ஜி.எஸ்.டி: விழுந்தது அடுத்த அடி!

ஜி.எஸ்.டி: விழுந்தது அடுத்த அடி!

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டபோதே பல்வேறு துறையினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் பன்முனை வரிவிதிப்பால் ஏற்பட்டுவந்த பல்வேறு சிக்கல்கள் இதனால் தீர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் தொழில்துறையினரிடம் இல்லாமல் இல்லை. ஆனால், நடந்ததோ வேறு.

முறையாக ஜி.எஸ்.டி. ரசீது பயன்படுத்தி அனைவரும் வணிகம் செய்தால், அதன் பலன் வணிகர்களுக்குச் சென்று சேர்ந்திருக்கும்.

ஆனால் இன்றளவும் பல்வேறு கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில், ‘ஜி.எஸ்.டி ரசீது வேண்டுமா? சாதாரண ரசீது வேண்டுமா?’ என்று கேட்கும் நிலை தொடர்கிறது. இந்த வரி ஏய்ப்பு, ஜி.எஸ்.டியின் நோக்கத்தைச் சீர்குலைக்கிறது.

 

மேலும், பெட்ரோல் முதலான பொருட்கள் இன்னும் ஜி.எஸ்.டி.வரம்புக்குள் வராமல் இருப்பது சாமானியரைக் கேள்வி கேட்க வைத்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியில் மாநிலங்களின் இழப்பீட்டுப் பங்கு பிரித்துக்கொடுக்கப்படுவது, இன்னும் சர்ச்சையில் இருக்கிறது.

Image by bottlein from Pixabay

இவையெல்லாம் பேரளவிலான விஷயங்கள். உண்மையில் அடித்தட்டு குடிமகனைப்பாதிக்கும் விஷயங்களுக்கு வருவோம்.

ஜி.எஸ்.டியின் அனைத்து அழுத்தமும் கடைசியில் விடிவது நுகர்வோரான குடிமக்கள்மீதுதான். நிரந்தரமான வரிவீதம் என்று இல்லாதது இதன் பெருங்குறை.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரிவீதத்தை ஏற்றவும் இறக்கவும் செய்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். இதனால் விலைவாசியில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றன.

தற்போது 47 ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அதில் எடுக்கப்பட்டுள்ள பல முடிவுகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கின்றன. அவற்றுள் சில…

இதுவரை ரூ.1000 வரையிலான தின வாடகை உள்ள தங்கும் விடுதி கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இனி அது கிடையாது.

இனி அதற்கு 12% வரி கட்டாயம். நீங்கள் ரூ.1000 கட்டணம் கட்டி தங்கும் அறைக்கு இனி ரூ.1120 செலுத்த வேண்டியிருக்கும்.

காசோலை சேவைகளுக்கு நாம் இதுவரை வரி செலுத்தியதில்லை அல்லவா….இனிமேல் அந்த சேவைக்கு 18% ஜி.எஸ்.டி. வரி செலுத்தியாகவேண்டும்.

பேனா மை, கத்தி, பிளேடு, எல்.இ.டி விளக்கு முதலிய பொருட்களுக்கு ஏற்கனவே இருந்த 12% வரி, இனி 18% ஆகும்.

இதுவரை அஞ்சலக சேவைகளுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. இனி, தபால் சேவை தவிர, மற்ற அனைத்து சேவைகளுக்கும் இனி ஜி.எஸ்.டி வரி பொருந்தும் வகையில் கவுன்சில் ஒப்புதல் தந்திருக்கிறது.

சூரிய ஆற்றலைப்பயன்படுத்தி வெந்நீர் தயாரிக்கும் ஹீட்டர்களுக்கு இதுவரை 5% வரி இருந்தது. இனிமேல் அது 12% ஆக உயரும். நீர் இறைக்கும் மோட்டார்களுக்கு இருந்த 12% வரி, இனி 18% ஆக உயரவிருக்கிறது.

Image by Adriano Gadini from Pixabay

உணவுப்பொருட்களைப் பொறுத்தவரை, அடைக்கப்பட்ட பொரி, தயிர், அரிசி, கோதுமை மாவு (வணிகப்பெயர் இல்லாமல்), பனீர், மோர் முதலியவற்றுக்கு இனி 5% அளவுக்கு வரி இருக்கும்.

அதேபோல மருத்துவமனை அறை வாடகை ரூ.5000க்குமேல் இருந்தால் அதற்கு 5% வரி விதிக்கப்படும். அவசர சிகிச்சைப்பிரிவு வாடகை இதில் வராது.

ஏற்கனவே கொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறுதொழில் நிறுவனங்கள் இதன்மூலம் மேலும் பாதிக்கப்படும் என்று சிறுதொழில் சங்கங்களும் அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.