முழுமையாகப் பயன்படுத்துங்கள்! (தற்சார்பு பொருளாதாரம் தொடர்-3)

முழுமையாகப் பயன்படுத்துங்கள்! (தற்சார்பு பொருளாதாரம் தொடர்-3)

தற்சார்புப் பொருளாதாரத்தில் அடுத்து நாம் சொல்ல விரும்புவது ‘எதையும் முழுமையாகப் பயன்படுத்துவது’ குறித்த விஷயங்களை…

பிசினாறி?

எந்தப் பொருளை வாங்கினாலும் சரி, அதை முழுமையாகக் கடைசிவரை பயன்படுத்துபவர்களை இந்த உலகம் “பிசினாறி” என்றே அழைக்கிறது. ஆனால் இப்படிப் பொருட்களை முழுமையாகப் பயன்படுத்துவதால் மிச்சமாகும் பணம் குறித்து யாரும் யோசிப்பதேயில்லை.

 

குடைக்குள் மழையா?

கொட்டும் மழை, அல்லது கடுமையான வெயில் ஆகிய இரண்டு நிலையில்தான் நாம் குடையைப் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள நாட்களில் எல்லோர் வீட்டிலும் குடை தூங்கிக்கொண்டுதான் இருக்கும்.

ஆனால் குடையில் மிகச் சிறியதாக ஒரு ஓட்டை விழுந்தாலோ அல்லது குடைக்கம்பி வெளியே நீட்டிக்கொண்டு வந்துவிட்டாலோ போதும் உடனே அதைத் தூக்கிப் போட்டுவிட்டு புதிதாக ஒரு குடையை வாங்கிவிடுகிறோம்.  ஆண்டுதோறும் இதுவே நடக்கிறது.

Image by StockSnap from Pixabay

இதற்குப் பதிலாகக் குடையில் இதுபோன்ற சிறியசிறிய பாதிப்புகள் ஏற்பட்டால் குடை தைப்பவரிடம் கொடுத்து இதனைச் சரிசெய்து மீண்டும் பயன்படுத்தலாமே!

இதன்மூலம் புதிதகாக் குடை வாங்க ஆகும் பணம் மிச்சமாவதோடு குடை தைப்பவருக்கும் வருமானம் கிடைக்குமே!

தைப்பதில் என்ன அவமானம்?

குடையைப் பற்றிப் பேசும்போது செருப்பைப் பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது. ஐநூறு, ஆயிரம் என்று காசைச் செலவழித்து வாங்கிய செருப்பின் வார் அறுந்து போய்விட்டால்போதும், அதை அப்படியே தூக்கிப்போட்டுவிட்டு உடனே கடையில் புதிதாகச் செருப்பு வாங்கிவிடும் கனவான்களாக நம்மில் பலர் இருக்கிறோம்.

அறுந்த செருப்பைத் தைத்து அணிவது நமது கவுரவத்திற்கு இழுக்கு என்கிற எண்ணம் நம்மில் பலரது மனதில் ஆழப்பதிந்து கிடப்பதும், ’யாரு போயி செருப்பை எல்லாம் தச்சுக்கிட்டு இருக்கிறது’ என்கிற சோம்பலான மனமுமே இதற்கு முக்கியக் காரணங்கள்.

எங்கள் தெருவில் வசிக்கும் செல்வந்தர் அவர். ஆயிரம், இரண்டாயிரம் என்று செருப்பில் காசு போடுபவர்களைக் கண்டால் அவருக்குக் கோபம் வந்துவிடும். “அறுந்த செருப்பைத் தைத்துப் போட்டுக்கொண்டால் என்ன குறைந்துவிடப் போகிறது நமக்கு? அதுமட்டுமல்ல… நம்மைப் போன்றவர்களை நம்பித்தானே செருப்புத் தைப்பவர் இருக்கிறார் ” என்பார் அவர்.

அதேபோல,  சில நேரங்களில் எந்தவித கூச்சமும் கொள்ளாமல் அறுந்துபோகும் செருப்பைத் தைத்துத் தைத்துப் பயன்படுத்துவார். இனிமேல் இதைப் பயன்படுத்த முடியாது என்கிற நிலை வந்தால் மட்டுமே அதைத் தூக்கிப் போடுவார். ’இப்படி ஒவ்வொரு பொருளையும் முழுமையாகப் பயன்படுத்தும் அவரது மனோபாவம்தான் அவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது போல’ என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

கண்ணுக்குத் தெரியாத வீண்செலவுகள்!

நாம் முழுமையாகப் பயன்படுத்தாமல் தூக்கி எறியும் பொருட்களில் முக்கியமான மற்றொன்று பற்பசை. பற்பசையைக் குப்பியிலிருந்து சற்று அழுத்தி எடுக்கவேண்டிய நிலை இருந்தாலே அதைத் தூக்கிப் போட்டுவிட்டு புதிதாக ஒரு பற்பசையை எடுப்பவர்கள் தானே நாம்?

Image by Esther Merbt from Pixabay

என்னுடைய உறவினர் ஒருவர் பற்பசை இருக்கின்ற குப்பியை கத்தரிக்கோலால் இரண்டாக நறுக்கி உள்ளே ஒட்டியிருக்கும் பற்பசையைக் கூட வழித்து எடுத்துப் பயன்படுத்திவிட்டு அதன்பிறகே வெற்றுக் குப்பியைத் தூக்கி எறிவார்.

அவரை ’அல்பம்’ என்று பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொருமாதமும் எனக்கு இரண்டு பற்பசை செலவாகும்போது அவருக்கு மாதம் முழுமைக்கும் ஒரு பற்பசை போதுமானதாக இருப்பதை அறிந்து பின்னர்  வியந்தேன்.

அதுமட்டுமல்ல, காலியான ஷாம்பூ பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டுக் கலந்து அதனை வீடு துடைக்க வைத்திருக்கும் தண்ணீருடன் கலந்து வீட்டைத் துடைப்பார். இதன் காரணமாக எப்போதுமே அவரது வீடு கமகமவென்று இருக்கும். ரூம் பிரெஷ்னர் வாங்கும் செலவும் மிச்சம்.

 

சின்ன கல்லு …பெத்த லாபம்!
சந்தைக்கு எந்தவொரு புதுவரவு அறிமுகமானாலும் உடனே அதை வாங்கிவிடும் ஒரு தோழி இருக்கிறார். ஆனால் புறக் கவர்ச்சிகளால் ஈர்க்கப்படாமல் தனக்குத் தேவை என்றால் மட்டும் ஒரு பொருளை வாங்கும் மற்றொரு தோழியும் இருக்கிறார்.

இப்போது நான் சொல்லப்போகும் செய்தி இரண்டாவது தோழியைப் பற்றியது. இந்தத் தோழி பதினைந்து வருடங்களாக எரிவாயுஅடுப்பைப் பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது இந்த அடுப்பு பழுதாகிவிட நான் அவரிடம் “ஏன் இதையே வச்சுக்கிட்டு கஷ்டப்படுற? இதைக் கொடுத்திட்டு ஒரு புது அடுப்பு வாங்கிடு” என்று கூறினேன். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

பழுதடைந்த கேஸ் அடுப்பை எடுத்துக்கொண்டு பழுதுநீக்கும் கடைக்குச் சென்றிருக்கிறார். “அடுப்பு நல்ல தரத்துடன் இருப்பதாகக் கடைக்காரர் சொன்னதோடு இருநூற்று ஐம்பது ரூபாய்க் கட்டணத்தில் பழுதைச் சரிசெய்தும் கொடுத்திருக்கிறார். நான்காயிரம் ரூபாய் செலவழித்து புது அடுப்பு வாங்கச் சொன்ன நான் எங்கே? இருநூற்று ஐம்பதே ரூபாயில் பிரச்சனையை சரிசெய்த அவர் எங்கே?

அசரவைக்கும் அம்மாக்கள்!
எவ்வளவுதான் நவநாகரீக வாழ்க்கைக்கு நாம் மாறினாலும் குழந்தையைத் தூளியில் தூங்கவைக்கும் பழக்கம் நம்முடைய தமிழ்ச்சமூகத்தில் இன்னமும் பின்பற்றப்பட்டு வருகிறது. கிராமங்களுக்குச் சென்று பாருங்கள். தூளிக்கென்று பிரத்யேகமாக ஒரு துணியைக் கடையில் வாங்கமாட்டார்கள். அம்மாவின், பாட்டியின் பழம்புடவைகளே துளியாக உருமாறி நிற்கும்.

அதுமட்டுமல்ல, குழந்தையைப் படுக்கையில் படுக்க வைக்க அம்மாவின் பருத்திப் புடவைகளே மெத்தையாக வந்து நிற்கும். இவ்வளவு ஏன்? நல்ல நிலையில் இருக்கும் பழைய புடவையில் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்காக  பாவாடை போன்றவற்றைத் தைத்து விடுவார்கள்.

அப்படிப் பாவாடை தைக்கும்போது வீணாகும் மீதத் துணியைத் தூக்கி எறியாமல் பாவாடைக்குப் பொருத்தமாக தலையில் அணியும் ஹேர் பேண்டையும்(hair band) தயாரித்துக் கொடுத்துவிடுவார்கள். ஒரு பொருளை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு இவற்றைவிடச் சிறந்த உதாரணம் வேறென்ன இருக்க முடியும்?

Image by Myriam Zilles from Pixabay

ஆல்டரேஷன் நல்லதே!

அண்ணன், அக்காக்களின் பழைய உடைகளை தம்பி, தங்கைகள் அணிந்துகொள்வதும் முன்பு வழக்கத்தில் இருந்த ஒன்றுதான். மிகக் குறிப்பாக நல்ல நிலையில் இருக்கும் உடைகளை நமது தேவைக்கு ஏற்றதுபோல மாற்றம் செய்து(alteration) அணிந்துகொள்வதால் எவ்வளவு பணத்தை மிச்சம் பிடிக்க முடியும் தெரியுமா?

ஆனால் நாம் அதைச் செய்கிறோமா? கிடையாது. “பத்தாமப் போயிடுச்சு, கலர் மங்கிடுச்சு” என்று ஏதோ ஒரு காரணம் சொல்லி மிக இயல்பாக அவற்றைத் தூக்கி எறிந்துவிடுகிறோம்.

தோலில் ஊறுகாய்!
உடைகள் என்றில்லை….உணவில் கூட இப்படித்தான் நம்முடைய அலட்சியத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறோம். என்னுடைய அண்டை வீட்டுப் பெண்மணி ஒருவர் எலுமிச்சை சாதம் தயாரிக்கும்போதேல்லாம் கிடைக்கின்ற எலுமிச்சை தோலை சிறிது உப்பு சேர்த்த ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுக்கொண்டே வருவார். குறிப்பிட்ட அளவு தோல் சேர்ந்ததும் அதை வைத்து ஊறுகாய் செய்துவிடுவார்.

Image by Free-Photos from Pixabay

அதேபோல எளிதில் கெட்டுப்போகும் தக்காளி போன்ற காய்கறிகளை மேலேமேலே வாங்கிச் சேர்க்க மாட்டார். கடைசித் தக்காளிவரை காலியானதும்தான் புதிதாகத் தக்காளியை கடையிலிருந்து வாங்குவார். சாதம் மீந்து போனால் அதைவைத்து வடகம் தயாரித்துவிடுவார். வயர் கூடை பின்னிய பிறகு வீணாகும் வயர்களை வைத்துக் குட்டிக் குட்டி பொம்மைகளை உருவாக்கிவிடுவார்.

எதற்காக மெனக்கெடல்?
எல்லாம் சரி…இப்படிப் பொருட்களை முழுமையாகப் பயன்படுத்துவதால் பெரிதாக என்ன கிடைத்துவிடப் போகிறது என்கிறீர்களா? பத்து ஒருரூபாய் சேர்ந்தால் பத்து ரூபாய். இது ஒரு பெரிய தொகையாக உங்களுக்குத் தெரியாது. அதுவே நூறு ஒருரூபாய் சேர்ந்தால் நூறு ரூபாய். பத்து ரூபாயை அலட்சியமாகப் பார்த்த நீங்கள் நூறு ரூபாயை அதேபோல பார்ப்பீர்களா? சிந்தியுங்கள். இனி பொருட்களை முழுமையாகப் பயன்படுத்த முனையுங்கள்.

திருடுவதும் பொய் பேசுவதும் வஞ்சனை செய்வதும்தான் தவறு. சிக்கனமாக இருப்பதில் எந்த இழிவும் இல்லை!

(வளரும்)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *