தாலும் வாங்கவேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். அது இல்லையென்கிறபோது அடக்கி வாசிக்கவேண்டும் என்கிற உணர்வு வரத் தொடங்கும்.

2.கடன் அட்டையைத் தவிர்ப்பது போலவே கடைகளில் பொருட்களை வாங்குவது போன்ற பரிவர்த்தனைகளுக்கு டெபிட் கார்டைப் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். கையிலிருந்து பணத்தைக் கொடுங்கள். அப்பொழுதுதான  நாம் செய்கின்ற செலவு குறித்த ஒரு விழிப்புணர்வு நமக்குள் வரும்.

அதைவிட்டுவிட்டு டெபிட் கார்டு மூலம் மட்டுமே பரிவர்த்தனையை செய்தால் நம்முடைய செலவுகள் தேவையானவையா, தேவையற்றவையா என்பதை நம்மால் பகுத்தறியவே முடியாது. பணமும் அதுபோக்குக்குப்  போய்க்கொண்டிருக்கும்.

3.வார இறுதிநாட்கள் வந்துவிட்டால் மால்களைத் தேடி ஓடும் பழக்கத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமாக விடை கொடுங்கள். ஏனென்றால் அங்குள்ள அனைத்துக் கடைகளிலும் தென்படும் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று கூவும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் உங்களைப் போன்றவர்களை அதிகம் ஈர்த்துவிடும்.

Image by Hermann Traub from Pixabay

அதன்பிறகு பீங்கான் தட்டுக்கள், செயற்கைப் பூந்தொட்டிகள், கார்களில் தொங்கவிடப்படும் பொம்மைகள் என்று அவசியமில்லாத பொருட்களை அள்ளிக்கொண்டு வருகின்ற சூழ்நிலை வந்துவிடும்.

4.பண்டிகைக்காலம் வந்துவிட்டாலே அனைத்து  இணையக் கடைகளிலும் (shopping websites) போடப்பட்டிருக்கும் தள்ளுபடி குறித்த  அறிவிப்புகள் உங்களது அலைபேசியில் குறுந்தகவல்களாகவும் உங்களது மின்னஞ்சலில் மற்றும் முகநூலில்  செய்திகளாகவும் வந்து குவியும். இதுபோதாதா நீங்கள் மயங்க!

எனவே பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் தடை (பிளாக்) செய்யுங்கள். எந்த ஒரு தேவையற்ற தகவலும் உங்களது அலைபேசிக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

5.பார்க்கும் பொருட்களையெல்லாம் வாங்கவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுவது நல்லது. இல்லையென்றால் எந்தப் பொருளை வாங்க நினைத்துக் கடைக்குப் போகிறோமோ அதைத்தவிர கூடுதலாக நான்கைந்து தேவையில்லாத பொருட்களுக்கும் சேர்த்து பில் போடுகின்ற சூழ்நிலை வந்துவிடும்.

அதற்குப் பதிலாக உங்களுக்கு என்ன பொருள் தேவையோ அதை மட்டும் குறித்துக்கொண்டு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அண்ணாச்சி கடைக்குச் சென்று வாங்கிக்கொண்டு வந்துவிடுங்கள். இப்படித்தானே நாம் முன்பெல்லாம் வாழ்ந்தோம்!

6.விடுமுறை நாட்களில் பொழுதுபோகவில்லை என்று சிலர் விண்டோ ஷாப்பிங் செய்வதுண்டு. பொருட்கள் எதுவும் வாங்காமல் வெறுமனே கடைகளை சுற்றிப் பார்த்துவிட்டு வருவதுதான் விண்டோ ஷாப்பிங்.

ஆனால் வெளியே சென்றாலே ஏதாவது வாங்கியே ஆகவேண்டும் என்கிற மனநிலை கொண்டவர்கள் விண்டோ ஷாப்பிங் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் ஏற்கனவே பத்து ஜோடி செருப்பு வீட்டில் இருப்பது தெரிந்தும்  மறுபடியும் ஒரு ஜோடி செருப்பை அதிக விலைகொடுத்து வாங்கிவந்துவிடுவீர்கள்.

7.உங்கள் குடும்பத்தில் யார் மிகவும் சிக்கனமாக செலவு செய்யும் இயல்பு கொண்டவர் என்று பாருங்கள். முடிந்தவரை அந்தக் குறிப்பிட்ட  நபருடன் கடைகளுக்குச் செல்லுங்கள். நீங்கள் அவசியமில்லாத பொருளை வாங்க முற்படும்பொழுது நிச்சயம் அந்த நபர் உங்களைத் தடுப்பார். உங்கள் பணமும் தேவையற்ற செலவிலிருந்து காப்பாற்றப்படும்.

8.இவை எல்லாவற்றையும் தாண்டி ஏதாவது வாங்கியே ஆகவேண்டும் என்று கை பரபரக்கிறதா? அருகிலிருக்கும் நகைக்கடைக்குச் சென்று பத்து கிராம் அல்லது இருபது கிராம் வெள்ளிக் காசுகளை வாங்கி வையுங்கள்.

உங்களால் முடிந்தால் ஒரு கிராம் தங்கக் காசைக் கூட வாங்கி வைக்கலாம் (நகையாக வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது). இப்படி சிறுகச் சிறுகச் சேகரமாகும் தங்கமும் வெள்ளியும் பின்னொருநாள் உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும். உங்கள் செலவும் பயனுள்ள வகையில் அமையும்.

9.தேவையற்ற ஷாப்பிங்கைத் தவிர்க்க நண்பர்களும் கைகொடுப்பார்கள். உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்திலெல்லாம்  உங்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் கடற்கரை, கோவில் பூங்கா அல்லது ஏதேனும் ஒரு பொதுவிடத்தில் ஒன்று கூடுங்கள்.

மனம்விட்டுப் பேசிச் சிரித்து நேரத்தை செலவிடுங்கள். கடைக்குச் சென்று ஏதேனும் பொருட்கள் வாங்கியே ஆகவேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக உங்களைவிட்டு மறைய ஆரம்பிக்கும்.

10.தினமும் தூங்கச் செல்லும்முன் அன்றைய செலவு குறித்த கணக்கை ஒரு நோட்டில்,அல்லது கணினியில் (எக்ஸெல் பக்கத்தில்) குறித்து வையுங்கள். வெறுமனே அன்றைய நாளுக்கான மொத்த செலவுத் தொகையை மட்டும் குறித்து வைக்காமல் என்னென்ன விஷயங்களுக்காக அந்தப் பணம் செலவாகியிருக்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.

மாத இறுதியில் அந்த மாதம் செலவான மொத்தத் தொகையைக் கூட்டிப் பாருங்கள். அந்த செலவுகள் எதற்காகவெல்லாம்  மேற்கொள்ளப்பட்டன என்பதை உற்றுநோக்குங்கள்.

எதுவெல்லாம்  தேவையான செலவு, எதுவெல்லாம் தேவையற்ற  செலவு என்பது உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். “இல்லையில்லை.. எனக்கு இதுபோலச் செய்வதற்கெல்லாம் நேரமில்லை”  என்று சொல்லிவிடாதீர்கள்.

உழைத்துச் சேர்த்த பணம் பயனற்ற வழியில் செல்வது உங்கள் உழைப்பின் மகத்துவத்தைக் குறைக்கும் நிகழ்வு என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்.   

 -லட்சுமி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *