சாமர்த்தியமாய் குடும்பம் நடத்த டாப் 5 ஆலோசனைகள்!

சாமர்த்தியமாய் குடும்பம் நடத்த டாப் 5 ஆலோசனைகள்!

1. குழந்தைகளுக்கு மட்டும்தான் உண்டியலில் காசு போடும் பழக்கம் இருக்கவேண்டும் என்பதில்லை. குடும்ப உறுப்பினர்களும் அதைப் பின்பற்றலாம்.

கரு.பழனியப்பன் இயக்கிய ‘பிரிவோம் சிந்திப்போம்’ படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் கதையின் நாயகி சினேகா, தான் எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக உணர்கிறாரோ அப்போதெல்லாம் உண்டியலில் காசு போடுவார்.

 

அந்த உண்டியலில் சேகரமாகும் நாணயங்களின் எண்ணிக்கை  அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதன் அளவீடாகக்  காட்டப்பட்டிருக்கும்.

இதே உத்தியை நாமும் பின்பற்றலாம். மகிழ்ச்சியாக உணரும்போது,அல்லது உற்சாகமான மனநிலையில் இருக்கும்பொழுது,சம்பளம் வரும் முதல் தேதியன்று, பண்டிகைகள்,விழாக்காலங்கள்,பிள்ளைகளின் பிறந்தநாள் இப்படி மனதிற்கு சந்தோஷம் தரும் தருணங்களிலெல்லாம் உங்களால் முடிந்த அளவு நாணயங்களை அல்லது ரூபாய் நோட்டுக்களை உண்டியலில் போடுங்கள்.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் உண்டியலைத் திறந்து பாருங்கள். அவற்றின் அளவைப் பொறுத்து அந்த வருடத்தை  நீங்கள் எந்த அளவுக்கு நேர்மறையான சிந்தனையுடன்,மகிழ்ச்சியுடன் கடந்திருக்கிறீர்கள் என்பதை சுயபரிசோதனை செய்துகொள்ள முடியும். கூடவே குறிப்பிட்ட அளவு பணமும் கைக்குக் கிடைக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

2. வீட்டு செலவுகளுக்காக வங்கியிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் எடுக்கிறீர்களா? ஐந்து இரண்டாயிரம் நோட்டை வாங்குவதற்கு பதிலாக கொஞ்சம் மெனக்கெட்டு நூறு நூறு ரூபாய் நோட்டுக்களை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். தாள்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் கையில் நிறையப் பணம் இருப்பது போலத் தெரியும்.

அதுமட்டுமல்ல, ஒவ்வொருமுறை வீட்டு செலவுகளுக்காக பணத்தை அதிலிருந்து எடுக்கும்பொழுதும் நிறைய நிறைய எடுத்துச் செலவு செய்வது போலத் தோன்றும். “பணத்தை அதிகமாக இறைக்கிறோமோ?’ என்கிற உணர்வு வரும். இதன் காரணமாக கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும்.

இதுவே ஐந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கையில் இருந்தால் அதை எடுத்துச் செலவு செய்யும்பொழுது பெரிய உறுத்தல் எதுவும் வராது. இது ஒரு உளவியல் சார்ந்த அணுகுமுறை. ஆனால் இது நிச்சயம் பயனளிக்கும்.

3. மேற்சொன்னதுபோல ஒவ்வொரு மாதமும் வீட்டுச் செலவுகளுக்காகப் எடுத்து வைக்கின்ற பணத்தில் எவ்வளவு மிச்சமாகிறதோ அதை அப்படியே சேமிப்புக் கணக்கில் போட்டுவிடுங்கள். இப்படி ஒவ்வொரு மாதமும் வீட்டு பட்ஜெட்டில் மிச்சமாகும் பணத்தை தொடர்ந்து சேமித்து வருட இறுதியில் அந்தப் பணத்தை வைத்து வீட்டிற்கு அவசியமான (அனாவசியம் அல்ல) பொருளை வாங்கிக் கொள்ளலாம்.

4. இன்றைய பெற்றோரின் கண் முன்னால் இருக்கின்ற பெரும் செலவுகளில் முக்கியமானது குழந்தைகளின் பள்ளிக் கட்டணச் செலவுதான். அதிலும் இரண்டு குழந்தைகள் இருப்பவர்களின் வீட்டில் பள்ளிக் கட்டணம் கட்டுவது என்பது சாதாரணக் காரியமல்ல. ஆனால் இந்த சிக்கலைத் தீர்க்க என் தோழி வழி ஒன்றைப் பின்பற்றினாள்.

அதாவது ஒவ்வொரு கல்வியாண்டு ஆரம்பிக்கும்பொழுதும் வங்கியில் ஒவ்வொரு குழந்தையின் பேரிலும் மாதம் இரண்டாயிரம் ரூபாய்,ஒரு ஆண்டுக்கு தொடர் வைப்புத் திட்டத்தில் (RD-RECURRING  DEPOSIT) போட்டு வருவாள்.

ஓராண்டு முடிந்ததும் ஆர்.டி தொகை முதிர்வடைந்து கைக்குக் கிடைத்துவிடும். இதை வைத்து புதிய ஆண்டிற்கான குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டிவிடுவாள். கையோடு அடுத்த ஆர்.டி-யைப் போட்டுவிடுவாள்.

இது ஒரு சங்கிலித்தொடர் போலத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இப்படி மாதம் ஒரு சிறு தொகையை  கட்டாய சேமிப்பாக்கும் பொழுது  பெரும் செலவுகளை ஓரளவுக்கு தைரியத்துடன்  எதிர்கொள்ள முடியும்.

5. குழந்தைகள் இருக்கின்ற வீட்டில் மால், தியேட்டர் போன்ற  பொழுதுபோக்குக்கு ஆகும் செலவுகள்தான்  அதிகமாகப் பெற்றோரின் கண்ணைக் கட்டுகின்றன. கொஞ்சம் மனது வைத்தால் இதையும் பெற்றோர் சாமர்த்தியமாகத் தவிர்க்கலாம்.

எடுத்துக்காட்டாக, குழந்தைகளை நீங்கள் வசிக்கும் பகுதியின் கிளை நூலகங்களின் உறுப்பினர்களாகச் சேர்த்து விடுவது,பூங்காக்கள்,விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றுக்கு அடிக்கடி  அழைத்துச் செல்வது, வார இறுதியில் கடற்கரையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, கேரம்போர்டு, செஸ், பிசினஸ் கேம் போன்ற விளையாட்டுக்களை வாங்கிக் கொடுத்து வீட்டிலேயே அவர்களை சுறுசுறுப்பாக இருக்கச் செய்வது,

நீங்கள் வசிக்கின்ற தெருவில் உள்ள மற்ற குழந்தைகளுடன்  அவர்களை ஓடியாடி விளையாட விடுவது போன்ற உத்திகளைக் கையாளலாம். தொடர்ந்து ஆர்வத்துடன் இயங்கும் குழந்தைகள்  அடிக்கடி வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் போன்றவற்றுக்குச் செல்லவேண்டும் என்று பெற்றோரிடம் கேட்கமாட்டார்கள்.

– திருமாமகள்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on google
Google+
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *