மரத்தட்டுகள், தொன்னை ஏற்றுமதிக்குத் திட்டமிடலாமே!

மரத்தட்டுகள், தொன்னை ஏற்றுமதிக்குத் திட்டமிடலாமே!

சிறு, குறுந்தொழில்கள் மற்றும் ஏற்றுமதித் தொழில்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு பெரும் சவாலாக இருப்பதாகப் பல தரப்புகளிலிருந்தும் குரல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் கோவாவில் 37 ஆவது சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜி.எஸ்.டி) கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து தமிழகத்தின் சார்பாக சில கோரிக்கைகளை தமிழக அரசு வைத்திருந்தது.

அக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சாதகமான விடை கிடைத்துள்ளது. பலவகையான உணவு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள், கொப்பரைத்தேங்காய், கரும்பு, வெல்லம் முதலிய பொருட்களை சேமித்துவைக்கும் தொழில் நிறுவனங்களுக்கு (சேவைத் தொழில்களுக்கு) சரக்கு மற்றும் சேவை வரி முற்றிலுமாக விலக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, புளி மற்றும் மரத்தட்டுக்கள், தொன்னை ஆகியவற்றுக்கு வரிவிலக்கைத் தமிழகம் கோரிவந்தது. அது ஏற்கப்பட்டு, இவற்றுக்கு முற்றிலும் ஜி.எஸ்.டி. வரியிலிருந்த்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது வேளாண் சார் தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கும் அறிவுப்பு ஆகும்.

ஏற்கனவே தமிழக அரசு, மறுமுறை பயன்படுத்த இயலாத பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன்மூலம் பாக்கு மட்டை தட்டுக்கள், காகிதத்தால் ஆன கலன்கள் (பேப்பர் கப் முதலியவை), மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களைக்கொண்டு கட்டுமம் செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வோருக்கு நல்ல சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.

உணவகங்கள், விருந்துகள் ஆகியவற்றில் பொதுவாக எவர்சில்வர் பாத்திரங்கள் பயன்படுத்தப்படும். அவற்றைக் கழுவுவது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. தமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறை அதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. பிளஸ்டிக் தட்டுக்களில் சூடான உணவுகளை வைத்து உண்பது உடல் நலனுக்குக் கேடு என்பதைப் பலரும் உணர்ந்திருக்கின்றனர். எனவே, ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பாக்கு மட்டைத் தட்டுக்களைப் பயன்படுத்தலாம்.

பாக்கு மட்டை தயாரிப்பாளர்கள் இதனை எடுத்துக்கூறி, உணவகங்கள், உணவு தயாரித்து வழங்குவோர் (catering services) ஆகியோரிடம் பாக்கு மட்டைத் தட்டுக்களுக்கான ஆர்டர்களைப் பெறலாம். வெறும் தட்டுக்களோடு நிறுத்திவிடாமல் கிண்ணம், கரண்டி ஆகியவற்றையும் பாக்கு மட்டையாலேயே செய்துவிடமுடியும். தற்போதே பலரும் அத்தகைய பொருட்களைத் தயாரித்து வருகின்றனர்.

அதேபோல அரசமரம், ஆல மரம், பூவரச  இலைகளைத் தைத்து தையல் இலையாக உணவகங்களுக்கு விற்பனை செய்யலாம். தொன்னைகளைத் தயாரித்து கோவில்கள், சமூக சேவை நிறுவனங்களுக்கு வழங்கலாம் (இவற்றைத் தயாரிப்பதற்குத் தேவையான இயந்திரங்கள், டை ஆகியவை கிடைக்கின்றன).

 

வெளி நாடுகளில் இவைபோன்ற இயற்கைப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, ‘சுற்றுச் சூழலுக்கு இயைந்த பொருட்கள்’ என்று குறிப்பிட்டே ஆர்டர்கள் பெற முயலலாம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, மலேஷியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் இந்தியர்கள் கணிசமான அளவு வாழ்கின்றனர்.

அவர்கள் செல்லும் கோவில்களைக் குறிவைத்து தொன்னைகளை சந்தைப்படுத்தலாம் (உடனே இணையத்திற்குள் சென்று எங்கெல்லாம் புகழ்பெற்ற கோவில்கள் இருக்கின்றன என்று பாருங்கள். கோவில் நிர்வாகம் வாங்காவிட்டால் என்ன, கோவிலுக்கு நெருக்கமான உபயதாரர்களிடம் விற்கலாமே!) பாக்கு மட்டைத் தட்டுக்கள், தையல் இலைகளை உணவகங்களுக்கு விற்பனை செய்யலாம்.

தற்போது சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி உற்பத்திச் செலவைக் குறைத்து ஏற்றுமதி செய்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயக்கலாம் நண்பர்களே!

-தமிழ்

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.