சென்னைப் பெண்ணின் புடவைப் புரட்சி!

சென்னைப் பெண்ணின் புடவைப் புரட்சி!

”எனக்குப் பளிச்சென்றும், தனித்துவத்துடனும் உடை உடுத்த மிகவும் பிடிக்கும். இந்தப் பண்பே என்னை  ஒரு தொழில் முனைவோராகவும் மாற்றிவிட்டது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பத்மாவதி குணசேகர்.

சாதாரணமாக இருக்கும் புடவைகள், ரவிக்கைகளின் வடிவமைப்பை துகில் சாரீஸ் (Tuhil   sarees) என்கிற பெயரில் மிக அழகாக, தனித்துவமாக மெருகேற்றும் வேலையை இவர் செய்து வருகிறார்.

 

அதுமட்டுமல்ல, அதிகமாகப் பயன்படுத்தி பழசாகிப் போன பட்டுப் புடவை போன்றவற்றில் நல்ல நிலையில் இருக்கின்ற பார்டர், புடவைத் தலைப்பு போன்றவற்றை மட்டும் தனியாக வெட்டி எடுத்து அதை வேறொரு புடவையுடன் இணைத்து அதனுடன் பல நகாசு வேலைகள் செய்து தனித்தன்மையுடன் கூடிய புத்தம்புதுப் புடவையாக உருமாற்றியும் கொடுக்கிறார்.

 ஒரு புடவையில் இருக்கின்ற வேலைப்பாடு வேறு எந்தப் புடவையிலும் திரும்ப வராது என்பதுதான் இவரது வேலையின் சிறப்பே…..

 

“நான் பிறந்தது,வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். கணவர் சொந்தத் தொழில் செய்கிறார். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். எனக்கு எப்போதுமே ஏதாவது வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும்.

வெறுமனே பொழுதைப் போக்க சுத்தமாகப் பிடிக்காது. எனவே திருமணத்திற்குப் பிறகு குடும்பத் தலைவியாக மட்டும் இருக்காமல் பல்வேறுவிதமான வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். இரண்டு குழந்தைகள் பிறந்தபிறகுதான் பி.எட் படிப்பை படித்து வெற்றிகரமாக முடித்தேன்.

 

ரோட்டரி கிளப்பின் கீழ் இயங்குகின்ற சர்வதேச பெண்கள் அமைப்பான இன்னர் வீலின் (Inner Wheel ) உறுப்பினராக இணைந்து பல சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டினேன். இதுதவிர சிறப்புப் பள்ளிகளுக்குச் சென்று அந்தக் குழந்தைகளின் அம்மாக்களுக்கு அந்தப் பள்ளியில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தேன். கணினி சார்ந்த பல வேலைகளையும் செய்தேன்” என்று தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்துப் பேசியவரிடம் துகில் பிறந்த கதை குறித்துக் கேட்டோம்.

 

“துகில் பிறந்த கதை மிகவும் சுவையானது. என்னுடைய மகன் பள்ளியில் நிகழ்த்திக் காட்டப்பட்ட  மகாபாரதக் கதையில் கர்ணனாக நடித்தான். நான் அந்த நாடகத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன்.

மகாபாரதத்தில் துரியோதனன் திரவுபதியின் புடவையை இழுத்து அவமானப்படுத்துவார் இல்லையா! அதற்கு துகிலுரிதல் என்று பெயர். அப்படி துரியோதனன் திரவுபதியின் புடவையைப் பிடித்து இழுக்க இழுக்க,  கிருஷ்ண பரமாத்மா  திரவுபதிக்குத் தொடர்ந்து துகிலைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

 

இது சார்ந்த வசனங்களைக் கேட்டபோது துகில் என்கிற அற்புதமான தமிழ் வார்த்தை என் மனதைக் கொள்ளைகொண்டுவிட்டது. அப்போது என் கணவரிடம் “நாம் ஒரு புடவைக் கடை ஆரம்பித்து அதற்கு துகில் என்று பெயர் வைக்கவேண்டும்” என்று இயல்பாகச் சொன்னேன் என்பவர் தனக்குப் புடவை வகைகள் குறித்த அறிவு மேம்படக் காரணமாக இருந்தவை பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“என்னுடைய தோழி எழும்பூரில் ஒரு புடவைக் கடை நடத்தி வந்தாள். அங்கே கோட்டா புடவைகள் விற்பனைக்கு வந்தது. மிகவும் அழகாகவும் எடை குறைவாகவும் உடுத்துவதற்கு வசதியாகவும்,  தனித்துவமாகவும் தெரிந்த அந்தப் புடவைகள்மீது ஒரு ஈடுபாடு வந்தது. அதனால் திருமணம் முடிந்து புகுந்தவீடு செல்லும்பொழுது நிறைய கோட்டா புடவைகள் வாங்கிச் சென்றேன்.

 

1988-ல் என்னுடைய சீமந்தம் நடந்தது. நான் கடைசியாக வாங்கிய பட்டுப்புடவை அதற்காகத்தான். பட்டுப்புழுக்களைக் கொன்று பட்டுப்புடவை உருவாக்கப்படுவதால் அதன்பிறகு பட்டுப் புடவை வாங்குவதை அறவே நிறுத்திவிட்டேன்.

எண்பதுகளில் பட்டுப்புடவை என்பது கவுரவத்தின் அடையாளமாக இருந்தது. திருமணம், பண்டிகைகள் போன்ற சுபநிகழ்வுகளில் பட்டு  உடுத்தாத பெண்களை மக்கள் ஏற இறங்கப் பார்ப்பர்.

 

எனவே  பட்டுக்கு ஈடான மதிப்பும்,அழகும் கொண்ட புடவையைத் தேர்வு செய்வது பெரும் சவாலாக இருந்தது. ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் ஒன்றிரண்டு பெரிய கடைகளைத்தவிர வேறு புடவைக் கடைகள் பெரிதாக இல்லை.

அந்தப் பெரிய கடைகளிலும் நம்முடைய பாரம்பரியப் புடவைகளே இருந்தது. எனவே பட்டுப் புடவையின் மாற்றாக நான் வெங்கடகிரி காட்டன் புடவைகளைக் கட்ட ஆரம்பித்தேன். சுபநிகழ்வுகளில் நான் பட்டுப்புடவை கட்டாமல் இதுபோல பருத்தி உடைக்கு  மாறியதைக் கண்டு என் அம்மாவும் மாமியாரும் மிகவும் வருத்தப்பட்டார்கள்.

 

எனவே பட்டுக்கு மாற்றாக நான் தேர்ந்தெடுக்கும் புடவையை அழகாகவும்,தனித்துவமாகவும் கட்டவேண்டும் என்கிற தேவை எனக்கு அதிகமானது. எனவே கடையிலிருந்து வாங்கிய புடவையை அப்படியே உடுத்தாமல் அதில் சில வேலைப்பாடுகளை செய்து உடுத்த முடிவெடுத்தேன். இதுபோன்று மெருகேற்றப்பட்ட  புடவைகளை VALUE  ADDED  SAREE  என்று அழைப்பர்.

1994-ம் வருடம் அதற்கான வேளை வந்தது. ஒரு சிறந்த தையல்காரர் எனக்கு அறிமுகமானார். அவரிடம் அப்போது சந்தையில் அறிமுகமான கோரா காட்டன், பாலி காட்டன் போன்ற  புடவைகளைக்  கொடுத்து நான் விரும்பிய வண்ணம் அதில் பூத்தையல் (Embroidary)  வேலைப்பாடுகளை செய்து வாங்கி உடுத்தினேன்.

 

அதேபோல தி.நகரில் அப்போது இருந்த பிரபலமான ஜவுளிக்கடை ஒன்று மிகச் சிறப்பான பாலி காட் புடவைகளை அறிமுகம் செய்தார்கள். அது பார்ப்பதற்கு பட்டு போல அவ்வளவு அழகாக இருக்கும். அடுத்து அற்புதமான சில்க் காட்டன் புடவைகளும் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தக் கடையின் பெண் உரிமையாளர் என்னுடன் நட்பானார்.

நான் பட்டுப் புடவைகள் உடுத்துவதில்லை என்பது அவருக்குத் தெரியும் என்பதால், அவர் தனது பாரம்பரியமான பட்டுப் புடவைகளின் மாதிரியை புடவை வடிவமைப்பாளர்களிடம் கொடுத்து பட்டுப் புடவையில் வரும் அதே வடிவமைப்பை பாலிகாட்,சில்க்-காட்டன் புடவைகளில் உருவாக்கித் தரச் சொல்லி அதை எனக்குக் கொடுப்பார். தனித்துவமாகப் புடவை உடுத்தவேண்டும் என்கிற ஆசை எனக்குள் அதிகமானதற்கு இவரும் ஒரு காரணம்.

 

இப்படித்தான்  என்னுடைய மகிழ்ச்சிக்காக  ரசித்து ரசித்துப் புடவையை மெருகேற்றி நான் உடுத்த ஆரம்பித்தேன். ஆனால் அது நாளடைவில் என்னைச் சுற்றியிருப்பவர்களின் கவனத்தையும் கவர ஆரம்பித்தது.

குறிப்பாக, என்னுடைய தோழிகள் “என்னைக்குப் இதுபோல செய்துகொடேன்” என்று கேட்க ஆரம்பித்தானர். அப்போதுதான் நமக்குள் இருக்கின்ற இந்த ரசனை உணர்வை, திறமையை தொழிலாக்கலாமே என்று முடிவு செய்தேன்” என்பவர் ரூ.5000 முதலீட்டில் தன் தொழிலை ஆரம்பித்திருக்கிறார்.

“ ஒருநாள் என்னுடைய கணவர் அலுவலகத்துக்குக் கிளம்புவதற்கு முன்பாக என்னுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது என் கையில் ஐந்தாயிரம் ரூபாயைக் கொடுத்த அவர் “உன்னிடம் இருக்கும் திறமையை உலகமறியச் செய். உடனே தொழிலை ஆரம்பி” என்றார். எனக்கோ ஆனந்த ஆச்சர்யம். துகில் என்கிற அற்புதமான பெயர் வேறு மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்ததால் கடகடவென வேலையில் இறங்கினேன்.

 

என் கணவர் கொடுத்த தொகையை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்றேன். எடுத்த உடனேயே அதிகவிலைக்குப் புடவைகளை வாங்கவில்லை. புடவைகளை அதிக விலைக்கு வாங்கி அதில் பல வேலைப்பாடுகளை, நகாசு வேலைகளைச் செய்து அதற்கும் சேர்த்து அந்தப் புடவைகளுக்கான விலையை நிர்ணயிக்க வேண்டியிருக்கும்.

எடுத்தவுடனேயே அதிகவிலை நிர்ணயித்து ஒரு புடவையை விற்றால் அதை எல்லோராலும் எப்படி வாங்க முடியும்? எனவே கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு புடவையாக வாங்காமல் ஒவ்வொரு வண்ணத்தினாலான,ஒவ்வொரு வகையினாலான துணியையும் மீட்டர் கணக்கில் அளந்து வாங்கினேன்.

 

ஒவ்வொன்றையும் ஒரு புடவையாக உருவாக்கி அந்தப் புடவையின் தன்மைக்கு ஏற்ப அதில் வேலைப்பாடுகள் செய்து அதற்குப் பொருத்தமான பிளவுசையும் உருவாக்கினேன். இப்படி நான் உருவாக்கிய பதினைந்து புடவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாகவும், தனித்துவமான வடைவமைப்பைக் கொண்டதாகவும் இருந்தது.

ஒரு புடவையின் டிசைன்,வேலைப்பாடுகள் மற்றொரு புடவையில் இருக்காது. அதேபோல நான் உருவாக்கிய அந்தப்  புடவைகளின் மாதிரிகள் எந்தவொரு கடைகளிலும் கிடைக்காது. இதைத்தான் நான் விற்பனைக் காரணியாக (SELLING  FACTOR) வைத்து மிகக் குறைந்த அளவு லாபம் வைத்து முதலில் என் தோழிகளிடம் காட்டினேன். வாங்குவார்களா மாட்டார்களா என்று முதலில் திக் திக் என்றுதான் இருந்தது. ஆனால் பதினைந்து புடவைகளும் உடனே விற்றுத் தீர்ந்தன.

 

நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தப் பதினைந்து புடவைகளை பார்த்துப் பார்த்துத் தயாரிக்க நான் நிறைய மெனக்கெட்டேன். நிறைய கற்றுக்கொண்டேன். மெட்டீரியலின் தரத்தை எப்படிப் பார்க்கவேண்டும்? ஒரு புடவையின் பினிஷிங்கை எப்படி அமைக்கவேண்டும்? விலையை எப்படி நிர்ணயிக்கவேண்டும்?… போன்றவற்றை இந்தப் பதினைந்து புடவையிலிருந்துதான்  கற்றேன்.

அதுமட்டுமல்ல, ஒரு புடவையை மெருகேற்ற எடுத்துக்கொள்ளும் காலமும் மிக முக்கியம். அதிக நேரம் எடுத்து ஒரு புடவையை உருவாக்கினால் சில சமயம் அது அவுட் ஆப் பேஷனாகிவிடும்” என்கிறவர் அடுத்து தன்னுடைய தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

 

“எங்கள் உறவினர் ஒருவரது ஆலோசனையின் பேரில் அடுத்து புடவைக் கண்காட்சி அமைக்கும் வேலையில் இறங்கினேன். இப்போதெல்லாம் தடுக்கி விழுந்தால் பல்வேறு தயாரிப்புகளின் கண்காட்சி நடக்கிறது. ஆனால் 2007-ம் ஆண்டில் இது கொஞ்சம் குறைவுதான். எனவே நானும் என்னுடைய தோழிகள் சிலரும் சேர்ந்து கண்காட்சி நடத்த முடிவு செய்தோம்.

என் தோழிகள் குழந்தைகளுக்கான பிரத்யேக உடைகள், நவீன நகைகள், கைப்பைகள், பெட்ஷீட், தலையணை உறை போன்ற பல்வேறு தயாரிப்புகள் சார்ந்த தொழில் செய்துவருவதால் நாங்கள் ஆறு தோழிகள் ஒன்று சேர்ந்து நுங்கம்பாக்கத்தில் எங்களது முதல் கண்காட்சியை அமைத்தோம்.

நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தெரிந்தவர்கள், தோழிகள், உறவுகள் போன்றவர்களை கண்காட்சிக்கு அழைப்போம் இல்லையா! இதன் காரணமாக ஸ்டால் போடும் ஒவ்வொருவருக்கும் பார்வையாளர்கள் அதிகம் கிடைப்பார்கள். விற்பனையும் சிறப்பாகும் என்கிற தொழில் உத்தியில்தான் அந்தப் பொருட்காட்சியை நடத்தினோம்.

 

நினைத்தது போலவே நான் வடிவமைத்த புடவைகளில் முக்கால்வாசிப் புடவைகள் விற்றுத் தீர்ந்தன. மீதிப் புடவைகள் அடுத்த பதினைந்து நாட்களில் விற்றுவிட்டன. இப்படி ஆண்டுக்கு  இரண்டு கண்காட்சிகள் வீதம் மூன்றுவருடங்கள் ஆறு கண்காட்சிகளை வெவேறு இடங்களில் நடத்தினோம்.

இந்தக் கண்காட்சிகளை அமைத்து நடத்தும்பொழுது நிறையக் கற்றுக்கொண்டேன். இதற்காக நிறையப் பயணமும் செய்தேன். தரமான, புதிதான துணி வகைகளைத் தேடி டெல்லி, மும்பை என்று பல இடங்களுக்குச் சென்றேன்.

எங்கே எது ஃபேஷனாக இருக்கிறது என்பதை பல இடங்களுக்கு நேரில் சென்று பார்த்து அதற்கேற்ப  புடவைகளை உருவாக்கினேன். என்னுடைய தோழிகள் நான் வடிவமைத்த புடவைகளின் சிறப்பு குறித்து அவர்களுக்குத் தெரிந்தவர்களிடம்  சொன்னார்கள்.

எனது தொலைபேசி எண்ணையும் அவர்களுக்குக் கொடுத்னர். இப்படியே வாய்மொழி விளம்பரங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு நிறைய ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்பிறகு முகநூலில் இதற்கென்று அதிகாரப்பூர்வ பக்கம் ஒன்றை உருவாக்கி அதன் வழியாகவும் எனது தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கினேன்.  

தொழிலை ஒரேமாதிரியாக செய்துகொண்டிருந்தால் தொழில்முனைவோருக்கும் ஒரு அலுப்பு வந்துவிடும். வாடிக்கையாளர்களும் ஆர்வமிழந்துவிடுவர். எனவே சீரிய இடைவெளிகளில் காலமாற்றத்திற்கேற்ப தொழிலும் மாற்றங்களைக் கொண்டுவந்தேன். குறிப்பாக என்று சொல்லப்படும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப புடவைகளை உருவாக்கும் வேலையில் இறங்கினேன்.

எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கின்ற புடவைகளை கொண்டுவந்துகொடுத்து, அந்தப் புடவையின் தன்மைக்கு ஏற்ப அதில் வேலைப்பாடுகளை செய்து அதனை மதிப்புக் கூட்டப்பட்ட புடவையாக  மாற்றித் தரச் சொல்வார்கள். இதனை சரியாகச் செய்யும்பொழுது  சாதாரணப் புடவையும் சூப்பர் புடவையாக மாறிவிடும்.

என்னுடைய இந்த உத்திக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நிறைய வரவேற்பு கிடைத்தது. இந்த வெற்றி தந்த தைரியத்தில் அடுத்து   புடவைகளின் மறுபயன்பாடு சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்” என்கிறார்.

அதென்ன மறுபயன்பாடு என்கிறீர்களா? வீட்டில் தங்கள் பாட்டி கட்டிய பட்டுப் புடவை,அம்மாவின் கல்யாணப்புடவை போன்றவற்றை பெண்கள் சென்டிமென்ட்டாக பீரோவில் பாதுகாத்து வைத்திருப்பார்கள். நாளான அந்தப் புடவையை உடுத்தவும் முடியாது. அதே சமயம் அதைப் புறக்கணிக்கவும் மனம் வராது. அப்படிப்பட்ட புடவைகளில் தன்னுடைய கைவண்ணத்தைக் காட்டுகிறார் பத்மாவதி.

அதாவது பழைய பட்டுப்புடவைகளில் நன்றாக இருக்கின்ற பார்டர்,தலைப்பு போன்றவற்றை தனியாக எடுத்து பட்டுப்புடவையின் அதே தன்மை கொண்ட மற்றொரு துணியுடன் அதை இணைத்து கால மாற்றத்திற்கேற்ப பல நகாசு வேலைகள் செய்து நவநாகரீகப் புடவையாக மாற்றிவிடுகிறார். இதன் மூலம் பாட்டி, அம்மா, மகள் என்று தலைமுறை தலைமுறையாய் அந்தப் புடவை பயணம் செய்கிறது.

“எடுத்துக்காட்டாக, எழுபது வயதுள்ள ஒரு பெண்மணி என்னை சந்தித்தார். தன்னுடைய தாயின் பனாராஸ் கல்யாணப் பட்டுப்புடவையை என்னிடம் கொண்டுவந்தார். அந்தப் புடவை 150 ஆண்டுப் பழமை கொண்டது என்று சொன்னார். நீல நிறமான அந்தப் புடவையை பாதுகாக்கவேண்டும் என்று நினைத்து ஒரு முறை தானே அந்தப் புடவைக்கு கருப்பு நிற வெஜிடபிள் டையிங் செய்ததாகவும் சொல்கிறார்.

அவர் அப்படி வெஜிடபிள் டையிங் செய்ததால் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்தப் புடவை பாதிக்கப்படாமல் அப்படியே இருந்தது. இந்தப் புடவையை தன்னுடைய பிரெஞ்சு மருமகளுக்காக சமகாலத்துக்கு ஏற்றதுபோல மாற்றிக் கொடுக்கச் சொன்னார்.

நானும் அந்தப் புடவையில் சிறப்பாக இருக்கின்ற பகுதிகளை எடுத்து வேறொரு துணியுடன் இணைத்து வேலைப்பாடுகள் செய்து புதுப்புடவையாக உருவாக்கிக்கொடுத்தேன். அப்போது அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும்  வர்ணிக்க வார்த்தையில்லை” என்பவருக்கு இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இதற்கு வாட்ஸ்-அப் பேருதவி செய்கிறது என்கிறார் பத்மாவதி.

இந்தத் தொழிலை நடத்துவதற்கு இவர் தனியாகக் கடை எதுவும் வைக்கவில்லை. ஆனால் இவருக்காக வேலை செய்துகொடுக்க தையல்குழு ஒன்று இருக்கிறது. எப்போதெல்லாம் ஆர்டர்கள் கிடைக்கின்றனவோ, அப்போதெல்லாம் தையல் குழுவினரை அணுகி புடவையை எப்படி உருவாக்கவேண்டும் என்பது குறித்த தன் எதிர்பார்ப்பை விளக்கி விடுகிறார். அவர்களும் உரிய நேரத்தில் அதைத் தயாரித்துக் கொடுத்து விடுகிறார்கள்.

 

“இதுபோன்ற தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு கற்பனைத்திறன் மிக அவசியம். கூடவே துணியின் தன்மை, எம்பிராய்டரி போன்ற வேலைப்பாடுகள்  குறித்த அறிவும்,சமகாலத்தில் பேஷன் உலகில் என்னென்ன புதுவரவு வருகின்றன என்பது குறித்து தொடர்ந்து உற்றுநோக்கும் திறனும் தேவை.

அதுமட்டுமல்ல சொன்ன நேரத்தில் தயாரிப்புகளை டெலிவரி செய்யவேண்டும். இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று வாடிக்கையாளரை இழுத்தடிக்கக் கூடாது. ஒருவேளை அவர்கள் கேட்கும் தேதிக்குள் கொடுக்க முடியாது என்றால் முடியாது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடவேண்டும்.

பொய் வாக்குறுதிகள் வாடிக்கையாளருக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்திவிடும். இதன்காரணமாக நமது தொழிலும் பாதிக்கப்பட்டுவிடும்  என்பதால் இந்த விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்” என்கிறார் புடவை உலகில்  புதுமை செய்யும் பத்மாவதி குணசேகர்.

-சு.கவிதா.

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.