இணையத்தில் அறிமுகம்; நேரில் சந்திப்பு- ’மீட்டப்’ மகிமை (பயன்மிகு தளங்கள் தொடர்-3)

இணையத்தில் அறிமுகம்; நேரில் சந்திப்பு- ’மீட்டப்’ மகிமை (பயன்மிகு தளங்கள் தொடர்-3)

பிளாக்செயினை நீங்கள் அறிந்திருக்கலாம். கிரிப்டோ நாணயமான பிட்காயினுக்கு அடிப்படையாக அமையும் இந்த நுட்பத்தில் உங்களுக்கு ஆர்வமும் அதிகம் இருக்கலாம்.

சரி, இந்த ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொள்ள அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், சக பிளாக்செயின் ஆர்வலர்களை கண்டுபிடிப்பது எப்படி?

இந்த கேள்விக்கு பதிலாக, மாதந்தோறும் சக பிளாக்செயின் ஆர்வலர்களை சந்தித்து பேச முடிந்தால் எப்படி இருக்கும்? என கேட்டால் எப்படி இருக்கும்? ‘அட அற்புதமாக இருக்குமே! ஆனால் பிளாக்செயின் ஆர்வலர்களை கண்டறிவதும், சந்தித்து பேசுவதும் எப்படி?’ என நீங்கள் ஆதங்கம் கொள்வதாக இருந்தால், இதுவரை ’மீட்டப்’ தளத்தை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று பொருள்.

அதென்ன மீட்டப் தளம்? புதிதாக இருக்கிறதே… என நினைக்கலாம். மீட்டப் ஒரு சமூக வலைப்பின்னல் தளம். பேஸ்புக் போன்றது தான் என்றாலும், பேஸ்புக் நிறுவனத்துக்கு முன்னரே நிறுவப்பட்டது என்பது மட்டும் அல்ல, முகநூலில் இருந்து அடிப்படையில் மாறுபட்டது.

பேஸ்ஃபுக் மட்டும் அல்ல, வேறு எந்த சமூக வலைப்பின்னல் சேவைகளில் இருந்தும் மிகவும் மாறுபட்டது ’மீட்டப்’. எப்படி என்றால், மற்ற சமூக வலைப்பின்னல் சேவைகள், இணைய உலகில் நட்பு வளர்த்துக்கொள்ள உதவுகின்றன என்றால், இணையம் மூலம் அறிமுகமாகி, நிஜ உலகில் சந்தித்துக்கொள்ள வழி செய்கிறது மீட்டப். – இது சந்திப்புகளுக்கான சமூக வலைப்பின்னல்.

மீட்டப் தளத்தில் லைக், பகிர்வு, நண்பர்களை சேர்ப்ப்பது போன்றவை எல்லாம் கிடையாது. இந்த தளத்தின் மூலம், ஒருவர் தனக்கு ஆர்வம் உள்ள குழுவில் இணையலாம். அதே போல தானும் ஒரு புதிய குழுவை உருவாக்கி, அதன் மைய கருத்தில் ஆர்வம் உள்ளவர்களை இணையச்செய்யலாம்.

இந்த இணைய குழுக்கள் மூலம் நிஜ உலக சந்திப்புகளை மேற்கொள்ளலாம் என்பது தான், மீட்டப் சேவையின் சிறப்பு.

பெரும்பாலான சமூக வலைப்பின்னல் சேவைகள் நட்பு வளர்த்துக்கொள்ளவும், ஆர்வம் உள்ள விஷயங்களில் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபடவும் வழி செய்கின்றன. ஆனால், இவை எல்லாம் இணையத்திலேயே நிகழ்கின்றன. ( இவை கவனச்சிதறலாக அல்லது நேரம் கொல்லும் பழக்கமாக கூட அமையலாம்). ஆனால், மீட்டப் சேவையிலோ, உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சந்திப்புகளில் பங்கேற்று சக ஆர்வலர்களுடன் நேரில் உரையாடலாம்.

Image by Christine Schmidt from Pixabay

இந்த நேர் சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலம், அனுபவங்களை, ஆர்வங்களை பகிர்ந்து கொள்ளலாம். கேள்விகள், சந்தேகங்களுக்கு விடை காணலாம்.

தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். வலைப்பின்னலை விரிவாக்கி கொள்ளலாம். சுருக்கமாக சொல்வதானால், நமக்கு ஆர்வம் உள்ள விஷயம் சார்ந்த சமூகத்தில் ஐக்கியமாகலாம்.

ஆக, ஒருமித்த ஆர்வம் உள்ள மனிதர்கள் நேரில் சந்தித்துக்கொள்ள வழி செய்வது தான் மீட்டப் சேவையின் சிறப்பு. இதற்கான இணைப்பு மேடையாக அந்த தளம் விளங்குகிறது.

சரி, மீட்டப் சந்திப்புகள் மூலம் என்ன எல்லாம் செய்யலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!. வேலை தேடலாம், புதிய தொழில் வாய்ப்புக்கான வழி தேடலாம். புதிய பொருட்களை சந்தைப்படுத்தலாம். ஆர்வம் உள்ள விஷயங்களை விவாதித்து கற்றுக்கொள்ளலாம். அனுபவ பரிமாற்றம் மூலம் பரஸ்பரம் பயன்பெறலாம். துறை சார்ந்த புதிய நண்பர்களை பெறலாம். அவர்கள் மூலம் புதிய வாய்ப்புகளையும், அனுபவங்களையும் பெறலாம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, நமக்கு ஆர்வம் உள்ள குழுவில் அங்கத்தினர் எனும் உணர்வை பெறலாம். இந்த உணர்வும், அது தரக்கூடிய நம்பிகையும் அற்புதமாக இருக்கும்.

இப்படி தான், சென்னையில் பிளாக்செயின் நுட்பத்தில் ஆர்வம் உள்ள நபர்கள், மீட்டப்பில் குழு அமைத்து நண்பர்களாகி சந்தித்துக்கொள்கின்றனர்.; https://www.meetup.com/blockchain-developers-community-Chennai/ ஸ்டார்ட் அப் கருத்தாக்கத்தில் ஆர்வம் உள்ள நபர்கள், குழு அமைத்து ஸ்டார்ட் அப் கனவுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

சென்னை பயண நண்பர்கள், சென்னை புத்தக ஆர்வலர்கள், சென்னை இணைய ஆர்வலர்கள், இணையதள வடிவமைப்பாளர்கள் குழு, ஆங்கில புத்தக நண்பர்கள் என பலவிதமான குழுக்கள் மீட்டப்பில் அமைக்கப்பட்டு, துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன. லினக்ஸ் மென்பொருள் குழு, செயற்கை நுண்ணறிவு குழு என மேலும் எண்ணற்ற குழுக்கள் செயல்படுகின்றன.

சென்னை என்றில்லை, உலகில் பல்வேறு நகரங்களில் இத்தகைய ஆயிரக்கணக்கான குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

மீட்டப் நிஜ உலக சந்திப்புகளை நிகழ்த்திக்கொள்ள வழி செய்வதோடு, அதற்கான ஏற்பாடு முயற்சிகளையும் எளிதாக்குகிறது. ஆர்வம் உள்ளவர்களை இணைப்பதில் துவங்கி, சந்திப்புகளை திட்டமிட தேவையான அனைத்து இணைய சாதனங்களையும் வழங்குகிறது. நிகழ்ச்சிக்கான தகவல் அனுப்புவது, தகவலை இணைய நாட்காட்டியுடன் ஒருங்கினைப்பது, பங்கேற்பை உறுதி செய்வது போன்றவற்றை எளிதாக மேற்கொள்ளலாம்.

சந்திப்பு முடிந்த பிறகு, கூட்டம் தொடர்பான தகவல்களையும் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

மீட்டபில் குழுக்களை நடத்த அல்லது மீட்டப் குழுக்களில் இணைய முதலில் இந்த சேவையில் உறுப்பினராக வேண்டும். உறுப்பினராவது எளிது மற்றும் இலவசமானது. இதன் பின் உறுப்பினர்கள் தெரிவித்த ஆர்வங்களுக்கு பொருத்தமான குழுக்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அவற்றின் நிகழ்ச்சிகள் தெரிவிக்கப்படும். அவற்றில் இருந்து தேர்வு செய்து பங்கேற்கலாம்.

அதே போல, உறுப்பினர்கள் விரும்பினால் தாங்களே புதிய குழு அமைத்து அதன் மூலம் சந்திப்புகளை நடத்தலாம். குழுவை துவக்கி நடத்த கட்டணம் செலுத்த வேண்டும். குழுவுக்கான நோக்கத்தை தீர்மானித்தி, அதில் ஆர்வம் உள்ள நபர்களை உறுப்பினர்களாக சேர்த்து சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம். இந்த சந்திப்பு நிகழ்ச்சிகள் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் பார்த்துக்கொள்ளலாம்.

புதிய தொழில் துவங்குவது முதல் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்வது வரை பலவிதமாக மீட்டப் சந்திப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மீட்டப் சமூகத்தில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள், அதன் அருமையை நேரில் உணருங்கள்.

இணைய முகவரி: https://www.meetup.com/about/

மீட்டப் சேவை இணையம் மூலம் திட்டமிட்டு நேரில் சந்தித்து பேச வழி செய்யும் நிலையில், தற்போது கொரோனா கால முடக்கம் காரணமாக, இந்த சந்திப்புகளை ஆன்லைனில் மேற்கொள்ள ஊக்குவிக்கிறது.

 

(சைபர்சிம்மன், சுயேட்சை பத்திரிகையாளர், வலைப்பதிவாளர், நூலாசிரியர், ’இணைய மலர்’ மின்மடல் ஆசிரியர்).

 

(வளரும்)

 

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.