ஆய்வுக்கு அதிக கவனம் கொடுங்கள்!

ஆய்வுக்கு அதிக கவனம் கொடுங்கள்!

காலகாலமாக வைக்கப்படும் கோரிக்கைதான் இது. எல்லா வளங்களும் அறிவுச் செல்வமும் மிகுந்த நாடு இந்தியா. ஆனால் நாம் உலக உற்பத்தியாளர்களுக்கு பெரும் ‘சந்தை’யாக இருக்கிறோமே ஒழிய, அவர்களுடன் போட்டியிடும் உற்பத்தியாளராக இல்லை. அனைத்துத்துறைகளுக்கும் இது பொருந்தும்.

இன்றைக்கு உலக அளவில் வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறைக்கு கோடிகளைக் கொட்டிக்கொடுக்கின்றன. ஆனால் நாம் அதில் தொடர்ச்சியாக பின் தங்கியே இருக்கிறோம்.  அங்குதான் மற்றவர்கள் நம்மை முந்திவிடுகின்றனர்.

மூலிகை மருந்துப்பொருள் உற்பத்தித்துறையை நாம் எடுத்துக்கொள்வோம். இத்துறையில் ஜப்பான் கொடிகட்டிப் பறக்கிறது. அப்படியென்ன ஜப்பான்காரர்கள் மூலிகை உற்பத்தி செய்துவிட்டார்கள் என்று பார்த்தால், கிடைக்கும் விடை நம்மைத் துணுக்குறச் செய்கிறது. அவர்கள் எதையும் உற்பத்தி செய்யவில்லை. மேம்படுத்துகின்றனர். அவ்வளவுதான்!

Image by Seksak Kerdkanno from Pixabay

எடுத்துக்காட்டாக, நீரிழிவு நோய்க்கு மருந்தான கீழாநெல்லிப் பொடியை ஒரு பாட்டிலில் அடைத்து அவர்கள் விற்பதாகக் கொள்வோம். அதன் விலை சுமார் ரூ.100 ஆக இருப்பதாகவும் கொள்வோம். அதிலுள்ள 100 கிராம் கீழாநெல்லி வேர்/இலையை நம்மூரிலிருந்துதான் இறக்குமதி செய்திருப்பர்.

அதன் விலை அதிகபட்சமாக ரூ.10 கூட இருக்காது. நம்மிடமிருந்து பத்து ரூபாய்க்கு இறக்குமதி செய்து, அதற்கு ஒரு வணிகப் பெயரிட்டு, அதனையும் காப்புரிமைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்து, ஒரு அழகிய டப்பாவில் கட்டுமம் செய்து நமக்கே விற்கின்றனர். நம்மால் செய்ய முடியாத விஷயமா இது?

இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான். சீனா போன்ற நாடுகளில் மின்னணு சாதனங்களை வீடுகளிலேயே குடிசைத்தொழிலாகத் தயாரிக்கின்றனர். நம்மூரில்தான் அது தொழிற்சாலை சமாச்சாரமாக இருக்கிறது. தொழில்நுட்பம் எளியவர்க்கும் சென்று சேரும்போதுதான் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது சாத்தியமாகும்.

இது நிகழ வேண்டுமென்றால் அதிகப்படியான அளவில் ஆய்வுகள் அனைத்துத்துறையிலும் நடக்க வேண்டும். பள்ளி, கல்லூரி அளவிலேயே இது தொடங்கப்படவேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் ஆராய்ச்சிக்கென்று குறிப்பிட்ட அளவுக்கு நிதியை ஒதுக்குவது (சமூகப்பொறுப்புக்கு ஒதுக்குவதுபோல) கட்டாயமாக்கப்பட வேண்டும். சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் ஆய்வுப்பிரிவுகளுக்கு மத்திய, மாநில அரசுத்துறைகள் மானியம் அளித்து தோள் கொடுக்க வேண்டும்.

நாம் ‘சந்தை’ மட்டுமல்ல, வலுவான போட்டியாளர்கள் என்று உலகுக்கு உரக்கச் சொல்லும் காலம் வரட்டும்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *