தீபாவளி பட்ஜெட் ஆலோசனைகள்

தீபாவளி பட்ஜெட் ஆலோசனைகள்

1.தீபாவளி கொண்டாடுவதற்கு ஆகும் செலவைவிட தீபாவளிக்காக சொந்த ஊருக்கு செல்வதற்கு ஆகும் செலவு மிகமிக அதிகம்.  ஏனென்றால் கடைசி நேரத்தில் அடித்துப் பிடித்து கடைசி நேரத்தில் பேருந்தைப் பிடிக்கின்ற போது அதற்கான கட்டணமும் வழக்கமான கட்டணத்தை விட மிக அதிகமாக இருக்கும். எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேருந்துப் பயணத்திற்கான  முன்பதிவை  செய்துவிடுங்கள். வீண் விரயத்தைத் தவிர்த்திடுங்கள்.

2.புத்தாடை இல்லாத தீபாவளி இல்லை. எனவே தீபாவளிக் கொண்டாட்டத்தில் புத்தாடைகள் வாங்கவென்று தனியாகப் பணம் ஒதுக்குவோம் இல்லையா?. இந்த இடத்தில்தான் சற்று கவனமுடன் செயல்படவேண்டும். குழந்தைகளுக்காக ஆடைகள் வாங்கும்போது, ஆயிரக்கணக்கில்  விலை கொடுத்து காக்ரா சோளி, கோட் சூட், ஷெர்வானி போன்றவற்றை வாங்காதீர்கள். 

Image by Marta Simon from Pixabay

ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மட்டுமேதான் குழந்தைகள் அதை அணிவர். மற்றபடி அவை பீரோவில்தான் தூங்கும். அதற்கு பதிலாக குழந்தைகள் தினசரி அணியும் வகையிலான பருத்தி ஆடைகள், அவர்களுக்குத் தேவையான உள்ளாடைகள் போன்றவற்றை வாங்குவது சிறந்தது.  வருடம் முழுக்க அவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள்.

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இதைப் பின்பற்றலாம். எடுத்துக்காட்டாக, வேலைக்குச் செல்லும் பெண்களாக இருப்பின் அதிகவிலை கொடுத்து தீபாவளிக்கு ஒரேயொரு பட்டுப்புடவை  வாங்குவதற்கு பதிலாக தினசரி அலுவலகத்திற்கு உடுத்திச் செல்ல எதுவாக இரண்டு மூன்று உடைகளை வாங்கலாம்.

3.அதேபோல தீபாவளியன்று பலகாரங்களுக்கும் முக்கிய இடமுண்டு. இப்போதெல்லாம் வீட்டில் இனிப்பு, பலகாரம் செய்யும் வழக்கத்தை கைவிட்டு, கடையில் அவற்றை வாங்கும் வழக்கத்தை கைகொண்டு விட்டோம். இதில் அதிகப் பணம் செலவாவதை  நாம் யோசிப்பதே இல்லை.

“இந்தப் பரபர வாழ்க்கையில் வீட்டில் இனிப்புகள்,பலகாரங்கள் செய்ய எது நேரம்?” என்று நம்மில் சிலர் கேட்கலாம். உண்மைதான். வேலைக்குச் செல்பவர்களுக்கு நேரம் இருக்காதுதான்.  

Image by Veerendra Tikhe from Pixabay

ஆனால் கடையில் பலகாரங்களை வாங்குவதற்கு பதிலாக இரண்டு மூன்று குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வீட்டிலேயே பலகாரங்கள் செய்ய ஒரு ஆள் போட்டு மொத்தமாகப் பலகாரங்களை செய்துகொடுக்கச் சொல்லி சரிசமமாகப் பிரித்துக் கொள்ளலாம்.  இதன் மூலம் வீட்டிலேயே செய்த  சுத்தமான பலகாரங்களை சகாய விலையில் பெற முடியும்.  பலகாரங்களின் அளவும் கணிசமாக இருக்கும்.

4.இனிப்பு, பலகாரங்களைத் தவிர தீபாவளிக்குத் தேவையான பட்டாசுகள், சமைப்பதற்குத் தேவையான மளிகைப் பொருட்கள், உலர் பழங்கள் போன்றவற்றை மொத்தவிலைக் கடைகளில் வாங்குவது சிறந்தது. 

குறிப்பாக பண்டிகைக் காலங்களில் உலர் பழங்கள் போன்றவை விற்கப்படும் கடைகளில் தள்ளுபடி இருக்கும். எங்கே தள்ளுபடி கிடைக்கிறது என்பதைக் கவனித்து மேற்சொன்ன பொருட்களை வாங்கினால் கொஞ்சம் பணத்தையும் மிச்சம் பிடிக்க முடியும்.

5.தீபாவளி என்றாலே விளக்குகள்,  தோரணங்கள் போன்ற அலங்காரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். ஆனால் அவற்றை குளிரூட்டப்பட்ட பெரிய கடைகளில் வாங்காதீர்கள். விலை அதிகமாக இருக்கும். அதற்குப் பதிலாக சாலையோரக் கடைகளில் வாங்குங்கள். விலையும் சற்று குறைவாக இருக்கும். உங்களால் அவர்களுக்கும் வருமானம் கிடைக்கும்.

6.பண்டிகைகள் எப்போதுமே நல்ல நினைவுகளைத் தருபவை. எனவே தீபாவளிப் பண்டிகையின் நினைவாக ஏதேனும் ஒரு சேமிப்பை ஆரம்பிக்கலாம்.  அல்லது தங்க,வெள்ளி நாணயங்களை வாங்கலாம்.

Image by Shameer Pk from Pixabay

7.குறிப்பாக தீபாவளி போனஸ் வாங்குபவர்கள் அவற்றில் ஒரு 30% அளவுக்காவது கட்டாயம் சேமிக்க வேண்டும். ஆனால் ஒன்று…. மாதத் தவணையில் பொருட்கள் வாங்குவது ஒருபோதும் சேமிப்பாகாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

-பாலாஜி

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on google
Google+
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *